திருநெல்வேலி அருகே உள்ள அழகிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் குற்றாலம் தென் தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 160 மீ (520 அடி) உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாக விளங்குகிறது.
இந்த பகுதியில் ஏராளமான அற்புதமான நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ளன. “தென்னிந்தியாவின் ஸ்பா” என்று சிறப்பித்து அழைக்கப்படும் குற்றாலம் அருவிகளின் தண்ணீர், மலையில் நிறைந்திருக்கும் பல அற்புத மூலிகைகள் காரணமாக மருத்துவ பண்புகள் நிறைந்து விளங்குகிறது.
குற்றால அருவி சீசன் (Courtalam Waterfall - Season time)
இந்த குற்றாலம் பகுதியில் உள்ள மலைகளை சுற்றி பல அருவிகள் உள்ளன. ஆனாலும் இந்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதில்லை. இங்கு அண்டை மாநிலமான கேரளாவில், தென்மேற்கு பருவமழை துவங்கும் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை தகுந்த பருவ கால சூழ்நிலை நிலவுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் அதிக மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கின்ற வேளையில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அதிகமான வெள்ளத்தில் அருவிகள் மூழ்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் யாரும் குளிப்பதற்கு அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
குற்றாலம் அருவி வரலாறு:(History of Kutralam Falls)
"ஏழைகளுக்கான ஊட்டி", "தென்னகத்தின் ஸ்பா" என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படும் குற்றாலம், புராண காலத்தில் பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய க்ஷேத்ரம், நன்னகரம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், சிவ முகுந்த பிரம புரம், திரிகூடபுரம், முனிக்கு உருகும் பேரூர் என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் குறுகிய ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் குறுகிய + ஆலம் = குற்றாலம் என்ற பெயர் உண்டானதாக சொல்லப்படுகிறது. குற்றால மழையானது பல தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்து பேசப்பட்டாலும், இந்த மலையின் பெயரில் எழுதப்பட்ட இலக்கியமான "குற்றால குறவஞ்சி" இதன் சிறப்புகளையும், வளங்களையும் எடுத்து இயம்புகிறது.
குறவஞ்சி நூல்களுள் பல பெருமைகளையும், பாராட்டுகளையும் பெற்ற குற்றால குறவஞ்சி திரிகூடராசப்ப கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. இதில் நாடகச்சுவையும், சந்த (ஓசை) நயங்கள் கூடிய பாடல்களும் நிறைந்து காணப்படுவதால் இன்றும் மேடை நாடகங்கள் மற்றும் நாட்டியங்களில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதற்கு உதாரணமாகக் குற்றால குறவஞ்சி நூலில் வரும் பாடல் ஒன்றை காணலாம்.
செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாடஇரு
கொங்கை கொடும்பகைவென்றனம் என்று
குழைந்து குழைந்தாடமலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த
சவுந்தார் பந்து பயின்றனளே
இந்த பாடல் வரிகளில் சந்த நயங்கள் அழகாக கையாளப்பட்டுள்ளதை நாம் உணர முடியும்.
குற்றாலம் சுற்றியுள்ள கோவில்கள்(Temples around the Kutrallam Falls)
குற்றாலம் சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு பேரருவிக்கரையில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு குற்றாலநாதர் கோயில் சைவ சமயத்தின் முக்கியமான பழம்பெரும் கோவிலாக விளங்குகிறது.
சிவபெருமான் திருநடம் புரிந்த பஞ்ச சபைகளில் குற்றாலம் சித்திர சபையை தன்னகத்தே கொண்டுள்ளது. சைவ சமயத்தை சார்ந்த அருளாளர்கள் இந்த குற்றாலம் தளம் மீது பல தேவார பாடல்களை பாடியுள்ளனர்.
இந்த குற்றாலம் திருக்கோவில் மலை மேலிருந்து பார்க்கும் பொது சங்கு வடிவத்தில் அமையப்பெற்றுள்ளதை நாம் காணலாம். எனவே குற்றாலம் எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்படும் என்பதில் குறையொன்றும் இல்லை.
இந்தக் குற்றாலம் நகரை சுற்றி குற்றாலநாதர் கோவில் தவிர அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், பண்பொழி திருமலை குமாரசாமி கோயில், புளியரை சிவன் கோவில், செங்கோட்டை சிவன் கோவில், பண்பொழி நகரீஸ்வரமுடையார் கோவில், அருள்மிகு தென் காசி சிவன் கோயில், கட்டாயம் சிவன் கோவில், சிவசைலம் ஸ்ரீ சிவலைபதி பரமகல்யாணி திருக்கோவில், மற்றும் கேரளா மாநில எல்லையில் உள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் , ஆரியங்காவு சாஸ்தா கோவில் போன்ற பிரபலமான ஆன்மீக ஸ்தலங்களும் அமையப்பெற்றுள்ளன.
குற்றாலம் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதற்கு காரணம் இங்குள்ள பேரருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, தேனருவி, பாலருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகள் ஆகும். இவைகள் ஒவ்வொன்றும் இந்தக் குற்றாலம் மலையைச் சுற்றி அருகருகே அமையப்பெற்றுள்ளன.
அமையப்பெற்ற இதுதவிர இந்தக் குற்றாலத்திற்கு அருகே இருக்கும் அடவிநயினார் அணைக்கட்டு, குண்டாறு அருவி மற்றும் அணைக்கட்டு, தோரணமலை, ராமநதி அணைக்கட்டு, அத்திரி மலை, கடனா நதி அணைக்கட்டு, பொதிகை மலை, அகத்தியர் அருவி, பாபநாசம் அணைக்கட்டு, சேர்வலாறு அணைக்கட்டு, மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கட்டு, மாஞ்சோலை மலை வாசஸ்தலம் ஆகிய இடங்களும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாக விளங்குகின்றன.
அதனால் குற்றாலத்திற்கு வரும் மக்கள் சுற்றி பார்த்து மகிழ பல இடங்கள் அருகிலேயே உள்ளன. இதுதவிர குற்றாலம் நகரில் அமையப்பெற்றுள்ள வெண்ணமடைக்குளத்தில் உள்ள படகு குழாம், பழத்தோட்டங்கள், இயற்கை மூலிகை பண்ணைகள், சுற்றுச்சூழல் பூங்கா, சிறுவர் மன மகிழ் பூங்கா போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள அருள்மிகு குற்றாலநாதர் கோவிலில் காணப்படும் பல கல்வெட்டுகள் இந்தப் பகுதியை ஆண்ட சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியை விவரிக்கின்றன. சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக திருமணத்தைக் காண மற்ற அனைத்து கடவுள்களும் இமயமலையில் கூடியிருக்க, பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விடுகிறது.
உயர்ந்த இதனைச் சரிசெய்யும் பொருட்டு சிவபெருமான், தனது பக்தரான அகத்திய முனிவரைத் தென்திசை நோக்கி அனுப்பிவைக்கிறார். தனது உத்தரவை ஏற்று தென்பகுதி சென்ற அகத்தியருக்கு இந்தத் தென் பகுதியில் அமையப்பெற்றுள்ள பல சிவாலயங்களில் எல்லாம் திருமண காட்சி அளித்து அருள்புரிந்த புராண வரலாற்று சிறப்புகளையும் இந்தக் குற்றாலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image Credit : blogspot.com
குற்றாலம் நீர்வீழ்ச்சிகள்: (Courtalam Falls)
குற்றாலத்தில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் (அருவிகள்) அமையப்பெற்றுள்ளன. இந்த நீர்விழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரும் பகுதியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிரம்பிய மூலிகைகள் நிறைந்து காணப்படுவதால், இந்த நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் மருத்துவ குணங்களுடன் திகழ்கிறது.
இதனால் இந்த அருவிகளில் நீராடும் சுற்றுலா பயணிகளின் உள்ளமும், உடலும் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாகத் திகழ்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகக் குற்றால அருவிக்குளியல் விளங்குகிறது. இத்தனை சிறப்புகள் பெற்ற குற்றாலம் மலையினை சுற்றி அமையப்பெற்றுள்ள முக்கியமான நீர்வீழ்ச்சிகள் பற்றி இங்கு நாம் காண்போம்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Tiger Falls - 6 min (2.0 km)
- Old Coutralam Falls - 16 min (7.6 km)
- Courtallam Five falls - 11 min (4.2 km)
- Shenbaga Devi Waterfalls - 1 min (24 m)
- Palaruvi Waterfalls - 52 min (27.4 km)
1. பேரருவி (Main Falls):
குற்றாலத்தில் அமையப்பெற்றுள்ள பிரதான நீர்வீழ்ச்சி பேரருவி ஆகும். இது புத்தருவி என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் இந்த அருவியைச் சிவமது கங்கை என்றும் வடவருவி என்றும் சிறப்பிக்கிறது.
குற்றாலத்தில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக விளங்கும் இந்தப் பேரருவி, சுமார் 60 மீட்டர் உயரத்திலிருந்து பொங்கி பாய்கிறது. இந்த அருவிக்கு மேலே 19 மீ ஆழத்தில் உள்ள "பொங்குமாங்கடல்" என்ற இயற்கை பள்ளம்மூலம் நீரின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு அருவியில் தண்ணீர் விழுகிறது.
இந்தப் பள்ளம் நீர் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து நாம் குளிப்பதற்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. இந்தத் தண்ணீர் முழுவதும் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளதால் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இங்குள்ள அருவி கரை மலைப்பாறை முழுவதும் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இந்த லிங்கங்கள் அருவி நீரில் இயற்கையாக அபிஷேகம் கண்டபடி உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியில் ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் குளித்தால், இந்தத் தண்ணீரின் மகத்துவத்தால் உடலில் ஏற்படும் அனைத்து செரிமான மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் குணமடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நீர்வீழ்ச்சி மிகப்பெரியது என்பதால், கிட்டத்தட்ட 200 முதல் 300 பேர்வரை ஒரே நேரத்தில் குளிக்க முடியும். இந்த அருவியின் கரையில் தான் புகழ்பெற்ற திருக்குற்றாலநாதரின் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.
எனவே மிக முக்கியமான தீர்த்தக் கட்டமாகவும் விளங்கும் இந்த அருவியிலிருந்து பல கோவில்களின் கும்பாபிஷேகத்திருக்கும், கொடை விழாக்களுக்கும் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.
பேரருவியில் மலைப்பாறையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் பாதுகாப்பு வளைவு ஒன்று அமையப்பெற்றுள்ளது. பருவ காலங்களில் அதிக மழை பொழிந்து அருவியில் அதிகமான வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது இந்தப் பாதுகாப்பு வளைவை தாண்டித் தண்ணீர் விழும். அப்படி விழும் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டிவிட்டால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கிடையாது.
2. சிற்றருவி (Small Falls):
இந்த அருவி பெயருக்கு ஏற்றார் போலச் சிறிய அருவியாக உள்ளது. இது பேரருவி நீர்வீழ்ச்சியிலிருந்து பிரிந்து வரும் தண்ணீரால் அதன் பக்கவாட்டில் உள்ள பாறைகளின் வழியே பாய்ந்து விழுகிறது. இங்கே குளிக்கும் இடம் இரண்டு தனித்தனி திறந்த வெளி அறைகள்போல அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஆண்களுக்கு ஒரு பகுதியும், பெண்களுக்கு ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அருவி அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருப்பதால் இயற்கையாகவே இருட்டு நிரம்பி காணப்படும். இந்த அருவி வழியாகத்தான் மலையேறி மேலே உள்ள செண்பகா தேவி அருவிக்குச் செல்ல வேண்டும்.
3. செண்பகா தேவி அருவி (Shenbaga Devi Falls):
செண்பகா தேவி நீர்வீழ்ச்சி பேரருவி நீர்வீழ்ச்சி அமையப்பெற்றுள்ள மலைகளுக்கு மேலே அமையப்பெற்றுள்ளது. இங்குச் செல்லச் சிற்றருவி வழியாக மலையேறி நடந்து தான் செல்ல வேண்டும். இது பேரருவிக் கரையிலிருந்து சுமார் 2.5 கி.மீத்தூரத்திலும், சிற்றருவியிலிருந்து 40 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இங்குள்ள அருவிக்கரையில் உள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலால் இந்த அருவி செண்பகா தேவி நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் செண்பக மரங்கள் நிறைந்த சோலையாக இருந்ததால், செண்பக மணம் வீசும் சோலைகளுக்கு நடுவே உள்ள இந்த அம்மன் செண்பகா தேவி அம்மன் என்ற பெயர் பெயரில் அழைக்கப்பட்டதாகவும், இந்த அம்மனே இந்தக் குற்றாலம் நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தச் செண்பக தேவி அம்மனுக்கு சிறப்பு விழா நடைபெறுகிறது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்குக் கூடி சுவாமி தரிசனம் செய்வார்கள். முன்னர் இந்த அருவிக்குச் செல்லத் தினமும் அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வனத்துறை மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கை காரணமாகக் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி உண்டு. இங்குக் கோவிலின் பின் பகுதியில் உயரமான இடத்திலிருந்து தண்ணீர் விழுகிறது அதற்க்கு கீழே தடாகம் ஒன்றும் உள்ளது. விழும் தண்ணீர் தான் மலையின் வழியாகத் தவழ்ந்து சென்று பொங்குமாங்கடலுக்குள் விழுந்து, பேரருவியில் கொட்டுகிறது.
4. தேனருவி (Honey Falls):
இந்த நீர்வீழ்ச்சி சாகசம் மற்றும் வீர விளையாட்டுப் பிரியர்களுக்குத் தகுந்த மலையேற்ற அனுபவத்தைத் தரும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இந்தத் தேனருவி, பேரருவியில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இதுவே குற்றாலம் மலையில் உள்ள அருவிகளின் முதல் அடுக்காகும். எனவே இங்குள்ள நீர் மிகவும் தூய்மையானதாக கருதப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை உருவாக்கும் மலைகளைச் சுற்றி பல தேன்கூடுகள் உள்ளதால், இது தேனருவி என்று அழைக்கப்படுகிறது.
தேனருவியை அடைவது உண்மையிலேயே ஒரு சாகசம் நிறைந்த பயணம் ஆகும். செங்குத்தான மலைப் பாதைகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாகச் செல்லும் ஒரு வழியின் முடிவில் இது அமையப்பெற்றுள்ளதால் இந்த அருவி பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். இந்த இடத்தில் உள்ள அருவி நீரின் தூய்மையை பாதுகாக்கும் பொருட்டு, தற்போது இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. ஐந்தருவி (Five Falls):
குற்றாலத்தில் அமையப்பெற்றுள்ள பிரபலமான நீர்வீழ்ச்சி ஐந்தருவி ஆகும். இங்கு மலைப்பாறைகளின் மீதிருந்து ஐந்து பிரிவுகளாக தண்ணீர் ஆர்பார்த்தித்து கொட்டுவதை பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஏனெனில் இதில் குளிப்பது அனைத்து வயதினருக்கும், மென்மையானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும். கழு பார்வையில் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்தால், ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் படம் எடுத்து நிற்பது போல இருக்கும்.
ஐந்து பிரிவுகளாக கீழ்நோக்கி பாயும் தண்ணீர், ஒரே ஓடையில் ஒன்றாக இணைந்து பாய்ந்து சமவெளிக்கு செல்கிறது. இந்த ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் பெண்கள் குளிப்பதற்கும், மூன்று பிரிவுகள் ஆண்கள் குளிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்தருவிக்கரையில் பாரம்பரியமிக்க ஒரு ஐயப்பன் (சாஸ்தா) கோவிலும், விநாயகர் கோவிலும் அமையப்பெற்றுள்ளன. இந்த ஐந்தருவிக்கு அருகில் தான் சிறப்பு பெற்ற சூற்றுச்சூழல் பூங்கா அமையப்பெற்றுள்ளது. மேலும் குற்றாலத்தின் பிரபலமான படகு சவாரி நடைபெறும் வெண்ணமடை குளமும் இந்த ஐந்தருவிக்கு அருகில் தான் அமையப்பெற்றுள்ளது.
பேரருவியில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் பாதையில் இயற்கை சூழ்நிலைகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ள பல்வேறு தனியார் ஓய்வு விடுதிகள், பாரம்பரிய பங்களாக்கள் மற்றும் ரெசார்ட்கள் உள்ளன. இந்த பாதையில் ஆங்காங்கே சிறு வியாபாரிகள் மலையில் விளையும் பழங்கள், மாங்காய்கள் ஆகியவற்றுடன் பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதநீர், நுங்கு, தவுன் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை விற்கிறார்கள்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- Coutrallam Hotel SARAAL
- Hotel Sri Lakshmi - 2-star hotel
- Saaral Resort - 3-star hotel
- Hotel Kurinji
- Alankar Lodge & Marriage Hall
6. பழத்தோட்ட அருவி (Orchard Falls):
பழத்தோட்டங்களின் மத்தியில் அமையப்பெற்றுள்ளதால், பழத்தோட்ட அருவி என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ஐந்தருவிக்கு மேல் பக்கம் இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி விஐபி நீர்வீழ்ச்சி என்று பிரபலமாக கூறப்படுகிறது, ஏனெனில் இது அரசியல்வாதிகள் மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் மட்டுமே சென்று வரும் வகையில் உள்ளது.
இந்த அழகிய நீர்வீழ்ச்சியைப் பார்வையிட மற்றவர்கள் சுற்றுலா வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். இருப்பினும், இந்த நீர்வீழ்ச்சிக்கான நுழைவு இப்போது அனைவருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை இங்கு ஒரு சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் குழந்தைகள் பூங்காவை அமைத்துள்ளது. உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கான பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளை இங்குள்ள நர்சரியில் இருந்து வாங்கலாம்.
7. பழைய குற்றாலம் அருவி (Old Courtallam Falls):
பேரருவி நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது பழைய குற்றாலம் அருவி. இந்த நீர்வீழ்ச்சி இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் உருவான பள்ளத்தாக்கில் பாய்கிறது.
உயரமான செங்குத்தான மலையில் இருந்து தண்ணீர் விழுவதால் இங்கு குளிக்கும் சுற்றுலா பயணிகள் உடம்பு மேல் கல் விழுவது போன்ற நிலை இருந்தது. இதற்காக செங்குத்தான பாறைகளை குடைந்து, படிப்படியான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தண்ணீர் பட்டு விழுவதால் தற்போது வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏற்றபடி விழுகிறது. இங்கு குளிப்பவர்கள் உடம்பு மசாஜ் செய்துகொண்டதை போன்று புத்துணர்ச்சியாக காணப்படுவார்கள். இது அடர்ந்த மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளதால் இங்கு அதிகளவில் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்த அருவிக்கு செல்ல பருவ காலத்தில் அரசு பேருந்துகள் பேரருவி பகுதி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மற்ற நேரங்களில் தனியார் வாடகை வாகனங்கள் மூலமும், நமது சொந்த வாகனங்கள் மூலமும் சென்று வர முடியும்.
8. புலி அருவி (Tiger Falls):
இது சிறுவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய நீர்வீழ்ச்சி ஆகும். இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு குளிக்க ஏற்றதாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீர் ஒரு ஏரியில் குவிந்து கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக அனுப்பப்படுகிறது.
இது பழங்காலத்தில் இந்த காட்டில் வாழ்ந்த புலிகளுக்கு ஒரு நீர்ப்பாசன துளையாக இருந்ததால் புலியருவி என்ற பெயரை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த அருவிக்கு அருகே ஒரு சாஸ்தா கோவிலும், தனியார் பங்களா ஒன்றும் உள்ளது.
அருவிகள் அனைத்தும் குற்றாலம் நகரில் உள்ள பேரருவி நீர்வீழ்ச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் அடுத்தடுத்து சென்று வரும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
இந்த எட்டு அருவிகளில் செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி ஆகிய மூன்று அருவிகளும் செல்ல தற்போது அனுமதி இல்லை. பருவ காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டும்.
மற்ற நேரங்களில் பேரருவி பகுதியில் மட்டும் லேசானது முதல் நீர்க்கசிவு வரை தண்ணீர் விழும். இது தவிர கும்பாவுருட்டி அருவி, பாலருவி, குண்டாறு அருவி ஆகிய அருவிகள் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை பகுதியில் அமையப்பெற்றுள்ளன.
இந்த குற்றாலம் மலைப்பகுதியில் பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த பழங்கள் இயற்கையாக விளைகின்றன. குறிப்பாக ஐந்தருவி அருகில் உள்ள பழத்தோட்ட பகுதியில் பல வகையான பழங்கள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுள் குழந்தை இல்லாதவர்களுக்கு சிறந்த மருத்துவ பலன் தரக்கூடிய துரியன் பழம் வாங்க போட்டி நிகழ்கிறது.
புலி அருவியில் விளையும் பழங்களுள் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம். ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, பன்னீர் கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, நாவல், திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், காட்டு ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய் ஆகியவை இயற்கை சுவையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
சுவையுடன் கூடிய பழங்களை விற்பனை செய்ய ஐந்தருவி பகுதியிலும், பேரருவி பகுதியிலும் நிறைய பழக்கடைகள் உள்ளன. இவை தவிர மலையில் விளைந்த மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் இங்கு உள்ளன. மலையில் விளைந்த நறுமண பொருட்களான ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதிபத்திரி, லவங்கம், மாசிக்காய் போன்றவைகள் நறுமணம் கமழ விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர பேரருவி சன்னதி தெரு பகுதியில் சூடான ஏத்தங்காய் சிப்ஸ் விற்பனை செய்யும் கடைகள் ஏராளம் உள்ளன. சூடான திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மிளகா பஜ்ஜி, வடை ஆகிய தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளும் இங்கு ஏராளமாக உள்ளன.
அருவியில் குளித்து முடித்து திரும்பும் சுற்றுலா பயணிகள் சூடாக மிளகா பஜ்ஜி சாப்பிட விரும்பி கடைகளில் நிற்பார்கள். அங்கு மிளகாய் பஜ்ஜியோடு, உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, உள்ளி போண்டா ஆகிய பதார்த்தங்களும், பாதம் பால், தேயிலை, காபி, சுக்கு தண்ணீர் போன்ற சூடான பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தனை சிறப்புகளும், மகத்துவங்களும் பெற்ற குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ வாழ்வில் ஒருமுறையாது அனைவரும் இங்கு அவசியம் சென்று வர வேண்டும்.
அமைவிடம் / செல்லும்வழி (Location / Direction):
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், பசுமையான இயற்கை சூழ்நிலையில் குற்றாலம் நகரம் அமையப்பெற்றுள்ளது. இங்கு செல்ல திருநெல்வேலி மாநகரில் இருந்து தென்காசி செல்லும் பேருந்துகளில் ஏறி ஒன்றரை மணி நேரம் பயணித்து, தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பதினைந்து நிமிட நகர பேருந்து பயணத்தில் குற்றாலத்தை சென்றடையலாம்...