திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-32ல்.,
108. கருவூர்ச் சித்தர் சருக்கம்.
109. திருஞானசம்பந்தர் சருக்கம்.
110. தொண்டர்கள் நாயனார் சருக்கம்.
111. நின்ற சீர் நெடுமாற நாயனார் சருக்கம்.
112. கல் இடபம் புல் உண்ட சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
108. கருவூர்ச் சித்தர் சருக்கம்:
கீரனூரில் வேதியர் குலத்தில் தோன்றிய பூதியார் என்பவருக்கும் , கலாவதி அம்மையாருக்கும், சூரியன் அருளால் தோன்றியவர் தான் கருவூர்ச் சித்தர். இவர் அனைத்து கலைகளையும் ஐயமறக் கற்று, இறைவனை நோக்கித் தவம் செய்து பல வரங்களை பெற்று, நாட்டில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் சென்று வாசலில் நின்று, அங்கே கோவில் கொண்டிருக்கின்ற இறைவனின் திருப்பெயரைச் சொல்லி அழைப்பார். அந்த இறைவன் வந்து அவருக்கு காட்சி தருவார். இப்படி ஒரு வரத்தையும் பெற்றிருந்தார். அந்த வரத்தின்படி எல்லா கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு நெல்லைக்கு வந்தார்.
நெல்லையப்பரின் கோவிலுக்கு வந்தவர், வாசலில் நின்று கொண்டு, நெல்லையப்பா.! நெல்லையப்பா.! என்று மூன்று முறை அழைத்தார். கருவூர்ச் சித்தரின் பெருமையை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இறைவன் நேரில் தோன்றாமலும், மறுமொழி கூறாமலும் இருந்தார். இதனால் கோபம் கொண்ட கருவூர்ச் சித்தர், ஈசன் இல்லாத இவ்விடத்தில் எருக்கு எழுக என்று கூறிவிட்டு வடதிசை நோக்கி நடந்தார். இவர் மானூரை அடைந்தபோது, இறைவன் அவருக்குப் பேரொளி வடிவில் காட்சி தந்தார். சித்தர் சித்தம் மகிழ்ந்து இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.
இறைவா.! உன் எல்லையில்லாக் கருணையை என்னவென்று சொல்வேன்? எளியேனையும் ஒரு பொருட்டாக எண்ணி தேடி வந்து காட்சி தந்த தெய்வமே என்று போற்றி புகழ்ந்தார். அப்போது அந்த பேரொளிப் பிழம்பு, தெற்கு நோக்கிச் சென்றது. சித்தரும் அதைத் தொடர்ந்து சென்றார். அப்பிழம்பு நெல்லை வந்து, தொண்டர்கள் நயினார் கோவிலுக்குள் சென்று, லிங்கத்தில் ஒன்றி விட்டது. இக்காட்சியை கண்ட கருவூர்ச் சித்தர், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். இறைவா.! எனக்கு காட்சி அருளிய, இதே ஆவணி மூலத்தன்று, ஆண்டுதோறும் மானூர் வந்து காட்சி அருள வேண்டும் என்று வேண்டினார். இறைவனும் அவர் வேண்டுதலுக்கேற்ப ஆண்டுதோறும் ஆவணி மூலத்தன்று மானூர் சென்று காட்சி தந்து வருகிறார் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
109. திருஞானசம்பந்தர் சருக்கம்.
தேவ பாண்டியன் என்பவன் நீதி நெறி தவறாமல் நெல்லை மாநகரை ஆட்சி செய்து வந்தான். கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து திருவிழாக்களையும் நடத்தி வந்தான். அந்தக் கால கட்டத்தில், மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னன், சைவத்தை விட்டுச் சமணத்தை பின்பற்றினான். மக்களையும் சமணத்திற்குத் திருப்பும் முயற்சியை மேற்கொண்டான். இதை அறிந்த நெல்லை பாண்டியன், இவன் சைவத்தை ஒதுக்கிச் சமணத்தை பரப்பி விடுவான் போல் தெரிகிறதே என்று எண்ணிப் பதறி முருகப்பெருமானிடம் முறையிட்டான்.
திருமுருகன் மன்னன் முன் தோன்றி, மன்னா.! கவலைப்படாதே! இன்னும் மூன்று தினங்களில் நாளும் தமிழ் செய்யும் ஞானசம்பந்தன் அங்கு செல்வான். அவனுக்குச் சைவ ஞானத்தைப் போதித்து சமணத்தில் இருந்து விடுவிப்பான் என்று சொல்லிச் சென்றார் முருகப்பெருமான். முருகப்பெருமான் சொன்னது போலவே, மூன்றாம் நாள், சம்பந்த பெருமான் மதுரை மாநகர் சென்று, மன்னனைக் கண்டு, அவனுடைய மேனி எங்கும் திருநீற்றைப் பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். அவனுடைய உடலை பிடித்திருந்த வெப்பு நோயும், உள்ளத்தைப் பிடித்திருந்த சமண பேயும் நீங்கின. மன்னன் சைவத்தை தழுவிச் சம்பந்தரைப் போற்றினான்.
சங்கம் கண்ட மதுரையில் இருந்து, தமிழ் வளர்த்த நெல்லைக்கு வந்தார். நாளும் தமிழ் செய்த ஞானசம்பந்த பெருமான். ஆளுடைப் பிள்ளை வருவதை அறிந்த மன்னன், எதிர் கொண்டழைத்து வணங்கி வரவேற்று அரண்மனைக்கு அழைத்து வந்தான். தகுந்த மரியாதை செய்தான். பின்பு திருஞானசம்பந்த பெருமான் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார். நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கித் திருநெல்வேலிப் பதிகம் பாடினார். மீண்டும் இறைவனையும், இறைவியையும் வணங்கி விட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார். வாசலில் பல சமணர்கள் கூடி நின்று, சம்பந்தப் பெருமானிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர்.
அத்தனை கேள்விகளுக்கும் திருஞானசம்பந்தப் பெருமான், அருமையாக, அற்புதமாக, ஆழமாக, அறிவியல் பூர்வமாக விடையளித்தார். சமணர்கள் அசந்து விட்டனர். பின்னர் சம்பந்தப் பெருமான் சமணர்களைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டார். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த வேளையைப் பயன்படுத்தி சைவத்தை பற்றி எடுத்துரைத்து அவர்களைச் சைவர்கள் ஆக்கினார் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
110. தொண்டர்கள் நாயனார் சருக்கம்:
திருஞானசம்பந்தப் பெருமான் திருநெல்வேலி வந்த அதே நாளில் அகத்திய முனிவரும் அங்கு வந்தார். நாளும் தமிழ் செய்த ஞானசம்பந்தரும், தமிழுக்கு ஐந்து இலக்கணமும் செய்த தமிழ் முனி அகத்தியரும், நெல்லையம்பதியில் இருக்கிறார்கள் என்று அறிந்த அன்பர்களும், அடியவர்களும், சிவத்தொண்டர்களும், அவர்களைக் காண்பதற்காக வந்து கூடிவிட்டார்கள். கோடிக்கணக்கில் வந்து குழுமியுள்ள திருத்தொண்டர்கள் கூட்டத்தைக் கண்ட இருவரும் பெருமைப்பட்டார்கள். அப்போது தொண்டர்கள் சொன்னார்கள். சம்பந்தப் பெருமானே.! பதிகம் பாடிச் சிறப்பித்த இத்தலத்தில் ஒரு கோவிலும் உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டனர்.
தொண்டர்களின் வேண்டுகோளைக் கேட்ட சம்பந்தப் பெருமான், அகத்திய பெருமானுடன் கலந்து பேசினார். அகத்தியரும் சம்மதித்தார். சம்மந்தப் பெருமான், எந்த இடத்தில் கோவில் அமைக்கலாம் என்று அகத்திய முனிவரிடம் கேட்டார். சம்பந்தப் பெருமானே.! எனையாளும் ஈசன் நெல்லையப்பரின் கோவிலுக்கு மேற்கே ஒரு வில்வ வனம் இருக்கிறது. அந்த இடம் கோவில் அமைப்பதற்காக பொருத்தமான இடம் என்று கருதுகிறேன் என்று அகத்திய முனிவர் சொன்னார். சம்பந்த பெருமானும், அப்படியே செய்வோம் என்று சொல்லி, அகத்திய முனிவருடன் சென்று மன்னனைக் கண்டார். மன்னனிடம் கோவில் அமைப்பது பற்றிச் சொன்னார்.
மன்னர் மறுப்பேதும் சொல்லாமல் அகத்திய முனிவர் சுட்டிக் காட்டிய இடத்தில் அருமையான ஓர் கோவிலை உருவாக்கினான். தொண்டர்களின் வேண்டுகோளால் உருவான கோவில் என்பதால் "தொண்டர்கள் நயினார் கோவில்" என்று அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள ஈசனின் திருநாமமும் தொண்டர்கள் நயினார் என்றே விளங்கி வருகிறது என்று சொல்லிச் சூதமா முனிவர், நெடுமாறன் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
111. நின்ற சீர் நெடுமாற நாயனார் சருக்கம்.
சமணத்தை முறியடித்து சைவத்தை விளங்க வைத்த நின்ற சீர் நெடுமாற மன்னனின் ஆட்சியைப் பாராட்டி, இந்திரன் அவனுக்கு ஒரு மணியாரம் தந்தான். இத்தகைய மன்னனின் கனவில் சொக்கநாதப் பெருமான் தோன்றி, மன்னா.! நெல்லையம்பதி சென்று, வேணுவன நாதரையும், வடிவுடை நாயகியையும் வணங்கி வா என்று சொன்னார். இறைவனின் ஆணைப்படி மன்னன் நெல்லை வந்து, சிந்துபூந்துறையிலும், பொற்றாமரைக் குளத்திலும் நீராடி, வேணுவனநாதரையும், அம்மை வடிவுடைநாயகியையும் வணங்கி வழிபாடு செய்தான். என்றைக்கும் இல்லாத ஒரு மனநிறைவும், நிம்மதியும் அன்று அவனுக்கு கிடைத்தது. ஒரு மாளிகையை உருவாக்கி, இங்கேயே தங்கியிருந்து, தினமும் அம்மையையும் அப்பனையும் வணங்கி வந்தான்.
ஒருநாள் மன்னனும் அவன் மகனும் நீராட தாமிரபரணிக்கு போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஒரு அந்தணன் சிவிகையில் சென்று கொண்டிருந்தான். இவர்கள் இருவரையும் அந்த அந்தணன் கண்டவுடன் சிவிகையை மூடிக் கொண்டான். மன்னன் தன மகனிடம், சிவிகையில் போவது யார் என்று கேட்க, ஒரு பெண் போகிறாள் என்று மகன் சொன்னான். அந்தச் சிவிகையில் ஓர் அந்தணன் சென்று கொண்டிருந்தான். அதை அறியாமல் மன்னன் மகன், ஒரு பெண் போகிறாள் என்று சொன்னதால், அந்த அந்தணன் பெண் ஆகிவிட்டான். சிறுவன் வாக்கு தெய்வத்தின் அருள்வாக்கு ஆகிவிட்டது.
இதையறிந்த மன்னன் நெல்லையப்பரிடம் முறையிட்டான். மன்னா.! இது விதிப்பயனால் நடைபெற்றது. வருந்தாதே! அந்த அந்தணனுக்கு ஓர் ஆண் மகவு அருளுவோம் என்று நெல்லையப்பர் சொன்னார். மனம் திருப்தி அடைந்த மன்னன், அந்த அந்தணனை தேடித் சென்று, தனது மகனால் பெண்ணாக மாறிய அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தான். நின்ற சீர் நெடுமாற மன்னன், நின்ற சீர் நெடுமாற நாயனார் ஆனார் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.
112. கல் இடபம் புல் உண்ட சருக்கம்:
நைமிசாரணிய முனிவர்களே.! திருநெல்வேலி இறைவனின் திருவிளையாடல் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்லிச் சொன்னார். நல்லதைக் கனவிலும் நினையாதவன்! பொல்லதைப் பொழுதெல்லாம் செய்பவன்! சிவனை வணங்காதவன்! சிவனடியார்களை மதியாதவன்! இத்தன்மை கொண்ட ஒரு மூடத்தனம் உடைய முரடன், கெவுடன் என்ற பெயரைக் கொண்டவன், வடதிசையில் இருந்து தென்திசைக்கு வந்தான். வரும் வழியில் கொலை, கொள்ளை, அடியாரை அவமதித்தல், தெய்வ நிந்தனை ஆகிய பாவங்களை எல்லாம் செய்து கொண்டே வந்தான்.
அந்தப்பாவி தனது படையுடன், நெல்லையில் எல்லைக்குள் நுழைந்தான். எல்லையின் வளைவில் இருந்த சில பதுமைகளும், அந்தப் பாவியைக் கண்டு நடுங்கின. பறவைகள் பறந்து மறைந்தன. விலங்குகள் ஓடி ஒளிந்தன. அடியவருக்கு, அன்பர்களும் கோவிலின் முன்னே வந்து கூடினர். அந்தப் பாவியும் அங்கே வந்து விட்டான். அவனையும் அவனது படையையும் கண்டு அஞ்சி நடுங்கினர். ஆனாலும் நெல்லையப்பர் துணை என்று நினைத்து நின்றனர், அப்போது அவன், இங்கே தெய்வம் இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு அடியார்கள் ஆம் இறைவன் இருக்கிறார் என்று கூறினார்கள் அடியார்கள். அப்படியானால் நான் சொல்வதெல்லாம் நடக்குமா என்று கேட்டான் அவன். நடக்கும் எல்லாம் அவர் செயல் என்று கூறினார்கள் அடியார்கள்.
உடனே அவன் அங்கிருந்த ஒரு காளை சிற்பத்தைக் காட்டி, இந்தக் காளை புல் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும் என்றான். அடியார்கள் பசும்புல்லும், தண்ணீரும் கொண்டு வந்து வைத்தனர். அந்தக் காளை சிற்பம் புல்லை தின்று தண்ணீரை குடித்தது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. இறைவன் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை. வாருங்கள் உள்ளே போகலாம் என்று சொல்லித் தனது படைகளுடன் கோவிலின் உள்ளே புகுந்தான். அன்பர்களும், அடியார்களும் அவனுடன் உள்ளே சென்றனர். பிரகாரம் வழியாகச் சென்றான், அடியார்களும் அவன்பின் சென்றனர். அப்போது தல விருட்சமான மூங்கிலைக் கண்ட அவன், இந்த மூங்கிலில் தாமரை முளைக்குமா என்று கேட்டான். அடியார்கள் முளைக்கும் என்றனர். அடுத்த கணமே அந்த மூங்கிலில் தாமரை முளைத்தது. அப்போதும் அவன் இறைவன் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.
அடுத்து வரும்போது அங்கே நின்ற கொன்றை மரத்தைக் கண்டு, இந்தக் கொன்றை மரம் வில்வ இலை கொடுக்குமா என்று கேட்டான். கொடுக்கும் என்றனர் அடியார்கள் அக்கணமே அந்தக் கொன்றை மரத்தில் வில்வ இலைகள் தோன்றின. அடுத்து அவன் கேட்டான். அங்கே நின்ற வன்னி மரத்தைக் கண்டு, இந்த வன்னி மரத்தில் மாங்காய் வருமா? என்று கேட்டான் அடியார்கள் வரும் என்றனர். சொன்ன வாய்மூடும் முன்பே, வன்னி மரத்தில் மாங்காய்கள் தோன்றின. இப்போது தான் அவனுக்கு புத்தி வந்தது. சுவாமிகளே என்னை மன்னிக்க வேண்டும்.! மற்ற தலங்களை போல நினைத்து, மடத்தனமாக நடந்து கொண்டேன் என்று கூறி அடியார்களின் கால்களில் வீழ்ந்தான்.
கெவுடா.! எழுந்திரு.! எங்கள் கால்களில் விழாதே! எல்லாம் அவர் செயல்! அவர் திருவடியில் விழுந்து வணங்கு என்று கோவிலின் உள்ளே கையை நீட்டினர் அடியார்கள். சுவாமிகளே.! தாங்கள் சொன்னது போல் எல்லாம் அவர் செயல் தான். ஆனால் இது மட்டும் என் செயல் என்று சொல்லி மீண்டும் அடியார்களின் காலில் விழுந்து வணங்கி எழுந்து, கோவிலின் உள்ளே சென்று, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி கொண்டு வடபுலம் சென்றான் என்று சூதமா முனிவர் சொல்லி, அடுத்து ஆண்டவனின் தாண்டவம் பற்றிச் சொல்ல தொடங்கினார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 33