"கற்பகத்தரு" என்று சிறப்பிக்கப்படும் பனைமரம் நம் தமிழ்நாட்டு பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பனை மரம் என்பது நம் தமிழகத்தின் தேசிய மரம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்தியாவிலேயே நம் தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாகத் தென் தமிழக பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பனை மரம் என்பது ஒரு சிறந்த பணப்பயிராக விளங்குகிறது. இதிலிருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் நமக்குப் பயனளிக்கும் வகையில் கிடைக்கிறது. அவற்றுள் குறிப்பாகப் பனை ஓலை, பனங்கட்டை, நுங்கு, பதநீர், கள்ளு, பனங்கிழங்கு, பனம்பழம், தவுன், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம், பனை நார் போன்ற இயற்கையான பொருட்களும் நமக்குக் கிடைக்கிறது. ஒரு பனை மரம் வளர்ந்து பாலை விடுவதற்கு குறைந்தது பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. நன்கு வளர்ந்த ஒரு பனை மரம் சுமார் நூறு ஆண்டுக் காலம் வரை ஆயுளுடன் வாழ்கிறது. இந்தப் பனை மரத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு எனக் கூறப்பட்டாலும், தற்காலத்தில் அதன் வகைகள் என்பது மிகவும் சுருங்கிவிட்டது. பனை மரத்திலும் ஆண் பனை, பெண் பனை என்ற பிரிவு உண்டு. பெண் பனை மரங்களில் தான் பூ பூத்து காய் காய்க்கும். அதில் இருந்து தான் நாம் உண்ணும் நுங்கு, பதநீர் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கும். ஆண் பனை மரங்களில் இருந்து பனங்கட்டைகளும், எண்ணற்ற கைவினை பொருட்களும் நமக்குக் கிடைக்கும். முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கையோடு ஒன்றிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் பனங்கட்டைகளை பயன்படுத்தி கட்டுமானம் செய்தார்கள். பனை நார் கொண்டு பின்னப்பட்ட கட்டிலை படுத்து உறங்கப் பயன்படுத்தினார்கள். இதனால் அவர்கள் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ்த்தார்கள். மேலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை தினமும் தங்கள் உணவில் சேர்த்து கொண்டார்கள். இதனால் அவர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். தற்கால வாழ்க்கையில் செயற்கை உணவுகளையும், ரசாயன கலவைகள் நிறைந்த தின்பண்டங்களையும் ருசிக்காக மட்டுமே உண்ணும் தலைமுறையில், பனை பொருட்களின் உற்பத்தி சுருங்கி வருகிறது. நகரத்தின் விரிவாக்கம் மற்றும் குடியிருப்புகளின் விரிவாக்கம் போன்றவற்றிக்காக எண்ணற்ற பனைமரங்கள் அழிக்கப் பட்டு வருகின்றன.
பனை மரங்கள் நமக்குப் பாதுகாப்பு வழங்கும் அரணாகவும் திகழ்கின்றன. பனை மரங்களின் வேர்கள் மண்ணிற்குள் மிக ஆழமாகச் சென்று உறுதியாக நிற்பதால், கடும் புயல் அடித்தால் கூட அசையாமல் நிற்கிறது. இதனால் இந்தப் பனை மரங்களை குளத்தின் கரைகளிலும், தோட்டத்தின் வரப்புகளிலும், வயல்களின் வரப்புகளிலும் அதிகளவு வளர்த்து வந்தார்கள். பனைமரத்தின் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாகச் சென்று தனக்கு தேவையான தண்ணீரை தானே எடுத்துக்கொள்ளும் என்பதால், இதற்காகத் தனியாக தண்ணீர் விட வேண்டியதோ, உரங்கள் போட வேண்டியதோ இல்லை. இது வறண்ட பகுதிகளில் கூடச் செழிப்பாக வளர்ந்து சுமார் தொண்ணூறு அடி வரை உயர்ந்து நிற்கும். இந்தப் பனை மரங்களை தென்னை மரங்கள் நிறைந்த தோட்டங்களில் வரப்புகளில் நட்டு வளர்த்தால், புயல் காலங்களில் ஏற்படும் சேதங்களில் இருந்து தென்னை மரத்தையும், மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருந்து மண்ணரிப்பு ஏற்படாமலும் பாதுகாப்பு வழங்கும். ஆகச் செலவே இல்லாமல் பனைமரத்தை வளர்த்து, அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு நாம் அதிகளவில் பயன் பெறலாம். இதனால் தான் கிராம பகுதிகளில் இன்றும், பனை இருந்தாலும் ஆயிரம் பொன், பனையை வெட்டினாலும் ஆயிரம் பொன் என்ற சொலவடை பயன்பாட்டில் இருக்கிறது. அந்த அளவுக்குப் பனை மரம் ஒவ்வொரு தமிழனின் வாழ்விலும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களும் அவற்றின் பயன்பாடுகளும்:
பனை ஈர்க்குகள்:
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகளில் இருந்து பனை ஈர்க்குகள் நமக்குக் கிடைக்கின்றன. பனை சாலைகளின் பின்புறம் உள்ள நரம்புகள் தான் பனை ஈர்க்கு என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பனை ஈர்க்குகளை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான முரங்கள் மட்டும் தட்டுகள் செய்யலாம். இதில் முற்றிய பனை ஈர்க்குகளை பயன்படுத்தி வீடு கூட்டும் துடைப்பம் செய்யலாம். இந்தப் பனை ஈர்க்குகளை பயன்படுத்தி காற்றோட்டமுள்ள கூடைகள் செய்யலாம். இந்தக் கூடைகளை காய்கறிகள் வைக்கவும், பழங்கள் வைக்கவும் பயன்படுத்தினால் அவைகள் கெட்டு போகாமல் இருக்கும். சுமாராக ஒரு பனைமர ஓலையில் இருந்து ஐம்பது முதல் அறுபது ஈர்க்குகள் வரை கிடைக்கும்.
பத்தல்:
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருள்களுள் பத்தல் என்ற ஒன்றும் முக்கியத்துவம் பெறுகிறது. பனைமரத்துடன், மட்டையை இணைத்துக் கொண்டிருக்கும் பகுதி பத்தல் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பத்தல் பகுதியில் இருந்து தான் பனந்தும்பு கிடைக்கிறது. இந்தப் பனந்தும்பை தண்ணீரில் ஊற வைத்தால் அது மேலும் வலுவாகும். இந்த ஊற வைத்த தும்புகளை கொண்டு வீட்டிற்கு தேவையான பல வகை பிரஷுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பனந்தும்பில் இருந்து பிரிந்து ஒரு வகை கழிவு பொருளுக்குத் திப்பி என்று பெயர். இந்தத் திப்பியை தகுந்த எரிபொருளாகவும் பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள். நாஞ்சில் நட்டு பகுதிகளில் இந்த திப்பியில் இருந்து பொம்மைகள் கூடத் தயாரிக்கிறார்கள்.
பன்னாடை:
பனை மரத்தில் உள்ள மட்டைகளில் சல்லடை போன்று பத்தல் அருகே ஒட்டி இருக்கும் பகுதி பன்னாடை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பன்னாடை என்னும் பகுதிகளை ஒன்றாக இணைத்துப் பின்னினால் மறைக்கும் தட்டிகள் செய்ய முடியும். இந்தத் தட்டிகளை பழைய காலத்து வீடுகளில் பயன்படுத்தி வந்தார்கள். இந்தத் தட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் குளிர்ச்சியை உணரலாம்.
பனை மட்டை:
பனை மரத்தின் ஓலைக்கும், காம்பு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியே பனைமட்டை ஆகும். இந்தப் பனை மட்டையின் இரண்டு ஓரப்பகுதிகளும் மிகவும் கூர்மையாக இருக்கும், இந்தக் கூர்ந்த பகுதிகளை வெட்டி, சீவியெடுத்தால் கறுக்கு என்னும் ஒருவகை பொருள் கிடைக்கும். இந்த கறுக்கில் இருந்து தான் பனை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பனை நார் எடுத்தபின் மீதம் உள்ள பகுதியைப் பயன்படுத்தி காகிதங்கள் செய்யப்படுகிறது. இந்தப் பனை நாரை கொண்டு தான் முன்னர் வீடுகளிகள் உள்ள கட்டிலை பின்னி வைத்திருந்தார்கள். இந்தப் பனை நாருக்கு வெளிநாட்டில் அதிகளவு தேவை உள்ளதால். பனை நார்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பதநீர்:
பனை மரத்தில் இருந்து கிடைக்கப்படும் இயற்கை பானம் தான் பதநீர். இந்தப் பதநீர் கோடை காலத்தில் நம் தாகம் தீர்த்து, உடலிற்கு குளிர்ச்சியளிக்கும் அருமருந்தாக விளங்குகிறது. இந்தப் பதநீரை பெறுவதற்காகப் பனை மரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாலை வெட்டப்பட்டு அதில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண் குடங்கள் கட்டிவைக்கப்படும். இந்த வெட்டப்பட்ட பாலையில் இருந்து சிறிது சிறிதாகக் கசியும் திரவம் பானைக்குள் சேகரிக்கப்படும். சுண்ணாம்புடன் சேரும் இந்த திரவம் தான் "பதநீர்" என்று அழைக்கப்படுகிறது. சுண்ணாம்பு சேர்க்கை இல்லாமல் பெறப்படும் திரவம் தான் "கள்ளு" என்று அழைக்கப்படுகிறது. தற்போது நம் நாட்டில் கள்ளு இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பதநீர் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. சுண்ணாம்பு சத்து நிறைந்த இந்தப் பதநீர் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களையும், குளிர்ச்சியையும் வழங்குகிறது. கோடை காலமான மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரை பதநீர் அதிகளவில் உற்பத்தி ஆகும்.
பனைவெல்லம் (கருப்பட்டி):
பனைமரத்தில் இருந்து பெறப்படும் பொருட்களுள் ஒன்று பனைவெல்லம் என்று அழைக்கப்படும் கருப்பட்டி ஆகும். இந்தக் கருப்பட்டியில் மனிதன் உடலுக்கு தேவையான பல வகை சத்துக்கள் நிரம்பி உள்ளது. முற்காலத்தில் உண்ணும் உணவில் கருப்பட்டி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. கருப்பட்டி அதிகளவில் உட்கொண்ட நம் முன்னோர்கள் எந்த விதமான நோய், நொடிகள் இன்றி மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். தற்போது காலமாற்றத்தால் நம் பயன்பாட்டில் இருந்து விலகிய கருப்பட்டி மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி, கிடைக்கும் பாகை பக்குவமாகச் சிரட்டைகளில் ஊற்றிக் கருப்பட்டி தயாரிக்கப் படுகிறது. திருநெல்வேலி அருகில் உள்ள உடன்குடி மற்றும் தூத்துக்குடி அருகில் உள்ள வேம்பார் ஆகிய ஊர்களில் கருப்பட்டி தயாரிப்பு மிக முக்கிய தொழிலாக இருக்கிறது. இதில் உடன்குடி பகுதியில் தயாராகும் கருப்பட்டிக்கு தனி மவுசு உள்ளது. இந்த உடன்குடி கருப்பட்டி தான் தரத்தில் முதல் இடத்தில் இன்றும் உள்ளது. இந்தியாவிலேயே கருப்பட்டி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அந்த அளவுக்குத் தமிழகத்தில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இங்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பனை மர விவசாயமும், அதனை சார்ந்த பனையேறும் தொழிலும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இன்று நாகரீக வளர்ச்சியால் பனை மரங்களும் வெட்டப்பட்டு, பனை ஏற ஆட்களும் இல்லாமல் போய்விட இந்தத் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
பனங்கற்கண்டு:
பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரில் இருந்து கருப்பட்டி பெறப்படுவதை போலவே, காய்ச்சிய பதநீரை மண் பானைகளில் ஊற்றி, மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்து எடுப்பதன் மூலம் பனங்கற்கண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பனங்கற்கண்டிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. குழந்தைகளுக்குப் பாலில் பனங்கற்கண்டை போட்டுக் காய்ச்சி அருந்தக் கொடுத்தால் அவர்களின் உடல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஒரு ஆண்டிற்கு ஒரு பனை மரத்தில் இருந்து சராசரியாக இருபத்து ஐந்து கிலோ கருப்பட்டியும், பத்து கிலோ பனங்கற்கண்டும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
நுங்கு:
பனை மரத்தில் இருந்து குறிப்பிட்ட பருவ காலத்தில் நுங்கு விளைகிறது. குறிப்பாகக் கோடை காலங்களில் நுங்கு அதிகளவில் விளையும். ஒரு நுங்கு காயில் மூன்று கண் நுங்குகள் இருக்கும். இந்த நுங்குகள் உடலுக்குக் குளிர்ச்சியை தந்து, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கோடை காலத்தில் நுங்கும், பதநீரும் அதிகளவில் விற்பனைக்கு வரும். அப்போது பச்சை பனை ஓலைகளை பட்டையாக கட்டி அதில் இளம் நுங்குகளை கீறி போட்டு, பதநீர் ஒற்றி குடித்தால் அந்தச் சுவைக்கு ஈடு இணையே இருக்காது. பச்சை பனை ஓலை வாசனையுடன் பதநீரை குடிப்பது உடலுக்கு ஒரு வித புத்துணர்ச்சியை தரும்.
பனங்கிழங்கு:
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனம் பழங்களில் இருந்து கொட்டைகள் பிரித்து எடுக்கப்பட்டு பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு பனம் பழத்தில் இருந்து மூன்று கொட்டைகள் கிடைக்கும். இந்தக் கொட்டைகளை மண்ணிற்குள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகப் புதைத்து வைப்பதன் மூலம் பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாகப் பனங்கிழங்கு விதை விதைத்துச் சாகுபடி செய்ய 90 நாட்கள் தான் ஆகும். இதனை உற்பத்தி செய்ய அதிகளவு மெனக்கிட வேண்டியதில்லை. தண்ணீரும் அதிகளவு தேவைப்படுவதில்லை. குறிப்பாகப் பனங்கிழங்கு தை மாதம் பொங்கலை ஓட்டி அதிகளவு அறுபடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்பதால், புரட்டாசி அல்லது ஐப்பசி மாதங்களிலேயே விதைகளை மண்ணுக்குள் அடுக்கி வைக்க வேண்டும். களிமண் கிழங்கு மற்றும் செம்மண் கிழங்கு என்று வகைப்படுத்தப்படும் பனங்கிழங்குகள் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமாக விளைகிறது. அதிலும் செம்மண் பனங்கிழங்கு சாகுபடி திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தேரிக்காடு பகுதிகளில் அதிகளவு நடைபெறுகிறது. இந்தப் பனங்கிழங்கில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தற்போது இதன் மருத்துவ குணங்கள் அறிந்து வெளிநாட்டினரும் இதனை வாங்க விரும்புவதால், இந்தக் கிழங்குகள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பனம்பழம்:
பனைமரத்தில் காய்க்கும் நுங்கு காய்கள் பழுத்துவிட்டால் பனம் பழம் கிடைக்கும். இந்தப் பனம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் உடலிற்கு ஆரோக்கியத்தை தருகிறது. பனம் பழம் குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே விற்பனைக்கு வரும். நகர வாசிகளுக்குப் பனம் பழம் என்றால் என்னவென்றே பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பனம் பழம் கிராமங்களில் மட்டுமே கிடைக்கும். அதிலும் குறிப்பிட்ட சில பருவ காலங்களில் மட்டுமே இந்தப் பனம் பழங்கள் விற்பனைக்கு வரும். குற்றாலம் மலைப்பகுதிகளில் சீசனுக்கு செல்லும் போது, இந்தப் பனம் பழங்கள் அதிக அளவில் விற்பனையாவதை நாம் காணலாம். இந்தப் பழம் உள்ளுக்குள் சாறு கலந்த நார்களுடன் கூடிய சதை அமைப்பில் இருக்கும். நன்கு பழுத்த பழங்களில் இருந்து அதனை வெட்டும் போது வரும் வாசனையே நமக்குள் ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதை நாம் உணர முடியும். இதில் பல சத்துக்கள் நிரம்பி உள்ளதால் கிராமங்களில் பனம் பழம் பத்தும் செய்யும் என்ற சொலவடை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.
தவுன்:
பனங்காய்கள் நன்றாக முற்றி பழுக்கும் போது கிடைக்கும் பனம்பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய சத்தான மற்றும் சுவையான உணவுப்பொருள் தான் தவுன் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் விற்பனைக்கு அதிகளவில் வருவதில்லை. பனை மரம் அதிகம் உள்ள இடத்தில் மட்டுமே இது கிடைக்கும். இந்தத் தவுன் எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னிடம் கொண்டுள்ளது. இது உடலுக்குக் குளிர்ச்சி அளித்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிற்று புண்களை ஆற்றும் மருந்தாகத் திகழும் இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூடச் சாப்பிடலாம். இந்தத் தவுன் ஆண்டில் சில காலங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும். தற்போது இந்தத் தவுன் திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ராமச்சந்திரபட்டணம் என்னும் ஊரின் எல்லையில் பனம்பட்டையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
பனையோலை:
பனை மரங்களில் உள்ள இலைகளே, பனையோலை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பனை ஓலை பல ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் முற்காலத்தில் பனை ஒலைகளில் குறிப்பு எழுதிச் சுவடிகள் ஆக்கினார்கள். பழங்கால எழுத்துச் சுவடி அனைத்தும் பனை ஓலையில் தான் எழுதப்பட்டிருக்கும். நன்கு காய்ந்த பனை ஒலிகளில் இருந்து விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விசிறிகள் கோடை வெப்பத்தில் இருந்து நமக்குக் குளிர்ச்சியளிக்கும் வகையில் காற்றை தரும். மேலும் பனை ஓலைகளை பயன்படுத்தி பாய்களும் செய்யப்படும். இந்தப் பாய்களை பயன்படுத்தி தூங்கினால் உடம்புக்கு மிக இதமாக இருக்கும். மேலும் இந்தப் பனை ஓலை பாய்கள் சமையல் செய்யும் பொது சூடான சாதத்தை கொட்டி ஆற வைக்கவும், நறுக்கிய காய் வகைகளை வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே எந்தவித அதிக உற்பத்தி செலவுகளும் இன்றி பனை மரமானது நமக்கு லாபத்தை அதிகளவில் தரும் பணப்பயிராகத் திகழ்கிறது.
இது தவிர பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நாறுகளை கொண்டு கட்டில் பின்னலாம். பனைமரத்தின் ஓலைகளில் இருந்து பல்வேறு கைவினை பொருட்கள் செய்யலாம். பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நம்மக்கு ஒவ்வொரு விதமான பயன்களை அள்ளித்தருவதால் தான் இதற்குக் கற்பக தரு என்ற பெயர் வழங்கப்படுகிறது.
பனைமரத்தை சார்ந்து தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் செய்யப்படுகின்றன. அவற்றுள் கருப்பட்டி தயாரிப்பு, பனங்கற்கண்டு தயாரிப்பு, கள் இறக்குதல் ( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது ), பதநீர் இறக்குதல் ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. தமிழகத்தில் குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பனை மரங்கள் காணப்படுவதால் இங்குப் பனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வந்தன. தற்காலத்தில் பனை மரங்களும் அதிகளவில் வெட்டப்பட்டு விட்டதாலும், அனைவரும் கல்வி அறிவு பெற்று வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களில் வேலைக்குச் சென்று விட்டதாலும் பனை சார்ந்த தொழில்கள் செய்வதும் குறைந்து வருகிறது. தமிழகத்தின் வயல் வரப்புகளிலும், குளத்தின் கரைகளிலும் சுமார் அறுபது முதல் என்பது அடி வரை செழித்து வளர்ந்துள்ள பனை மரத்திற்கு தண்ணீர் கூட ஊற்ற வேண்டியதில்லை. இதற்கு எளிய முறை பராமரிப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
திருநெல்வேலி பகுதியில் உள்ள குளத்தின் கரைகளிலும், வயல் வரப்புகளிலும் பனை மரங்களை அதிகளவில் காணலாம். இங்குள்ள கிராம பகுதிகளில் பனைமரங்கள் எண்ணற்ற அளவில் காணப்படும். குறிப்பாக அருகன்குளம், தருவை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, உடன்குடி, தேரிக்காடு, திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் ஆகியவற்றில் அதிகளவு பனை மரங்களை காண முடியும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பனைமரத்தை நம் வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் வகையில் இதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்.....!!