Tirunelveli Nellaiappar kovil (Paguthi-2)

காந்திமதி அம்மை வரலாறு:

முற்காலத்தில் உமையம்மை இப் பூவுலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சிவபெருமானிடம் இரு நாழி நெல் பெற்று, கைலாய மலையை விட்டு நீங்கி, பெருமான் வேண்ட வளர்ந்து திருவிளையாடல் புரிந்த இந்த மூங்கில் காடாகிய வேணு வனம் வந்து., வறியவர்களுக்கு உணவு-உறைவிடம் கொடுத்தல், மகப்பேற்றுக்கு உதவுதல், கற்பவர்களுக்கு உணவளித்தல், பிள்ளைகளைத் தத்து எடுத்து வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், அடியார்கள் தங்க மடம் அமைத்தல், சுமங்கலி பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் வழங்குதல், சிறார்களுக்கும்-முதியவர்களுக்கும் பசியாற்றுதல், தாயற்ற சேய்களுக்கு பால் வழங்குதல், பிணிக்கு மருந்து தருதல், ஆதரவில்லாதோர்க்கு உணவு கொடுத்தல், தலையில் தேய்க்க எண்ணெய் தருதல், அறுவகை சமயத்தார்க்கும் உணவிடுதல், சிறைச்சோறு வழங்கல், மந்தைக்கல் நாட்டல், திருக்குளம் வெட்டல், சோலை உருவாக்குதல், பிறர் துயர் துடைத்தல், அனாதைப்பிணம் சுடுதல், கல்யாண சத்திரம் அமைத்தல், ஏழைகளுக்கு ஆடை வழங்கல், விலங்குகளுக்கு உணவளித்தல், காதோலை தருதல், பிச்சை இடுதல், மருத்துவரை ஏற்பாடு செய்தல், வண்ணாரை ஏற்பாடு செய்தல், நாவிதரை ஏற்பாடு செய்தல், கண்ணுக்கு மருந்து தருதல், உணவு சமைத்து கொடுத்தல், விலை கொடுத்து உயிர் காத்தல், துன்புறும் காளை மற்றும் பசுக்களை விடுவித்தல், பசுவுக்கு தீனி கொடுத்தல், ஆகிய முப்பத்தியிரண்டு அறங்களையும் வளர்த்து, இங்குள்ள பாடலங்கம்பை ஆற்றின் கரையில், பெருமானை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடுந் தவம் புரிந்தாள். அவளின் அந்தத் தவத்தின் போது அம்மையின் திருவுருவை புற்று சூழ்ந்து விட்டது. இருந்தும் கடுந் தவம் புரிந்த அம்மைக்கு பெருமான் இடப வாகனரூடராய் காட்சியளித்து, அம்மையை ஆட்கொண்டு திருமணம் செய்தருளினார் என்று வரலாறு கூறுகிறது.

நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல்:

முற்காலத்தில் வேதபட்டர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார். அவர் பெருமான் மீது அளவற்ற பக்தியும், அன்பும் கொண்டு கோவிலில் பணிகளை புரிந்து வந்தார். அந்தக் காலத்தில் பெருமானுக்கு அமுது செய்யும் பொருட்டு, அவர் தினந்தோறும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். அப்படி சேகரித்த நெல்லை குத்தி அரிசியாக்கி தான் தினமும் பெருமானுக்கு அமுது படைப்பார். அப்படி ஒரு நாள் வேதபட்டர் நெல் சேகரித்து திருக்கோவில் வளாகத்தில் வெயிலில் உலர்த்தி விட்டு, சிந்துப்பூந்துறை தாமிரபரணி ஆற்றிற்கு சென்று நீராடிக் கொண்டிருக்கையில், திடீரென வானம் இருண்டு, இடி, மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது. அதனைக் கண்டு திடுக்கிட்ட வேதபட்டர் உலர்த்தப்பட்ட நெல் நனைந்து விடுமே என வருந்தியபடியே அவசர அவசரமாக உலர்த்திய நெல்லை சேகரிக்கும் பொருட்டு திருக்கோவிலுக்கு விரைந்தார். அங்கு பெருமானின் திருவிளையாடலால் நெல்லை சுற்றி வேலி அமைத்தது போல நெல் மட்டும் நனையாமல் மழை நீரானது சுற்றிலும் பெய்ந்தோடியது. அந்த காட்சியைக் கண்ட வேதபட்டர் மெய்மறந்து பெருமானை எண்ணி துதித்து மகிழ்ந்தார்.

இந்த திருவிளையாடல் தான் இத் தலத்திற்கு “திருநெல்வேலி” என்ற பெயர் விளங்க காரணமாயிற்று என வரலாறு கூறுகிறது.

சுவேத கேது மகராஜாவுக்காக எமதர்மனை எட்டி உதைத்த திருவிளையாடல் :

முற்காலத்தில் சுவேத கேது என்னும் அரசன் தனது வயது முதிர்ந்த காலத்தில் தான் நிர்வகித்த அரசுப் பொறுப்புகளை தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தன் மனைவி உடன் சன்னியாசம் மேற் கொண்டு, பல தலங்களுக்கும் யாத்திரையாக சென்றான், அப்படி வரும் வழியில் அவனது மனைவி மரணம் அடைந்து விட, அங்கேயே தன் மனைவிக்கு உரிய இறுதி சடங்குகளை செய்து விட்டு, தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தான் சுவேத கேது என்னும் அந்த மன்னன்.

தன் மனைவி மரணத்தை தழுவும் போது அவள் பட்ட வேதனைகளை நினைத்து பார்த்து, தனக்கும் மரணம் நேரும் போது அத்தகைய துன்பங்கள் வருமோ என்று எண்ணி பயமுற்றான். தன் மரண பயம் நீங்கும் பொருட்டு முனிவர் ஒருவரை தரிசித்து, மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசம் பெற்று, அதை உச்சரித்தவாறே மற்ற தலங்களுக்கும் சென்று சிவ தரிசனம் செய்து வந்தான்.

அப்படி ஒரு நாள் அவன் திருநெல்வேலியில் உறையும் நெல்லையப்பர் கோயிலைத் தரிசிக்க வந்த போது அவனுடைய ஆயுட் காலம் முடிவடைய இருந்ததால், எமதர்மன் அவன் எதிரில் தோன்றி பாசக் கயிற்றை வீசினான். அப்போது சுவேத கேது அரசன் மிகுந்த மன உறுதியுடன் மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து, சிவபெருமானை தியானித்தான். அப்போதும் எமதர்மன் சுவேத கேதுவை துன்புறுத்த முயல, நெல்லையப்பர் கருவறை லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், எமதர்மனை தன் காலால் எட்டி உதைத்து, சுவேத கேதுவுக்கு மரணம் பயம் நீக்கி அருள்புரிந்தார் என்று வரலாறு கூறுகிறது.

கருவூர் சித்தருக்கு மானூரில் காட்சியளித்த திருவிளையாடல்:

கருவூர் சித்தர் தன் தவப் பயனால் எப்போது சிவபெருமானைக் காண வேண்டும் என்று விரும்புகிறாரோ, அப்போது எல்லாம் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்கும் வரத்தையும் பெற்றிருந்தார்.

கருவூர் சித்தர் சிவன் கோவில்கள் அனைத்திற்கும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி அவர் சென்ற இடத்தில் எல்லாம் அவர் பெற்ற வரத்தின் படி, அவரது விருப்பப்படி இறைவன் அவருக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு அவர் வந்தார். அவர் அங்கு சென்று நெல்லையப்பரை அழைத்த வேளையில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தங்களை மறந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்திற்கு இடையில் நின்ற கருவூர் சித்தருக்கு, இறைவனின் திருவுருவம் தெரியவில்லை.

கருவூர் சித்தர் தான் பெற்ற வரத்தை நினைந்து ‘நெல்லையப்பா’ என்று மூன்று முறை அழைத்து பார்த்தார். அப்போதும் இறைவன் செவி சாய்க்காமல் இருந்து விடவே, கோபமடைந்த கருவூர் சித்தர் நான் அழைத்தும் காட்சி கொடுக்காத இந்த இடத்தில் இறைவன் இல்லை, எனவே இறைவன் இல்லாத இந்த இடம் முழுவதும் குருக்கும், எருக்கும் எழுக என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து நீங்கிச் சென்றார்.

பின்னர் கருவூர் சித்தர், திருநெல்வேலிக்கு வடக்கே இருக்கும் மானூர் எனும் இடத்திற்குச் சென்ற போது அங்கு அம்பலவாண முனிவர் என்பவர் சிவபெருமானை, நடராஜர் உருவில் வழிபட்டுக் கொண்டிருப்பதை காண்கிறார். அவரை சந்திந்து அறிமுகப்படுத்தி கொண்டு, தான் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றதையும், தான் அழைத்தும் இறைவன் வராததையும், அதனால் தான் கொடுத்த சாபத்தையும் சொல்லி வருந்தினார்.

உடனே அம்பலவாண முனிவர், கருவூர் சித்தரை சமாதானம் செய்து, தாங்கள் அழைத்த நேரத்தில், இறைவன் வராததற்கு ஏதேனும் காரணம் இருக்கும். தாமதமானாலும், தாமாகவே தங்களைத் தேடி வந்து அவர் நிச்சயம் தங்களுக்குக் காட்சியளிப்பார் என்று கூறினார்.

அதே வேளையில் திருநெல்வேலியில் சிறப்பு வழிபாடு முடிந்த நிலையில், சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சியளிக்க அம்மையுடன் மானூருக்கு எழுந்தருளுகிறார். இறைவன் கோவிலை விட்டு வெளியேறியதும், கருவூர் சித்தர் கொடுத்த சாபத்தின் படி கோவில் வளாகம் முழுவதும் குருக்கும், எருக்கும் முளைத்து விடுகிறது.

இந்த நிலையில் மானூர் எழுந்தருளிய இறைவன், தன்னைப் பல ஆண்டுகளாக நடராசர் உருவில் வழிபட்டு வரும் அம்பலவாண முனிவருக்கு நடன கோலத்திலும், கருவூர் சித்தருக்கு அம்மையுடன் சேர்ந்தும் இறைவன் காட்சியளித்தார்.

தன்னை தேடி வந்து காட்சியளித்த சுவாமியையும், அம்மையையும் வணங்கி மகிழ்ந்த கருவூர் சித்தர், மீண்டும் இறைவனுடன் திருநெல்வேலி எழுந்தருளி, இங்கு இறைவன் இருக்கிறார், எனவே எருக்கும், குருக்கும் அருக என்று கூறி தான் வழங்கிய சாபத்திற்கு விமோசனம் அளித்தார்.

இறைவன் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? அடுத்தவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியாமல், தான் நினைத்தது நடக்கவில்லையே என்று அவர்கள் மேல் உடனடியாகக் கோபப்படுவது தவறு என்பதையும், தனது பக்தனுக்குச் சொன்னதைச் செய்ய முடியாமல் போனால், இறைவனாகவே இருந்தாலும் பக்தனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதனையும் இந்த உலகம் அறியும் பொருட்டே இறைவன் இந்த நாடகத்தை நிகழ்த்தினான் என்று கூறப்படுகிறது.

(தொடர்ச்சி பகுதி-3ல் காண்க)

-திருநெல்வேலிக்காரன்.

About

Avatar

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.