திருநெல்வேலி நகரம் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ நீலமணி நாதர்.
உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள்.
தாயார்கள்: ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார்,
ஸ்ரீ கோமளவல்லி தாயார்.
விமானம்: ஆனந்த விமானம்.
தீர்த்தம்: பத்மநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்.

திருக்கோவில் வரலாறு:

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வியாச மஹரிஷியின் சீடர்களுள் ஒருவரான பைலர் என்பவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணு மீது பக்தி செலுத்தி வந்த பைலர், ஒருநாள் தாமிரபரணி நதிக்கரையில் அமர்ந்து தனது இஷ்ட தெய்வமான ஸ்ரீனிவாச பெருமாளை குறித்து தவம் இயற்றினார். அப்போது இந்தப் பகுதியில் விஷ்ணு கோவில் என்று தனியாக எந்த ஒரு கோவிலும் இல்லாத காரணத்தால், பைலர் தன மனத்திற்குள்ளேயே ஸ்ரீனிவாச பெருமாளை நினைத்தபடி ஒரு கோடி மலர்களால் தினமும் அர்ச்சனை செய்து வந்தாராம். அப்படி ஒருநாள் அவர் தாமிரபரணிக்கரையில் அமர்ந்து தவம் இயற்றி முடித்து, தனது மனதிற்குள் குடியிருக்கும் பெருமாளை மானசீகமாக ஒரு கோடி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து முடிக்கவும், அந்த ஒரு கோடி மலர்களும் ஒன்றாக இணைந்து ஒளிபொருந்திய நீல ரத்தினமாகக் காட்சியளித்தது. அந்த நீல ரத்தினத்தில் இருந்து ஸ்ரீனிவாச பெருமாள் வெளிபட்டு பைல முனிவருக்குக் காட்சியளித்தாராம். தனக்கு நீல ரத்தினத்தில் இருந்து வெளிப்பட்டுக் காட்சியளித்த தனது மானசீக நாதனான ஸ்ரீனிவாச பெருமாளை, நீலமணி நாதர் என்ற திருநாமம் சூட்டி வணங்கிய பைல முனிவர், பெருமாளிடம் அங்கேயே நித்யவாஸம் புரிந்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டாராம். அவ்வாறே தனது பக்தனின் கோரிக்கையை ஏற்றப் பெருமாள் இங்கே எழுந்தருளி நீலமணி நாதர் பெருமாளாக நமக்கெல்லாம் இன்று வரை காட்சிதருகிறார் என்று இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது. தனது பக்தன் பைல முனிவருக்காகத் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளே இங்கு வந்து காட்சியளித்ததாகக் கூறப்படுவதால், இந்தக் கோவில் “தென் திருப்பதி” என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. மேலும் நீல ரத்தினத்தின் இருந்து பெருமாள் தோன்றியதால் இந்த ஸ்தலம் ” நீல ரத்ன க்ஷேத்ரம் ” என்றும் அழைக்கப்படுகிறது. புராண கால வரலாறு படி இந்தக் கோவிலின் பெருமாள், இப்பகுதியை ஆட்சி செய்த கிருஷ்ண மகாராஜாவிற்கும், மனப்படைவீடை சேர்ந்த விஷ்ணுவர்த்த மகாராஜாவிற்கும் காட்சியளித்து அருள்பாலித்துள்ளார். பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக ஒரு வரலாற்று நிகழ்வும் கூறப்படுகிறது. ராஜ ராஜ சோழனுக்கு ” கரிய மாணிக்கம் ” என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும், அவன் பெயராலேயே இந்தக் கோவில் உற்சவர் கரியமாணிக்க பெருமாள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு:

இங்குக் கருவறையில் ஸ்ரீ நீலமணி நாத பெருமாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரண்டு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தி திருப்பதி பெருமாளை போலவே அழகே உருவாகக் காட்சித்தருகிறார். இவருக்கு அருகே ஒருபுறம் ஸ்ரீ தேவி தாயாரும், மறுபுறம் பூ தேவி தாயாரும் நின்ற கோலத்தில் காட்சித்தருகிறார்கள். முன்மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேதராக ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறைக்கு நேர் எதிராகச் சன்னதி கருடன் காட்சித் தருகிறார். கருடாழ்வாருக்கு வலது புறம் தனி சந்நிதியில் பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி காட்சியளிக்கிறார். பிரகாரங்களில் முறையே ஸ்ரீ வேணுகோபாலன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ கோமளவல்லி தயார், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ நெல்லை கோவிந்த பெருமாள், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

நீல ரத்தினத்தில் இருந்து பெருமாள் தோன்றியதால் இந்தக் கோவில் ” நீல ரத்ன க்ஷேத்ரம் ” என்று இந்த தளம் அழைக்கப்படுகிறது.

இங்குப் பெருமாளை நின்ற, கிடந்த, அமர்ந்த என்ற மூன்று நிலைகளில் தரிசிக்கலாம். கருவறையில் உள்ள பெருமாள் நின்ற கோலத்திலும், முன் மண்டபத்தில் கருடாழ்வாருக்கு அருகே உள்ள சன்னிதியில் காட்சிதரும் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கிடந்த கோலத்திலும், தெற்கு நோக்கிக் காட்சிதரும் ஸ்ரீ லட்சுமி நாராயணர் அமர்ந்த கோலத்திலும் இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.

இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் திருவோணம் அன்று நடைபெறும் பஞ்ச கருட சேவை உற்சவம் சிறப்பு பெற்றதாகும். அன்று இந்தக் கோவில் கரியமாணிக்க பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி பெருமாள், சங்காணி வரதராஜ பெருமாள், திருநெல்வேலி நகரம் லட்சுமி நரசிம்ம பெருமாள், திருநெல்வேலி நகரம் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய ஐந்து திருக்கோவில் பெருமாள்களும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி எட்டு ரத வீதிகளில் உலா வருவார்கள். ஐந்து பெருமாள்களும் சுவாமி நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளில் உலா வந்து பெரிய தேருக்கு அருகில் எழுந்தருளிச் சேர்த்தி தீபாராதனை கண்டருளுவார்கள்.

இங்குத் தை மாதம் ரத சப்தமி அன்று திருப்பதியை போல ஒரே நாளில் கரியமாணிக்க பெருமாள் காலைத் தொடங்கி இரவு வரை ஏழு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். இந்தத் தை ரத சப்தமி விழா திருப்பதிக்கு அடுத்த படியாக இங்குத் தான் விமரிசையாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் ஏழு நிலைகளை கடந்து தான் பெருமாளை தரிசிக்க வேண்டும். அது போலத் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கும் பந்தல் மண்டபம், பஜனை மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய ஏழு நிலைகளை தாண்டி தான் பெருமாளை தரிசிக்க முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்தலம் பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் நாயக்கர் ஆட்சி காலங்களில் திருப்பணி செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

இந்த கோவிலில் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவின் பத்தாம் நாள் தேரோட்டம் வெகு கோலாகலமாக நடைபெறும்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா முன் பத்து மற்றும் பின் பத்து நாட்களுடன் சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை முதல் மதியம் வரை சயன கோலத்தில் காட்சிதரும் பெருமாள், மாலை சொர்க்க வாசல் திறந்து அதன் வழியாக எழுந்தருளி உலா வருவார்.

இது தவிர இங்கு ஆவணி மாதம் கோகுலாஷ்டமி உறியடி விழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை விழா, தைத்திருவோணம் பஞ்ச கருட சேவை விழா ஆகிய விழாக்கள் விமரிசையாக நடைபெறும்.

அமைவிடம் / செல்லும் வழி:

திருநெல்வேலி மாநகரத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் மேல ரத வீதி முனையில் உள்ள சந்தி விநாயகர் கோவிலுக்குத் தென்மேற்கே சுமார் 0.5 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கரியமாணிக்க பெருமாள் கோவில் அமையப்பெற்றுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் நகர பேருந்துகளில் ஏறிச் சந்தி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிட நடைப்பயணத்தில் இந்த கோவிலைச் சென்று அடையலாம்.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவர்: ஸ்ரீ சுதர்சன நரசிம்மர். உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி. தீர்த்தம்: தாமிரபரணியில் உரோமச …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.