கார வடை (Nellai famous food / Kara vadai) என்பது மிகக் குறைந்த பொருட்களை பயன்படுத்தி எளிதாக தயார் செய்யப்படும் பதார்த்தம் ஆகும். இது பட்டாணி பருப்பு, உருட்டு பருப்பு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வடையில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கப்படுவதால் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மொறுமொறுப்பான வெளிப்புற அமைப்பு மற்றும் மென்மையான உள்புற அமைப்பு கொண்ட இந்த கார வடையின் ருசிக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திருநெல்வேலி பகுதிகளில் மிகவும் பிரபலமான இந்த கார வடை சிறிய டீ கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை அனைத்திலும் கிடைக்கும். இந்த கார வடையை எப்படி செய்யலாம் என்பது பற்றி இங்கு நாம் காணலாம்.
பட்டாணி பருப்பு – 2 உழக்கு.
உருட்டு பருப்பு – கால் உழக்கு.
பச்சரிசி மாவு – 100 கிராம்.
பல்லாரி வெங்காயம் – 4 எண்ணம்.
பச்சை மிளகாய் – 2 எண்ணம்.
கறிவேப்பிலை , மல்லித்தழை – இரண்டு கைப்பிடி.
உப்பு – தேவைக்கு.
கடலை எண்ணெய் – அரை லிட்டர்.
பட்டாணி பருப்பு மற்றும் உருட்டு பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்னர் ஊறிய பருப்புகளை களைந்து கிரைண்டரில் போட்டு மையாக அரைத்து வழித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இதனுடன் பச்சரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். இப்போது இருப்புச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டையாக கைகளில் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான திருநெல்வேலி கார வடை தயார்.
கார வடைக்கு கடலை பருப்பு சேர்ப்பதை விட பட்டாணி பருப்பு சேர்த்துக் கொண்டால் வடை மொறுமொறுப்பாகவும், ருசியாகவும் வரும்.