திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-2ல்.,
5. தரும தேவதை இடப வாகனமான சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
4. வேணுவனச் சருக்கம்:
பிரளய காலத்தில், திருமால், பிரம்மன், தேவர்கள், பதினான்கு உலகங்கள் அவற்றில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போகும். கயிலாயம் அழியாமல் இருக்கும். இந்த உண்மையைத் தெரிந்த வேதங்கள் ஊழிக்காலத்தில் கயிலைக்கு சென்று ஓரிடத்தில் இருந்து இறைவனை துதித்துக் கொண்டிருந்தன. சிவபெருமான் உமையம்மையோடு வேதங்களுக்கு காட்சித் தந்து, வேதங்களே உங்கள் துதி எம்மை மகிழ்ச்சி செய்தது, உங்கள் தேவை என்ன என்று கூறுங்கள் என்று கேட்கிறார். அதற்கு வேதங்கள் பெருமானிடம், இறைவா.! எந்த ஊழிக்காலத்திலும் அழியாத இந்தக் கயிலை மலையை போன்று பூவுலகில் ஒரு ஸ்தலத்தை உருவாக்கி, அந்த ஸ்தலத்தில் எங்களை மூங்கில் மரங்களாக முளைக்கச் செய்து, எங்களிடம் நீங்கள் முத்தர் என்ற பெயருடன் தோன்ற வேண்டும், தங்களுக்கு தாயாகும் பெருமையை எங்களுக்குத் தர வேண்டும், அந்த ஸ்தலம் எங்கள் பெயரில் வேணுவனம் என்றே அழைக்கப்பட வேண்டும், என வேண்டின.
அதனைக் கேட்ட சிவபெருமான் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும், கற்ப கோடி காலத்துக்கும் அழியாமல் நிலையாக இருக்கும் ஒரு ஸ்தலம் இந்த பூவுலகில் இருக்கிறது. அது தென் கயிலாயமாக விளங்குகிறது. வட கயிலாயத்தில் அமைந்துள்ள தாமிர சபையில் நித்தமும் நாம் நடனம் செய்வது போல, அந்தத் தென் கயிலாயத்தில் அமைந்துள்ள தாமிர சபையிலும் நாம் நடனம் செய்வோம். பூமியில் நாம் நடனமிடும் சபைகள் இருபத்தொன்று. அவற்றில் சிறப்பான சபைகள் ஏழு. அந்த ஏழு சபைகளிலும் முதன்மையான சபை தென்கயிலாயத்தில் உள்ள தாமிர சபை என்று கூறி அருள்கிறார். அதனை கேட்டு மனம் மகிழ்ந்த வேதங்கள், இறைவா..! அந்த ஏழு சபைகளும் எங்கே இருக்கின்றன என்பதையும் கூறியருள வேண்டும் என வேண்டி நின்றன.
அதற்கு பெருமான், திருமறைக்காட்டில் வேத சபையும், தேவமாசபையில் மாணிக்க சபையும், சிதம்பரத்தில் பொற்சபையும், காஞ்சியில் ஆகாய சபையும், மதுரையில் வெள்ளி சபையும், குற்றாலத்தில் சித்திர சபையும், திருநெல்வேலியில் தாமிர சபையும் அமைந்திருக்கின்றன என்று கூறி அருள்கிறார். உடனே வேதங்கள், அந்த ஸ்தலங்களுக்கு நாங்கள் எப்போது போக வேண்டும்? என்று கேட்க., நீங்கள் இப்போதே செல்லுங்கள், சென்று தவம் செய்து கொண்டிருங்கள். விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று பெருமான் கூறுகிறார்.
சிவபெருமானின் ஆணைப்படியே வேதங்கள் எல்லாம் அங்கு சென்று மூலலிங்கம் கோவில் கொண்டிருக்கிற இடத்தைச் சுற்றி அமர்ந்து தவம் இயற்றத் தொடங்கின. இறைவன் தந்த வரத்தின்படி ஒரு நாள் வேதங்கள் எல்லாம் மூங்கில் மரங்களாக முளைத்தன. அன்று முதல் அந்த பகுதி மூங்கிற் காடு என்னும் பொருளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டது. இறைவன் ஒருநாள் அம்மை உமையவளுடன் அங்கே எழுந்தருளினார். அம்மையையும் அப்பனையும் கண்ட வேணுவன வேதங்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, இருவரின் திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, நித்தனே போற்றி, நிமலா போற்றி, முழுமுதற் பொருளே போற்றி, கருணைக்கடலே போற்றி என்று பலவாறு போற்றித் துதித்தன.வேதங்களின் இந்த போற்றியை கேட்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் தாமும் அந்த இடத்திலேயே இருக்கும் பொருட்டு அங்கிருந்த மூல மஹாலிங்கத்துக்குள் புகுந்து மறைந்தருளினார் என்று சூதமாமுனிவர் கூறினார். இதனைக் கேட்டு நைமிசாரணிய முனிவர்கள் மகிழ்ந்து, முனிவர் பெருமானே அந்த ஸ்தலம் எந்த எல்லைக்குள் இருக்கிறது என்பதையும் எங்களுக்கு கூறியருள வேண்டும் என்று சூதமா முனிவரிடம் கேட்கிறார்கள். அவரும் முகமலர்ச்சியுடன் அதற்கு, விண்ணும் மண்ணும் போற்றுகின்ற அந்த வேணுவனம் என்னும் புண்ணிய ஸ்தலம், வற்றாத அருவி பாயும் திருக்குற்றால நகருக்கு கிழக்கிலும், சூரபத்மனை ஆட்கொண்ட சுப்பிரமணியர் கோவில் கொண்டிருக்கும் திருச்செந்தில் நகருக்கு மேற்கிலும், சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திய நான்மாடக்கூடல் என்று அழைக்கப்படும் மதுரையம்பதிக்கு தெற்கிலும், தாணு, மால், அயன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக உறைகின்ற சுசீந்திரம் நகருக்கு வடக்கிலும் அமைந்திருப்பது தான் விந்தை மிகு வேணுவனம் என்னும் நெல்லைப்பதியாகும் என்று சூதமா முனிவர் கூறுகிறார்.
5. தரும தேவதை இடப வாகனமான சருக்கம்:
அம்மையும் அப்பனும் கயிலாய மலையில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அங்கே தரும தேவன் சென்று அவர்கள் இருவரையும் வணங்கி போற்றி துதித்தான். அவனுடைய போற்றுதலுக்குத் திருவுளம் மகிழ்ந்த பெருமான், தரும தேவனை பார்த்து, நீ வேண்டும் வரம் என்ன? என்று கேட்க., அதற்கு தரும தேவன், இறைவா காலமெல்லாம் உங்களை சுமக்கும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும் என்று கேட்கிறார். அப்படியே ஆகட்டும், இன்று முதல் நீ எனக்கு வாகனமாயிரு, அதனுடன் எமது திரு முன்பு நந்தியாகவும், அதே வடிவில் எமது கொடியிலும் இருப்பாயாக என்று சிவபெருமான் வரமளிக்கிறார். அதனை கேட்டு மனம் மகிழ்ந்த தரும தேவன், அடியேன் கேட்ட வரத்தை அருளிவிட்டீர்கள், அதனுடன் அடியேன் இருப்பதற்கும் ஒரு இடத்தைத் தந்தருள வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு சிவபெருமான், உனக்கு பொருத்தமான இடம், பொருநை நதி பாய்ந்து வரும் நெல்லையம்பதி தான், ஆகையால் நீ அங்கே போய் இரு என்று கூறுகிறார். இறைவனின் கட்டளையை ஏற்ற தரும தேவன் நெல்லையம்பதிக்கு வந்து, இடப வாகனமாக நின்று பெருமானை தாங்கும் பேற்றினை பெற்றான் என்று சூதமா முனிவர் நைமிசாரணிய முனிவர்களிடம் கூறுகிறார்.
6. தக்கன் வேள்வி சருக்கம்:
நான்முகனின் மகனான தக்கன், உமையம்மையை மகளாக பெற வேண்டும் என்று பரமனை நோக்கித் தவம் செய்தான். அதன் காரணமாக உமையம்மை, பொன்னால் ஆன ஒரு வளையலாக மாறிக் காளிந்தி நதியில் உள்ள ஒரு தாமரை மலரில் வந்து அமர்ந்திருந்தாள். அங்கே தவம் செய்து கொண்டிருந்த தக்கன் வந்து வளையலை எடுத்த, அந்த வளையல் அழகிய பெண் குழந்தையாக மாறுகிறது. தனது தவத்திற்கு இறங்கி பரமேஸ்வரன் தந்த பரிசாக அந்த குழந்தையை ஏற்றுக்கொண்ட தக்கன், தனது அரண்மனைக்கு எடுத்து சென்று தாட்சாயணி என்னும் பெயர் சூட்டி சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறான். தாட்சாயணி வளர்ந்து திருமண பருவத்தை எட்டியதும், சிவபெருமானையே மணக்க வேண்டி நோன்பு இருக்கிறாள். தனது மகளின் எண்ணத்தை அறிந்த தக்கன், அவள் விரும்பியபடியே சிவபெருமானுக்கு தனது மகளை ஊரறிய விமரிசையாக திருமணம் நடத்தி கொடுக்க எண்ணுகிறான். இதற்கிடையில் தன்னை நினைத்து நோன்பிருந்த தாட்சாயணியை சிவபெருமான் திருக்கரம் பற்றி ஆட்கொண்டு, சத்தமில்லாமல் திருக்கயிலைக்கு வந்துவிடுகிறார். இதனை அறிந்த தக்கன், பரமேஸ்வரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறான்.
சில காலம் சென்ற பின்னர் தக்கன் ஒரு வேள்வியை நடத்த திட்டமிடுகிறான். தான் நடத்தும் வேள்வியில் பங்கேற்க திருமால், திசைமுகன், தேவர்கள், முனிவர்கள் என எல்லோரையும் சந்தித்து முறையாக அழைப்பு விடுக்கிறான். இறுதியாக சிவபெருமானை அழைக்கும் பொருட்டு திருக்கயிலாயம் செல்ல, அங்கு சிவபெருமானும், பார்வதி அம்மையாகிய தாட்சாயணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு சென்ற தக்கன் அவர்களுக்கு மரியாதையை செலுத்தாமல், தனக்கு அவர்கள் மரியாதை செலுத்தவில்லை என கோபம் கொண்டு, மாட்டில் ஏறுவான், மண்டையோட்டை ஏந்துவான், பேய் போல சுடலையில் ஆடுவான், அனலை ஏந்துவான், அரவத்தை பூணுவான், ஊமத்தம் பூவை சூடுவான், உன்மத்தம் போல அலைவான் என ஏளனமாக சிவபெருமானை நினைத்து அவர்களை அழைக்காமல் தனது அரண்மனைக்கு திரும்பி விடுகிறான். சிவபெருமான் இல்லாமல் கடைசியில் வேள்வியையும் தொடங்கியே விட்டான் தக்கன்.
அந்த வேள்வியில் திருமால், பிரமன், சூரியன், சந்திரன், சரஸ்வதி, தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வந்திருந்தனர். ஆனால் அவிர்பாகம் பெற வேண்டிய சிவபெருமான் வரவில்லை. மூலவர் இல்லாத கோவிலில் பூஜைகள் நடைபெறுவது போல வேள்வி நாயகனாகிய சிவபெருமான் இல்லாமல் வேள்வியைத் தொடங்கிவிட்டான் தக்கன். இங்கு கயிலையில் தாட்சாயணியோ தனது தந்தையான தக்கன் நடத்தும் வேள்விக்கு செல்ல வேண்டும் என ஆவல் கொண்டு சிவபெருமானிடம், அனுமதி கேட்க, பெருமானோ நம்மை மதிக்காமல், அழைக்காமல் நடத்தும் வேள்விக்கு நாம் செல்ல வேண்டாம் எனக் கூறுகிறார். அதனைக் கேட்ட தாட்சாயணி என்ன இருந்தாலும் அவர் என்னை வளர்த்த தந்தை அல்லவா, அதனால் நான் சென்று வர விரும்புகிறேன், எனக்கு அனுமதி தாருங்கள் என மீண்டும் கேட்கிறாள். அதற்கு பெருமான் இதற்கு மேல் உன்னைத் தடுக்க விரும்பவில்லை, வேள்விக்கு செல்வதும், செல்லாததும் உன் விருப்பம் என கூறிவிடுகிறார்.
உடனே தாட்சாயணி கயிலையில் இருந்து புறப்பட்டு தக்கன் வேள்வி நடத்தும் இடத்திற்கு வருகிறாள். அங்கிருந்த தக்கன் அவளை கண்டும் காணாததும் போல இருந்து விட, தாட்சாயணி தக்கன் அருகில் சென்று வணக்கம் செலுத்துகிறாள். ஆனால் தக்கனோ உன்னை இங்கு வரச் சொல்லி யார் அழைத்தது, ஏன் இங்கு வந்தாய் என கேட்டு அவமரியாதை செய்கிறான். அதனையும் சகித்து கொண்ட தாட்சாயணி, தனது கணவருக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை முறைப்படி செலுத்த வேண்டும் என தக்கனிடம் கூற, தக்கனோ சிவபெருமானுக்கு எக்காரணத்தை கொண்டும் அவிர்பாகம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி விடுகிறான். தாட்சாயணி எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிவபெருமானுக்கு சேர வேண்டிய அவிர்பாகத்தை திருமாலுக்கு கொடுத்து விடுகிறான். இதனைக் கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற தாட்சாயணி, முறை தவறி நடந்து கொண்ட மூர்க்கனே, உனது யாகசாலையை அழித்து, உனது யாகத்தில் பங்கு கொண்ட அனைவரையும் மானபங்கப்படுத்துவேன் என்று சபதம் செய்து, திருக்கயிலைக்கு வருகிறாள். அங்கு சிவபெருமானிடம் சென்று என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி, தங்கள் பேச்சை கேட்காமல் சென்ற நான் அவமானப்பட்டு திரும்பி விட்டேன் என்று கூறி நிற்கிறாள். அதனை கேட்ட சுவாமி அவனை பற்றித் தெரிந்தும் நீ என் பேச்சை கேளாமல் சென்றுவிட்டாய் அதனால் தான் உனக்கு இந்த அவமானம் என்று கூறுகிறார். அதனை கேட்ட தாட்சாயணி உண்மைதான் சுவாமி, தங்கள் பேச்சை மீறி சென்றதன் பலனை நான் அனுபவித்து விட்டேன் , ஆனால் அதற்காக இதனை போகட்டும் என்று அப்படியே விடக்கூடாது, நான் சபதம் செய்தபடி தக்கனுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கூறி நிற்கிறாள்.
தாட்சாயணியின் நியாயமான கோபத்தை உணர்ந்த சிவபெருமான், அவளின் விருப்பத்தை நிறைவேற்ற தனது நெற்றிக்கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்த பிழம்பில் ஓராயிரம் தலைகளுடன், ஈராயிரம் கரங்களுடன் வீரபத்திரர் தோன்றுகிறார். அதே நேரம் அம்மையின் அம்சமாக வீரபுத்திரி என்னும் பெண் தெய்வமும் தோன்றுகிறாள். இந்த இருவரும் அம்மையப்பனை வணங்கி நிற்க, அவர்கள் இருவரையும் தக்கன் வேள்வி நடத்தும் இடத்திற்கு சென்று அந்த வேள்வியை அளித்து, அவனையும் அளித்து வர ஆணை வருகிறது. அதனை ஏற்ற இருவரும் புயலாய் புறப்பட்டு பூகம்பமாக மாறி தக்கனின் வேள்விச் சாலைக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துவம்சம் செய்கிறார்கள். அதனை கண்ட தக்கன் கோபம் கொண்டு, அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்து இப்படி அராஜகம் செய்கிறீர்கள் என கேட்க, அதற்கு வீரபத்திரர் நான் சிவபெருமானின் மகன் என்று கூறி, என் தந்தைக்கு அவிர்பாகம் கொடுக்காமல் வேள்வியா நடத்துகிறாய் என கேட்க, அதற்கு தக்கன் சிவபெருமானை குறித்து தரக்குறைவாக பேசி, ஏளனம் செய்கிறான். இதனை கண்ட வீரபத்திரர் கடும் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தண்டாயுதத்தால் தக்கனின் மண்டையில் ஓங்கி அடிக்க தக்கன் சுருண்டு தரையில் விழுந்து விடுகிறான். அடுத்து கோபம் அடங்காத வீரபத்திரர் அங்கிருந்த அனைவரையும் தண்டித்து கதிகலங்க செய்து விடுகிறார். அவரை எதிர்த்து போரிட்ட அனைவரும் மாண்டு கீழே விழுந்தனர். அங்கிருந்த அனைவரும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் கீழே விழுந்து கிடந்த தக்கன், மயக்கம் தெளிந்து எழுந்து வீரபத்திரரை நோக்கி கோபத்துடன் பாய, வீரபத்திரரோ தக்கனின் தலையை கொய்து வேள்வி தீயில் வீசி விடுகிறார். இதனை கண்டு அங்கிருந்த வேதியர்கள் அனைவரும் தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள். வீரபத்திரரும் போனால் போகட்டும் என அவர்களை விட்டு விட்டார். இறுதியாக அங்கிருந்த திருமாலுக்கும், வீரபத்திரருக்கும் இடையில் கடும் சண்டை ஏற்படுகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போரிட, இறுதியில் திருமால் தனது சக்கராயுதத்தை பிரயோகம் செய்ய, பதிலுக்கு வீரபத்திரர் சிவாஸ்திரத்தை பிரயோகம் செய்ய, இரண்டு வலிமை மிக்க ஆயுதங்களும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் முன்னர் அங்கு சிவபெருமான், பார்வதி அம்மையுடன் தோன்றி இருவரையும் சமாதான படுத்துகிறார்கள். அங்கு வேள்வி சாலையில் இறந்து கிடந்தவர்களையும், தனது தந்தை தக்கனையும் பார்த்த நொடியில் மனம் இறங்கிய அம்மை, தனது கோபத்தால் இவ்வளவு பெரிய விபரீதம் நிகழ்ந்து விட்டதை எண்ணி வருத்தம் கொண்டு, சிவபெருமானிடம் முறையிட, பெருமான் வீரபத்திரனை அழைத்து அவர்கள் அனைவரையும் உயிர்ப்பித்து கூட்டிவர ஆணையிடுகிறார். உடனே வீரபத்திரரும் அனைவரையும் உயிர்ப்பித்து எழுப்பிட, வேள்வித் தீயில் தலை எரிந்து போன தக்கன் மட்டும் முண்டமாக வந்து எழுந்து நிற்க, ஒரு ஆட்டின் தலையை தக்கனின் உடம்பில் பொருத்தி அவனுக்கு உயிர் அளிக்கிறார் வீரபத்திரர். ஆட்டுத் தலையுடன் உயிர் பெற்று எழுந்த தக்கன், தனது தவறை உணர்ந்து அம்மையப்பரை பணிந்து வணங்கி நிற்கிறான். அவனுக்கு அருள்புரிந்த அம்மையப்பர், வீரபத்திரர் மற்றும் வீரபுத்திரி உடன் கயிலைக்கு சென்றுவிடுகிறார் என சூதமா முனிவர் கூறி அருள்கிறார்.இதனைக் கேட்டு மகிழ்ந்த நைமிசாரணிய முனிவர்கள், சூதமா முனிவரிடம் அடுத்து, உமையவள் இமயவரம்பனுக்கு மகளாக பிறந்த வரலாற்றை கூற வேண்டுகின்றனர் . அதனை கேட்ட சூதமா முனிவர் அவர்களின் விருப்பப்படியே தொடர்கிறார்.
மேலும் படிக்க: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 3