கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவர்: ஸ்ரீ சுதர்சன நரசிம்மர்.
உற்சவர்: ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி.
தீர்த்தம்: தாமிரபரணியில் உரோமச தீர்த்தக்கட்டம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவில். இந்தக் கோவில் “வெங்கடாசலபதி கோவில்” என்று அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பது ஸ்ரீ சுதர்சன நரசிம்மரே ஆகும். மஹாவிஷ்ணுவின் பிரதான ஆயுதங்களுள் ஒன்றாக விளங்கும் சக்கரம் தான் சுதர்சன ஆழ்வார் என்றும் சக்கரத்தாழவார் என்றும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. தனக்கு நிகரான சக்தியுடன் இந்தச் சுதர்சன சக்கரத்தை மஹாவிஷ்ணு படைத்ததாகக் கூறப்படுகிறது. எனவே அனைத்து மஹாவிஷ்ணு கோவில்களிலும் தனி சன்னதியில் சக்கரத்தாழவார் எழுந்தருளியிருப்பார். ஆனால் இந்தக் கரிசூழ்ந்தமங்கலம் ஸ்தலத்தில் திருக்கோவிலின் மூலவராகவே சக்கரத்தாழவார் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். முற்காலத்தில் வாழ்ந்த உரோமச மகரிஷி இங்குச் சுதர்சன நரசிம்மரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல இங்குப் பாயும் தாமிரபரணி ஆற்றின் தீர்த்தகட்டமும், உரோமச தீர்த்தக்கட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் இந்தத் திருக்கோவில் கேரளா நம்பூதிரிகளின் வழிபாட்டு முறையில் இருந்தது. இதனை உணர்த்தும் வகையில் இன்றும் இங்குக் கேரளா கோவில்களில் இருப்பதை போல, முதலில் கொடிமரமும் அதற்க்கு பின்னர் பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. பொதுவாகத் தமிழக கோவில்களில் முதலில் பலிபீடமும், அதற்குப் பின்னர் கொடிமரமும் அமைக்கப்படுவது வழக்கம். இங்குத் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலைப் போன்று முதலில் கொடிமரமும், அடுத்ததாகப் பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது.

இந்தத் திருக்கோவிலின் சிறப்பம்சம் மூலவர் சுதர்சன மூர்த்தி தான். பொதுவாகப் பெரும்பான்மையான வைணவ கோவில்களிலும் பெருமாளே மூலவராக எழுந்தருளியிருப்பார். அனால் இங்கு ஸ்ரீ தேவி, பூ தேவி சமேதராக ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் உற்சவராகவே எழுந்தருளிச் சேவை சாதிக்கிறார். மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன நரசிம்மரே காட்சி தருகிறார். தசாவதாரங்களில் வராஹ அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை ஒருங்கே கொண்டவராக இத்தல மூலவர் காட்சித் தருகிறார். மஹாவிஷ்ணு இவரிடம் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கும் உரிமையை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ சுதர்சன நரசிம்மர்:

இங்குக் கருவறையில் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சன நரசிம்மர் ஒரே மூர்த்தத்தின் முன்புறம் சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் நரசிம்ம மூர்த்தியாகவும் காட்சிதருகிறார். முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.

ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை ஸ்ரீ வெங்கடாசலபதி:

இங்கு உற்சவராக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடாசலபதி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். இவர் தனது கரங்களில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் ஆகியவற்றை தாங்கியும் அபாய முத்திரை காட்டியபடியும் காட்சித் தருகிறார். இவருக்கு ஒரு பக்கம் ஸ்ரீ தேவி தாயாரும் மற்றோரு பக்கம் பூ தேவி தாயாரும் எழுந்தருளி உள்ளார்கள்.

திருக்கோவில் சிறப்புகள்:

 • கரிசூழ்ந்தமங்கலம் எனப்படும் இந்த ஸ்தலம் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமையப்பெற்றுள்ளது. இந்த ஸ்தலத்திற்கு கலிசியமங்கலம், கலிஜெயமங்கலம், கலிசேகரமங்கலம், குலசேகரமங்கலம் போன்ற பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1814 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் தான் கரிசூழ்ந்தமங்கலம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • இடைக்கால பாண்டியர்கள் கல்வெட்டில் முள்ளி நாட்டு கலிஜெயமங்கலம் என்று இந்த ஸ்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • முற்காலத்தில் இந்த ஊரைச் சுற்றிலும் கரும்பு தோட்டங்கள் நிறைய இருந்ததாகவும், அந்தக் கரும்புகளை உண்பதற்காக யானை கூட்டங்கள் இந்த ஊரைச் சுற்றி வந்ததாகவும் அதனால் இந்த ஊர் கரிசூழ்ந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டதாகும் கூறப்படுகிறது.
 • இந்தக் கோவிலில் இடைக்கால பாண்டியர்கள் கல்வெட்டுகள் – 11, விஜயநகர பேரரசுக்கு முந்தைய காலகட்ட கல்வெட்டுகள் – 13, விஜயநகர பேரரசுக்குப் பிந்தைய காலகட்ட கல்வெட்டுகள் – 6 என மொத்தம் முப்பது கல்வெட்டுகள் இதுவரை கிடைக்க பெற்றுள்ளது.
 • இந்த ஸ்தலத்திற்கு அருகில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கோல அரசர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தக் கரிசூழ்ந்தமங்கலம் ஸ்தலத்தில் மட்டும் கோலர்கள் கல்வெட்டு ஒன்று கூட இல்லாதது வியக்கத் தக்க விஷயமாக உள்ளது.
 • இங்குக் காணப்படும் கல்வெட்டுகளில் மிகப் பழமையான கல்வெட்டு (கி.பி 1216) இடைக்கால பாண்டிய மன்னனான மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இங்குக் காணப்படும் பெரும்பாலான கல்வெட்டுகளில் இந்தத் தலத்தின் பெயர் தென்திருவேங்கடம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
 • எம்மண்டலம் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன் காலத்து கி.பி 1298 ஆம் ஆண்டு கல்வெட்டில் இந்தத் திருக்கோவில் விமானம் கானீச ரகுத்தர் மகன் பிதூசி ரகுத்தர் என்கிற லாலா ஒருவரால் கட்டப்பட்டது பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
 • கி.பி 1544 ல் எர்ர திம்மராஜூவின் தானாதிபதியாக இந்தக் கிராமத்திற்கு வந்த அப்பய்யங்கார் என்பவர் தாமிரத்தால் மூடப்பட்ட கொடிமரத்தை இந்தக் கோவிலில் நிறுவி, இந்தக் கோவிலின் பெருமாள் எழுந்தருளக் கருட வாகனம் செய்து கொடுத்து, பதினோரு ஆழ்வார் சிலைகளையும் பிரதிஷ்டை செய்து, ஒரு வெள்ளி தாம்பாலமும் இந்தத் திருக்கோவிலுக்கு அளித்த செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. இதற்குப் பின்னர் இந்தக் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைப் பிரதிஷ்டை செய்து, கோவிலின் நித்ய பூஜைகளுக்காக நிலங்கள் பலவற்றை தானமாக வழங்கிய செய்தி பற்றி கி.பி 1545 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
 • அமர ராஜு ஸ்ரீபாதரின் சீடரான முகுந்தானந்தபுரி என்பவர் மடத்தின் சொத்துக்கள் அனைத்தையும் திருக்கோவிலின் சொத்துக்களுடன் ஒன்றாக இணைத்தது மற்றும் மடத்தின் விலையுயர்ந்த தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள், நாணயங்கள், தளவாட சாமான்கள், விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் திருக்கோவிலின் அனுபவ பத்தியதைக்கு உட்படுத்தியது பற்றிய குறிப்பும் கி.பி 1453 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
 • கி.பி 1298 ஆம் ஆண்டின் கல்வெட்டில் இந்தத் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற தகவல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
 • இங்குள்ள சுதர்சன நரசிம்மரை வணங்கினால் புத்தி, சாமர்த்தியம், வெற்றி ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த ஸ்தலத்தில் உறையும் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் காய் கூடும் என்று நம்பபப்படுகிறது.
 • சுதர்சன மூர்த்தி நவக்கிரகங்களில் சுக்கிரனுக்கு அதிபதியாக விளங்குவதால் இந்தக் கோவில் சுக்கிர பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
 • குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள் இங்குள்ள தாமிரபரணி நதிக்கரை படித்துறையில் படி பாயசம் உண்ணும் நேர்ச்சை செய்து வணங்கினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது ஐதீகம்.
 • பொதுவாக விஷ்ணு ஆலயங்களில் ஒரே சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் சுதர்சனர் மற்றும் நரசிம்மரை, முன் பக்க வாசல் மற்றும் பின்பக்கம் உள்ள துவாரங்கள் அல்லது பலகணி வழியாகத் தரிசிக்கலாம். அனால் இங்குப் பின் பக்கம் உள்ள நரசிம்மரை தரிசிக்க பலகணி அமைப்பு கிடையாது. சுதர்சனரை தரிசிக்கும் பொழுது அவருக்குப் பின்புறம் நிறுத்தப்பட்டுள்ள நிலைக்கண்ணாடி வழியாகத் தான் நரசிம்மரை தரிசிக்க முடியும்.

முக்கிய விழாக்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, தமிழ் மாத திருவோண நட்சத்திரம், தமிழ் மாத சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம் / செல்லும்வழி:

திருநெல்வேலி மாநகரில் இருந்து பாபநாசம் செல்லும் வழிப்பாதையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்தமடை ஊரில் இருந்து வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ளது கரிசூழ்ந்தமங்கலம். இங்கு செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் செல்லும் நகர பேருந்துகள் உள்ளன.

About Lakshmi Priyanka

Check Also

மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள். தாயார்கள்: …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!