திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-26ல்.,
84. இல்லற தருமம் கூறிய சருக்கம்.
85. துறவறத் தன்மை கூறிய சருக்கம்.
86. சர்வ பிராயச்சித்தச் சருக்கம்.
87. நாலு யுகங்கள் தவம் புரிந்து வரம் பெற்ற சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
84. இல்லற தருமம் கூறிய சருக்கம்:
இல்லறம் என்பதை அன்போடும் அருளோடும் நல்லறமாக நடத்த வேண்டும். மன்னுயிரைத் தன்னுயிராய் என்ன வேண்டும். எந்த உயிரையும் கொல்லக் கூடாது, அசைவ உணவு உண்பது கூடாது, பிறருக்குத் துன்பம் செய்யக் கூடாது. செய்தால் அத்துன்பம் உடனே நமக்குத் திரும்பி விடும். ஒருவர் நமக்குத் துன்பம் செய்தால், அவர் மனம் திருந்தும் வண்ணம் அவருக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். ஆகையால், இவ்வுலக வாழ்வுக்கு நல்வழியில் பொருளைத் தேட வேண்டும். அவ்வுலக வாழ்வுக்கு ஈகையால் அருளைத் தேட வேண்டும். பெற்றோரைப் பேணா வேண்டும், பெரியோரை மதிக்க வேண்டும். வந்த விருந்தினரை உபசரித்து, வர இருக்கும் விருந்தினரை எதிர்பார்த்து இருக்க வேண்டும். கோவில் தொழுவது ஆன்றோரைச் சேர்வது, இரப்போர்க்கு ஈவது, இல்லாருக்கு உதவுவது இவையாவும் இல்லறத்தாருக்கு உரிய கடமையாகும். அன்னம் இடும் போது அகப்பையால் தான் இட வேண்டும். கையால் இடக்கூடாது. இரும்பு அகப்பையால் காய்கள், கறிகள் பரிமாறக் கூடாது. உண்டு கை சுத்தம் செய்த பின் மீண்டும் உண்பது கூடாது.
தீய கனவு கண்ட போதும், உண்ட உணவு வாந்தி ஆன போதும், தாம்பத்திய உறவில் ஈடுபட்ட போதும், துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று வந்த போதும் கட்டாயமாக நீராட வேண்டும். பள்ளிக்கு கூடத்திற்குள்ளும், பசுக் கூடத்திற்குள்ளும், வீட்டினுள்ளும், வேள்விச் சாலையிலும், கோவிலுக்கு உள்ளும் காலணிகள் அணிந்து செல்லக் கூடாது. கையிலோ, மடியிலோ உண்ணும் கலத்தை வைத்து உண்பது கூடாது. வீட்டில் விருந்தினர் இருக்கும் போது, அமுதமாக இருந்தாலும் தான் மட்டும் தனித்து உண்பது கூடாது. இவையாவும் இல்லறத்தாரின் கடமைதான். இவற்றை எல்லாம் தவறாது கடைப்பிடித்து, வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தோர், வானுலகத் தெய்வமாகக் கருதப்படுவர் என்று சொல்லிச் சூதமா முனிவர் துறவறம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
85. துறவறத் தன்மை கூறிய சருக்கம்:
சொல்லறம் தவறாமல், இல்லறத்தை நல்லறமாக நடத்தி; நரை, திரை, மூப்பு ஆகிய முப்பிணிகள் வருமுன்னர், வானப் பிரஸ்தம் என்னும் வன வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். மனைவியுடனும் மேற்கொள்ளலாம், மனைவியை மக்கள் பொறுப்பில் விட்டு விட்டுத் தனித்தும் மேற்கொள்ளலாம். முடி, நகம் ஆகியவற்றை வெட்டக் கூடாது, பகல் பொழுதை வெளியில் கழிக்க வேண்டும். இரவில் ஆசிரமத்துக்கு திரும்ப வேண்டும். நாட்டில் உள்ள பண்டங்களை விலக்கி விட்டு, காட்டில் கிடைக்கும் கந்த மூலாதிகளையே உண்ண வேண்டும். அதுவும் ஒரு வேளை மட்டுமே உண்ண வேண்டும். வனத்தில் உள்ள பெரியோர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் உபதேசங்களைக் கேட்டுச் சாந்திராயண முதலிய விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும். உடலை மெலியச் செய்ய வேண்டும். ஐம்புலன்களை அடக்க வேண்டும். ஒரே இடத்தை விரும்பித் தங்கி இருக்கக் கூடாது. பல இடங்களுக்கும் சென்று வர வேண்டும். நான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றையும் நீக்க வேண்டும். பச்சைப் பயிர்களையும், புல் பூண்டுகளையும் மிதிக்காமல் நடக்க வேண்டும். காவி உடை அணிய வேண்டும். மெய்ஞ்ஞானம் பற்றியும், தத்துவம் பற்றியும் சிந்திக்க வேண்டும். யோகம் பயில வேண்டும். யோகம் பயின்றோருக்கு அல்லால் மற்றவருக்கு பரத்தின் நிலையை அறிய முடியாது. ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். யோக நிலையில் இருக்கும் போது பல மாயைகள் ஊடாடும். அச்சமயம் மனம் பேதலிக்காமல், உறுதியாய் இருக்க வேண்டும். இவ்வாறு வானப் பிரஸ்தத்தை நிறைவேற்றிப் பின் சந்நியாசத்தை மேற்கொள்ள வேண்டும். தனது ஆயுள் முடியும் காலத்தை அறிந்து, வேணுவனத்துக்குச் சென்று சிந்துபூந்துறையில் நீராடி, வேணுவன நாதரையும், வடிவுடைநாயகியையும் வணங்கி வழிபட வேண்டும் என்று சூதமா முனிவர் சொன்னார்.
அப்போது நைமிசாரணிய முனிவர்கள், முனிவர் பெருமானே.! தமது ஆயுட்காலத்தை ஒருவரால் அறிய முடியுமா? என்று கேட்டனர். அதற்கு சூதமா முனிவர் சொன்னார், அறிய முடியும்.! உயிர் பிங்கலையில் மூன்று நாள் ஓடினால், ஒரு ஆண்டில் மரணம் என்றும், மும்மலங்கள் மூன்றும், வெகுவாக குறைந்து, இயல்பு மாறினால் ஆறு மாதங்களில் மரணம் என்றும், வாசி நூல், சர நூல், கனா நூல், சோதிட நூல் ஆகியவற்றில் இருந்து அறிய முடியும் என்றார். இவ்வாறு சொன்ன சூதமா முனிவர், அடுத்து அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச் சித்தம் சொன்னார்.
86. சர்வ பிராயச்சித்தச் சருக்கம்:
முற்றும் துறந்த முனிவர்கள் பெண்கள் மீது மோகம் கொள்வது பாவம். இந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமாக நூறு முறை கிரிவலம் வந்து பிராணாயாமம் செய்ய வேண்டும். அறிந்தோ. அறியாமாலோ பொய் சொல்லி விட்டால், அதற்குப் பிராயச்சித்தமாக ஒருநாள் உண்ணாமல் இருந்து, நூறு பிராணாயாமம் செய்ய வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ, ஓர் உயிரைக் கொல்ல நேர்ந்து விட்டால், சாந்திராயண விரதம் இருந்து, சதாசிவனை வணங்க வேண்டும். கள் குடித்தோர், களவு செய்தோர், கொலை புரிந்தோர், கொள்ளை அடித்தோர், அடுத்தவர் மனைவியை அபகரித்தோர், தன மனைவியைத் தாய் வீட்டுக்கு விரட்டியோர், பெரியோரை இகழ்ந்தோர், பிறர் பொருளைக் கவர்ந்தோர் ஆகியோர் செய்த இப்பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, சாந்திரமான விரதம் இருந்து கிரிவலம் வந்து, சிந்துபூந்துறையிலும், பொற்றாமரைக்குளத்திலும் நீராடி, கோவிலை வலம் வந்து, நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி வழிபட வேண்டும் என்று சொல்லிச் சூதமா முனிவர் யுகங்கள் வரம் பெற்றதைச் சொன்னார்.
87. நாலு யுகங்கள் தவம் புரிந்து வரம் பெற்ற சருக்கம்:
ஆதி அந்தம் இல்லா இறைவன், ஆதியில், பிரம்மனுக்குப் படைத்தல் தொழிலையும், திருமால் காத்தல் தொழிலையும் அருளினார். அதன்படி இருவரும் செவ்வனே செய்து வந்தனர். நான்முகன் உயிர்களை எல்லாம் படைத்தான். நான்கு யுகங்களையும் படைத்தான். யுகங்கள் படைத்தவனைப் பணிந்து நின்றன. தேவா.! நாங்கள் தவம் செய்து வரம் பெறாத தகுந்த தலம் எது? என்று கேட்டன யுகங்கள். யுகங்களே.! விமலானார்க்கு மிகவும் விருப்பமான தலமும், வேண்டினார்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கின்ற தலமும், வேணுவனம் தான். ஆகையால் நீங்கள் தவம் செய்து வரம் வாங்கத் தகுந்த தலம் வேணுவனம் தான். அங்கே செல்லுங்கள் என்று சொன்னான் பிரம்மன். பிரம்மன் சொன்னபடி யுகங்கள் நான்கும் வேணுவனம் வந்து, சிந்துபூந்துறையில் நீராடி, கோவில் வந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி திருமூலநாதரையும், தேவி வடிவுடையாளையும் வணங்கி, கோவிலின் வடபக்கம் வந்து, நான்கு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி ஐம்புலனை அடக்கி, வெகு காலம் தவம் இருந்தன. ஒருநாள் இறைவன் இறைவியுடன், யுகங்களுக்கு காட்சி கொடுத்து அருளினார். யுகங்கள் இறைவனின் திருவடியில் வீழ்ந்து வணங்கின. யுகங்களே.! உங்கள் தவத்தை மெச்சினோம். என்ன வரம் வேண்டும் உங்களுக்கு? என்று கேட்டார் இறைவன்.
இறைவா.! நாங்கள் அமைத்த லிங்கத்தில் தாங்கள் அமர்ந்து எங்கள் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அதிகாரம் எல்லா உலகங்களிலும் செல்ல வேண்டும். இந்த வரங்களே எங்களுக்கு வேண்டும் என்று யுகங்கள் கேட்டன. இறைவனும் அவ்வாறே தந்தோம் என்று சொல்லி, மேலும் சொன்னார். கிரேதா யுகம் - மோட்ச யுகமாகவும், திரேதாயுகம் - தரும யுகமாகவும், துவாபர யுகம் - செல்வ யுகமாகவும், கலியுகம் - காமயுகமாகவும் இருக்கும்.
கிரேதா யுகம் - 178000 வருடம்; திரேதா யுகம் - 1296000 வருடம், துவாபர யுகம் - 864000 வருடம்; கலியுகம் - 432000 வருடம். முதல் யுகத்தில், தரும தேவதை நான்கு கால்களுடனும், இரண்டாவது யுகத்தில் மூன்று கால்களுடனும், மூன்றாவது யுகத்தில் இரண்டு கால்களுடனும், நான்காவது யுகத்தில் ஒரு காலுடனும் இருக்கும் என்றும் சொன்னார். ஆனாலும் எமக்கு விருப்பமான இந்த நெல்லையம்பதியில், கலியுகத்திலும், முந்தைய யுகங்களை போலவே விளங்குவர் என்று சொல்லி இறைவன் மறைந்தருளினார். இத்தலத்தில் ஒருநாள் இருந்தவர், கயிலையில் பல ஆண்டுகள் இருந்த பலனை பெறுவர். இத்தலத்தில் மனிதர், விலங்கு, பறவை உயிர்விடும் போது, சிவபெருமான் வந்து பிரணவத்தை பயன்படுத்தி முக்தியை வழங்குவார், என்று சொன்ன சூதமா முனிவர் மேலும் பல புண்ணியமான கதைகளை சொல்கிறார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 27