Logo of Tirunelveli Today
English

மனதை மயக்கும் மாஞ்சோலை (Manathai Mayakkum Manjolai)

வாசிப்பு நேரம்: 11 mins
No Comments
Lush green tea estates in Manjolai with an overcast sky and the majestic mountains of the Western Ghats in the background.

மாஞ்சோலை என்னும் பகுதி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன. தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது. திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீத்தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. மாஞ்சோலை அதன் அழகான வானிலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன.

மொத்தத்தில் மாஞ்சோலை மலை உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசமாக விளங்கும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப்பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் பனோரமாவைப் பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். சுற்றியுள்ள மலைகள் மற்றும் காடுகளின் சில அற்புதமான காட்சிகளை நீங்கள் ரசிக்கக்கூடிய பல வாய்ப்புகள் இங்கு உள்ளன. நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடு ஆகியவை இயற்கை காதலர்களின் கனவை நனவாக்குகிறது. இந்த மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் வழியாக நாம் நடந்து சென்றாலே ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.

நகரத்தின் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து சோர்வுற்ற உங்கள் உடம்புக்கு மாஞ்சோலை பயணம் ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கும். நீங்கள் காட்டில் மலையேறிச் செல்லும்போதே சில காட்டு விலங்குகளைக் கண்டு மகிழலாம். அமைதியான சூழ்நிலையில் தங்க விரும்பும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய இடமாக இந்த மாஞ்சோலை விளங்குகிறது. மாஞ்சோலை சுமார் 1162 மீ உயரத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இந்த இடம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரபலமானது, அவற்றில் பம்பாய் பர்மா தேயிலைத் தோட்டம் மிக முக்கியமானது. அதன் அழகிய அழகு காரணமாக, இந்த இடம் உதகமண்டலம் (ஊட்டி) பகுதிக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றை வரும் வழியில் கண்டு மகிழலாம். இவற்றுடன் மலைக்கு மேலே கண்டு ரசிக்கக் கோதையாறு, குதிரைவெட்டி, நாலுமுக்கு மற்றும் ஊத்து போன்ற இடங்களும் உள்ளன.

மாஞ்சோலை மலை(About Manjolai Mountain):

இங்கு அடர்த்தியான காடுகள் மற்றும் தோட்டங்களுக்கு மத்தியில் மலையேற விரும்புபவர்கள் (ட்ரெக்கிங்) ஒரு நல்ல நேர மலையேற்றத்தை மேற்கொள்ளலாம். இங்குள்ள குதிரைவெட்டி என்று அழைக்கப்படும் காற்றோட்டமான காட்சிப் புள்ளியில் (வியூ பாயிண்ட்) இருந்து ஒருவர் மூச்சடைக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கிருந்தபடியே மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை மற்றும் பாபநாசம் (காரையார்) அணை ஆகியவற்றின் அழகை தூரத்திலிருந்து கண்டு ரசிக்க முடியும். களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு அழகான பகுதியாக விளங்கும் இந்த மாஞ்சோலையில் வனவிலங்கு பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் யானைகள், கரடிகள், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் சாம்பார் மான் ஆகிய விலங்குகள் வாழ்கின்றன. அவற்றையும் கண்டு ரசிக்கலாம். மொத்தத்தில் இந்த மாஞ்சோலை பயணம் ஒருவருக்கு மிகவும் சுவாரசியமான அனுபவங்களைத் தரும் என்பற்று உறுதியாக நம்பலாம்.

மாஞ்சோலையில் சுற்றிப்பார்க்கும் வகையில் உள்ள சில முக்கியமான இடங்களைப் பற்றி இங்கு நாம் காணலாம்.

அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

1. தாசன் குளம் (டார்சன் பூல்):

மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் தாசன் பூல் அமைந்துள்ளது. இந்த அழகான தாசன் குளம் உள்ளூர்வாசிகளால் டார்சன் பூல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்தில் தெளிவான புதிய நீர் உள்ளது. இயற்கையின் பசுமையான சூழலால் நிரம்பிய இந்தப் பகுதி மணிமுத்தாரிலிருந்து சுமார் 13 கி.மீத்தொலைவிலும், மாஞ்சோலை மலையிலிருந்து சுமார் 12 கி.மீத்தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது.

2. காக்காச்சி ஏரி:

மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கு செல்லும் வழியில் காக்காச்சியில் ஒரு ஏரியும், இயற்கை கோல்ஃப் மைதானம் அமையப்பெற்றுள்ளது. கோல்ஃப்-கோர்ஸ் என அழைக்கப்படும் இந்த இடம் ஜமீன்தார்கள், விலங்குகளைத் தங்கள் இன்பத்திற்காக வேட்டையாடுவதோடு, வேட்டையாடுவதில் அவர்களின் திறமையைக் காண்பிக்கும் இடமாகும். இங்கு மான்கள், காட்டெருமைகள் போன்ற விலங்குகள் திறந்தவெளியில் துள்ளி திரியும் என்பதால் வேட்டையாடுவதற்கு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கோல்ஃப் மைதானமும், அருகில் உள்ள காக்காச்சி ஏரியும் இந்தப் பாதையைக் கடக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். நீர் மற்றும் மரங்களுடன் சாய்வான அடர்த்தியான பசுமை பூமியில் பயணிப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்குகிறது. இந்த இயற்கையான கோல்ஃப் மைதானம் மாஞ்சோலையிலிருந்து சுமார் 8 கி.மீத்தூரத்தில் தேயிலை தோட்டத்திற்கு செல்லும் அமையப்பெற்றுள்ளது.

Collage of the villages in Manjolai such as Kuthiraivetti, Oothu, and Kakachi.

3. நாலுமுக்கு:

நாலுமுக்கு என்னும் இடம் மாஞ்சோலை தோட்டத்திலிருந்து சிறிது தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்த நாலுமுக்குக்கு செல்லும் சாலைகள் மிகவும் சிறியவை மற்றும் அடர்த்தியான தாவரங்கள் வழியாகச் செல்லும் பாதையாக இருக்கும். அடர்த்தியான தாவரங்கள் வழியாக நேராகக் காட்டுக்குச் செல்லும் திடீர் கூர்மையான திருப்பங்கள் நிறைந்து உள்ளன. இந்தச் சாலையில் ஒரு மரப்பாலத்தை கடக்க வேண்டி இருக்கும். அதன் கீழ் ஒரு நிலையான நீரோடை உள்ளது. இதில் பயணம் செய்வது ஒரு சாகசம் செய்வது போலத் தோன்றும் என்றாலும் நம் மனதை கவரும் வகையில் இருக்கும். இங்குள்ள உயர்ந்த மரங்கள் மற்றும் காடுகளின் அடர்த்தியான நிலை காரணமாகக் காலநிலை குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். இந்த நாலுமுக்கு பகுதியை ஆண்டு முழுவதும் பார்வையிட்டுக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். கோடை காலத்தில் பகலில் சிறிது வெப்பம் வீசினாலும் இரவில் கம்பளி போர்த்தாமல் தூங்க முடியாத அளவுக்குக் குளிர் வீசும். ஏப்ரல் மாதத்தில் இங்குள்ள உள்ளூர் கோவிலில் ஒரு திருவிழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பகுதி சுற்றுலா பயணிகளால் களைகட்டும். இங்குத் தங்குவதற்கு போதிய இட வசதிகள் கிடையாது. அருகில் ஒரு சிறிய தேநீர் கடை மட்டுமே உள்ளது. அங்குச் சாப்பிட உணவு கிடைக்கிறது, ஆனால் முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும். குதிரைவெட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையிலும், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியிலும் தங்குமிடம் கிடைக்கிறது. அதற்கும் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். விருந்தினர் மாளிகையின் பின்னால் உள்ள மைதானம் சாம்பார் மான், காட்டுப்பன்றிகள் மற்றும் கரடிகளைக் கண்டு ரசிக்கும் ஒரு நல்ல இடமாக இருக்கும்.

4. குதிரைவெட்டி:

நாலுமுக்கிலிருந்து சுமார் சுமார் 8 கி.மீத்தொலைவில் குதிரைவெட்டி அமையப்பெற்றுள்ளது. ஒரு சிறந்த காய்ச்சி புள்ளியாக (வியூ பாயிண்ட்) விளங்கும் இந்த இடத்திலிருந்து மணிமுத்தாறு, காரையாறு மற்றும் சேர்வலாறு ஆகிய மூன்று பெரிய அணைகளை ஒரே இடத்தில் இருந்தபடி கண்டு ரசிக்கலாம். இந்தச் சிகரம் அதிகம் காற்று வீசக்கூடிய பகுதியாக இருக்கிறது. இங்குள்ள கண்காணிப்பு கோபுரத்திலிருந்து சிகரத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு, அடர்ந்த காடு, மலைகளுக்கு அப்பால் உள்ள காக்காச்சி ஏரி மற்றும் மாஞ்சோலை தோட்டம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

மழைக்காலங்களில் இந்தப் பகுதி முழுவதும் இயற்கை மூடுபனி சூழ்ந்து காணப்படும். இந்த அழகிய குதிரைவெட்டி காட்சி புள்ளியிலிருந்து களக்காடு - முண்டந்துறை புலி காப்பகத்தின் பசுமையான காடுகளைக் காணலாம்.மேலும் இந்தப் புள்ளியிலிருந்து சூரிய அஸ்தமன காலத்தில் பள்ளத்தாக்கின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்தப் பகுதியில் தான் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் விருந்தினர் மாளிகை அமைந்துள்ளது, இது "முத்துக்குளி வயல்" என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தைப் பார்வையிடச் சிறந்த நேரம் ஜனவரி முதல் மே வரை மற்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள காலம் ஆகும்.

இந்தக் குதிரைவெட்டி என்ற பெயருக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. முற்காலத்தில் சேர நாட்டைத் தழுவியிருந்த இந்தப் பகுதியில் அரசர்கள் குதிரை பயிற்சி முகாம் வைத்திருந்தனர். எனவே இது குதிரைகட்டி என்று அழைக்கப்பட்டதாம். அப்போது இந்த இடத்தில் உள்ள குதிரைகள் எல்லாம் எதிரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாம். இதனால் இந்தப் பகுதி குதிரைவெட்டி என்று பின்னர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

5. குட்டியார் அணை:

கோதையாறு மேல் அணையிலிருந்து வின்ச் நிலையத்திற்கு செல்லும் வழியில் குட்டியார் என்ற சிறிய அணை ஒன்று உள்ளது. குட்டியார் அணை மாஞ்சோலையிலிருந்து சுமார் 20 கி.மீத்தொலைவிலும், மணிமுத்தரிலிருந்து 42 கி.மீத்தொலைவிலும் அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்றார் போலக் குட்டியாகக் காணப்படும் இந்த அணைக்கட்டு மிகவும் ரம்மியமான இயற்கை சூழ்நிலையில் அமையப்பெற்றுள்ளது. இந்த அணையின் தண்ணீர் தெளிந்த கண்ணாடியை இந்த அணையின் தண்ணீர் தெளிந்த கண்ணாடியை போல காணப்படும் என்பதால் தண்ணீருக்குள் வாழும் மீன்கள், அடியில் கிடைக்கும் கூழாங்கற்கள் ஆகியவற்றை நாம் தெளிவாக பார்க்கலாம்.

View of the majestic Manimuthar falls and the mountains of the Western Ghats in the background near Manjolai

6. மாஞ்சோலை / மணிமுத்தாறு / ஊத்து தேயிலை எஸ்டேட்கள்(Manjolai/ Manimuthaaru/ Oothu Tea Estates):

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களுள்ள இடங்கள் தமிழ்நாடு அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட வன நிலங்கள் ஆகும். இந்தப் பகுதியைப் பாம்பே பர்மா வர்த்தகக் கழகம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. இந்த மாஞ்சோலை பகுதிக்குள் மூன்று தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவைகள் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட், மணிமுத்தாறு தேயிலை எஸ்டேட் மற்றும் ஊத்து தேயிலை எஸ்டேட் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்தத் தோட்டங்கள் 2300 அடி முதல் 4200 அடிவரை உயரத்தில் அமைந்துள்ளன. மாஞ்சோலை பகுதியில் உள்ள இந்தத் தேயிலை தோட்டங்கள், சாலை வசதி மற்றும் குடியேற்றங்களைப் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்தத் தேயிலை தோட்டங்களிலிருந்து விளையும் தேயிலைக்குத் தனி மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மாஞ்சோலை பகுதியில், 3,000 ஏக்கர் மட்டுமே தேயிலை பயிரிடப்பட்டது. ஊத்து தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள 526 ஏக்கருக்கும் சற்று அதிகமாக உள்ளது. மீதமுள்ள நிலம் ஊத்துக்கும் அதன் சகோதரி தேயிலைத் தோட்டங்களுக்கும் இடையில் ஒரு இடையக மண்டலமாக விளங்கிகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் களக்காடு - முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பச்சை பெல்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி காட்டில் உள்ள விலங்குகள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குக் கடக்க உதவுகிறது.

இந்தத் தேயிலை தோட்டம் 1929 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இந்தியாவின் தெற்கே நுனிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊத்து பகுதியில் முதலில் ஏலக்காய், சின்சோனா மற்றும் சில காபி பயிர்கள் வளர்க்கப்பட்டது. பின்னர் வந்த காலமான 1960 மற்றும் 1973 க்கு இடையில் தேயிலை அதிகளவில் பயிரிடப்பட்டது. ஊத்து தேயிலை தோட்ட பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500-4,000 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. இங்கு ஒரு ஹெக்டேருக்கு 16,000 முதல் 17,000 கிலோ (35,250-37,500 பவுண்ட்) வரை தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஊத்து தேயிலைத் தோட்டம் நாலுமுக்கிலிருந்து சுமார் 5 கி.மீத்தொலைவிலும், மாஞ்சோலையிலிருந்து சுமார் 18 கி.மீத்தொலைவிலும், மணிமுத்தாரிலிருந்து 40 கி.மீத்தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

7. வரக்கட்டை காட்சிப்புள்ளி (Varakattai View Point):

வரக்கட்டை என்பது நாலுமுக்கு அருகில் உள்ள மற்றொரு காட்சிப்புள்ளி (வியூ பாயிண்ட்) இடம் ஆகும். இதற்கு ஊத்து பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம் வழியாகச் செல்ல வேண்டும். எனவே அந்த இடத்தைப் பார்வையிட அந்தத் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் அனுமதி தேவை. காட்டு யானைகள் இப்பகுதியில் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் காணலாம். இங்கிருந்து காரையார் அணை மற்றும் கேரளாவில் எல்லைப்பகுதியில் உள்ள அகத்தியர் மலை ஆகியவற்றை தெளிவாகப் பார்க்க முடியும். நாலுமுக்கிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இந்த வரக்கட்டை அமைந்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், குதிரைவெட்டியிலிருந்து 6 கி.மீத்தொலைவிலும், மாஞ்சோலையிலிருந்து 14 கி.மீத்தொலைவிலும், மணிமுத்தாறிலிருந்து 36 கி.மீத்தொலைவிலும் நாலுமுக்கு பகுதி அமையப்பெற்றுள்ளது.

8. கோதையாறு மேல் அணை(Kothaiaaru Mel Dam):

கோதையாறு மேல் அணை மாஞ்சோலை மலைகளில் உள்ள நாலமுக்குக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மலைகளில் அமைந்துள்ள கோதையாறு அணை அதன் காட்டு பார்வைக்கு புகழ்பெற்றது. இங்கு இரண்டு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவற்றிலிருந்து 100 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. இந்த அணைக்குச் சேவை செய்யும் நேரடி நீரோடைகள் இல்லாததால் சேகரிக்கப்பட்ட நீர் கோதையாறு கீழ் அணை நீர்ப்பிடிப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கோதையாறு அணையின் மேல் பகுதிகளை அடைய ஒரு வின்ச் உள்ளது. இங்குச் செல்ல முன் அனுமதி தேவைப்படுகிறது. கோதையாறு அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு மதிப்புமிக்க மரங்கள் மற்றும் வனவிலங்குகள் யானைகள், குரங்குகள், முள்ளம்பன்றி, பாம்புகள், காட்டுப்பன்றிகள், மான் மற்றும் பல பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் இங்கு 42 க்கும் மேற்பட்ட வெப்பமண்டல மரங்கள் காணப்படுகின்றன. இந்த அணைக்கு அருகில் ஒரு காட்சி புள்ளி உள்ளது. அதிலிருந்து பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை மற்றும் சிற்றாறு அணை ஆகியவற்றை காணலாம்.

இந்த இயற்கை எழில் சூழ்ந்த மாஞ்சோலை பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அணையின் மேலே உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. இந்த மாஞ்சோலை பகுதி திருநெல்வேலியிலிருந்து சுமார் 85 கி.மீத்தொலைவிலும், பாபநாசத்திலிருந்து 50 கி.மீத்தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 45 கி.மீத்தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

இங்குச் செல்ல வனத்துறையின் முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். வனத்துறையின் அனுமதி பெற்று நமது சொந்த வாகனங்களில் பயணித்து மாஞ்சோலை மலைப்பகுதிகளை சுற்றி பார்க்கலாம். இது தவிர திருநெல்வேலியில் இருந்தும், அம்பாசமுத்திரத்தில் இருந்தும் மாஞ்சோலை மலைப்பகுதிக்கு செல்லச் சிறிய அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Ambasamutram - 4min(1.9km)
  • Kallidaikurichi - 3min(1.3km)
  • Veeravanallur Police Station - 18min(9.6km)
  • Sivanthipuram - 11min(5km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by பிரவீன்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram