திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-27ல்.,
88. மரகத வடிவம்மைச் சருக்கம்.
89. பிட்டாபுரத்தி அம்மை சருக்கம்.
90. நெல்லை கோவிந்தன் சருக்கம்.
91. அரி, அயன் அர்ச்சனைச் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
88. மரகத வடிவம்மைச் சருக்கம்:
முனிவர்களே.! அம்மை மரகத வடிவாள் தோன்றியதையும், துர்க்கனை அழுத்தத்தையும் சொல்கிறேன் கேளுங்கள். ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மையாகவும், ஐம்பெரும் தொழில்களுக்கு ஆதாரமாகவும், முத்திக்கு காரணமாகவும் விளங்குகின்ற, பராசக்தியின் திருவிளையாடல்கள் பல; அவற்றை எவராலும் முழுமையாகச் சொல்ல முடியாது., என்றால் என்னால் எவ்வாறு முழுமையாகச் சொல்ல முடியும். ஏதோ அறிந்த வரை சொல்கிறேன் கேளுங்கள். காசிப முனிவரின் மகனுக்குத் துர்க்கன் என்றொரு மகன் பிறந்தான். அவன் இமயமலையில் அக்கினியின் நடுவே அமர்ந்து தவம் செய்தான். இறைவனிடம் வரம் பெற்றான். எனக்கு மரணம் வரக் கூடாது.! ஒருவேளை மரணம் வந்தால், ஆதிபராசக்தியின் அம்சமாக தோன்றும் பெண்ணால் தான் வர வேண்டும் என்ற வரத்தை வாங்கினான். வாரத்தின் பலத்தால் அவன் கர பலமும் பெற்றான். எல்லா உலகங்களையும் வெற்றிக் கொண்டு, அனைவரையும் அடிமையாக்கி அட்டூழியம் செய்து வந்தான். இவனுக்குப் பயந்து தேவர்களும், முனிவர்களும் ஓடி ஒளிந்து கொண்டனர். உலகத்தில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் எவையும் நடக்கவில்லை.
துர்க்கனின் பார்வையில் படாமல், தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானைக் கண்டு முறையிட்டார்கள். தேவர்களே.! இன்னும் சிறிது காலத்தில், ஆதிபராசக்தி காளியாக வடிவம் கொண்டு அந்தத் துர்க்கனை அழைப்பாள். அதுவரை சற்று பொறுமையாக இருங்கள் என்று சொன்னார் இறைவன். தேவர்கள் சென்ற பின்னர் சிவபெருமான், பார்வதி தேவியை அழைத்தார். துர்க்கனை அழிப்பது பற்றி சொன்னார். ஆதிபராசக்தியான அம்மை பார்வதியின் திருமேனியில் இருந்து காளி வெளிப்பட்டாள். இறைவனைப் பணிந்து வணங்கினாள். அப்போது சிவபெருமான், எல்லாச் சக்தியும் இவளிடம் வந்து பொருந்தட்டும் என்று நினைத்தார். சென்னியில் சிவன் சக்தியும், திருத்தோள்களில் திருமால் சக்தியும், திருக்கரத்தில் சூரிய சக்தியும், உந்திக் கமலத்தில் சந்திர சக்தியும், பிராண வாயுவில் குபேர சக்தியும், செவிகளில் வாயு சக்தியும் வந்து பொருந்தின. காளி பேரொளிப் பிழம்பாக விளங்கினாள். அம்மை பார்வதி அவளை ஆரத்தழுவி நானே நீ.! நீயே நான்.! என்று சொல்லி அவளுக்கு அணிமணிகள் பூட்டிப் பலவகை ஆயுதங்களும் கொடுத்து "மரகத வடிவாள்" என்ற பெயரும், சிங்க வாகனமும் கொடுத்து துர்க்கனையும் அவனுடன் சேர்ந்த அவுணர்களையும் அழித்துத் தேவர்களின் துன்பத்தைத் துடைத்து வா.! என்று அம்மை பார்வதி சொன்னாள்.
காளி இருவரையும் வணங்கிப் புறப்பட்டாள். அப்போது இறைவன் காளியிடம் சூலாயுதம் ஒன்றைக் கொடுத்துப் பூதகணங்களையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அம்மை மரகத வடிவாள் பூதப் படையுடன் வந்து, துர்க்கனின் கோட்டைக்கு அருகே வீற்றிருந்தாள். அம்மை வந்ததை அறிந்த துர்க்கன், படையுடன் வந்து எதிர்த்தான். அம்மை அவன் மீது பூதப்படையை ஏவினாள். எதிர்த்து நிற்க முடியாததால், மாயமாய் மறைந்து மறைந்து, மாயப் போர் செய்தான். ஆம்.! அம்மையின் முன்னால் மாயப்போர் செய்தான். முடிவாக அவன் முடிவு ஆக, அம்மை சூலாயுதத்தை அவன் மீது ஏவினாள். அச்சூலாயுதம் அவன் கதையை முடித்தது. தேவர்கள் தங்கள் துன்பம் தொலைந்தது என்ற மகிழ்ச்சியில் பூமாரி பொழிந்தனர். தேவர்கள் துன்பத்தைத் தீர்த்து வைத்த மரகத வடிவம்மை இறைவனின் ஆணைப்படி பொற்றாமரைக் குளத்தின் மேல் புறம் வீற்றிருக்கிறாள் என்று சொல்லிச் சூதமா முனிவர், அடுத்து பிட்டாபுரத்தம்மை பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.
89. பிட்டாபுரத்தி அம்மை சருக்கம்:
திதியின் மகளான மோகினி என்பவள், சும்பன், நிசும்பன் என்னும் இரண்டு பிள்ளைகளை பெற்றான். அவர்கள் இருவரும் பிரம்மனை நோக்கித் தவம் செய்து, தேவராலும், முனிவராலும், ஆயுதத்தாலும், ஆண்களாலும் சாகாத வரத்தைப் பெற்றனர். வரத்தின் பலத்தால் ஆணவம் தலைக்கேறி ஆடக் கூடாத ஆட்டம் எல்லாம் ஆடினர். தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தினர். அவர்களுடைய தொல்லையைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானைக் கண்டு முறையிட்டார்கள். சிவபெருமான் பார்வதியிடம் சொன்னார். பார்வதி.! வேணுவனத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை அழைத்து, தேவர்களை துன்புறுத்தும் சும்ப, நிசும்ப அரக்கர்களை அழித்துத் தேவர்களின் துன்பத்தை போக்கு என்று சொன்னாள். சரி என்று சொல்லித் துர்க்கை, பார்வதியின் ஆசியுடன் விடை பெற்றுச் சென்றாள். திக்கெல்லாம் புகழும் இப்பதியின் வடக்கு திசையின் கண் அமைந்த பிட்டாபுரம் வந்து சேர்ந்தாள்.
துர்க்கை தன திருமேனியில் இருந்து ஒரு சக்தியை உருவாக்கி, அவளுக்குப் பிட்டாபுரத்தி என்னும் பெயர் சூட்டித் தனது படைகளுக்குத் தலைவியாக்கி, நீ சென்று சும்ப நிசும்பர்களை அழைத்து வா என்று சொன்னாள். அம்மை பிட்டாபுரத்தி, சும்ப நிசும்பர்களின் கோட்டைக்குச் சென்றாள். அவர்களை அம்மை துர்க்கை அழைப்பதாகச் சொன்னாள். அரக்கர்கள் இருவரும் அதைக் கேட்கவில்லை. விநாச காலே விபரீத புத்தி என்பதற்கேற்ப அவன் புத்தி விபரீதமாக வேலை செய்தது. அம்மை மீது மோகம் கொண்டு, அவளை இழுத்து வருமாறு தனது ஆட்களை ஏவினான். பாய்ந்து வந்த ஆட்களைத் தனது பார்வையால் எரித்து விட்டாள். அடுத்துச் சண்டன், முண்டன் என்னும் இருவரை ஏவினான் அரக்கன். அவர்கள் வந்து பிட்டாபுரத்தியுடன் சண்டையிட்டார்கள். பிட்டாபுரத்தி அவர்கள் இருவரையும் அழித்தாள். சண்டனையும், முண்டனையும் அழித்ததால் சாமுண்டி என்ற ஒரு பெயரை பெற்றாள். சண்டனையும், முண்டனையும் கொன்றதை கண்ட சும்ப, நிசும்பன் இருவரும் பிட்டாபுரத்தி மீது பாய்ந்து வந்தார்கள். பிட்டாபுரத்தி பயந்தவள் போல் பாவனை செய்து ஓடினாள். அவர்களும் விடாது விரட்டினார்கள். இப்படியே போக்கு காட்டி, அந்த பொல்லாதவர்களைத் துர்க்கா தேவியிடம் இழுத்து வந்து விட்டாள். துர்க்கை தேவியைக் கண்ட அந்தத் துஷ்டர்கள் அவளுடன் சண்டையிட்டார்கள். நாலாயுதம் கொண்டு சண்டையிட்ட அவர்களை, அம்மை சூலாயுதத்தால் குத்தி அழித்தாள். வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். துர்க்கை தேவி வேணுவனம் சென்றாள். அம்மை பிட்டாபுரத்தி, நெல்லை மாகாளி, செண்பகச் செல்வி, சாமுண்டி, வடக்கு வாயில் செல்வி என்னும் பெயர்களைத் தாங்கி, நகருக்கு வடக்கே கோவில் கொண்டிருக்கிறாள். இவளுக்கு பிட்டு சிறப்பாக படைக்கப்படுகிறது.
இந்த அம்மையை வணங்கிப் பூமாலை சூட்டினாலும், வாழ்த்திப் பாமாலை சூட்டினாலும் வேண்டும் வரங்களை எல்லாம் தருவாள். பிறவிப் பிணியை மட்டும் அன்றிப் பிள்ளைகளின் உடற்பிணியையும், மனப்பிணியையும் போக்கும் உத்தமியாகத் திகழ்கிறாள். மாற்று மதத்தவர்க்கும் அருள் வழங்கும் மாதாவாக விளங்குகிறாள் என்று கூறிய சூதமா முனிவர் அடுத்து நெல்லை கோவிந்தர் பற்றிக் கூறினார்.
90. நெல்லை கோவிந்தன் சருக்கம்:
முன் ஒரு கற்பத்தில் சிவபெருமான் உலகை எல்லாம் தன்னுள் ஒடுக்கித் திரும்பவும் உண்டாக்கக் கருதி, வேணுவனத்தில் உள்ள ஆதிலிங்கத்தினின்றும் திருமாலைத் தோற்றுவித்தார். தோன்றிய கோவிந்தன், தாயும் நீர் தாம்.! தந்தையும் நீர் தாம்.! என்று சிவபெருமானை வணங்கினார். சிந்துபூந்துறையில் நீராடித் திருநீறு, ருத்ராட்சம் எல்லாம் அணிந்து, சிவ மந்திரம் ஓதி, இறைவனுக்கும், இடபத்துக்கும் தெற்கே தனது சக்கரத்தால் ஒரு தீர்த்தம் உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு இறைவனை நீராட்டி ஆயிரம் தேவ வருடங்கள் பூஜை செய்து வந்தார். சிவபெருமான் உமாதேவியுடன் கோவிந்தனுக்கு காட்சி கொடுத்தார். கோவிந்தன் உள்ளம் மகிழ்ந்து, பலவாறு துதித்துப் போற்றிப் பல வரங்களை பெற்றுப் பிராமனையும் மகனையும் பெற்றார். சிவபெருமான் அருளியபடி, திருமால் "கோவிந்தன்" என்னும் பெயர் தாங்கி சிவபெருமானுக்கு வடபக்கம் கிடந்த கோலத்தில் காட்சித் தருகிறார். காசிபர் மரபில் வந்த சித்தரீகன் என்ற ஒருவன், சித்தம் சுத்தமாக வேண்டும் என்பதற்காகவும், மன அமைதி வேண்டும் என்பதற்காகவும், எல்லாத் தலங்களுக்கும் சென்று வந்தான். பயன் ஒன்றும் இல்லை. ஒருநாள் நாரதரைக் கண்டான். தனது எண்ணத்தை சொன்னான். நாரதர் அவனுக்கு ஒரு வழிகாட்டினார். சித்தரீகா.! நீ இருக்கும் இடத்தை விட்டு விட்டு, இல்லாத இடத்தைத் தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறாய். உன் குறை தீர்க்கும் கோவிந்தன் இருக்கும் இடமான நெல்லையம்பதிக்கு மட்டும் போகவில்லை போலும். நீ உடனே நெல்லையம்பதிக்குச் செல்.! சிந்துபூந்துறையிலும், பொற்றாமரைக் குளத்திலும் நீராடி வேணுவன நாதரையும் , வடிவுடைநாயகியையும் வணங்கி கோவிந்தனைக் கண்டு வணங்கி உன் குறையைக் கூறு. உன் சித்தம் சுத்தமாகும். மனம் அமைதி பெறும் என்று சொன்னார் நாரதர். அவர் சொன்னபடியே சித்தரீகன் நெல்லையம்பதி வந்து, சிந்துபூந்துறை, பொற்றாமரை ஆகிய தீர்த்தங்களில் நீராடி, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி, நெல்லை கோவிந்தரை கண்டு வணங்கித் தனது குறையைக் கூறினான். தனது பக்தனின் குறையைக் கேட்ட கோவிந்தன், சங்கு, சக்கரத்தோடு கருட வாகனத்தில் காட்சித் தந்தார். அவன் கேட்ட வரங்களைக் கொடுத்தார். வரங்களை பெற்ற சித்தரீகன், சித்தமும் சுத்தமாகி, மனமும் அமைதி பெற்று தன்னுடைய இருப்பிடம் சென்று வெகு காலம் வாழ்ந்து வைகுண்டம் சேர்ந்தான் என்று சூதமா முனிவர் சொன்னார். பின் அரியும், அயனும் அரனுக்கு அர்ச்சனை செய்ததை சொன்னார்.
91. அரி, அயன் அர்ச்சனைச் சருக்கம்:
முன்னர் ஓர் ஊழிக் காலத்தில், மூன்று உலகங்களையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அவ்வெள்ளத்தின் மேலே கயிலைமலை மட்டும் எழுந்து நின்றது. அம்மலையின் மேல் ஓர் ஆலிலையில் அச்சுதன் சாய்ந்திருந்தார். மீண்டும் உலகங்களையும், உயிர்களையும் படைக்க வேண்டும் என்று திருவுளம் கொண்டார். அப்போது அவருடைய உந்தியில் இருந்து ஒரு தாமரைத் தண்டு வெளிப்பட்டு, நூறு யோசனை தூரம் நீண்டது. அதிலிருந்து அன்ன வாகனத்துடனும் ஐந்து முகங்களுடனும் பிரம்மன் தோன்றினான். ( பிரம்மன் தோன்றும் போது ஐந்து முகங்களுடன் தான் தோன்றினான். பின்னர் சிவபெருமானால் நான்முகன் ஆனான். அது வேறு கதை) பிரம்மன் தோன்றியது திருமாலுக்குத் தெரியாது. திருமாலின் உந்தித் தாமரையில் தான் தோன்றினோம் என்பது பிரம்மனுக்குத் தெரியாது. உந்திக் கமலத்தில் உதித்த பிரம்மன் நேரே, வேணுவனத்திற்கு வந்து, திருமூலநாதரைப் பணிந்து வணங்கிப் படைக்கும் ஆற்றலையும், பல வரங்களையும் பெற்றுச் சென்றான். செல்லும் வழியில், பாற்கடலில் பரந்தாமன் பள்ளி கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனால் பொறுக்க இயலவில்லை. யார் இவன்? ஏன் இங்கே வந்து படுத்திருக்கிறான் என்று தம் மனதிற்குள் கேட்டுக்கொண்டே வந்து; நெடுமாலின் நெஞ்சிலே தட்டி எழுப்பினான். கண்விழித்து எழுந்த கரியமால், யார் நீ? என்னை ஏன் தட்டி எழுப்பினாய்? என்று கேட்டார்.
நான்தான் இந்த உலகின் முதல்வன். எட்டுத் திசைகளும்; ஈரேழு உலகங்களும் எல்லாப் பொருட்களும், என் வயிற்றில் ஒடுக்கம்.! இதில் உனக்குச் சந்தேகம் இருந்தால், என் வயிற்றுக்குள் சென்று பார்க்கிறாயா? என்று பிரம்மன் ஆணவத்துடன் கேட்டான். இதைக் கேட்ட திருமால் "சரி பாப்போம்" என்று சொல்லிப் பிரம்மனின் வயிற்றுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில் வெளியே வந்தார். வெளியே வந்த திருமாலைப் பார்த்துப் பிரம்மன் கேட்டான். என்ன? பார்த்தாயா? நான் சொன்னது உண்மை தானே. இது என்ன பிரமாதம்? என் வயிற்றுக்குள் இதைப் போன்று ஏழு மடங்கு இருக்கின்றன. பார்க்கிறாயா நீ? என்று பரந்தாமன் கேட்டார். அதையும் தான் பார்ப்போமே.! என்று சொல்லிப் பிரம்மன் திருமாலின் வயிற்றுக்குள் புகுந்தான். பிரம்மன் தனது வயிற்றுக்குள் புகுந்தவுடன் அவன் வெளியே வர முடியாத படி, துவாரகை மன்னன் தம் திருமேனியின் ஒன்பது துவாரங்களையும் அடைத்து விட்டார்.
பிரம்மனால் வெளியே வர முடியவில்லை. திணறித் திண்டாடித் திக்கு முக்காடி ஒரு வழியாகத் திருமாலின் குரல் வளை வழியே வெளியே வந்தான். இதனால் ஆத்திரம் கொண்ட பிரம்மன், நீ ஒரு சுத்த வீரனாக இருந்தால் என்னுடன் போருக்கு வா, நீயா? நானா? என்று பார்த்து விடுவோம் என்றான். திருமாலும் சம்மதித்துப் போருக்குத் தயார் ஆனார். இருவருக்கும் கடுமையான போர் நடந்தது. ஒருவர் கணையை ஒருவர் முறியடித்துக் கொண்டே இருந்தனர். இவ்வாறு வெகு நேரம் நடைபெற்றது. இறுதியாக இருவரும் ஒரே சமயத்தில் சிவ கணையை எடுத்தனர். இதுவரை இருவரின் போரையும் பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான், இருவரும் ஒரே நேரத்தில் சிவகணையை எடுத்ததும், அவர்கள் இருவருக்கும் நடுவில், விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரே வடிவமான மகாலிங்கமாகத் தோன்றினார். அந்தப் பேருருவைக் கண்ட இருவரும் திகைத்துத் தம்மையும் மறந்து வணங்கினர்.
அப்போது ஒரு உருவிலாத் திருவாக்கு ஒலித்தது. நீங்கள் இருவரும் மாண்டு போகாமல் இருப்பதற்காகத்தான் இந்த மகாலிங்கம் இங்கே தோன்றியது, நீங்கள் உடனே வேணுவனத்திற்கு சென்று வேணுவனநாதரையும், வடிவுடை நாயகியையும் வணங்குங்கள். உங்கள் அறியாமை மறைந்து அன்பு தோன்றும். பகை மறைந்து பாசம் தோன்றும் என்று உருவிலாத் திருவாக்கு கூறியது. அந்த திருவாக்கின்படி திருமாலும், பிரம்மனும் வேணுவனம் சென்று, வேணுவன நாதரையும் வடிவுடை நாயகியையும் வணங்கி, வழிபாடு செய்து பகைமை மறந்து, தத்தமது தொழிலைச் சரிவர செய்து வந்தனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து நாரத முனிவரின் தன்மை பற்றிச் சொன்னார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 28