Logo of Tirunelveli Today
English

திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில்(Thiruvenkatanathapuram Venkatachalapathy Temple)

வாசிப்பு நேரம்: 10 mins
No Comments
The entrance of Thiruvenkatanathapuram temple in Tirunelveli with idols of Perumal and others sculpted in the entrance vimana and covered area in front.

"தென் திருப்பதி" என்று சிறப்பிக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில்.

மூலவர்: வெங்கடாசலபதி பெருமாள்.

உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை ஸ்ரீ நிவாச பெருமாள்.

திருக்கோவில் விருட்சம்: நெல்லி மரம்.

தீர்த்தம்: தாமிரபரணி (ஸ்ரீ நிவாச தீர்த்தம்).

சிறப்பு: பன்னிரெண்டு படிகள்.

Utsava idols of Srinivasa Perumal of Thiruvenkatanathapuram Perumal temple with goddesses Sreedevi and Bhoodevi dressed in silk and floral garlands.

Image Credit : blogspot.com

திருவேங்கடநாதபுரம் திருக்கோவில் வரலாறு:(History of Thiruvenkatanathapuram Temple)

முற்காலத்தில் வைப்பராச்சியம் என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடராகிய பைலர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். மகா விஷ்ணுவின் தீவிர பக்தராகிய பைலர் தாமிரபரணி நதியில் நீராடி கரையில் அமர்ந்து பெருமாளை நினைத்து தவம் இருந்தார். அப்போது இந்த பகுதியில் பெருமாளுக்கு என தனிக் கோவிலோ, திருவுருவமோ இப் பகுதியில் இல்லை. அதனால் பைலர் தன் மனதிற்கு உள்ளேயே பெருமாளை நினைத்து பூஜை செய்தார். அப்படி இருக்கும் போது ஒரு நாள் பைலர் ஒரு கோடி மலர்களால் பெருமாளை மானசீகமாக நினைத்து தாமிரபரணியில் சமர்பித்து அர்ச்சனை செய்கிறார். அப்போது அந்த கோடி மலர்களும் ஒன்றாக சேர்ந்து, மிகப் பிரகாசமான ஒளியாக தோன்றியது. அந்த ஒளியில் இருந்து பெருமாள் வெங்கடாசலபதி கோலத்தில் தோன்றி பைல முனிவருக்கு, தன் காலடியில் தாமிரபரணி அம்மையோடு காட்சி அளித்தார். அந்த காட்சியை கண்ட பைலர் கண்ணீர் மல்க பரந்தாமனை துதித்து, உங்களின் இந்த வடிவத்தை கண்டு, பிறவிப் பயன் எய்திடும் பேறு பெற்ற அடியேனைப் போல இங்கு தேடி வரும் பக்தர்களுக்கும் நான் கண்ட காட்சியை காட்டி அருள்புரிய வேண்டும் என வேண்டிட, அவ்வாறே பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியாக பைலருக்கு காட்சியளித்த கோலத்தில், இந்த கோவிலில் நின்று சேவை சாதித்து அருளுவதாக கூறப்படுகிறது. பெருமாள் தனக்கு காட்சியளித்த கோலத்தில், தாயார்களுடன் பைல முனிவரே இங்கு பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.

Sculpted idols of Perumal along with godesses, Lakshmi devi, Saraswathi devi, Lord Brahma on the upper portion of vimana and Chakra,Namam & Sangu symbol along with Garudan & Anjaneyar in the lower portion of vimana

வெங்கடப்ப நாயக்கருக்கு குழந்தை வரம் அருளிய வரலாறு:

இதற்கு பிற்காலத்தில் இந்த பகுதியை வெங்கடப்ப நாயக்கர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து பல காலங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி அவர் பல கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார். பின்னர் ஒரு நாள் பைலர் பிரதிஷ்டை செய்த இந்த பெருமாள் பற்றி அறிந்து, இங்குள்ள ஸ்ரீ நிவாச தீர்த்தக் கட்டத்தில் நீராடி, பெருமாளை வணங்கினார். அப்போது பெருமாள் ஒரு அந்தணர் வடிவில் தோன்றி, இந்த தலத்தில் வைத்து ஆயிரம் குழந்தைகளுக்கு உணவளித்து, அவர்களின் பசியை தீர்த்தால் உனக்கு குழந்தை பேறு கிட்டும் என கூறுகிறார். அதன்படியே வெங்கடப்ப நாயக்கர் பெரிய வெண்கல பானையில் பொங்கலிட்டு அந்த உணவை ஆயிரம் குழந்தைகளுக்கு தானமாக அளித்தார். அதிலிருந்து மிகச் சரியாக பத்தாவது மாதம் வெங்கடப்பருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு குழந்தை பேறு வழங்கிய பெருமாளை வணங்கி, திருப்பணிகள் பல செய்து இந்த கோவிலை வெங்கடப்ப நாயக்க மன்னர் பெரிது படுத்தியதாக தெரிகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு இன்றும் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வெண்கல பானையில் பொங்கலிட்டு, அதனை தானமாக வழங்கி, அந்தப் பானையை கொடிமரத்தின் அருகே கவிழ்த்து வைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவர் வெங்கடாசலபதி பெருமாள்: (Thiruvenkatanathapuram Venkatachalapathi Temple)

கருவறையில் பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதியாக சங்கு, சக்கரம் ஏந்தியும், நான்கு கரங்கள் கொண்டும், நின்ற கோலத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக காட்சித் தருகிறார்.

பன்னிரெண்டு படிகள் சிறப்பு:

Thiruvenkatanathapuram temple entrance with stairs painted white and red and few devotees standing nearby

Image Credit : dinamalar.com

இந்த திருக்கோவில் முகப்பில் பன்னிரெண்டு படிகள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களாகிய பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், குலசேகர ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், திருப்பாணாழ்வார் ஆகியோர்களை இங்கு படிகளாய் இருப்பதாக ஓர் ஐதீகம்.

திருவேங்கடநாதபுரம் பெருமாள் திருக்கோவில் அமைப்பு:(Thiruvenkatanathapuram Perumal Temple Architecture)

தாமிரபரணி நதிக்கரையில் சிறிய மலைக் குன்றின் மீது கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது திருவேங்கடநாதபுரம் திருக்கோவில். இந்த கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள பன்னிரெண்டு படிகள் ஏறிச் சென்றால், உள்ளே கருவறைக்கு நேர் எதிராக கருடாழ்வார் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அவரை வணங்கி அடுத்த வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள் பிரகாரம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் நேராக கருவறை. கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி, தாயார்களுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். கருவறைக்கு முன் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ நிவாச பெருமாள், தாயார்களுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். முன் மண்டபத்தில் கருட வாகனம் தனி சன்னதியில் இருக்கிறது. இது தவிர உள் பிரகாரத்தில் தாயார்கள் சன்னதி, தல விருட்சம், ஆஞ்நேயர் சன்னதி, பரமபத வாசல் ஆகியவையும் உள்ளன. திருக்கோவில் வெளியே மலைக் குன்றின் மீது ஒரு பிரகாரமும், குன்றிற்கு கீழே மாட வீதி பிரகாரமும் அமையப் பெற்றுள்ளது.

Two closeup shots of Thiruvenkadanathar utsava idols decorated with muthangi alangaram during a festival procession

திருவேங்கடநாதபுரம் கோவில் சிறப்புக்கள்:(Thiruvenkatanathapuram Temple Specialties)

இந்த திருக்கோவில் திருப்பதிக்கு நிகரான அந்தஸ்தையும், சிறப்பையும் பெற்றுள்ளது. எனவே இந்த கோவில் தென் திருப்பதி என வழங்கப்படுகிறது.

திருப்பதிக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்களை இந்த தென் திருப்பதி கோவிலில் செலுத்தலாம் என கூறப்படுகிறது.

திருப்பதி கோவிலில் ஏழு மலைகளை தாண்டி, வெங்கடாசலபதி இருக்கிறார் என்றால் இங்கு ஏழு நிலைகளைத் தாண்டி மலைக் குன்றின் மீது வெங்கடாசலபதி இருக்கிறார்.

திருப்பதி கோவிலின் மேற்கே பாபநாச தீர்த்தம், ஆகாய கங்கை தீர்த்தம் உள்ளதை போன்று இங்கும் இந்த கோவிலின் மேற்கே பாபநாசம் தீர்த்தம், கங்கைக்கு நிகரான தாமிரபரணி தீர்த்தம் இருக்கிறது.

Priest performing aarti for Thiruvenkatanathar deity of Thiruvenkatanathapuram Perumal temple decorated in muthangi alangaram and floral garlands.

திருப்பதிக்கு அருகே காளஹஸ்தி சிவாலயம் இருப்பதை போல, இங்கே திருவேங்கடநாதபுரம் அருகே குன்னத்தூர் அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் (ராகு ஸ்தலம்)  இருக்கிறது.

இந்த ஊர் திருநாங்கோவில் என்ற பெயரிலும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

இங்கு கருடாழ்வார் தன் கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி காட்சித் தருவது சிறப்பு.

இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் நள்ளிரவு நடைபெறும் கருடசேவை சிறப்புப் பெற்றதாகும். நள்ளிரவு கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் கிரி பிரகாரத்தில் உலா வந்து, பன்னிரெண்டு படிகள் வழியாக ஒய்யாளி சேவையில் எழுந்தருள்வதை காண பக்தர்கள் கூட்டம் திரளாக இருக்கும்.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் இங்கு நடைபெறும் கருடசேவை சிறப்பு வாய்ந்ததாகும்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறும்.

தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருநெல்வேலி மாநகரில் நடைபெறும் ஐந்து கருடசேவை உற்சவத்திற்கு இத் தல பெருமாளும் எழுந்தருள்வார்.

திருவேங்கடநாதபுரம் கோவில் நேரம் (Thiruvenkatanathapuram  Temple Timings)

திங்கள் - வெள்ளி 7:00 - 11:00 மற்றும் 5:00 - 7:30
சனிக்கிழமை 6:00 - 1:00 மற்றும் 5:00 - 8:30
ஞாயிற்றுக்கிழமை 7:00 - 12:00 மற்றும் 5:00 - 8:00

மேலதிருவேங்கடநாதபுரம் திருக்கோவில் எழுந்த வரலாறு

மேல திருவேங்கடநாதபுரம் திருக்கோவில் எழுந்ததற்கான புராண வரலாறு இருக்கிறது . பைலார் முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்கிறார். அவருடைய தவத்திற்கு மெச்சிய மகாவிஷ்ணு ஸ்ரீநிவாசன் ஆக பைலார் முனிவரின் முன்பாக காட்சியளிக்கிறார். முனிவரும் தான் தவம் செய்த இடத்தில் நீங்கள் நிரந்தரமாக தங்குவதற்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்ட அந்த வேண்டுகோளுக்கிணங்கி ஸ்ரீநிவாசனாக இந்த திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறார் என்பது வரலாறு. இக்கோயிலின் தற்போதைய அமைப்பு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.

மேலதிருவேங்கடநாதபுரம் கோவிலின் சிறப்புகள்

கிழக்கு திசையை நோக்கி அமைந்த இந்த திருக்கோவில் மிகவும் உயரமான மேடையில் பிரதான சன்னதியுடன் மாடக் கோவிலாக காட்சியளிக்கிறது. மூலவராக கருவறையில் வெங்கடாசலபதி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி மனைவிகளோடு எழுந்தருளியிருக்கிறார்.. நான்கு கரங்களுடன் சங்கு மற்றும் வட்டு ஏந்திய நிலையில் வெங்கடாசலபதியின் திருஉருவம் அமைந்திருக்கிறது.

குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த திருக்கோவிலுக்குச் சென்று வெங்கடாஜலபதிக்கு பால் பாயாசம் செய்து பூஜை செய்து வழிபட்டால் விரைவில் குழந்தை திறக்கும் என்று நம்பப்படுகிறது. கோவிலில் உள்ள மகாமண்டபத்தில் அனுமன் , கருடன் ஆகியோரின் வெண்கல சிலைகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் விஷ்வக்சேனர், ராமானுஜர், சேனை முதலியார், உபசன்னதிகள் அமைந்துள்ளது.. கீழ திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வடக்கே அரை கிலோமீட்டர் தொலைவில் மேல திருவேங்கடநாதபுரம் அமைந்துள்ளது

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக கருட சேவை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் வைகாசி தமிழ் மாதத்தின் திருவோண நாட்களிலும், , ஒவ்வொரு சனிக்கிழமையிலும் கொண்டாடப்படுகிறது.

கீழ திருவேங்கடநாதபுரம் திருக்கோவில்

மேல திருவேங்கடநாதபுரம் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் கீழ திருவேங்கடநாதபுரம் திருக்கோவில் அமைந்துள்ளது. கீழ திருப்பதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோயிலாக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் திகழ்கிறது.

கீழ திருவேங்கடநாதபுரத்தில் வரதராஜபெருமாள் மூலவராக எழுந்தருளியிருக்கிறார். கி.பி.12ம் நூற்றாண்டில் இந்தத் திருக்கோவில் மன்னர் வரபாண்டியனால் கட்டப்பட்ட கோவிலாகும்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நவ கைலாசம் அல்லது தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படும் கோத பரமேஸ்வரர் கோயில் இத்திருத்தலத்தில் இருந்து 200 மீ தொலைவில் அமைந்துள்ளது.

கீழதிருவேங்கடநாதபுரம் திருக்கோவில் எழுந்த வரலாறு

14 ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியை ஆட்சி செய்த மன்னன் ஒருவன் இறைவனிடம் அருள் பெற கோயிலுக்கு வருகின்றான். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக பூசாரி அன்று வரவில்லை. . அப்போது கடவுளை நேரில் வந்து பூசாரி போல் வேடமணிந்து பூஜைகள் அனைத்தும் செய்கிறார். அரசனின் தண்டனையில் இருந்து அர்ச்சகரை காப்பாற்றுகிறார். ஆதலால் இந்தத் திருத்தலத்தில் 'வாழ வைக்கும் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

கீழ திருவேங்கடநாதபுரம் கோவிலின் சிறப்புகள்

கோவிலை சுற்றி செங்கனி அதிகமாக இருப்பதால், இந்த இடத்திற்கு செங்காணி என்றும் அழைக்கப்படுகிறது. சென் என்றால் சிவப்பு என்றும் காணி என்றால் நிலம் என்றும் பொருள் கொண்டு செங்காணி" என்று இந்த இடம் அழைக்கப்படுகிறது.வடக்குப் பகுதியில் கோயிலின் பிரதானவாசலாக குபேர வாசல் அமைந்திருக்கிறது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் அனைத்தும் கொண்ட புகழ் பெற்ற திருக்கோவில் ஆக அமைந்திருக்கிறது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவராகவும் வலப்புறம் ஸ்ரீதேவியுடனும் இடப்புறம் பூதேவியுடனும் கருவறையில்காட்சி தருகிறார். பெருமாள் இடது கைகளில் 'சங்கு மற்றும் கடாயுதம்' ' மற்றும் வலது கைகளில் 'சக்கரம் மற்றும் தன ரேகை ஆகியவற்றைக் ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். புனித பிருகுவால் இந்தக் கோவில் அமையப்பெற்றது. இக்கோயிலில் ஆஞ்சநேயர் மற்றும் கருடன் சன்னதிகளும் உள்ளன. கோயிலின் முக்கிய மரம் ஸ்தல விருட்சம் என்றும் அழைக்கப்படும் மூங்கில் மரமாகும்.

இந்தத் திருக்கோவிலில் மிகவும் சிறப்பு பெற்று நிகழ்வு நடைபெறுகிறது. வரதராஜப் பெருமாளின் வலது கரத்தில் தன ரேகை அதாவது செழிப்புக் கோடு ஓடுவதால், ஒரு பக்தர் இறைவனின் கையில் நாணயத்தை வைத்தால், அது பெருகும் பெரிய செல்வந்தர்களாக ஆவதற்கு இறைவன் அருள்புரிகிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. அதனால் இறைவன் தன ரேக பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

கீழ திருவேங்கடநாதபுரம் திருத்தலத்தில் புரட்டாசி மாதத்தில் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம், கருட சேவை, மார்கழி உற்சவம் மற்றும் தை டோலோத்சவம் ஆகிய திருவிழாக்கள் மிகவும் முக்கியமான திருவிழாக்கள் ஆக கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 8 கி. மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவேங்கடநாதபுரம் திருக்கோவில்.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi
  • Tirunelveli - 38 min (14.5km)
  • Tiruchendur - 2 hr 3min(65.9km)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ஜானகி அரவிந்த்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram