திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 9

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-9ல்.,

25. திருக்கோட்டிநாதர் சருக்கம்.

26. ஆனைக்கு அருளிய சருக்கம்.

27. திருப்புடைமருதூர் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

25. திருக்கோட்டிநாதர் சருக்கம்.

ஒருநாள் அகத்திய முனிவர், காசிப தீர்த்தத்திற்கு கிழக்கே உள்ள ஒரு துறையில் நீராடி, இறைவனை வழிபடுவதற்காக, இரு கரங்களாலும் ஆற்றின் மணலை அள்ளியெடுத்து லிங்கமாகப் பிடித்தார். மணல் லிங்கமாக ஆகவில்லை. மீண்டும் பிடித்தார். மீண்டும் லிங்கம் உருவாகவில்லை. இப்படி பலமுறை முயன்றும் மணலில் லிங்கம் கூடிவராத காரணத்தால் , இறைவா.! என்னிடம் உனக்கென்ன கோட்டி? என்று கேட்டுக் கொண்டே, இரு கைகளாலும் மணலை வாரி மார்போடு சேர்த்து அனைத்து பிடித்தார். மணல் லிங்கமாக ஆகிவிட்டது. அகத்தியரின் பிடி அழுத்தமாக இருந்ததனால்,, லிங்கத்தின் மேனியில் அகத்தியரின் அங்கம் பதிந்து விட்டது. லிங்கம் மூர்த்தியாக வடிவம் கொண்ட போது அந்த மூர்த்தியின் மேனியிலும், செவிப்பகுதியிலும், அகத்திய முனிவரின் மார்பும், கைகளும் பதிந்திருந்த அடையாளங்கள் இருந்தன. அகத்திய முனிவர் அந்த லிங்கத்திற்கு முறைப்படி வழிபாடுகள் செய்து மகிழ்ந்தார். இறைவா..! என்னிடம் உனக்கு என்ன கோட்டி? என்று அகத்தியர் கேட்டதால், அந்த லிங்கத்துக்கு “கோட்டீஸ்வரர்” என்ற பெயர் வழங்கப்பெற்றது.

அது ஒரு புண்ணியமான ஸ்தலம். அந்த ஸ்தலத்தில் தாமிரபரணி வலம்சுழித்துப் பாய்கிறாள். அதனால் அது வலஞ்சுழி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வலஞ்சுழி தீர்த்தத்தில் நீராடி திருக்கோட்டிநாதரை வணங்கி வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும். இதே போன்று புண்ணிய தீர்த்தங்கள், பொருனையின் தென்கரையில் ஐந்தும், வடகரையில் ஐந்தும் இருக்கின்றன. இவை எல்லாம் ஐந்து குரோச எல்லையில் அமைந்திருக்கின்றன. (ஒரு குரோசம் என்பது இரண்டே கால் மைல் தொலைவை குறிக்கும்) இந்த தீர்த்தங்களில், சோமவாரம், சங்கராந்தி, மகாமகம், திருவாதிரை, அமாவாசை, பௌர்ணமி, ஆகிய முக்கியமான தினங்களில் நீராடி தாமிரபரணிக் கரையில் உள்ள இந்த ஐந்து சிவாலயங்களிலும் வழிபாடு செய்தால் பிறவி துன்பம் நீங்கப் பெறுவர். தெற்கே இருந்து வரும் வேனை ஆறு, நாகங் கோரையாறு, கல்லாறு, மணிமுத்தாறு, பாலாறு, வாண தீர்த்தம் ஆகியவை ஒன்று கூடும் இடம் தான் முக்கூடல். இந்த முக்கூடலில் நீராடுவோர் பிணியும், பாவமும் நீங்கப் பெற்றுப் பேரின்ப வீட்டை அடைவார்கள். இதற்கு இரண்டே கால் மைல் தூரத்தில் கண்ணுவ முனிவர் நீராடி வழிபட்ட கண்ணுவ தீர்த்தம் இருக்கிறது. கண்ணுவர் அங்கே நீராடிக் கண்ணுதலை வழிபட்டதால் போதாயனர் என்னும் புதல்வரைப் பெற்றார். இதற்கு கீழக்கே விசுவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தட்சிண தீர்த்தம், சர்வ தீர்த்தம்,ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்த தீர்த்தத்தில் நீராடினாலும் மேற்சொன்ன தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய பலனை பெறலாம் எனக் கூறிய சூதமா முனிவர் அடுத்ததாக கஜேந்திர தீர்த்தம் பற்றி கூறத் தொடங்குகிறார்.

26. ஆனைக்கு அருளிய சருக்கம்:

கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே.! மணவை மாநகரை தலைநகரமாக கொண்டு பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதி நெறி தவறாதவன். நேர்மையானவன். அவனுடைய பெருமைகளை கேள்விப்பட்ட குறுமுனியான அகத்தியர் அவனை காண சென்றார். அகத்தியர் சென்ற நேரத்தில் அரசன் முக்கியமான விஷயமாக அரச பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். அதனால் அகத்தியரை வரவேற்று உபசரிக்க அவனால் இயலவில்லை. முனிவர் அவனுக்காக காத்திருந்தார். வெகுநேரம் ஆகியும் அவன் வரவில்லை. அதனால் கோபம் கொண்ட குறுமுனி புறப்படுவதற்காக எழுந்தார். அப்போதுதான் மன்னன் வந்து அகத்தியரை வணங்கினான். வணங்கி நின்ற மன்னனை கோபத்தில் இருந்த அகத்தியர் யானையாக போகும் படி சபித்து விடுகிறார். கடுமையான சாபத்தைக் கேட்டுக் கதிகலங்கிய மன்னன், முனிவர் பெருமானே.! அறியாததால் ஏற்பட்ட தவறுக்கு இவ்வளவு கடுமையான சாபத்தை கொடுத்து விட்டீரே.! இந்தச் சாபம் நீங்குகின்ற காலத்தையும், அதுவரை ஆதிமூலத்தை அனுதினமும் வழிபடும் வரத்தையும் தந்து அருள் புரிய வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொண்டான்.

அதனை ஏற்ற அகத்தியர் மன்னா.! நீ தினம்தோறும் ஒரு நீர் நிலையில் இறங்கி, மலர் பறித்துத் திருமாலுக்கு அர்ச்சித்து வணங்கி வருவாய். அந்தக் காலத்தில் ஒருநாள், நீ மலர் பறிப்பதற்காக நீர் நிலையில் இறங்கும் பொழுது அந்நீர் நிலையில் கிடக்கும் முதலை உன் காலைப் பற்றி இழுக்கும். அப்போது உன்னை கண்ணன் வந்து காப்பாற்றி அருள்வார் எனக்கூறி அவனுக்கு சாப விமோசனமும் வழங்குகிறார். பின்னர் அகத்தியரின் சாபத்தால் யானையாக மாறிய மன்னன், காட்டுக்குள் சென்றான். தேவர்களில் எல்லாம் சிறந்தவன் தேவேந்திரன் ஆனது போன்று, கஜங்களில் எல்லாம் எல்லாம் சிறந்தவன் கஜேந்திரன் ஆகி விட்டான். தினம்தோறும் ஆயிரம் மலர்களை பறித்து திருமாலுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வந்தான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்த கஜேந்திர யானை, சாபம் நீங்கும் காலம் நெருங்கியதால், தாமிரபரணிக் கரைக்கு வந்து சேர்ந்தது. ஒரு நீர் நிலையில் இறங்கி மலர்களை பறித்து மாயவனுக்கு அர்ச்சனை செய்தது. அப்போது அந்த நீர் நிலையில் கிடந்த ஒரு முதலை கஜேந்திரனின் காலைக் கவ்வி இழுத்தது. தன்னை விடுவித்துக் கொள்ள கஜேந்திரன் எவ்வளவோ முயன்றது. ஆனால் முடியவில்லை. கடைசியில் வழியால் துடித்த கஜேந்திரன் “ஆதிமூலமே” என்று அழைத்தது. அக்கணமே திருமால் அங்கு கருட வாகனத்தில் தோன்றி, தமது சக்கராயுதத்தை பிரயோகித்து முதலையை கொன்று, தன பக்தனான கஜேந்திரனை காப்பாற்றுகிறார்.

அகத்திய முனிவர் இட்ட சாபம் ஆதிமூலப் பெருமாளால் நீங்கி, யானையாக இருந்தவன் மீண்டும் அரசனாக மாறினான். தன்னைக் காப்பாற்றிய தாமோதரனின் தாள் பணிந்து வணங்கினான் மன்னன். முகுந்தனால் கொல்லப்பட்ட முதலையும் ஒரு முனிவரின் சாபத்துக்கு உள்ளானது தான். கந்தர்வன் ஒருவன் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே நீராட வந்த முனிவரின் காலைப்பற்றி விளையாட்டாக இழுத்தான். கோபம் கொண்ட முனிவர் அவனை, முதலையாக போவாய் என்று சபித்து விட்டார். அந்தக் கந்தர்வன் தான் இங்கு முதலையாக கிடந்து, திருமாலால் சாபம் நீங்கப் பெற்று பின் கந்தருவ லோகம் சென்றான். கஜேந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் கஜேந்திர தீர்த்தம் என்றும், அத்தலம் கரிகாத்தபுரி என்றும் பெயர்கள் பெற்றன. இத்தலத்தின் அருகே பல தீர்த்தங்கள் உள்ளன. சித்தர்கள் வந்து நீராடி வழிபட்டதால் சித்தர் தீர்த்தம் என்றும், மாண்டவிய முனிவர் நீராடி வழிபட்டதால் மாண்டவிய தீர்த்தம் என்றும், இரு தீர்த்தங்கள் இருக்கின்றன என்று சொல்லிச் சூதமா முனிவர் திருப்புடைமருதூர் சிறப்பு பற்றிச் சொல்கின்றார்.

27. திருப்புடைமருதூர் சருக்கம்:

தேவ சபையில் தேவேந்திரன் அமர்ந்திருந்தான். அப்போது தேவ குருவான வியாழ பகவான் அங்கே வருகிறார். விதிவசத்தால் தேவேந்திரன் அவரை கவனிக்கவில்லை. கவனிக்காததால் வணங்கவும் இல்லை. இதைத் தவறாக நினைத்துக் கொண்ட வியாழன், உடனே திரும்பிச் சென்றுவிட்டார். அப்பொழுது தான் இந்திரன் அவரை பார்த்தான். உடனே ஆசனத்தை விட்டு இறங்கி வந்து அவரை அழைத்து வர ஓடினான். அதற்குள் அவர் எங்கோ மறைந்து விட்டார். தேவேந்திரன் எங்கெல்லாமோ தேடித் பார்த்தும் அவரைக் காணவில்லை. பின் தேவர்களை அனுப்பித்த தேட செய்தான். அப்படியும் அவர் தென்படவே இல்லை. பிரம்மனிடம் சென்று இந்திரன் நடந்ததை சொன்னான். அதற்கு பிரம்மன் அதனால் என்ன? விடு அவர் வரும்போது வரட்டும் எனக்கூறி, அதுவரை விசுவரூபனை குருவாக வைத்துக் கொள் என்று கூறிவிடுகிறார். பிரம்மதேவன் கூறியபடி இந்திரனும் விஸ்வரூபனை தனது குருவாக ஏற்றுக்கொண்டான். சிலகாலம் கழித்து விஸ்வரூபனை குருவாக வைத்து, இந்திரன் ஒரு வேள்வி செய்தான். அந்த வேள்வியில் விஸ்வரூபன், மந்திரங்களை மாற்றிச் சொல்லி அவிர்பாகத்தையும் அசுரர்களுக்கு கொடுத்து விடுகிறான். இதனால் கோபம் கொண்ட இந்திரன், அவனை வாளால் வெட்டிக் கொன்றான். இதனை அறிந்த விஸ்வரூபனின் தந்தை தனது மகனை கொன்ற இந்திரனையும், தேவர்களையும் அழிக்காமல் விட மாட்டேன் என்று சபதம் செய்து ஒரு வேள்வியை செய்தான்.

அந்த வேள்வியில் இருந்து விருத்திராசுரன் என்னும் ஒரு அரக்கன் தோன்றினான். வெளியே வந்த அவன், என்னை ஏன் அழைத்தாய்? நன் என்ன செய்ய வேண்டும்? கடல் நீரை எல்லாம் குடிக்க வேண்டுமா? அல்லது இந்த உலகத்தையே அழிக்க வேண்டுமா? சொல்.. உடனே செய்து முடிக்கிறேன் எனக்கூறி நின்றான். அதற்கு விஸ்வரூபனின் தந்தை, விருத்திராசூரா.! நீ என்ன செய்ய வேண்டும் என்பதை பின்பு சொல்கிறேன். முதலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து ஆயுதங்களால் அழியாத வரம் வாங்கி வா என்றான். அதன்படியே விருத்திராசுரனும் சென்று, சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்து, ஆயுதங்களால் அழியாத வரம் பெற்று வந்தான். அப்போது விஸ்வரூபனின் தந்தை அவனிடம், நீ உடனே தேவலோகம் சென்று இந்திரனைக் கொன்று அல்லது வென்று வா என்று கூறி அனுப்பி வைக்கிறார். அதன்படியே விருத்திராசூரன் ஆவேசத்தோடு தேவலோகம் சென்றான். அண்ட சராசரங்களும் அதிரும்படி ஆர்ப்பாட்டம் செய்தான். இதனையறிந்த இந்திரன் படையோடு வந்து, விருத்திராசூரனுடன் சண்டை இடுகிறான். இருவருக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. விருத்திராசூரனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திரன், உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறான். தேவலோகத்தை கைப்பற்றிய விருத்திராசூரன், தானே இந்திரன் என்று அறிவித்து தேவலோகத்தை ஆட்சி செய்ய தொடங்கி விட்டான்.

விருத்திராசூரனுக்கு பயந்து ஓடிய இந்திரன், தேவர்களை அழைத்து கொண்டு, பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கின்ற பாற்கடலுக்கு சென்று, அங்கு பரந்தாமனை கண்டு வணங்கி, தன் நிலைமையை எடுத்துக் கூறினான் இந்திரன். அதைக்கேட்ட திருமால் விருத்திராசுரனை உலோகத்தால் ஆன எந்த விதமான ஆயுதங்களாலும் வீழ்த்திவிட முடியாதபடி வரம் வாங்கி இருக்கிறான். அதனால் நீ வைத்திருக்கும் எந்த ஆயுதங்களாலும் அவனை அழிக்க முடியாது. அதனால் ததீசி முனிவரிடம் சென்று அவருடைய முதுகு எலும்பை வாங்கி வந்து, ஒரு ஆயுதத்தை செய். அதன் மூலம் தான் அவனை அழிக்க முடியும் என்று கூறுகிறார். இதனைக் கேட்டு ஆறுதல் அடைந்த இந்திரன் தாமோதரனை வணங்கி விடைபெற்றுத் ததீசி முனிவரை காண சென்றான். ஒரு வழியாக ததீசி முனிவரைக் கண்டு வணங்கிய இந்திரன், தான் அவரை காண வந்த காரணத்தை கூறுகிறான். முனிவர்பெருமானே.! விருத்திராசூரன் என்னும் ஓர் அரக்கன் இந்திரலோகத்திற்கு வந்து என்னை அடித்து விரட்டிவிட்டு, இந்திரலோகத்தையும் கைப்பற்றிக் கொண்டான். அவனைக் கொன்று மீண்டும் நான் இந்திர பதவியை அடைய வேண்டும். அதற்கு தங்கள் உதவி தேவைப்படுகிறது என எடுத்துக் கூறுகிறான். அதனைக் கேட்ட ததீசி முனிவர் தான் அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். அதற்கு இந்திரன் தன்னிடம் திருமால் கூறியபடி தங்கள் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்ய வேண்டும் என்ற விஷயத்தை கூறுகிறான். அதனைக் கேட்ட ததீசி முனிவர் முகமலர்ச்சியுடன் தனது முதுகெலும்பை எடுத்துக் கொடுத்துவிட்டு, இறைவனடி சேர்ந்து விடுகிறார் என்று இடை நிறுத்திய சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களே.! பிற உயிர்கள் மீது அன்பு வைத்திருக்கின்ற உத்தமர்களால் தான் தங்கள் உயிரைக் கொடுத்து மற்ற உயிர்களை காக்க முடியும். இதற்கு ஊர் எடுத்துக்காட்டு ததீசி முனிவர் என்று கூறி, மீண்டும் தொடருகிறார்.

ததீசி முனிவரின் எலும்பை பெற்று சென்ற இந்திரன், அதை விஸ்வகர்மாவிடம் கொடுத்து ஆயுதமாக செய்து வாங்கிக்கொண்டான். அந்த ஆயுதம் வஜ்ராயுதம் என்று அழைப்பட்டது. அந்த வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனுடன் போரிடச் சென்றான். தன்னிடம் தோல்வியை தழுவி ஓடிய ஒருவன் மீண்டும் போருக்கு வருகிறான் என்றால், ஒன்று அவன் புதிதாக படைபலம் பெற்றிருக்க வேண்டும், அல்லது புதிய போர்த் தந்திரத்தோடு வந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்காத விருத்திராசூரன் சாதாரணமாக நினைத்து போருக்கு வந்தான். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. விருத்திராசூரன் வீசிய ஆயுதங்களை எல்லாம் இந்திரன் வஜ்ஜிராயுததால் தடுத்து விட்டு, அந்த வஜ்ஜிராயுதத்தை அவன் மீது வீசினான் இந்திரன். திருமால் கையில் இருக்கும் சக்கரம் சுழன்று செல்வது போல, வஜ்ஜிராயுதம் சுழன்று சென்று விருத்திராசூரனின் தலையை கொய்தது. இப்போது விருத்திராசூரன் மாண்டு போய் விட, இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. போரில் வெற்றி பெற்றும் இந்திர பதவியில் அமர முடியாமல் பித்து பிடித்தவனை போல காடு, மலை, வானம் என்று கால் போன போக்கில் அலைந்து திரிந்தான். வெகுகாலம் கழித்து தாமிரபரணியின் கரைக்கு வந்து சேர்ந்தான். அந்த இடம் அவனுடைய மனத்துக்கு இதமாக இருந்தது. தன்னிடம் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். ஆகையால் அந்த தாமிரபரணி நதிக்கரையிலேயே ஒரு மருத மரமாக உருக்கொண்டு நின்று, நீண்ட காலம் தவம் செய்து வந்தான். இங்கே இந்திரன் தவம் செய்து கொண்டிருக்க, அங்கே தேவர்கள் தங்களுக்கொரு தலைவன் இல்லையே என்று எண்ணிக் கைலாயம் சென்று, பெருமானை கண்டு முறையிட்டார்கள். தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான், நீங்கள் தேவலோகம் செல்லுங்கள் உங்கள் தலைவன் இந்திரன் விரைவில் அங்கு வருவான் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

தேவர்களை அனுப்பிவிட்டு மகாதேவர், இந்திரன் மருத மரமாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் தாமிரபரணிக்கரைக்கு வந்து, அந்த மருத மரத்தின் நடுவே லிங்கமாக அமர்ந்தார். அந்தர துந்துபி முழங்கியது. வானதூதர்கள் அனைவரும் பூ மழை பொழிந்தனர். மருத மரத்தின் ஊடே தோன்றிய அந்த மகா லிங்கத்தைக் கண்ட இந்திரன், மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு ஆடியும் பாடியும் துதித்தான். தினம் தோறும் தவறாமல் அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து வணங்கி வந்தான். ஒருநாள் இறைவன் அவனுக்கு காட்சி தந்தார். இறைவனைக் கண்ட இந்திரன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டு இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். இந்திரா.! உன்னைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. நீ இந்திரலோகம் செல்லலாம் என்று கூற, அவரை பணிந்து நின்ற இந்திரன் பெருமானிடம் ஒரு வரம் வேண்டுமென கேட்கிறான். பெருமானும் அவன் வேண்டும் வரம் என்ன என்று கேட்க, இறைவா.! எனது தோஷம் நீங்கிய இந்த தீர்த்தக் கட்டம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும் எனவும், இங்கு வந்து நீராடித் தங்களை வணங்கும் மாந்தர்களின் சகல பாவங்களும் நீங்கப்பெற்று வாழ்வு சிறக்க வேண்டும் எனவும் வரம் கேட்கிறான் இந்திரன். சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்து அவனுக்கு அருள்புரிகிறார். அன்று முதல் அந்த தீர்த்தம் அவனது பெயரால் “சுரேந்திர விமோசன தீர்த்தம்” என்று அழைக்கப்படலாயிற்று என்று கூறிய சூதமா முனிவர், கேளுங்கள் நைமிசாரணிய முனிவர்களே, மருத மரத்தின் புடையில் இறைவன் அமர்ந்ததால் இத்தலம் “திருப்புடைமருதூர்” என்னும் பெயரை பெற்றது. தைப்பூச நாளன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, நாறும்பூநாதனை வணங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று சொல்லிச் சூதமாமுனிவர் அடுத்ததாக சோம தீர்த்தம் பற்றி சொல்கிறார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!