திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-31ல்.,
106. பாடகர் மகனை பாதுகாத்த சருக்கம்.
107. அறியாமல் செய்த பிழை பாவம் அல்ல என்ற சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
106. பாடகர் மகனை பாதுகாத்த சருக்கம்:
திருநெல்வேலியில் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நல்லவர். இசையில் வல்லவர். பன்னிரு திருமுறைகளை பண்ணோடு பாடுவார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெண்ணாசை உள்ளவன். காசு, பணம் கொடுத்துக் கணிகை வீடே கதி என்று கிடப்பான். ஒருநாள் கணிகைக்குக் கொடுக்க காசு இல்லை என்பதால், ஒரு நகை வியாபாரி வீட்டில் நகை பெட்டியை திருடிவிட்டான். நகைப் பெட்டியைக் கொண்டு போய் கணிகையிடம் கொடுத்து, அங்கேயே தங்கி விட்டான். நகைப்பெட்டியை பறிகொடுத்த வியாபாரி மன்னனிடம் சென்று முறையிட்டான். மன்னன் வியாபாரிக்கு ஆறுதல் கூறி, விரைவில் திருடனைக் கண்டுபிடித்து நகைப் பெட்டியை மீட்டுத் தருவோம் என்று சொல்லி அனுப்பினான்.
நாட்கள் சென்றன. கணிகை அந்த நகை பெட்டியில் இருந்து ஒரு நகையை எடுத்துக் கொண்டு விற்பதற்காக வந்தாள். நகைப் பெட்டியை திருடு கொடுத்த நகை வியாபாரியிடம் அந்த நகையை விற்க வந்தாள். அந்த நகையை வாங்கிப் பார்த்த வியாபாரி அது தன்னுடைய நகை தான் என்பதைத் தெரிந்து கொண்டான். கணிகையிடம் அந்த நகையை பற்றி விசாரித்தான். அவள் தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் மிகவும் உயர்ந்த குணம் உடையவள். இந்தச் சூழ்நிலையிலும் பொய்யே பேசாதவள். ஆகையால் வியாபாரியிடம் அந்த நகை வந்த விவரத்தை தெளிவாக சொல்லிவிட்டாள். இதனை வியாபாரி மன்னனிடம் சென்று தெரிவிக்க, மன்னன் கணிகையையும், பாடகர் மகனையும் விசாரித்தான்.
அவன் பெண் பித்து கொண்ட உன்மத்தனாய் இருந்தாலும் உண்மையைச் சொல்லி விட்டான். உடனே நகைப் பெட்டியையும் மன்னனிடம் ஒப்படைத்தான். மன்னன் பெட்டியை வியாபாரியிடம் கொடுத்து, "உன் நகைகள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா இன்று பார்த்துச் சொல் என்றான். நகைப் பெட்டியை வாங்கி பார்த்த வியாபாரி, இவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது போன்று ஏதாவது ஒரு நகையை பெற வேண்டும் என்று மனதிற்குள் திட்டம் போட்டு, மன்னா.! ஒரு வளையலைக் காணவில்லை என்று பரபரப்பாகச் சொன்னான். மன்னன் பாடகரின் மகனை விசாரித்தான். அவன், மன்னா.! இந்த பெட்டியில் இருந்த நகை இவ்வளவு தான். அதை அப்படியே கொடுத்து விட்டேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது என்று சொன்னான்.
பாடகரின் மகன் சொன்ன முறையை வைத்தும் , அவன் குரலில் இருந்த தெளிவை வைத்தும், அவன் உண்மையைத்தான் சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட மன்னன், வியாபாரி பொய் சொல்கிறானோ? என்பதை அறிவதற்காக; பாடகர் மகன் சொன்னதை நம்பாதவன் போல பாவனை செய்து, அவனைக் காவலில் வைக்கச் சொல்லி, எல்லோரையும் அனுப்பிவிட்டு, இரகசியமாக வியாபாரியைக் கண்காணிக்குமாறு இரண்டு ஏவலர்களை ஏற்பாடு செய்தான். தனது மகனைக் காவலில் வைத்து விட்டதை அறிந்த பாடகன், நாடகம் ஆடும் நாயகனிடம் ஓடி வந்தார். நெல்லையப்பரின் திருவடிகளில் வீழ்ந்து தேம்பித் தேம்பி அழுதார். காவலில் இருக்கும் தன் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினார். அப்போது அவர் மடியில் ஒரு வளையல் ஒன்று வந்து விழுந்தது. பாடகர் அந்த வளையலை எடுத்துக் கொண்டு போய், நகை வியாபாரியிடம் கொடுத்து, அவர் மூலமாகவே தம் மகனை மீட்டு வந்தார்.
வீட்டுக்கு வந்த வியாபாரி, பாடகர் தந்த வளையலை எடுத்துக் பார்த்தான். அற்புதமான வேலைப்பாடு அமைந்த வளையல். இப்படி ஒரு வளையலை இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை. ஆஹா.! அருமையான வளையல்.! நல்ல விலைக்கு போகும். நம்ம சாமர்த்தியம் சாமர்த்தியம். அரசன் முதல் அனைவரையும் ஏமாற்றி வாங்கி இருக்கிறோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு அந்த வளையலை பெட்டியில் வைத்து பூட்டி தனது பக்கத்திலேயே வைத்துக் கொண்டு படுத்து விட்டான். அவனுக்கு உறக்கமே வரவில்லை. விடிய விடிய அந்த வளையலை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்.
ஒருவாறு விடிந்தது. ஆவலோடு பெட்டியை திறந்து பார்த்தான். உள்ளே ஆபரணங்கள் இல்லாததை கண்டு அலறினான். அத்தனையும் அரவங்களாக இருந்தன. அப்போது தான் அவன் தனது தவறை உணர்ந்தான். நகைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு மன்னனிடம் ஓடினான். மன்னா.! என்னை மன்னிக்க வேண்டும். நான் மாபெரும் தவறு செய்து விட்டேன் என்று சொல்லி மன்னனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். எழுந்திரு.! எல்லாம் எனக்கு தெரியும். இது வேணுவனநாதரின் விளையாட்டு. நீ உடனே கோவிலுக்கு சென்று அம்மையையும், அப்பனையையும் வணங்கி மன்னிப்பு கேள்.! அரவங்கள் ஆபரணங்கள் ஆகும். உனக்குரிய நகைகளை எடுத்துக் கொண்டு, பாடகரிடம் வாங்கிய நகையை பாடகரிடமே கொடுத்து விடு என்றான் மன்னன்.
மன்னன் சொன்னபடியே வியாபாரி கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். பின் பெட்டியை திறந்து பார்த்தான். உள்ளே அரவங்கள் அனைத்தும் மீண்டும் நகைகளாக மாறி இருந்தன. அதில் இருந்து தனக்குரிய நகைகளை எடுத்துக் கொண்டு பாடகரிடம் வாங்கிய வளையலை அவரிடமே கொடுத்தான். வியாபாரி கொடுத்த வளையலை வாங்கிய பாடகர், இறைவா.! உன் கருணை ஒன்றே போதும், நீ என் வாழ்க்கைக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கும் போது, இந்த பொற்காப்பு எதற்கு? என்று சொல்லி, அந்த வளையலை இறைவனின் திருவடியிலேயே வைத்து விட்டுத் திரும்பி விட்டார் பாடகர். அன்றில் இருந்து பாடகர் மகன் மனம் திருந்தி தன் தந்தையுடன் சேர்ந்து திருமுறைப் பாடல்களை பாடி வந்தான் என்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொல்லத் தொடங்கினார்.
107. அறியாமல் செய்த பிழை பாவம் அல்ல என்ற சருக்கம்:
வேதியருக்கு உரிய ஆறுவகைத் தொழிலையும் செய்யாத ஒரு வேதியன் இருந்தான். அவன் பெண்ணாசை பிடித்தவன். ஆனாலும் மது, மாமிசம் இவற்றைத் தொடமாட்டான். வழக்கம் போல ஒரு நாள் ஒரு கணிகையின் வீட்டுக்கு சென்றான். அங்கேயே படுத்து உறங்கி விட்டான். இரவில் அவனுக்கு தாகம் எடுத்தது. அவளிடம் தண்ணீர் கேட்டான். அவள் மது மயக்கத்திலும், தூக்கக் கலக்கத்திலும் இருந்ததால் இரவில் தான் குடித்துவிட்டு மீதி வைத்திருந்த மதுப்புட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவனும் அதனை வாங்கித் தண்ணீர் என்று நினைத்துக் குடித்து விட்டான். குடித்த பின்பு தான் தெரிந்தது, அது தண்ணீர் அல்ல மது என்று, பதறி எழுந்தான். அழுது புலம்பினான். அவளை ஏசினான்.
பாவி.! தண்ணீர் கேட்டதற்கு மதுவைக் கொடுத்து விட்டாயே.! நானும் குடித்து விட்டேனே, என் குலத்துக்கு ஆகாத காரியத்தைச் செய்து விட்டேனே.! பெரும் பாவம் புரிந்து விட்டேனே.! என்று பலவாறு புலம்பினான். பொழுது புலர்ந்தும் அவன் புலம்பல் தீரவில்லை. சில பெரியோர்களைக் கண்டு, இரவில் நடந்ததை சொல்லி, இந்தப் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கேட்டான். அந்தப் பெரியவர்கள், நெய்யை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவனும் நெய்யை காய்ச்சி குடிக்க முயன்றான். இதையறிந்த அவன் தந்தை ஓடிவந்து தடுத்து விட்டார். இப்போது தடுத்து விட்டோம். எப்போதும் இவனைக் கவனித்துக் கொண்டே இருக்க முடியுமா? முடியாது. சற்றுப் பொறுத்தோ அல்லது நமக்குத் தெரியாமலோ இந்தச் செயலை இவன் செய்து விட்டால் என்ன செய்வது? இறந்து போவான். நம் அன்பு மகன் இறந்த பின்னர், நாம் உயிர் வாழ கூடாது. ஆகையால் அவனுக்கு முன்பே நாம் இறந்து விடுவோம் என்று முடிவு செய்தார்.
இவ்வாறு முடிவு செய்த அவர் தமது சொத்துக்களை எல்லாம் நெல்லையப்பர் பெயரில் எழுதி வைத்து விட்டு தனது மனைவியையும், மருமகளையும் அழைத்து வந்து மூவரும் தீயில் பாய்ந்து மாண்டு விடுவோம் என்று முடிவெடுத்து தீ வளர்த்தார். அப்போது அங்கே சாண்டில்ய முனிவர் வந்தார். அவர் உங்கள் பிள்ளை சாக மாட்டான், நீங்களும் சாக வேண்டாம் என்று சொன்னார். இதைக் கேட்ட அவன் தந்தை எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டார். முனிவர் பெருமானே.! எப்படிச் சொல்கிறீர்கள்? உண்மையிலேயே என் மகன் சாக மாட்டானா? அல்லது எங்கள் சாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறீர்களா என்று கேட்டார். பெரியவரே.! உண்மையைத்தான் சொல்கிறேன். உம்முடைய மகன் சாக மாட்டான். சாக வேண்டிய அவசியமும் இல்லை. மனம் அறிந்து செய்கின்ற தவறுதான் பாவம் ஆகும்.
மனம் அறியாமல் செய்கின்ற எந்தத் தவறும் பாவம் ஆகாது. உம்முடைய மகன் மனம் அறிந்தோ அல்லது மனம் விரும்பியோ மதுவை அருந்தவில்லை. என்ன என்று தெரியாமலே அருந்தி இருக்கிறான். ஆகையால் அது பாவம் அல்ல. உம்முடைய மகன் நிச்சயமாக சாக வேண்டாம் என்று சொன்னார் சாண்டில்யர். முனிவர் சொன்னதை அவர் நம்பிய தாகத் தெரியவில்லை. உடனே முனிவர் சொன்னார். பெரியவரே.! நான் சொல்வதில் உமக்கு நம்பிக்கை இல்லை என்றால் அகத்திய முனிவரைக் கேளும் என்றார் சாண்டில்யர். அகத்திய முனிவரை நான் எங்கே போய் பார்ப்பது என்றார் அவர். நீர் எங்கும் போய் பார்க்க வேண்டாம். இப்போது அவரே இங்கு வருவார் என்று சொல்லிய சாண்டில்ய முனிவர் அகத்திய முனிவரைத் தம் மனதிலே நினைத்தார். அடுத்த கணமே அகத்திய முனிவர் அங்கே தோன்றினார்.
இருவரும் அவரை வணங்கினர். பின்பு அகத்திய முனிவரே சொன்னார்.! பெரியவரே சாண்டில்ய முனிவர் சொன்னது சத்திய வாக்கு. அது தவறாது. உம்முடைய மகன் சாக வேண்டியதில்லை என்று கூறிவிட்டு அகத்திய முனிவர் மறைந்தார். பின் சாண்டில்ய முனிவரும் சென்று விடுகிறார். அவன் தந்தை பெரு மகிழ்ச்சி கொண்டு, தம் மனைவியையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு மகனிடம் சென்று, மகனையும் உடன் அழைத்துச் சென்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார் என்று கூறிச் சூதமா முனிவர் எடுத்துக் கருவூர் சித்தர் பற்றிச் சொல்ல தொடங்கினார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 32