Logo of Tirunelveli Today
English

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-3)

A closeup view of colourful Nellaiappar temple gopuram

சுவாமி திரு மூல மகாலிங்கர்:

இவரே இந்த தலத்தின் ஆதி மூலவர் ஆவார். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் லிங்கத் திருமேனியராக எழுந்தருளி உள்ள இவருக்கே இன்றும் முதல் வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் தான் நெல்லையப்பருக்கு பூஜை நடைபெறும்.

ஆதிப் பிரளய காலத்தில் நான்கு வேதங்களும் இந்த வேணுவனத்தில் உள்ள திரு மூல மகா லிங்கத்தை வணங்கியே அழிவிலாத நிலையப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

திருநெல்வேலியில் உள்ள மூல மகா லிங்கமே முதல் லிங்கம் என்றும், கயிலையில் உள்ளது இரண்டாம் லிங்கம் என்றும், காசியில் உள்ளது மூன்றாம் லிங்கம் என்றும், கேதாரத்தில் உள்ளது நான்காம் லிங்கம் என்றும், லட்சுமிகிரியில் உள்ளது ஐந்தாம் லிங்கம் என்றும், காளத்தியில் உள்ளது ஆறாம் லிங்கம் என்றும், சிதம்பரத்தில் உள்ளது ஏழாவது லிங்கம் என்றும், காஞ்சியில் உள்ளது எட்டாவது லிங்கம் என்றும், மதுரையில் உள்ளது ஒன்பதாவது லிங்கம் என்றும் நவலிங்கங்களாக சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள திருமூலமகாலிங்கத்திற்கு ஆதிலிங்கம், வேதலிங்கம், விஷ்ணு லிங்கம், திரிகண்டலிங்கம், தருமலிங்கம், தானலிங்கம், கற்பகலிங்கம், கெளரிலிங்கம், பரமலிங்கம், பராபரலிங்கம், நிற்குணலிங்கம், சற்குணலிங்கம் என்ற பெயர்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திருநெல்வேலி தலத்தில் உள்ள ஆதி மூல மகாலிங்கத்தை வணங்கினால் நவலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று திருநெல்வேலி தல புராணத்தின் திருமூலலிங்கச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Priests seen chanting Mantras and performing Nellaiappr temple Thirukalyana Urchavam

சுவாமி நெல்லையப்பர்:

கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர். இவரது தலைப் பகுதியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தழும்பை இன்றும் காணலாம்.

இவர் இராமப் பாண்டிய மன்னனுக்கு வேண்ட வளர்ந்த நாதனாக காட்சியளித்தால் நெல்லையப்பர் கருவறை மிகவும் உயரமான மேடை மீது அமையப் பெற்றுள்ளது. அவருக்கு மன்னன் சாத்திய 21 ஆவுடையார்களுள் 20 ஆவுடையார்கள் கருவறைக்கு கீழ் உள்ளது. கருவறைக்கு மேலே நாம் ஒரு ஆவுடையாரோடு கூடிய லிங்கத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்த நெல்லையப்பருக்கு, வேண்ட வளர்ந்த நாதர், வேணுவன நாதர், சாலிவாடீசர், வெட்டுபட்ட இறைவன், வேய்முத்தர், திருநெல்வேலி உடைய நயினார் ஆகிய பெயர்களும் இருக்கிறது.

அம்மை காந்திமதி:

கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் கங்கையும், யமுனையும் துவார பாலகிகளாக காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, மூக்கில் வைர புல்லாக்கு மின்ன, சந்திர வதனம் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில் ஆனந்த காட்சியளிக்கிறாள் அம்மை காந்திமதி.

இந்த காந்திமதி அம்மைக்கு, வடிவுடையம்மை, வேணுவன நாயகி, சாலிவாடீஸ்வரி, திருக்காமக் கோட்டம் உடைய நாச்சியார் ஆகிய பெயர்களும் இருக்கிறது.

நெல்லை கோவிந்தர்:

கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் மேற்கு திசையில் தலை வைத்து, கிழக்கு திசையில் கால்களை நீட்டி, ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நெல்லை கோவிந்த பெருமாள். இவரது வலது கையின் அருகில் சிவலிங்கம் உள்ளதும் தனிச் சிறப்பு. இங்கு உள்ள உற்சவர் நெல்லை கோவிந்தர், நின்ற கோலத்தில், தன் நான்கு கரங்களுள் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், தன் கீழ் இரு கைகளில் தீர்த்தச் சொம்பு தாங்கி, தன் தங்கை காந்திமதி அம்மையை, சுவாமி நெல்லையப்பருக்கு தாரைவார்க்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

நின்ற கோல விநாயகர்:

பொதுவாக கருவறையில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் தான் நமக்கு தரிசனம் அளிப்பார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கிழக்கு கோபுர வாசலுக்கு தென் பக்கம் உள்ள சிறிய கோவிலில் விநாயகர் கருவறையில் சற்றே வித்தியாசமாக நின்ற கோலத்தில் தரிசனம் தருவது சிறப்பம்சம்.

மாக் காளை:

சுவாமி நெல்லையப்பர் கோவிலின் நடுநயமாக சுவாமிக்கு நேர் எதிரே காட்சித் தரும் நந்தியே மாக்காளை ஆகும். மிக பிரம்மாண்ட வர்ண கலாபத் திருமேனியாகிய இந்த மாக்காளை சுண்ணாம்பினால் செய்யப்பட்ட சுதை திருமேனி ஆகும்.

முக்குறுணி பிள்ளையார்:

சுவாமி நெல்லையப்பர் சன்னதிக்கு தென் புறம் அமையப் பெற்றுள்ளது முக்குறுணி பிள்ளையார் சன்னதி. இவர் மதுரை சொக்கநாதர் கோவில் கோவிலின் முக்குறுணி விநாயகரை போன்ற தோற்றத்தில் இருந்தாலும், இங்கு வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருக்கிறார். மேலும் இவர் கைகளிலுள்ள மோதகத்தை தன் துதிக்கையால் எடுத்து நமக்கு வழங்கும் கோலத்தில் காட்சித் தருவது சிறப்பம்சம்.

கங்காள நாதர்:

சுவாமி நெல்லையப்பர் கோவில் முதலாம் திருச் சுற்றின் மேல பிரகாரத்தில் அமையப் பெற்றுள்ளது கங்காளநாதர் சன்னதி. முற்காலத்தில் தாருகா வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் செருக்கை அடக்கும் பொருட்டு, இறைவன் கங்காளம் ஏந்தி யாசகனாக வந்த கோலத்தில் இங்கு காட்சியளிக்கிறார். இங்கு தாருகவன முனிவர்களின் செருக்கை அடக்கிய வரலாற்று கோலத்தில் வர்ண கலாபத் திருமேனியாகவும், தனி உற்சவராகவும் காட்சித் தருகிறார் கங்காள நாதர். இவர் ஆண்டிற்கு ஒரு முறை ஆனித் திருவிழாவின் எட்டாம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

A majestic temple elephant wearing sacred ash is seen standing in the Nellaiappar temple premises with grass strewn across its feet

மான் மற்றும் சிம்மத்தை வாகனமாக கொண்ட மகிஷாசூர மர்த்தினி:

சுவாமி நெல்லையப்பர் சன்னதியின் முதலாம் வடக்கு திருச்சுற்றில் உள்ளது தெற்கு நோக்கிய மகிஷாசூரமர்த்தினி சன்னதி. இங்கு மகிடன் தலை மேல் நின்ற கோலத்தில் அம்மை அழகுற காட்சித் தருகிறாள். இந்த அம்மையின் சன்னதியில் அவளுக்குரிய வாகனமான சிம்மத்தோடு, மானும் இருப்பது சிறப்பம்சம் ஆகும். சிங்கமும், மானும் ஒன்றுக்கு ஒன்று பகை கொண்ட மிருகங்கள் ஆயினும் இங்கு சேர்ந்து காட்சியளிப்பதால், இந்த அம்மையை வணங்கும் பக்தர்கள் எதிரிகளின் தொல்லை நீங்கி நண்பர்களாக ஆக பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

கைலாச பர்வத சோமாஸ் கந்தர்:

சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரத்தின் கன்னி மூலையில் உள்ளது கைலாச பர்வத சோமாஸ்கந்தர் சன்னதி. இராவணன் பத்து தலைகளுடன் தன் பராக்கிரமத்தால் கைலாய மலையை தூக்கும் அமைப்பில் உயரமான மேடை மீது அமையப் பெற்றுள்ள இச் சன்னதியில் சோமாஸ்கந்தராக ( சிவன் + சக்தி + கந்தர் இணைந்த கோலம் ) இறைவன் கையிலாய காட்சி அளிக்கிறார்.

தாமிரபரணி அம்மன்:

திருநெல்வேலி மாவட்டத்தை வளங்கொழிக்க செய்யும் வற்றாத ஜீவ நதியாகிய தாமிரபரணி அம்மைக்கு இங்கு உற்சவராக சன்னதி உள்ளது. சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களை அடுத்து தாமிரபரணி அம்மை காட்சித் தருகிறாள். இவள் தைப் பூசம், சித்ரா பெளர்ணமி ஆகிய நாட்களில் இத்தல சுவாமி, அம்மையோடு தாமிரபரணி நதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்வாள்.

பொள்ளாப் பிள்ளையார்:

சுவாமி கோவில் இரண்டாம் தெற்கு பிரகாரத்தில் அனவரத தானநாத மண்டபத்துக்கு பின் பக்கம் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது பொல்லாப் பிள்ளையார் சன்னதி. இவர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தம் ஆவார். இவருக்கு முன்னால் 12 துளைகள் உடைய கல் சாளரங்கள் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் முறைப்படி விரதமிருந்து இந்த சாளரத்தின் துளைகள் வழியாக உள்ளே நுழைந்து பொல்லாப் பிள்ளையாரை வணங்கினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. அப்படி குழந்தை பாக்கியம் கிடைத்த பின், அந்த குழந்தையை இந்த சாளரத்தின் வழியாக கொடுத்து, வாங்கி வழிபாடு செய்வதும் சிறப்பம்சம் ஆகும்.

சுர தேவர்:

சுவாமி கோவில் இரண்டாம் தெற்கு பிரகாரத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில் மூன்று முகங்கள், மூன்று கரங்கள், மூன்று கால்களுடன் காட்சித் தருகிறார் சுர தேவர். இவருக்கு மிளகு அரைத்து சாத்தி, வெந்நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது விசேஷமாக கருதப் படுகிறது.

நெல்லை சுப்பிரமணியர்:

சுவாமி நெல்லையப்பர் கோவில் இரண்டாம் மேல பிரகாரத்தில் தாமிர சபை அருகே கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார் நெல்லை சுப்பிரமணியர். இவரைப் போற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது சிறப்பம்சம்.

(தொடர்ச்சி பகுதி-4ல் காண்க)

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram