அதிசயங்கள் நிறைந்த அத்திரி மலை:
திருநெல்வேலி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்பெற்றுள்ளது அத்திரி மலை. இது இயற்கை எழில் சூழ்ந்த காடுகள் மற்றும் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியாகத் திகழ்கிறது. இங்கு யானை, செந்நாய், சிறுத்தை, மிளா போன்ற உயிரினங்கள் நிறைந்து வாழ்கின்றன. பல தெளிந்த நீரோடைகளையும், நீர் ஊற்றுக்களையும் கொண்டு திகழும் இங்குத் தான் தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படும் கடனா நதி உற்பத்தியாகிறது. இந்தக் கடனா நதி, கருணை நதி என்றும் அழைக்கப்படுகிறது. அதிசயங்கள் பல நிரம்பிய இந்த மலைப்பகுதியை பற்றி இங்கு நாம் காண்போம்.
அத்திரி மலை பெயர்க்காரணம்:
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு அத்திரி முனிவர் தனது மனைவி அனுசுயா தேவி மற்றும் அவரது சீடர்களுடன் இந்த அத்திரி மலைப்பகுதிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த மலைப்பகுதியின் அமைதியும், இயற்கை வளங்களும் பிடித்துப் போய்விட அங்கேயே குடில் அமைத்துச் சிறிது காலம் தங்குகிறார். தனக்கு ஏற்ற ஒரு இடத்தை அந்த வனப்பகுதியில் தேர்ந்தெடுத்த அத்திரி முனிவர் அங்குச் சிவபெருமானை குறித்து தவம் இயற்றுகிறார். அவரின் தவத்திற்கு இறங்கிய சிவபெருமான் அவர் முன்னர் காட்சியளித்து அவருக்கு அருள்புரிகிறார். பின் வந்த காலத்தில் அத்திரி மகரிஷியின் சீடராகக் கருதப்படும் கோரக்கர் இவ்விடத்தில் தனது குருவான அத்திரி மகரிஷிக்கு கோவில் ஒன்றை கட்டி வணங்கினார் என்றும், அதுவே தற்போது அத்திரி மலையில் இருக்கும் கோவில் எனவும் கூறப்படுகிறது. அத்திரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதாலும், அவருடைய கோவில் இங்கு இருப்பதாலும் இந்த மலைப்பகுதி அத்திரி மலை என்று அழைக்கப்படுகிறது.
அத்திரி மலை சிறப்புகள்:
பசுமையான மரங்கள் மற்றும் அரிய மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த இந்த அத்திரி மலையில் அகத்தியர், அத்திரி மகரிஷி, கோரக்கர், தேரையர் போன்ற முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் இங்குப் பல சித்தர்கள் சூட்சுமமாக வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மிகவும் செழிப்பான இடமாக இருக்கிறது. இந்த மலைகளில் தோன்றும் நீரோடைகள் மற்றும் ஆறுகள் பல ஆண்டுகளாக வற்றாமல் போனி வந்து கொண்டிருப்பது அதிசயமே. இந்த மலைகளிலிருந்து வரும் குளிர்ந்த தென்றல் காற்று இங்குள்ள அற்புத மூலிகைகளின் மேல் பட்டு வீசுவதால், அந்தக் காற்று நம்மைத் தொட்டவுடன் நம் உடலில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, யோகிகள் மற்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள மூலிகைகளைப் பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்ந்துள்ளார்கள். தற்போதும் இங்குப் பல மருத்துவ குணமுடைய மூலிகைகள் நிறைந்து காணப்பட்டாலும் அதனால் இக்கால தலைமுறையினரால் அடையாளம் காணமுடிவதில்லை.
இங்கு அத்திரி மகரிஷியின் சீடரான கோரக்கர் தியானம் செய்த மரம் இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் விரைவில் தவம் சித்தியாகும் என்று கூறப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Alwarkurichi river - 23min(11.7km)
- DKV POND - 43min(19.8km)
- Old Coutralam Falls - 50min(28.3km)
- Thalaiyanai Bathing spot - 45min(20.4km)
- Agasthiyar Falls - 53min (21.1km)
பன்னீர் மழை பொழியும் மரங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், பங்குனி மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் இங்குள்ள அமிர்தவர்ஷினி எனப்படும் மரத்திலிருந்து பன்னீர் மழை பொழியும் அதிசய நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. வெப்பமான கோடை காலமாகக் கருதப்படும் இந்த மரங்களிலிருந்து இவ்வகையான மழை பொழிவது மிகவும் அதிசயமாக இருக்கிறது. இந்தக் கோவிலின் பகுதியில் பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் அருளால் தான் இந்தப் பன்னீர் மழை பொழிவதாகவும் நம்பபப்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் இந்த மழை பொழிவு பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டபோது, இந்த மழைக்கு காரணம் இந்த மரத்தில் காணப்படும் சிறிய பூச்சிகள் என்று தெரிய வந்ததாகக் கூறுகிறார்கள். அந்தப் பூச்சிகள் அமிர்தவர்ஷினி மரங்களின் பட்டைகளிலிருந்து நறுமணமிக்க தண்ணீரை உறிஞ்சி மழையாகப் பொழிகின்றன என்று கூறுகிறார்கள். எனினும் இந்த அதிசய நிகழ்வு எல்லா நாட்களிலும் நடைபெறுவதில்லை. ஒரு ஆண்டுல் ஒரே சில நாட்களில் மட்டுமே நிகழ்வதற்கான காரணத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்தப் பன்னீர் மழை பொழிவு கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள இரண்டு குறிப்பிட்ட மரங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்தச் சிறிய பூச்சிகள் எவ்வாறு பெரிய அளவிலான மழையை பொழிய செய்ய முடியும் என்பது விடை தெரியாத கேள்வியாகத்தான் இன்றுவரை இருக்கிறது.
அத்திரி மலையில் தோன்றும் கடனா நதி:
இயற்கை வளங்கள் பல நிறைந்த இந்த மலைப்பகுதியில் தான் கடனா நதி உற்பத்தியாகிறது. இந்த நதியானது அத்திரி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அத்திரி மகரிஷியின் தாகத்தை தணிப்பதற்காக அவர் மனைவி கங்கை தேவியை வேண்டிட, கங்கா தேவியே இங்குக் கடனா நதியாகத் தோன்றியதாகவும் இரு வேறு நிகழ்வுகள் கூறப்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் இங்கு உற்பத்தியாகும் இந்தக் கடனை நதி நீர் கங்கை நதிக்கு நிகரான மகத்துவங்களை பெற்றுள்ளதாக
இந்த நீரில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான சோதனைகள்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது வியக்கத் தக்க உண்மை ஆகும்.
அத்திரி மகரிஷி - அனுசுயா தேவி கோவில்:
இந்த மலைப்பகுதியின் அடர்ந்த காடுகளின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது அத்திரி மகரிஷி - அனுசுயா தேவி திருக்கோவில். இந்தக் கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியில் தான் முன்னர் அத்திரி மகரிஷி தவம் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இங்கு விநாயகர், முருகன், சிவன், அத்திரி மகரிஷி - அனுசுயா தேவி ஆகியோருடன் உடன் கோரக்க முனிவருக்கும் சன்னதி உள்ளது. தற்போது இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் முயற்சியால் சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்தக் கோவில் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இங்கு வரும் பக்தர்களின் கூடுதல் முயற்சியால் கங்கா தேவியின் விக்கிரகமும் நிறுவப்பட்டுள்ளது. எனினும் மலைப்பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ள கோவில் என்பதால் இங்குச் சென்று வழிபடப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று வனத்துறையின் முறையான அனுமதி பெற்று இந்தக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.
அத்திரி மலைப்பயணம் மேற்கொள்ளபவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்:
இந்தக் கோவிலானது "களக்காடு - முண்டந்துறை புலிகள் சரணாலயம்" என்பதன் எல்லைக்குட்பட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடனா நதி அணையிலிருந்து மலைகளின் அடிவாரத்தில் மலையேறத் தொடங்கி, காட்டு பகுதியின் வழியே சுமார் இரண்டு மணி நேர நடைபயணம் மேற்கொண்டால் தான் இந்தக் கோவிலைச் சென்றடைய முடியும். இந்த மலையேற்றம் செய்யும் பாதையில் ஒருசில செங்குத்தான இடங்களைத் தவிர மீதமுள்ள பாதை நேராகவும் நடக்க எளிதாகவும் இருக்கும். மலையேற்றத்தின் பாதியிலேயே நீங்கள் கடனா நதியைக் காண முடியும். தெளிந்த நீரோடையாக ஓடும் இந்த நதிக்குள் துள்ளி விளையாடும் மீன்களையும், ஆற்றுக்குள் கிடைக்கும் கூழாங்கற்களையும் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு மீதி மலையேற்றத்தை துவங்கினால் உடம்பு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையேறிக் கோயிலுக்குச் சென்று வர முடியும். கோயிலுக்கு வருகை தரும் அனைவரின் பெயரையும் வன அதிகாரிகள் சோதனை சாவடியில் குறித்துக்கொள்வார்கள்.
2. வனப்பாதைகள் வழியாகச் செல்ல வேண்டும் என்பதால் தனியாகச் செல்வதை தவிர்த்துச் சிறு சிறு குழுக்களாகச் செல்ல வேண்டும். புதிதாகச் செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்தவர்களைப் பின்பற்றிச் சென்று வருவது நன்மை பயக்கும்.
3. இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள், கேமராக்கள், வெடி பொருட்கள், மது பாட்டில்களை உங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
4. மலையேறும்போது ஆழ்ந்த தாவரங்கள், கரடு முரடான பாதைகள், முட்கள் மற்றும் கற்கள் நிறைந்த வழியாக நடக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த உடைகளையும், பாதணிகளையும் அணிந்து செல்வது நல்லது.
5. மலையேற்றத்தின்போது ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்துகொள்ள ஒரு அடிப்படை முதலுதவி பெட்டி மற்றும் அடிப்படை மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.
அமைவிடம் / செல்லும் வழி:
நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீத்தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரிலிருந்து, மேற்கே சுமார் 12 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ள கடனா நதி அணைக்கட்டிற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை அனுமதி பெற்று அணையின் வழியாகச் சுமார் மூன்று மணிநேர நடைப்பயணத்தில் இந்தக் கோவிலைச் சென்றடையலாம்.