உடன்குடி கருப்பட்டி

நம் முன்னோர்கள் உண்ணும் உணவையே மருந்தாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் அவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகித்த உணவு பொருட்களுள் ஒன்றாக திகழ்ந்தது கருப்பட்டி. கருப்பட்டியை தான் இனிப்பிற்காக தங்கள் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டார்கள். கருப்பட்டி பயன்பாட்டில் இருந்த வரை சர்க்கரை நோய் என்ற ஒன்று இருந்ததாக தெரியவில்லை. பிற்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெள்ளை சர்க்கரை என்னும் பொருளை உணவில் சேர்த்துக் கொண்ட பின்னர் தான் சர்க்கரை நோய் என்ற ஒன்று இருப்பதே தெரிய வந்தது. அந்த அளவுக்கு கருப்பட்டி மனிதர்களின் உணவில் முக்கியத்துவம் பெற்று இருந்தது. அனால் தற்போதய காலகட்டத்தில் கருப்பட்டியின் பயன்பாடு என்பது மிகவும் குறைந்து விட்டது. இதனால் இதன் உற்பத்தியும் குறைந்து வருகிறது. எனினும் இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உணவில் கருப்பட்டி பயன்படுத்தப்படுகிறது. இன்றும் இங்குள்ள நிறைய வீடுகளில் கருப்பட்டி காபி, சுக்கு காபி போன்றவற்றை கருப்பட்டி கலந்தே தயார் செய்கிறார்கள். நம் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் கருப்பட்டியானது பனை மரத்தில் இருந்து கிடைக்கிறது. எனவே பனை மரங்கள் அதிகளவில் இருக்கும் இடத்தில் கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள உடன்குடி என்னும் ஊரிலும், தூத்துக்குடி அருகில் உள்ள வேம்பார் என்னும் ஊரிலும் கருப்பட்டி பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நாம் திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தரத்தில் சிறந்து விளங்கும் உடன்குடி கருப்பட்டி பற்றி பார்க்கலாம்.

உடன்குடி கருப்பட்டி:

திருநெல்வேலி அருகில் உள்ள உடன்குடி என்னும் ஊரில் கருப்பட்டி உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த பகுதியை சுற்றி நிறைய பனைமரங்கள் வளர்க்கப்படுவதால் கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழிலை இப்பகுதி மக்கள் அதிகளவில் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் கருப்பட்டி உற்பத்தி செய்யப்பட்டாலும் உடன்குடி கருப்பட்டிக்கு என தனி மவுசு உள்ளது. அந்த அளவுக்கு உடன்குடி பகுதிகளில் உற்பத்தியாகும் கருப்பட்டி சுவை மற்றும் மணம் மிக்கதாக திகழ்கிறது. இன்றும் சந்தையில் விற்கப்படும் உடன்குடி கருப்பட்டியே தரத்தில் முதல் இடம் வகிக்கிறது. அந்த அளவுக்கு உடன்குடி கருப்பட்டி சிறப்பிடம் பெறுகிறது.

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்:

கருப்பட்டியில் அதிகளவு பொட்டாசியமும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலு சேர்க்கின்றன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட கருப்பட்டியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கருப்பட்டியில் உடலுக்கு தேவையான கார்போஹைடிரேட் சத்துக்கள் உள்ளதால், இது அதிக கலோரிகள் இல்லாமல் உடல் ஆற்றலை அதிகரிக்கிறது.

கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து, ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கருப்பட்டியை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், உடம்பில் தங்கியுள்ள நச்சு கழிவுகள் வெளியேறிவிடும்.

உணவு உட்கொண்ட பின்னர் சிறு துண்டு கருப்பட்டியை வாயில் போட்டு மென்று தின்றால், ஜீரண சக்தி அதிகமாகி உண்ட உணவு எளிதாக ஜீரணித்து விடும்.

கருப்பட்டி உடன் சீரகத்தை சேர்த்து உட்கொள்ளும் போது நன்றாக பசி எடுக்கும்.

உடலில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தை பாதுகாப்பாக வைக்க கருப்பட்டி உதவுகிறது.

குப்பைமேனி கீரையை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கி விடும்.

வயதுக்கு வந்த குழந்தைகளுக்கு கருப்பட்டி மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து களி செய்து கொடுத்து சாப்பிட செய்தால், இடுப்பு எலும்பு மற்றும் பிற எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறை:

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பத நீரில் இருந்து தான் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த பதநீரை பனைமரத்தில் இருந்து எடுப்பதற்காக பனைமரத்தில் உள்ள குறிப்பிட்ட பாலையை வெட்டி அதில் ஒரு சுண்ணாம்பு தடவிய மண்பானையை கட்டிவைத்து விடுவார்கள். இந்த வெட்டப்பட்ட பாலையில் இருந்து சொட்டு சொட்டாக கசியும் திரவம் அந்த பானைக்குள் சேகரிக்கப்படும். காலையில் கட்டப்பட்ட பானை மாலையில் நிரம்பி இருக்கும். இதுவே பதநீர் ஆகும். இந்த பதநீரை சேகரித்து வாய் அகன்ற பெரிய வட்டப்பாத்திரத்தில் ஊற்றி, விறகு கூட்டிய அடுப்பில் வைத்து குறைந்தது மூன்று மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் போது இடை விடாமல் பதநீரை மிக நீண்ட கைப்பிடி உடைய கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பதநீர் சுமார் மூன்று மணிநேரம் கொதித்த பின்னர் ஒரு வகை நல்ல நறுமணத்துடன் தகுந்த பாகு பதத்தில் வரும் . இந்த பாகு சரியான பக்கத்தில் உள்ளதா என தெரிந்து கொள்ள, கூம்பனியை ஒரு கரண்டியால் கோரி, பனம்பட்டையில் ஊற்றி தண்ணீரில் நனைக்க வேண்டும். (கூம்பனி என்றால் கொத்தித்து பாகாக மாறிய பதநீர்) நனைக்கப்பட்ட பட்டையில் இருந்து ஊற்றிய பாகு ஒட்டாமல் வந்தால் பதநீர் சரியான பதத்தில் காய்ச்சப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பின்னர் நன்கு பதம் கண்ட பதநீரை சிறிய பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொண்டு, அது சூடாக இருக்கும் போதே தனித் தனி சிரட்டையில் ஊற்றி குளிர வைக்க வேண்டும். (சிரட்டை என்பது திருநெல்வேலி பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல். சிரட்டை என்றல் கொட்டாங்குச்சி என்று அர்த்தம் ) சூடாக சிரட்டைக்குள் ஊற்றிய பதநீர் ஒரு ஒருமணி நேரத்தில் குளிர்ந்து கட்டியாக மாறுவிடும். இப்போது அதனை தலைகீழாக கவிழ்த்தால் அழகான அரை பந்து வடிவத்துடன் கூடிய கருப்பட்டி நமக்கு கிடைக்கும். இது கருப்பாக இருப்பதால் கருப்பு கட்டி என அழைக்கப்பட்டு பின்னர் கருப்பட்டி என திரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பனை மரங்கள் அதிகளவில் காணப்படும் தென் மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி பகுதிகளில் அதிககளவு கருப்பட்டிக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிகளை பனைமர கட்டைகள் மேல் வரிசையாக அடுக்கி வைத்து காற்று புகாமல் பாதுகாக்க வேண்டும். மழைக்காலங்களில் கருப்பட்டியை ஈரப்பதம் மிக்க காற்றில் இருந்து பாதுகாக்க கருப்பட்டி அடுக்கி வைத்துள்ள அறையில் மிதமான தீயை மூட்டி வெப்பத்தை உண்டாக்க வேண்டும். இதனால் கருப்பட்டி பல ஆண்டுகள் வரை கெட்டு போகாமல் இருக்கும். இந்த பதநீரை காய்ச்சும் போது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூலிகைகளை தட்டிப்போட்டு காய்ச்சினால், அது சுக்கு கருப்பட்டியாகவும்., இதே காய்ச்சிய பதநீரை மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு பானைக்குள் ஊற்றி மூடி வைத்து, நாற்பது நாட்கள் கழித்து எடுத்தால், அது பனங்கற்கண்டாகவும் நமக்கு கிடைக்கிறது. இப்படி கிடைக்கும் கருப்பட்டிகளை பனை ஓலையில் பின்னிய பெட்டிக்குள் அடைத்து விறபனைக்கு சந்தைகளுக்கு கொண்டு செல்வார்கள். இந்த பனை ஓலைக்குள் அடைக்கப்பட்ட கருப்பட்டி ஒரு சிப்பம் என்று அளவிடப்படுகிறது. ஒரு சிப்பம் கருப்பட்டி என்பது சுமார் பத்து கிலோ ஆகும். முற்காலத்தில் இதன் மகத்துவத்தை உணர்ந்த மக்கள், கருப்பட்டியை தங்கள் உணவில் முக்கியமாக சேர்த்துக்கொண்டார்கள். இதனால் கருப்பட்டி உற்பத்தியும் அதிகளவில் செய்யப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பனை மரத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு, சுக்கு கருப்பட்டி ஆகியவை நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் இன்று வரை இந்த கருப்பட்டி உணவில் பயன்படுத்தப்படுகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கருப்பட்டியின் மகத்துவத்தை புரிந்து கொண்டு, நாம் அனைவரும் கருப்பட்டியை உணவில் சேர்த்துக்கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!