திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-28ல்.,
92. நாரதர் வரம் பெற்ற சருக்கம்.
93. ஆனந்தனும் அரவங்களும் வரம் பெற்ற சருக்கம்.
94. அகத்தியர் ஆட்சிச் சருக்கம்.
95. வங்கிய குலசேகர பாண்டியன் சருக்கம்.
96. குலசேகர பாண்டியன் சருக்கம்.
97. உருத்திர கோடியர் சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
92. நாரதர் வரம் பெற்ற சருக்கம்:
முனிவர்களே.! நாரத முனிவர் நெல்லை நாதரை வணங்கி வழிபாடு பெற்ற நன்மையைச் சொல்கிறேன் கேளுங்கள். காரிய சித்தியும், பூரண ஆயுளும் பெறத் தவம் செய்ய நினைக்கிறேன். அதற்குப் பூமியில் பொருத்தமான தலத்தைச் சொல்ல வேண்டும் என்று நாரதர் தம் தந்தையான பிரம்மனிடம் கேட்டார். நாரதா உலகில் உள்ள தலங்களில் எல்லாம் உயர்ந்த தலம், உன்னதமான தலம், புகழ்மிக்க தலம், புண்ணியமான தலம், என்னை போன்ற கோடிப் பிரம்மன்களும், கோடி நாராயணன்களும் தவம் இயற்றி முக்தி பெற்ற தலம். அது திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலித் தலம் தான். அங்கு நீ சென்று, வேணுவன நாதரை நோக்கித் தவம் செய்தால் அவர் உனக்கு வேண்டிய வரங்களை எல்லாம் தருவார் என்று பிரம்மன் சொன்னான். அவர் சொன்னதை கேட்ட நாரத முனிவர், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்திருந்ததால், திருநெல்வேலிக்கு வந்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி, நெல்லையப்பரை நினைத்துத் தவம் இருந்தனர். காற்றை மட்டுமே உட்கொண்டு கடுமையான தவம் செய்தார்.
நாரதருக்கு இறைவன் காட்சி தந்து, என்ன வரம் வேண்டும் என கேட்டார். இறைவா.! நினைத்த இடத்திற்கு நினைத்தவுடன் சென்று வரவும், ஒருவர் மனதில் உள்ளதை அறிந்து கொள்ளும் வரமும் வேண்டும் என நாரதர் கேட்டார். இறைவனும் அப்படியே தந்தோம் என்று சொல்லிச் சென்றார் என்று சூதமா முனிவர் அரவங்கள் அரசனானது பற்றிச் சொல்கிறார்.
93. ஆனந்தனும் அரவங்களும் வரம் பெற்ற சருக்கம்:
முனிவர்களே.! ஆதிசேஷன் நித்தியப்பேறு பெற விரும்பி, கயிலாயம் சென்று, நமச்சிவாய மந்திரத்தை நாளெல்லாம் ஓதித் தவம் செய்தான். ஒருநாள் அவன் முன்னே இறைவன் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இறைவா.! இந்தப் பூமியை தாங்கும் சக்தியையும், குற்றம், குறைகள் இன்றி எல்லாக் கலைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றலையும், என் இனமான அரவங்கள் தங்களுக்கு ஆபரணங்களாக விளங்கும் பாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டான். இறைவனும் அவ்வாறே தந்தார். ஆதிசேஷன் கயிலையில் இருந்து புறப்பட்டு வந்தான். எதிரே சனகாதி முனிவர்கள் வருவதைக் கண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி கொண்டனர். முனிவர்களே.! ஊழிக் காலத்தில் எங்கே இருந்தீர்கள்? என்று ஆதிசேஷன் கேட்டான். பிரளய காலத்திலும் அழியாத பெருமைக்கு உரிய "பிரளய சித்து" என்னும் பெயர் கொண்ட திருநெல்வேலியில் தான் இருந்தோம் என்றனர் சனகாதியர்.
அதைக் கேட்ட ஆதிசேஷன், அப்படிப்பட்ட சிறந்த இடத்துக்கே செல்வோம் என்று எண்ணித் திருநெல்வேலி வந்து, நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் வணங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தான். நாகலோகத்து நாகங்கள் எல்லாம், அரனைக் காண்பதற்காக அணிவகுத்து கயிலையை நோக்கிச் சென்றன. இதைக் கண்ட சில இருடிகள், அரவங்களே.! இப்படி அணிவகுத்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டனர். சுவாமி எங்கள் ஆதிசேஷன்; நாங்கள் எல்லாம் சிவபெருமானுக்கு ஆபரணங்கள் ஆக வேண்டும் என்ற வரத்தை வாங்கி இருப்பதால், சிவபெருமானைக் காண கயிலாயத்திற்கு போகிறோம் என்ற அரவங்கள்.
அதைக் கேட்ட இருடிகள், அரவங்களே.! தட்சிண கயிலாயமாக நெல்லையம்பதி பக்கத்திலே இருக்க, அங்கே சிவபெருமானே வேணுவன நாதராக வீற்றிருக்க, உங்கள் ஆதிசேடனும் அங்கே அமர்ந்திருக்க, நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் வீணே அலைய வேண்டும்? வேண்டாம்.! இங்கே செல்லுங்கள் உங்கள் வண்ணம் நிறைவேறும் என்று இருடிகள் சொல்ல, அரவங்கள் எல்லாம் நெல்லையம்பதி வந்து, நெல்லையப்பரை வணங்கி அவருக்கு ஆபரணங்களாக விளங்கின என்று சொல்லிச் சூதமா முனிவர் அகத்தியர் அரசு செய்ததைப் பற்றி சொன்னார்.
94. அகத்தியர் ஆட்சிச் சருக்கம்:
இந்த உலகையெல்லாம் சிவபெருமான் ஆண்டு வந்தார். பின்பு முருகப்பெருமானிடம் ஆட்சியை ஒப்படைத்தார். முருகப்பெருமானும் பல்லாண்டு ஆண்டு விட்டுத் தம் மாணவரான அகத்திய முனிவரிடம் ஒப்படைத்தார். முருகா.! உன் அருளால் ஆட்சி செய்வேன். அவுணர்களால் தொல்லை ஏதும் வந்தால் அதை நீ தான் தடுக்க வேண்டும். ஆமாம் ஊருக்குத் தான் நான் மன்னன் போருக்குத் நீ தான் மன்னன் என்று வேண்டுகோள் வைத்துத் தான் அகத்திய முனிவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சி நல்லாட்சியாகவே நடந்தது. அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்தனர். அவருடைய ஆட்சியில் நீதி இருந்தது. நேர்மை இருந்தது. அன்பு இருந்தது. மனித நேயம் இருந்தது. உறுபசி இல்லை.! ஓவாப் பிணி இல்லை.! ஆனால் பழம்பகை மூண்டெழுந்தது. ஆம்.! சுப்பிரமணியக் கடவுளால் அழிக்கப்பட்ட, சூரபத்மனைத் சேர்ந்த அவுணர்கள் மீண்டும் பிறந்து, பழம் பகையை மனதில் வைத்துத் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தினர். அஞ்சி நடுங்கிய அவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று முறையிட்டனர். அகத்திய முனிவர் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று, ஆறுமுகப் பெருமானிடம் முறையிட்டார். ஆறுமுகப் பெருமான் வீரபாகுவை அழைத்து, நீ சென்று அவுணர்களை அழித்து விட்டு வா என்று கட்டளையிட்டார்.
உடனே வீரபாகு தன தம்பியாரான வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்தான், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன், வீரராட்சதன் ஆகிய எண்மரையும் தன்னுடன் அழைத்துச் சென்று அரை நாழிகை நேரத்தில் அந்த அவுணர்களை எல்லாம் அழித்து வந்தார். அகத்திய முனிவரும், தேவர்களும், முனிவர்களும் வீரபாகுவைப் பாராட்டி, முருகப்பெருமானை நன்றியுடன் வணங்கி விடைபெற்றனர் அவுணர்களின் அழிவுக்கு பின், அகத்திய முனிவரின் ஆட்சி எவ்வித இடையூறும் இன்றி நடைபெற்றது என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
95. வங்கிய குலசேகர பாண்டியன் சருக்கம்:
முன் ஒரு காலத்தில் ஆழிப்பேரலை ஏற்பட்டு, உலகை எல்லாம் கடல் வெள்ளம் சூழ்ந்து அழித்து விட்டது. இறைவன் அருளால் பிரம்மன் மீண்டும் உலகைப் படைத்தான். அதன் பிறகு வங்கிய குலசேகர பாண்டியன் என்னும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவன் தெய்வ பக்தி உள்ளவன் கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட கோவில்களை எல்லாம் புதுப்பிக்க வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டான். அவ்வாறு புதுப்பித்துக் கொண்டே வந்தவன், நெல்லையம்பதிக்கு வந்தான். இங்கு ஆழிப் பேரலை ஏற்பட்டதற்கான அடையாளமே இல்லை. எல்லா கோவில்களும் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. இக்காட்சியைக் கண்ட மன்னன் ஆச்சரியப்பட்டான். அழிப் பேரலையிலும் அழியாமல் இருக்கும் அற்புதத் தலம் நெல்லையப்பர் கோவில் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அகத்திய முனிவரைக் கண்டு கோவிலின் அருமையையும், ஆண்டவனின் பெருமையையும் கேட்டு அறிந்து கொண்டான். இதுவரை இத்தகைய ஒரு தலத்தையும் கோவிலையும் கண்டதும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லித் திருநெல்வேலியிலேயே தங்கி விட்டான். அங்கே தங்கி தினம்தோறும் காலையும் மாலையும் கோயிலுக்கு வந்து, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி வழிபாடு செய்து வந்தான். ஒருநாள் நெல்லையப்பர் அவனுடைய கனவில் தோன்றி கட்டளை இட்டார். அந்த கட்டளையின்படி, அந்த மன்னன் கோவிலுக்குத் திருப்பணி செய்தான். சிந்துபூந்துறை முதலிய துறைகளுக்குப் படிகள் அமைத்தான். இவ்வாறு நல்ல பல பணிகளை செய்து வந்தான்.
அக்காலத்தில் ஒரு நாள், இறைவன் இடப வாகனத்தில் மன்னனுக்கு காட்சி தந்தார். அவரை கண் குளிரக் கண்டு வணங்கி பல வரங்களையும் பெற்றான் வங்கிய குலசேகர பாண்டியன். பின்னர் இறைவன் ஆணைப்படி சில விஷ்ணு கோவில்களையும் அமைத்து திருமால் அருளையும் பெற்றான். பின்னர் பல்லாண்டுகள் வாழ்ந்து பரமன் திருவடியைச் சேர்ந்தான் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்துக் குலசேகர பாண்டியனைப் பற்றிச் சொன்னார்.
96. குலசேகர பாண்டியன் சருக்கம்:
பிற்காலத்தில் வங்கிய குலசேகர பாண்டியனின் மரபில் தோன்றிய குலசேகர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன் தனது அரசாட்சியை நல்ல முறையில் ஆண்டு வந்தான். பல திருக்கோவில்களுக்குத் திருப்பணி செய்தான். குடமுழுக்குத் திருவிழாக்களும் நடத்தினான். மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். அப்போது வடக்கே இருந்து ஒரு வீரன், குலசேகர பாண்டியநாடு போர் செய்ய வேண்டும் என்று தன்னுடைய ஆட்களோடு வந்தான். வேகவதி ஆற்றின் கரையோரம் வந்து தங்கி அங்கும் கொள்ளையடித்தான். அங்கிருந்த மக்கள் எல்லோரும் அஞ்சி, நடுங்கிக் கூட்டமாகத் திரண்டு வந்து குலசேகர பாண்டிய மன்னனிடம் முறையிட்டார்கள். ஏற்கனவே அந்தப் பாவியின் ஆற்றல் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பாண்டிய மன்னன், அவனை வெல்வதற்குப் படைபலம் மட்டும் போதாது, இறைபலமும் வேண்டும் என்று தீர்மானித்து முறையிட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நேரே நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று, இறைவா.! வந்திருக்கும் இப்பகையை வெல்ல என் பலம் மட்டும் போதாது. உன் அருளும் வேண்டும் என்று மனமுருக வேண்டினான்.
மன்னனின் வேண்டுதலைக் கேட்ட நெல்லையப்பர், மன்னன் மீது பரிவு கொண்டு, திருவுளம் இறங்கி, மன்னா.! நீ செல்வாய்.! அவனை வெல்வாய் என்று சொல்லி அனுப்பிவிட்டு, பிட்டாபுரத்தி, துர்க்கை, வீரபுத்திரன், சாத்தன் ஆகியோரை அழைத்து மன்னனுக்கு துணையாகப் போகச் சொன்னார். இறைவனின் ஆணைப்படி இவர்கள் நால்வரும் அங்கே சென்றனர். மன்னனும் தனது படையுடன் அங்கே சென்றான். இவர்களுக்கும் அந்தக் கொள்ளையனுக்கும் கடுமையான சண்டை நடந்தது. தென்திசையில் துர்க்கையும், வடக்கே பிட்டாபுரத்தியும், வீரபுத்திரன் மேல் திசையிலும், சாத்தன் கீழ் திசையிலும் நின்று போர் புரிந்தனர். சிறிது நேரத்தில் அதி வீரனையும் அவனையும் அழித்தனர். நெல்லையப்பர் அருளால் குலசேகர பாண்டியனுக்கு வரவிருந்த தொல்லை நீங்கியது. மீண்டும் அவன் நல்லாட்சி செய்து வந்தான். அதிவீரனுடன் நடந்த போரில், கருமை நிறப்பனை மரத்தைப் பிடிங்கி சாத்தன் தாக்கியதால் சாத்தனுக்கு கரும்பனை வீரன், கரும்பனை சாத்தன் என்ற பெயர்கள் ஏற்பட்டன என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் சொன்னார்.
97. உருத்திர கோடியர் சருக்கம்:
அவுணர்கள் செய்த அட்டூழியத்தால், அண்டங்கள் எல்லாம் நடுங்கின. அனைத்து உயிர்களும் கலங்கின. இதையறிந்த சிவபெருமான், தம் திருமேனியில் இருந்து, ஒரு கோடி உருத்திரர்களை தோன்றச் செய்தார். அவர்கள் அனைவரும் வடிவில் சிவனைப் போலவே இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து அட்டூழியம் செய்யும் அவுணர்களை அழித்து வருமாறு ஆணையிட்டார் சிவபெருமான். உருத்திர மூர்த்தியின் உத்தரவைக் கேட்டு உருத்திர கோடியர் ஒன்று போல் சென்றனர். உருத்திர கோடியரின் வருகையை அறிந்த அவுணர்கள் இருளாக மாறி அண்டமெல்லாம் பரவி நின்றனர். இதையறிந்த உருத்திர கோடியர், சூரியன்களாக மாறி ஒளியைப் பாய்ச்சினார்கள். இந்தப் பேரொளியில் அந்தக் காரிருள் மாய்ந்து போனது. ஆம் அவுணர்கள் யாவரும் அழிந்தனர். தங்களுக்கு இட்ட கடமையை நிறைவேற்றிக் கயிலாயம் சென்றனர் உருத்திர கோடியர்கள்.
முன் காலத்தில் அமுதம் கடைவதற்காக மந்திர மலையைப் பிடுங்கி வந்தனர். பிடுங்கிய பள்ளத்தில் இருந்து, கோடிக்கணக்கான தானவர் வெளிப்பட்டனர். அவர்கள் மிகுந்த பலமுடையவர்கள். வடதிசை அக்கினியை வாயால் ஊதி அனைத்து விடுவர். ஏழு கடல்களையும் ஒரே மூச்சில் குடித்து விடுவர். வானவரைக் கண்டால் பிடிக்காது. அடித்து விரட்டி விடுவர். தானவர் தோன்றியதை அறிந்த வானவர் அஞ்சி நடுங்கிக் கயிலாயம் சென்று கறைக்கண்டரிடம் சென்று முறையிட்டார்கள். உடனே இறைவன் உருத்திர கோடியரை அழைத்து, நீங்கள் இப்போதே சென்று, தானவரை அழித்து வாருங்கள் என்று சொன்னார். உருத்திர கோடியர் அக்கணமே சென்று, தானவரை அழித்து மறுகணமே திரும்பி வந்தனர். இறைவன் அவர்களை பாராட்டினார். அப்போது அவர்கள் இறைவனை வணங்கிக் கேட்டனர். இறைவா.! ஒருவர் என்னதான் தவறு செய்திருந்தாலும், உயிரைப் போக்குவது என்பது பாவம் தானே? முன்பு இலட்சக்கணக்கான அவுணர்களைக் கொன்றோம். இன்று கோடிக்கணக்கான தானவரைக் கொன்றோம். இவை எல்லாம் எங்களுக்கு பாவமாகத் தோன்றுகிறது. ஆகையால் இந்தப் பாவத்தை போக்க ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும் என்று வேண்டினார்கள்.
உருத்திர கோடியரே.! நீங்கள் நினைப்பது தவறு. அவர்கள் எப்பிறவியிலும் நல்லவர் அல்லர். மேலும் , தேவர்களுக்காகவும்., முனிவர்களுக்காகவும்., மறையோர்களுக்காகவும் செய்கின்ற இந்தச் செயலும் - உயிர் அழித்தல் உட்பட - பாவம் ஆகாது. அதைப் பாவம் என்று நினைப்பதே பாவம். இருந்தாலும் உங்கள் மனத் திருப்திக்காக ஒன்று சொல்கிறேன். தொல்லை நீக்கும் நெல்லை சென்று, வேணுவனத்தில் தவம் செய்யுங்கள். உங்கள் எண்ணம் மாறும். கவலையும் தீரும் என்று சொன்னார் இறைவன். இறைவன் சொன்னபடி, உருத்திர கோடியர் நெல்லை வந்து, சிந்துபூந்துறையிலும், பொற்றாமரை குளத்திலும் நீராடி, திருமூல லிங்கத்தையும், வடிவுடை நாயகியையும் வணங்கிப் பின் ஆளுக்கொரு லிங்கத்தை அமைத்து பூஜை செய்து வந்தனர். சிறிது காலத்தில் அவர்களுடைய எண்ணமும் மாறி, மனமும் நிம்மதி அடைந்தது. உருத்திர கோடியர் லிங்கம் அமைத்து பூஜை செய்ததால், இத்தலத்திற்கு உருத்திர கோடித் தலம் என்னும் ஒரு பெயரும் ஏற்பட்டது என்று சொல்லி ஐராவதம் சாபம் நீங்கியது பற்றிச் சொன்னார் சூதமா முனிவர்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 29