திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்.,
113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம்.
114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய சருக்கம்.
115. ஊர்த்துவ தாண்டவம் ஆடிய சருக்கம்.
116. அம்மைக்கு ஆனந்த அழகு நடனம் காட்டிய சருக்கம்.
117. மானூர் சபையில் ஆச்சரிய நடனம் ஆடிய சருக்கம்.
118. தாமிர சபையை கண்டவனும், கண்டவனைக் கண்டவனும் கதியடைந்த சருக்கம்.
119. தாமிரசபை நடனம் கண்டவனைக் கண்ட கயவனும் கதியடைந்த சருக்கம்.
120. திருநெல்வேலித் தலபுராணம் படித்தவரைக் கண்ட பாவியும் கதியடைந்த சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம்:
இறைவா.! தங்களின் திருநடனம் கண்டு வெகு காலம் ஆயிற்று. ஆகவே இன்று தங்களின் திருநடனத்தைக் கண்டு களிக்க விரும்புகிறேன். அருள்கூர்ந்து ஆடியருள வேண்டும் என்று அம்மை வேண்டினாள். இறைவன் சம்மதித்தார். உடனே நந்தி தேவரை அழைத்துத் தாமிர சபையை அலங்கரிக்க சொன்னார். நந்தி தேவர் விஸ்வகர்மாவை அழைத்து தாமிரசபையை அழகுபடுத்தச் சொன்னார். விஸ்வகர்மா உடனே வந்து அழகுபடுத்தினார். நந்திதேவர் மத்தளம் வாசிக்க, கலைவாணி வீணை மீட்ட திருமால் புல்லாங்குழல் இசைக்க, பூதகணங்கள் தாளம் போட என்று அனைவரும் வந்து தாமிரசபையில் குழுமி விட்டனர்.
அம்மையும், அமரர்களும் பார்வையாளர்களாக வந்து அமர்ந்தனர். இறைவன் தாமிர சபையில் தோன்றினார். அந்தர துந்துபி மங்கள இசை முழங்கித் துவக்கி வைக்க, மற்ற வாத்தியங்களும் இணைந்து இசைக்க, ஆண்டவன் ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்மையும், அமரர்களும் கண்குளிரக் கண்டு களித்தனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் அகோர தாண்டவம் பற்றிச் சொன்னார்.
114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய சருக்கம்:
தேவர்கள் எல்லோரும் இறைவனைக் கண்டு வணங்கி, இறைவா அம்மைக்காக ஆனந்த தாண்டவம் புரிந்தீர்கள். இன்று எங்களுக்காக ஒருமுறை அகோர தாண்டவம் ஆடி அருள வேண்டும் என்று வேண்டினர். இந்த வேண்டுதலைக் கேட்ட இறைவன், விழிகள் சிவக்க அகோர வடிவம் கொண்டு நின்றார். அந்த வடிவத்திலேயே திருநடனம் புரிய தொடங்கினார். அவ்வாடலைக் கண்ட அமரர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இறைவா! இந்த அகோரா வடிவ தாண்டவத்தை, இப்போதுள்ள எங்கள் கண்களால் காண இயலாது. எங்களுக்கு வேறு கண்கள் கொடுங்கள் என்று வேண்டினர்.
இறைவன் அவர்களின் வேண்டுதலை ஏற்று, அவர்களுக்கு ஞானக் கண் வழங்கி ஆடல் புரிந்தார். இந்த அகோர தாண்டவம், தாமிர சபையில் மட்டும் அன்றி, ராஜ சபை, சுந்தர கல்யாண சபை, பரப்பிரம்ம சபை, கொலுச்சபை, சன்னதிச் சபை, மானூர்ச் சபை ஆகிய சபைகளிலும் நடந்தது. அனைவரும் கண்டுகளித்தனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
115. ஊர்த்துவ தாண்டவம் ஆடிய சருக்கம்:
சிவபெருமானும், பார்வதியும் கயிலையில் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருந்தனர். அப்போது சிவபெருமான் பார்வதியிடம் கேட்டார். பார்வதி! உலகில் ஆண்கள் உயர்ந்தவர்களா? பெண்கள் உயர்ந்தவர்களா? என்று கேட்டார். என்ன சுவாமி! ஒன்றும் தெரியாதவர் போல் கேட்கிறீர்கள்? மண்ணுலகில் மட்டும் அல்ல! விண்ணுலகிலும் பெண்கள் தானே உயர்ந்தவர்கள்! சிறந்தவர்கள்! என்று சொன்னாள் அம்மை பார்வதி.
இல்லை! மண்ணிலும், விண்ணிலும் மட்டும் இல்லை. ஈரேழு புவனங்களிலும் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என்று சிவபெருமான் சொன்னார். சுவாமி! உயர்ந்தவர்களுக்குத் தானே சிறப்பும், முதன்மையும் கிடைக்கும்? இது தானே உலக வழக்கம் என்று கேட்டாள் அம்மை. ஆமாம் என்றார் சிவபெருமான். நீங்கள் ஒப்புக் கொண்டபடி பார்த்தால், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தான் உயர்ந்தவர்கள். கல்விக்குத் தலைவி யார்? நீருக்குத் தலைவி யார்? நிலத்துக்குத் தலைவி யார்? இவர்கள் எல்லோரும் பெண்கள் தானே? அப்படியானால் பெண்கள் தானே உயர்ந்தவர்கள் என்றாள் பார்வதி.
பார்வதி நீ சொல்வது ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இருந்தாலும், ஆண்கள் செய்கின்ற செயலை எல்லாம் பெண்களால் செய்ய முடியாது என்றார் சிவபெருமான். அப்படித்தான் சுவாமி பெண்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் ஆண்களால் செய்ய முடியாது என்றாள் பார்வதி. செய்யமுடியும் என்று கூறினார் சிவபெருமான். இதைக்கேட்ட பார்வதி, சற்றுக் கோபத்துடன், என்னோடு உம்மால் நடனம் ஆட முடியுமா என்று கேட்கிறாள். பார்வதி! ஆட்டத்தில் சிறந்தவர்கள் ஆண்கள் தான். அதனால் தான் அவர்களை ஆடவர் என்றும் சொல்வதுண்டு. இன்னும் ஒன்றை சிந்தித்து பார். நடனத்துக்கு அரசன் நான் தான். அதனால் தான் நடராஜன் என்ற பெயரும் எனக்கு ஏற்பட்டது என்று சொன்னார் சிவபெருமான்.
ஆனால் அம்மை பார்வதியோ இறைவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள வில்லை. என்னோடு உம்மால் ஆட முடியுமா? முடியாதா? என்று கேட்டான். உன் முடிவு அது என்றால் நானும் தயார் என்றார் இறைவன். அம்மையும், அப்பனும் தாமிரசபைக்கு வந்து ஆடினர். வெகு நேரம் ஆடினர். இருவரும் சமமாகவே ஆடிக்கொண்டிருந்தனர். அம்மைக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்று திருவுளம் கொண்ட இறைவன், உடனே ஆட்டத்தின் முறையை மாற்றி, ஒரு காலை மட்டும் மேலே தூக்கி ஆடும் ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். இத்தாண்டவத்தை அம்மையால் ஆட முடியவில்லை. வெட்கித் தலை குனிந்தாள். ஊடல் கொண்டு கோவிலின் உள்ளே சென்று விடுகிறாள். இறைவனும் கோவிலுக்கு உள்ளே சென்று அம்மையின் ஊடல் தீர்த்து சாந்தப்படுத்தினார் ன்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
116. அம்மைக்கு ஆனந்த அழகு நடனம் காட்டிய சருக்கம்:
எம்பெருமான் ஊர்த்துவ தாண்டவத்தை ஆடியதால், அம்மை அவரிடம் ஊடல் கொண்டு சென்று விட்டாள். அம்மையின் ஊடலை போக்க நினைத்த சிவபெருமான் முன்பு அம்மை கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கயிலையில் இருக்கும் ஆனந்த சபையை நெல்லையில் கொண்டு வந்து வைத்து விட்டு, அம்மையைக் காண சென்றார். சிவபெருமான் அம்மையைக் கண்டு அன்பாக பேசி, ஆனந்த சபையை நெல்லைக்கு கொண்டு வந்ததையும் சொன்னார். அம்மை ஊடல் நீங்கி சிவபெருமானை வணங்கி, சுவாமி! தாங்கள் கொண்டு வந்த ஆனந்த சபையில் ஆனந்த அழகு நடனம் ஆடியருள வேண்டும் என்று வேண்ட, இறைவனும் அவ்வாறே ஆடி அருளினார் என்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
117. மானூர் சபையில் ஆச்சரிய நடனம் ஆடிய சருக்கம்:
முன் ஒருநாள் தாருகாவனத்து முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இறைவன் மானூரில் ஆச்சரிய நடனம் ஆடத் திருவுளம் கொண்டு, முனிவர்களை எல்லாம் மானூருக்கு வரச் சொல்லிவிட்டு தாமும் மானூர் சென்றார். அதற்கு முன்னே திருமால் அங்கு சென்று விஸ்வகர்மாவை வரவழைத்து சபையை அழகுபடுத்தி தயார் நிலையில் வைத்திருந்தார். இறைவன் வந்து ஆச்சரிய நடனம் ஆடினார். அந்தக் கண் கொள்ளாக் காட்சியை, அம்மை உமையவள் உட்பட தாருகாவனத்து முனிவர் அனைவரும், கண்டுகளித்தனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் தொடர்ப்து சொன்னார்.
118. தாமிர சபையை கண்டவனும், கண்டவனைக் கண்டவனும் கதியடைந்த சருக்கம்:
முனிவர்களே! தாமிரசபை என்று சொன்னவரும், சொன்னவரைக் கேட்டவரும், தாமிரசபையைக் கண்டவரும், கண்டவரைக் கண்டவரும் முக்தி அடைவர். இது தாமிர சபைக்கு உரிய பெருமை! இதை விரிவாக சொல்கிறேன் கேளுங்கள்.
மலையாள நாட்டில், அன்னதி என்ற நகரில் தெண்டி என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெற்றோரை மதிக்க மாட்டான். உற்றாரைச் சேர மாட்டான். கற்றோரை நாட மாட்டான். மற்றோரையே தேடி செல்வான். களவு, கொலை, கொள்ளை இவற்றுக்கு அஞ்சமாட்டான். பல பெண்களைக் கொன்றிருக்கிறான். அதனால் பிரமகத்தி தோஷம் பிடித்து எங்கெங்கோ அலைந்து திரிந்தான். ஒருநாள் திருநெல்வேலிக்கு வந்தான். சிறிது தெளிவு பெற்றான். சிந்துபூந்துறையிலும், பொற்றாமரையிலும் நீராடி திருமூலலிங்கத்தையும், வேணுவனநாதரையும், வடிவுடைநாயகியையும் வணங்கித் தாமிர சபையையும் கண் குளிர கண்டான்.
தாமிரசபையை கண்ட உடனே அவன் செய்த பாவங்கள் எல்லாம், ஒளியைக் கண்ட இருள் போல ஒழிந்தது. சித்தத்தை பிடித்திருந்த பித்தம் தெளிந்தது. மனத் தெளிவோடும், இனி எந்தப் பாவமும் செய்வதில்லை என்ற மன உறுதியோடும் கோவிலை விட்டு வெளியே வந்தான். உண்பதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பசியால் மயங்கிச் சாய்ந்து விட்டான். அப்போது நாகன் என்பவன் அவ்வழியாக வந்தான். அவன் ஒரு அயோக்கியன். கீழே கிடைக்கும் தெண்டியைக் கண்டவன் அவனிடம் காசு பணம் ஏதும் இருக்கிறதா என தேடிப்பார்த்தான். அவனிடம் ஒன்றும் இல்லை. இதனால் கோபம் கொண்ட நாகன் தெண்டியை காலால் உதைத்தான். அவன் பதறி எழுந்தான்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகி விட்டனர். ஆனால் இருவரும் அவரவர் வழியிலேயே வாழ்ந்து வந்தனர். தெண்டி தீய வழிக்குச் செல்லவில்லை. நாகன் நல்ல வழிக்கு வரவில்லை. ஆயினும் நண்பர்களாகவே விளங்கினர். நாகன் ஒருநாள் ஒரு கொலை செய்து விட்டான். அவனுக்கு தண்டனை வழங்கிய மன்னன், அவனுடன் சேர்ந்திருந்த தெண்டிக்கும் தண்டனை தந்தான். இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இருவர் உயிர்களும் நரகத்துக்குச் செல்லவில்லை. கயிலாயம் சென்றன. ஏனென்றால் தெண்டி தாமிர சபையைக் கண்டவன். நாகன் தாமிரசபையை கண்டவனைக் கண்டவன். ஆகையால் இருவருக்கும் கயிலை வாழ்வு கிடைத்தது என்று சூதமா முனிவர் சொல்லி மேலும் தொடர்ந்தார்.
119. தாமிரசபை நடனம் கண்டவனைக் கண்ட கயவனும் கதியடைந்த சருக்கம்:
மானூரில் வாழ்ந்து வந்த வேதநெறி தவறாத வேதியன் ஒருவன், நெல்லை வந்து சிந்துபூந்துறையிலும், பொற்றாமரைத் தீர்த்தத்திலும் நீராடி, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கித் தாமிர சபையில் ஆனந்த தாண்டவம் கண்டுகளித்து மானூருக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வேதியனுக்கு எதிரே ஒரு கயவன் வந்தான். அவன் வேதியனைக் கண்டு வழிவிட்டு ஓரமாகச் சென்றான். ஓரமாகச் சென்றவன் ஊர்போய்ச் சேர்ந்த சில நாட்களில் இறந்து போனான். அவன் உயிர் கயிலாயம் சென்றது. அந்தக் கயவனின் உயிர் எதனால் கயிலாயம் சென்றது என்றால், தாமிரசபையில் ஆனந்த தாண்டவம் கண்ட வேதியனை கண்ட புண்ணியத்தால் அவன் உயிர் கயிலாயம் சென்றது என்று கூறிச் சூதமா முனிவர் மேலும் சொல்கிறார்.
120. திருநெல்வேலித் தலபுராணம் படித்தவரைக் கண்ட பாவியும் கதியடைந்த சருக்கம்:
ஒழுக்கம் தவறிய ஒருவன் ஊரெல்லாம் அலைந்து திரிந்து ஒரு நாள் நெல்லையம்பதி வந்து சேர்ந்தான். ஒரு ஒழுக்க சீலரான வேதியரை சந்தித்தான். அவருடைய அறிவுரையைக் கேட்டு, சிந்துபூந்துறையிலும், பொற்றாமரைக் குளத்திலும் நீராடி, திருமூலலிங்க நாதரையும், அனவ்ரத நாதரையும், நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி வழிபாடு செய்தான். பின் தலபுராணம் கேட்டான். இவ்வாறு நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்குவதும், பின்பு அவரிடம் திருநெல்வேலித் தலபுராணம் கேட்பதுமாக இருந்து வந்தான். ஒருநாள் இறந்து போனான். சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயம் கொண்டு சென்றன. எமதூதர்கள் வந்து, இவன் ஒரு ஒழுக்கம் கேட்ட பாவி. இவனை ஏன் கயிலாயம் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர்.இவன் பாவியாக இருந்தாலும், திருநெல்வேலித் தலபுராணத்தை கேட்டதால் இவனது பாவம் நீங்கிப் புனிதன் ஆகிவிட்டான். அதனால் கயிலாயம் கொண்டு செல்கிறோம் என்று சிவகணங்கள் கூறி அவனைக் கயிலாயம் கொண்டு சென்றன. அவனும் இறைவனின் திருவடியில் இணைந்தான்.
நெல்லையப்பரின் புகழ் பாடும் இந்த திருநெல்வேலித் தலபுராணத்தை சொன்னவர், அதனைக் கேட்டவர், கேட்டுப் புத்தகமாக வரைந்தவர், அர்ச்சனை புரிந்தவர், அந்த அர்ச்சனையின் சத்தத்தைக் கேட்டு, ஆய்ந்து பார்த்து அதன் உட்பொருளை பிறருக்கு உரைத்தவர் ஆகிய அனைவரும் சீவன் முத்தராகுவர். கொடிய வினைகளும், கொண்டு வந்த வினைகளும் நீங்கப் பெற்று, வீடு பேறு அடைவர். புத்திரர், மித்திரர் குடும்பம் ஆகிய கூட்டம் தழைத்து ஓங்கும். மனத்தால் விரும்பி வேண்டிய பொருட்கள் எல்லாம் வேண்டிய வண்ணம் பெறுவர். இங்கு இயம்பிய இக்கதையை வேறு எங்கு இயம்பினாலும் சரி அங்கு நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் வருவார்கள். நல்லருளைத் தருவார்கள். மெய்ஞ்ஞானத்தையும் அருள்வார்கள். உலகம் எங்கும் திருநீற்றுச் சின்னம் பொலிய வேண்டும். வைதீகச் சாதிமுறையும், சைவநெறியும் விளங்க வேண்டும்.
மின்னிப் பொலியும் வான்மழை வையமெல்லாம் பொழிய வேண்டும். நீதியுடைய மன்னனும் மன்னனுடைய நீதியும் நிலைபெற்று வாழ வேண்டும்! என்று எண்ணற்ற அந்தணர்கள், பெண்கள், அருமையான தவம் புரிந்தனர். திருநெல்வேலித் தலபுராணத்தைப் படிப்போர், அதனைக் கேட்போர் அனைவரும் நெல்லையப்பர், காந்திமதி அம்மையின் அருளால் புகழும், பொருளும், பெயரும் பெற்று நீண்ட ஆயுளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று சூதமா முனிவர், நைமிசாரணிய முனிவர்களுக்குத் திருநெல்வேலித் தலபுராணத்தைச் சொல்லி நிறைவு செய்தார்.
நெல்லை மாநகரம் வாழ்க !
நிமலனார் என்றும் வாழ்க !
எல்லையில் சைவம் வாழ்க !
எழிலடியார்கள் வாழ்க !
வல்லையே எழுதும் இந்நூல்
வளம்பெற வாழ்க ! வாழ்க !
ஒல்லையே இதனைக் கற்கும்
உத்தமர் எல்லாம் வாழ்க !
திருநெல்வேலி தலபுராணம் முற்றும்.