சுத்தமல்லி அணைக்கட்டு

அடிக்கிற வெயிலுக்கு எங்கயாவது போய் தண்ணீரில் விழுந்து குளிச்சா சுகமா இருக்கும் என்று நம்ம எல்லோருக்குமே தோணும். அந்த அளவுக்கு வெயில் மண்டைய சுட்டெரிக்குது. என்னதான் நம்ம மாநகரத்துக்குள்ள தாமிரபரணி ஆறு ஓடினாலும், கொஞ்சம் அமைதியான பகுதிகளுக்கு போய் நாம குளிச்சுட்டு வர்றது தனி சுகம் தான் என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். அந்த வகையில் திருநெல்வேலி மாநகரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுத்தமல்லி அணைக்கட்டு ஒரு சிறப்பான பகுதியாக விளங்குகிறது.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு சுத்தமல்லி கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் பச்சை பசேல் வயல் பகுதிகளுக்கு நடுவே அமையப்பெற்றுள்ளது. கிராமத்துக்குள் அமையப்பெற்றுள்ள இடம் என்பதால் இங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிப்பது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இங்கிருந்து தான் நெல்லை கால்வாய் தனியாக பிரிந்து செல்கிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் நடுவே ஒரு சிறிய மலை குன்று ஒன்று இருக்கிறது. அந்த குன்றின் மீது ஒரு சிறு கோவிலும் இருக்கிறது. இந்த குன்றின் மேல் நின்று பார்த்தால் ஆற்றின் பகுதியும், வயல் வெளிகளும் மிக அழகாக தெரியும்.

இந்து மலைக்குன்றுக்கு மேலே கோடை காலமான தற்போது மிக எளிதாக சென்று வரலாம். ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் போது இதற்கு செல்வது சற்று கடினமான விஷயமாக இருக்கும். ஆற்றின் கரையில் பெரிய பெரிய ஆல மரங்கள் நமக்கு நிழல் தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றன, மேலும் சிறு மண்டபங்களுடன் கூடிய சாஸ்தா கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பகுதியின் அருமை தெரிந்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். மேலும் வீட்டில் இருந்தே உணவு சமைத்து எடுத்து வந்து குளித்து முடித்தவுடன், குடும்பமாக அமர்ந்து உணவருந்தியும் செல்கின்றனர். கோடை கால வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட நாமும் சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு வரலாம். இங்கு செல்ல நம் சொந்த வாகனங்கள் இருந்தால் வசதியாக இருக்கும். அல்லது வாடகை வாகனங்களை அமர்த்தியும் சென்று வரலாம்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகரில் இருந்து பேட்டை வழியாக சேரன்மகாதேவி சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் பயணித்தால் சுத்தமல்லி விலக்கு என்ற இடம் வரும். இந்த சுத்தமல்லி விலக்கில் இருந்து கிழக்கே பிரிந்து செல்லும் சாலை வழியாக பயணித்தால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் சுத்தமல்லி கிராமம் வரும். அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது சுத்தமல்லி அணைக்கட்டு.

About Lakshmi Priyanka

Check Also

மனதை மயக்கும் மாஞ்சோலை

மாஞ்சோலை என்னும் பகுதி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலமாகும். இது மேற்குத் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!