நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்(Nanguneri Vanamamalai Perumal Temple)
108 திவ்ய தேசங்களுள் சுயம்பு சேத்திரமாக விளங்குவதும், ஸ்ரீ வர மங்கை புரம், தோதாத்திரி புரம், வானமாமலை, உரோமச சேத்திரம், நாகணை சேரி, வர மங்கள சேத்திரம் என்ற சிறப்பு பெயர்களையும் பெற்றது நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.
மூலவர் பெயர்: ஸ்ரீ வானமாமலை பெருமாள் ( தோதாத்திரி நாதர்) .
உற்சவர் பெயர் : ஸ்ரீ தெய்வ நாயக பெருமாள்.
தாயார்: ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார்,
விமானம்: நந்தவர்த்த விமானம் எனப்படும் வைகுண்ட விமானம்.
தீர்த்தம்: சேற்றுத் தாமரை புஷ்கரணி, இந்திர தீர்த்தம்.
திருக்கோவில் விருட்சம் : மா மரம்.
சிறப்பு : எண்ணெய்க் கிணறு.
நாங்குநேரி திருக்கோவில் வரலாறு:(History of Nanguneri Temple)
முற்காலத்தில் ஆழ்வார்திருநகரியை ஆட்சி செய்த காரி மாற பாண்டியன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். அந்த மன்னனுக்கு திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் பிள்ளை பேறு கிட்ட வில்லை. தனக்கு பிள்ளை பேறு கிட்ட வேண்டி மன்னன் பல்வேறு தானங்கள், தர்மங்கள் மற்றும் யாகங்களை செய்து வந்தான். ஒரு நாள் அந்தணர் ஒருவர் காரி மாற பாண்டியனை சந்திக்க, அவரிடம் தன் குறையை மன்னன் கூறினான். அதற்கு அந்த அந்தணர் திருக்குறுங்குடி சென்று நம்பி பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டால் வழி பிறக்கும் என கூறினார்.
அந்தணரின் ஆலோசனைப் படி மன்னனும், தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருக்குறுங்குடி தலத்திற்கு சென்று நம்பிராயரை மனமுறுகி வணங்கி தனக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்யும் படி வேண்டிக் கொள்கிறார். அன்று இரவு காரி மாற பாண்டிய மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் பெருமாள், திருக்குறுங்குடி நகரில் இருந்து கிழக்கே நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தின் மத்தியில் எனது சகோதரனான வானமாமலை பெருமாள் தனது பரிவாரங்கள் சகிதமாக பூமிக்கு அடியில் புதையுண்டு கிடக்கிறார் எனவும் நீ அங்கு சென்று காணும் போது அந்த இடத்தை ஏறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும், வானில் அதற்கு நேராக கருடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் எனவும் கூறி, அந்த இடத்தை தோண்டி அங்கு புதையுண்டு கிடக்கும் சுயம்பு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் கட்டி வழிபட்டால் உன் விருப்பம் நிறைவேறும் எனவும் கூறி அருளுகிறார்.
அதன் படி காரி மாற பாண்டியனும் அந்த இடத்திற்கு சென்று அடையாளம் கண்டு, பூமியை தோண்டிட அங்கிருந்து குருதி பெருக்கிட பதினொரு சுயம்பு திருமேனிகள் கிடைக்கிறது. அந்த சுயம்பு திருமேனிகளை பிரதிஷ்டை செய்து திருக்கோவில் எழுப்பி முறைப்படி கும்பாபிஷேகம் செய்து வைத்திட, அவனுக்கு அவனது விருப்பப்படி நம்மாழ்வாரே ஆண் மகனாக அவதரித்தார் என்று வரலாறு கூறப்படுகிறது.
பூமா தேவிக்கு அருள்புரிந்த வரலாறு:
முற்காலத்தில் மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் படைக்கும் கடவுளான பிரம்மனிடம் இருந்த வேதங்களையும் கவர்ந்து சென்றார்கள். வேதங்களை இழந்த பிரம்மன் படைப்பு தொழிலை செய்வதில் சிரமப்பட, தேவர்களும் துன்புறுத்தப்பட இறுதியில் மகா விஷ்ணு அந்த இரண்டு அசுரர்களோடு போர்க்களத்தில் போர் புரிந்து தன் கதாயுதத்தால் இருவரையும் சம்காரம் செய்கிறார். மது, கைடபர் இருவர் உடம்பிலும் இருந்த இரத்தமானது இப் பூமி முழுவதும் பரவி கடும் துர் நாற்றம் வீசியது. இதனால் பூமா தேவி நிலை குலைந்து போனாள். தன் நிலை மாற பூலோகத்தில் மகா விஷ்ணு சுயம்புவாக தோன்றிய தோதாத்திரி தலத்தை அடைந்து தவம் இயற்றுகிறாள். அவளின் தவத்தை மெச்சிய பெருமாள் அவளுக்கு காட்சி கொடுத்து, தனது சக்ர ஆயுதத்தை வானில் உள்ள மேகக் கூட்டங்களுக்கு நடுவே பிரயோகித்து, அமிர்த மழை பொழிய வைக்கிறார். வானில் இருந்து அமிர்த மழை பொழிந்த மாத்திரத்தில் பூமி எங்கும் அந்த அமிர்த நீர் பரவி பூமியை சுத்தப்படுத்திட பூமா தேவி புதுப் பொலிவை பெற்றாள் என கூறப்படுகிறது.
சேற்றுத் தாமரை தீர்த்தம் சிறப்பு:
முற்காலத்தில் சிந்து தேசத்து மன்னன் தன் பரிவாரங்களுடன் தென் பகுதிக்கு வேட்டையாட வருகின்றான். அப்போது யானை ஒன்று காட்டில் மன்னனை துரத்திட, மன்னன் அந்த யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியதால் தன் உடன் வந்த பரிவாரங்களை விட்டு வழி தவறி நீண்ட தூரம் சென்று விட்டான். அடர்ந்த காட்டிற்குள் ஓடி வந்த மன்னன் அங்கு ஒரு குடிசையை கண்டான். அதற்குள் சென்ற மன்னன் பசி மற்றும் களைப்பினால் அங்கிருந்த உணவை எடுத்து உண்டு பசி தீர்த்துக் கொண்டான்.
அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த அக் குடிசையில் தங்கியிருந்த முனிவர் தன் இருப்பிடம் திரும்பி வருகிறார். அங்கு தனது குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும், விஷ்ணுவிற்கு படைப்பதற்காகத் தான் வைத்து இருந்த பிரசாத உணவை அவர் உண்டு விட்டதையும் பார்த்து கடும் கோபங் கொண்டு, அந்த மன்னனை ‘நாயாக மாறக் கடவாய்’ என சாபமிட்டு விட்டார்.
அந்த சாபத்தை கேட்டு வேதனை அடைந்த மன்னன், தனது நிலையை எடுத்துக் கூறி வருந்திட, மனம் இறங்கிய முனிவர், இந்த உலகத்தின் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீ நீராடும் போது உன் சாபம் நீங்கி சுய உருவம் பெறுவாய் என்று கூறி விமோசனம் வழங்கினார்.
தான் பெற்ற சாபத்தின் படி நாயாக மாறிய மன்னன் காட்டில் அலைந்து திரிந்து, இறுதியில் வேடர்களால் பிடிக்கப்பட்டு, தோதாத்திரி நாதர் கோவில் அமைந்துள்ள தலத்திற்கு வந்து சேர்ந்தான். பின்னர் அந்த வேடர்கள் ஒரு நாள் இங்குள்ள சேற்றுத் தாமரை தீர்த்த்தில் நீராடிய போது தன்னையும் அறியாமல் நாயாக மாறிய மன்னனும் அந்த தீர்த்தத்தில் நீராடிட, அக் கணமே அவனது சாபம் நீங்கி விமோசனம் பெற்றான். இதன் பின் தன் சுய உருவை பெற்ற மன்னன் இங்கு பெருமாளை வணங்கி முக்தி அடைந்தான் என்றும் கூறப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Kalakad - 3 min (1.6km)
- ஏரிக்கரை மண்டபம் - 1 min
- Sunset piont sorangudi - 13min (7.2km)
- Muthalaikulam Pond Sluice - 15 min (13.4km)
கருடாழ்வாருக்கு அருள்புரிந்த வரலாறு:
முற்காலத்தில் காஷ்யப முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கத்ரு என்ற மனைவியும், விநதை என்ற மனைவியும் இருந்தார்கள். கத்ருவிற்கு ஆதிசேஷன் உட்பட ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகவும், விநதைக்கு அருணன் மற்றும் கருடன் ஆகிய இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஒருமுறை கருடன் பாதாள உலகத்திற்கு சென்று தன் பெரியம்மாவின் புதல்வர்களான நாகர்களைப் பார்ப்பதற்காக செல்கிறார். அங்கு அவர்களோ அவர் வேற்று அன்னையின் புதல்வர் என்ற வேறுபாடு காட்டி பழித்தார்கள். அதைக் கேட்டு கோபமடைந்த கருடன், அவர்களைத் தாக்க ஆரம்பிக்கிறார். அப்போது ஆதிசேஷன் அங்கே வந்து, நாம் இருவரும் மகா விஷ்ணுவுக்கு சேவை செய்கிறவர்கள் அப்படி இருக்க நீ இவர்களுடன் சண்டையிட்டால் அது விஷ்ணுவின் பெயரைக் கெடுக்கும் அல்லவா? என்று கூறி கருடனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது கருடன், உனக்கென்ன ஆதிசேஷா நீ எப்போதுமே உன் தலைகளால் திருமாலுக்குக் குடை பிடிக்கிறாய், உன் உடலே அவருக்கு படுக்கையாகிறது, எனக்கு அத்தகைய பேறு இல்லையே என்று ஏக்கமாகச் சொல்கிறார் கருடர்.
அதனைக் கேட்ட ஆதிசேஷன், உனக்கு அப்படி ஒரு மனக்குறை இருந்தால் நீ பூலோகம் சென்று அங்குள்ள தோதாத்திரி நாதரை வழிபடு, அவர் உன் மனக் குறையை போக்கி அருள்வார் எனக் கூறுகிறார். அதன்படி கருடரும் பூலோகம் அடைந்து இந்த தலத்திற்கு வந்து தோத்தாத்ரி நாதரை வணங்கி பணிந்திட, பெருமாள் கருடர் முன் தோன்றி, எனக்கு வாகனமாக இருந்து சேவை சாதிக்கும் உனக்கு குறை ஏதும் உண்டோ எனக் கேட்க, அதற்கு கருடர், தான் ஆதிசேஷனைப் போல எப்போதும் தங்களை பிரியாமல் இருக்க வேண்டும் என வேண்டுகிறார். உடனே பெருமாளும் கருடனின் மனக் குறையை போக்கி வைகுண்டத்தில் என் வாசலில் எப்போதும் என்னைச் சுமந்து புறப்பட தயாரான நிலையில் நீ என் அருகிலேயே இருக்கலாம் என்று கூறி அருள்புரிந்தார்.
ஊர்வசி மற்றும் திலோத்தமைக்கு அருள்புரிந்த வரலாறு:
முற்காலத்தில் தேவலோகத்தில் ஆடல், பாடல்கள் புரியும் தேவ கன்னியர்களாகவும், பேரழகில் தலை சிறந்தவர்களாகவும் விளங்கியவர்கள் ஊர்வசி மற்றும் திலோத்தமை. இவர்களின் வாழ்க்கையானது இந்திரனின் சபையில் ஆடுவதும் பாடுவதும் அவற்றால் தேவர்களை மகிழ்விப்பதுமாக சென்று கொண்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் தம்மாலும் ஓர் உயர்நிலை அடைய முடியுமா? என்ற ஏக்கம் படர்ந்தது. தங்களுக்கு இனி பிறவியில்லா பெரு வாழ்வு கிட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உடனே படைக்கும் கடவுளான பிரம்மாவை சந்தித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
பிரம்ம தேவனோ பூலோகத்தில் உள்ள சுயம்வக்த சேத்திரமான தோதாத்திரி சென்று மகா விஷ்ணுவை குறித்து தவம் இயற்றுங்கள் உங்கள் விருப்பம் நிறைவேறும் என கூறுகிறார். உடனே இருவரும் பூலோகத்தை அடைந்து தோத்திரி நாதரை குறித்து தவம் இயற்றினார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் விருப்பப்படியே பிறவி இல்லா பெரு வாழ்வு வழங்கி அருள்பாலித்தார். இதனால் தான் இங்கு கருவறையில் மகா விஷ்ணுவுக்கு அவர்கள் இருவரும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கிறார்கள் என கூறப்படுகிறது.
மூலவர் தோத்திரி நாதர் ( எ) வானமாமலை பெருமாள்:
கருவறையில் மூலவர் தோதாத்ரி நாதர், ஆதிசேஷன் குடை பிடிக்க ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷி, கருடன், விஷ்வக்சேனர் ஆகியோருடன் ஊர்வசி மற்றும் திலோத்தமை ஆகிய இருவரும் வெண் சாமரம் வீச அமர்ந்த கோலத்தில் வைகுண்ட காட்சி அளிக்கிறார்.
உற்சவர் தெய்வ நாயகப் பெருமாள்:
இங்கு உற்சவர் மண்டபத்தில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி, அபய முத்திரை காட்டி, கதாயுதம் ஏந்தி, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி சகிதராகவும், ஆண்டாள், வரமங்கை நாச்சியார் உடனும் சேவை சாதிக்கிறார்.
ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு:
இங்கு தை மாதம் அமாவாசை அன்று நடைபெறும் "ஒரு கோட்டை எண்ணெய் காப்பு" உற்சவம் பிரசித்தி பெற்றதாகும். அன்று செக்கில் ஆட்டப்பட்ட சுமார் 210 லிட்டர் தூய நல்லெண்ணையை வெள்ளி வட்டிலில் சேகரித்து மூலவர் பெருமாளுக்கு காப்பு செய்வார்கள். தொடர்ந்து விசேஷ சங்காபிஷேகமும், திருமஞ்சனமும் நடைபெற்று மூலவருக்கு சந்தனக் காப்பு சாத்தப்படும்.
எண்ணெய்க் கிணறு:
இங்கு திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இங்கு பெருமாளுக்கு காப்பிடப்படும் எண்ணெய் முழுவதும் சேகரிக்கப்படப்பட்டு வருகிறது. பல வருடங்களாக பெருமாளுக்கு சாத்தப்பட்ட எண்ணெய் இந்த கிணற்றில் நிரம்பி காணப்படுகிறது. பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எண்ணெய் இங்கு வெயிலுக்கும், மழைக்கும் திறந்த வெளியாக இருந்தாலும், எந்த விதமான பாதிப்பும் இன்றி காணப்படும் இந்த எண்ணெய் பிணி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெய் கிணற்றின் அருகே அகத்திய மாமுனிவரும் எழுந்தருளியுள்ளார். இந்த எண்ணெய் பிரசாதத்தின் மகத்துவத்தை அகத்தியர் தன் சித்த மருத்துவத்தில் குறிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சடாரியில் நம்மாழ்வார்:
வைணவ கோவில்களில் நம்மாழ்வாருக்கு பிரதானமாக சன்னதி இருக்கும். ஆனால் இங்கு காரி மாறன் வழிபட்ட பின்னரே நம்மாழ்வார் அவதாரம் நிகழ்ந்ததால், இங்கு நம்மாழ்வாருக்கு தனி சன்னதி இல்லை. இங்குள்ள பெருமாளின் சடாரியில் நம்மாழ்வார் எழுந்தருளி நித்ய வாசம் புரிகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும்.
வானமாமலை பெருமாள் கோவில் அமைப்பு:(Vanamamalai Perumal Temple Architecture)
நாங்குநேரி ஊரின் மத்தியில் சேற்றுத் தாமரை புஷ்கரணியின் வடகரையில் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது வானமாமலை பெருமாள் திருக்கோவில்.
இந்த கோவிலின் முகப்பில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் பந்தல் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தால் ராஜ கோபுர வாயிலுக்கு முன்புறம் வடக்கே வானமாமலை மடம் அமையப் பெற்றுள்ளது. கோயிலுக்கு உள்ளே இரண்டு பிரகாரங்களை கொண்டு இந்த திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த திருக்கோவிலிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறம் மணவாள மாமுனிகள் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் பிரம்மாண்டமான நாயக்கர் மண்டபமும், அதனை தொடர்ந்து கொடிமரம் மற்றும் பலி பீடம் ஆகியவை அமையப் பெற்றுள்ளது.
அதனை தாண்டி உள்ளே சென்றால் வானமாமலை பெருமாள் சேவை சாதிக்கும் கருவறையும், உள் பிரகாரத்தில் ஸ்ரீ வரமங்கை நாச்சியார், தல விருட்சம் மா மரம், ஆண்டாள் நாச்சியார் , ஸ்ரீ ராமர், பரமபத வாசல், ஆழ்வார்கள், கருடன் , இராமானுஜர், லோகாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், வேணு கோபாலர், சக்கரத்தாழ்வார், லட்சுமி வராகர், விஷ்வக் சேனர் ஆகியோர் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளது.
இத் திருக்கோவில் வெளி பிரகாரம் முழுவதும் வரிசையான தூண்களால் மிக நீளமாகவும், அகலமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரகாரத்தின் வட கிழக்கு முனையில் தான் பிரசித்தி பெற்ற எண்ணெய் கிணறும் இருக்கிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
நாங்குநேரி பெருமாள் கோவில் சிறப்புக்கள்: (Specialities of Nanguneri Perumal Temple)
108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த நாங்குநேரி தலம் நம்மாழ்வாரால் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு பிரம்மன், இந்திரன், உரோமசர், பிருகு முனிவர், மார்க்கண்டேயர், சிந்து நாட்டு அரசன், கருடன், ஆதிசேஷன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் பெருமாளை வழிபட்டு காட்சி பெற்றுள்ளனர்.
பூலோகத்தில் பெருமாள் சுயம்வக்தமாக தோன்றிய தலங்கள் எட்டு. அவைகள் திருவரங்கம், திருப்பதி, புஷ்கரம், தோதாத்திரி, பத்ரிநாராயணம், நைமிசரண்யம், சாலிகிராமம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம். அவற்றுள் இந்த வானமாமலை சேத்திரம் பதினொரு சுயம்பு மூர்த்தங்களை கொண்டு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
இங்கு மார்கழி மாதம் அதிகாலையில் உற்சவர் பெருமாளுக்கு குளிர் காக்கும் பொருட்டு சுவட்டர் மற்றும் பனிக் குல்லா சாத்தப்படும் என்பது சிறப்பு.
இங்குள்ள வரமங்கை நாச்சியார் திருமேனி திருப்பதியில் இருந்ததாகவும், பின்னர் இங்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த திருக்கோவிலை பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் ஆகியவற்றில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு எண்ணெய் கிணற்றில் இருந்து கிடைக்கும் எண்ணெய் பிரசாதமானது சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இங்கு நந்தவர்த்தன விமானம் என்று சிறப்பிக்கப்படும் வைகுண்ட விமானத்தின் கீழே ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் பெருமாள் வைகுண்ட காட்சியளிப்பதால், இத் தலம் பூலோக வைகுண்டம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.
வைணவ சமயத்தின் சிறப்பு வாய்ந்த மடங்களுள் ஒன்றான வானமாமலை மடம் இங்கு தான் அமையப்பெற்றுள்ளது. இந்த மடத்தில் மணவாள மாமுனிகளின் மோதிரம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் மணவாள மாமுனிகள் அவதரித்த தினமாகிய ஐப்பசி மாத மூலம் நட்சத்திரம் அன்று வானமாமலை மடத்தை நிர்வகிக்கும் தற்போதைய ஜீயர் அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்து பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி சேவை சாதிப்பார்.
இந்த திருக்கோவிலில் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் தோசை, உளுந்து சாதம், வெண் பொங்கல், ஜீராணம் எனப்படும் பால் சாதம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
தோத்திரி நாதர் கோவிலின் முக்கிய திருவிழாக்கள்:(Important Festivals of Thothathrinathar Temple)
இங்கு சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். பத்தாம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவமும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடும் விசேஷமாக நடைபெறும்.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி சொக்கப் பனை ஏற்றுதல் நடைபெறும்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பகல் பத்து மற்றும் ராப் பத்து உற்சவங்களுடன் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெறும்.
தை மாதம் அமாவாசை அன்று இத் தலத்தின் பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு உற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். அதனை தொடர்ந்து மறுநாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும்.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழாவும், பங்குனி உத்திரத்தன்று தங்கத் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும்.
வானமாமலை பெருமாள் கோவில் அமைவிடம்:(Vanamamalai Temple Location)
திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 26 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது நாங்குநேரி கோவில். இங்கு செல்ல திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகளில் ஏறியும், தனியார் வாகனங்களிலும் சென்றடையலாம்.