திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-25ல்.,
80. வருண ஆசிரம ஒழுக்கச் சருக்கம்.
81. பிரம்மச்சரியச் சருக்கம்.
82. பெண்ணின் பெருமைச் சருக்கம்.
83. ஆசாரம் கூறிய சருக்கம்.
ஆகியவற்றை பற்றி காணலாம்.
80. வருண ஆசிரம ஒழுக்கச் சருக்கம்:
முனிவர்களே.! வேதங்கள் சொல்லிய ஒழுக்கப்படி நடப்பதே உத்தமம். அவ்வாறு நடப்பவர்களை இந்த உலகம் உத்தமர் என்று போற்றும். நல்லொழுக்கம் உள்ளவரே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகை பொருள்களைப் பெறுவர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணங்கள் நான்கு வகைப்படும். பிரம்மச்சாரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்று ஆசிரமங்கள் நான்கு வகைப்படும். நல்லொழுக்கம் உள்ளோர், வீட்டின்பம் பெறுவர். தீயொழுக்கம் உள்ளோர் தீ நரகில் விழுவர். நீராடல், விரதம் இருத்தல், தக்கோரைச் சேர்தல், தானம் செய்தல், மோனத் திருத்தல், ஆகிய இவற்றை நியமம் என்று சொல்வர். அதிகாலையில் எழுந்து எல்லாத் தேவர்களையும் வணங்கி, உயர்ந்தோரைச் சிந்தித்து, பெற்றோர் முதலிய ஐம்பெரும் குரவரையும் துதித்து, ஊர்ப் பகுதியை விட்டுத் தள்ளி, நானூறு விரற்கிடை தூரம் (ஒரு விரற்கிடை என்பது நான்கு முழம்) சென்று, பசும் புல் இல்லாத இடமாக பார்த்து காலையில் வடக்கு நோக்கியும், மாலையில் தெற்கு நோக்கியும் மலசலம் கழித்துச் சுத்தம் செய்து, ஆல் அல்லது வேல் குச்சி கொண்டு பல் துலக்கி, தூய நீராடி இறைவன் கோவிலை வலம் வந்து தொழுது வணங்கி காலை உணவருந்திக் கடமையைச் செய்து, சிவா சிந்தனையில் ஈடுபடுவதும், அந்தி வந்ததும், முறைப்படிச் சந்தியா வந்தனம் செய்து இறைவன் கோயிலுக்குச் சென்று, வணங்கி வழிபாடு செய்து, பின் இரவு உணவருந்திச் சிறிது நேரம் உலாவி, எம்பெருமானைச் சிந்தித்து, விளக்கு, மணி, கண்ணாடி, நிறைகுடம் ஆகியவற்றைத் தலைப்பு பக்கத்தில் வைத்துக் கொண்டு நித்திரைக்கு போக வேண்டும். தனது வீட்டில் கீழ்திசையிலும், மாமன் வீட்டில் தென் திசையிலும், மற்ற இடங்களில் மேற்குத் திசையிலும், தலை வைத்துப் படுக்க வேண்டும். எந்த இடத்திலும் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. இவை வருண ஆசிரமம் சொல்லும் வாழ்க்கை நெறிமுறை ஆகும் என்று சூதமா முனிவர், பிரம்மச்சாரிய தருமம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
81. பிரம்மச்சரியச் சருக்கம்:
நைமிசாரணிய முனிவர்களே.! வேதம் வகுத்த வருணங்கள் நான்கு உண்டு. இவற்றில் முதல் மூன்று வருணத்தாருக்கும், பிறந்தது முதல் இறக்கின்ற வரையிலும், இறந்த பின்னும், செய்ய வேண்டிய சடங்குகள் ஏராளம் இருக்கின்றன. முதலில் பிறப்பில் செய்ய வேண்டிய சடங்குகளைச் சொல்கிறேன் கேளுங்கள். பிறந்த பன்னிரெண்டாம் நாள் பெயர் சூட்ட வேண்டும். ஆறாம் மாதத்தில் அன்னம் ஊட்ட வேண்டும். பன்னிரெண்டாம் மாதம் வருடப் பூர்த்தி செய்ய வேண்டும். மூன்றாம் வருடம், முடியிறக்கும் சடங்கும், காது குத்தும் சடங்கும் செய்ய வேண்டும். எட்டாம் வருடம் அந்தணர்க்கும், பதினொன்றாம் வருடம் அரசருக்கும் பன்னிரெண்டாம் வருடம் வைசியருக்கும் பூணூல் அணிவிக்க வேண்டும். அதற்குப் பின் காயத்ரி மந்திரம் அவரவர் வருணத்திற்கு ஏற்ப ஓத வேண்டும். பிரம்மசரியத்தில் நித்திய பிரம்மச்சரியமும் உண்டு. அது பல வகைப்படும். பிரம்மச்சரிய காலத்தில் குரு வழி நிற்றல் வேண்டும். மறையோர் இல்லத்தில் பிச்சை வாங்கியே குருவை உன்னைத் செய்ய வேண்டும். குரு உண்டு மிச்சம் உள்ளதை தான் உண்ண வேண்டும்.
பிரம்மச்சாரியத்தில் உள்ள போது பெண் மீது ஆசை கொள்ளல் ஆகாது. சுற்றத்தாருடன் சேர்ந்து உணவருந்த கூடாது. வாசனை பொருட்கள், பூ, தாம்பூலம் ஆகியவை உபயோகித்தல் கூடாது. முனிவர்களைக் கண்டவுடன் அவர்களின் காலில் வீழ்ந்து வணங்க வேண்டும். அவர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்களின் அருளை பெற வேண்டும். கட்டில், பாய் இவற்றில் படுக்கக் கூடாது. வண்டி, வாகனம் பயன்படுத்தக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. முப்புரியாலான பூணூல் அணிய வேண்டும். காமம் முதலான ஆறு தீய குணங்களையும் அகற்ற வேண்டும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். வெண்ணீரும் அக்கமணி மாலையும் அணிய வேண்டும். காலையும், மாலையும் ஹோமம் செய்ய வேண்டும். அந்தணர் பதினாறு வயதுக்கு மேலும், அரசர் இருபத்தியிரண்டு வயதுக்கு மேலும், வைசியர் இருபத்து நான்கு வயதுக்கு மேலும், சாந்தியின்றிப் பூணூல் அணிந்திருத்தல் கூடாது.
மறையோருக்கு உரியது புரசந் தண்டு. மன்னருக்கு உரியது அரசந் தண்டு. வைசியருக்கு உரியது மூங்கில் தண்டு. இந்தத் தண்டின் அளவு சென்னி முதல் மூக்கின் அளவாகும். பிச்சை ஏற்று உண்டு, குரு மூலமாக வேதம் ஓதிப்பின்னர், பிரம்மச்சரியத்தை விலக்கி விட்டுக் "கன்னி" ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்ளலாம். பிரம்மச்சரியத்தை விலக்காமல் திருமணம் செய்து கொள்வது தருமம் அன்று. நித்திய கருமம் இவருக்கு ஆகாது. ஒவ்வொரு ஆசிரமத்திலும் உள்ளவர்கள் அந்தந்த ஆசிரம தருமப்படி நடக்க வேண்டும் வாறு நடக்கத்தவர்களுக்கு சொர்க்கம் இல்லை என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து, பெண்ணின் பெருமை பற்றிச் சொன்னார்.
82. பெண்ணின் பெருமைச் சருக்கம்:
கற்புடைய பெண்கள் இருக்கும் குடும்பத்தில் செல்வமும் அமைதியும் நீங்காமல் இருக்கும். அத்தகைய பெண்களின் பெருமை பற்றிச் சொல்கிறேன். வாழ்க்கைத் துணைவியாகிய மனைவி ஒத்த கருத்து உடையவளாக இருக்க வேண்டும். நல்ல குலத்தில் பிறந்தவளாகவும், நோய் இல்லாதவளாகவும், ஆன் சந்ததி உள்ள குடும்பத்தில் பிறந்தவளாகவும், பாம்பு, பல்லி, பறவை, மலை, விண்மீன், நதி இவற்றின் பெயர் இல்லாதவளாகவும், முழுமதி போன்ற முகம் கொண்டவளாகவும், இனிய சொல் உடையவளாகவும், முப்பத்தியிரண்டு லட்சணங்களும் பொருந்தியவளாகவும் இருக்க வேண்டும். இத்தகைய ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நல்ல பெண்மணியானவள், கணவன் உண்ட பின்பே உணவு அருந்துவாள். கணவன் எழும் முன் எழுந்து விடுவாள். கணவன் தன்னுடன் இருக்கும் போது அலங்காரம் செய்து கொள்வாள். வெளியூர் சென்றிருக்கும் போது அலங்காரம் செய்து கொள்ள மாட்டாள். கணவனை எதிர்த்து பேசமாட்டாள். கணவன் அறியாமல் பிழை செய்தாலும் பொறுத்துக்க கொள்வாள். தனது வீடு தனது வேலை என்றிருப்பாள். கணவன் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டாள். தனது வீட்டு கஷ்டங்களை அடுத்த வீட்டில் பேச மாட்டாள். பொய் சொல்ல மாட்டாள். பொறாமை கொள்ள மாட்டாள். கோவிலுக்குச் சென்றாலும், திருவிழா காணச் சென்றாலும், கணவனின் குறிப்பறிந்து நடந்து கொள்வாள். ஆண்டி அகதிகளுக்கு அன்னமிடுவாள். கணவன் பாவியாக இருந்தாலும் அவனை இழக்கச் சம்மதிக்க மாட்டாள். அவன் இறந்த பின்பு கற்புடைய பெண் மிதித்த இடமெல்லாம் புனிதமாகும். ஒருவேளை உணவருந்தி, படுத்துறங்கி தனது கணவனை அடைய நினைப்பதே கற்புடைய மாதர்கள் கடன் ஆகும். இவையே "பெண்ணிற் பெருந்தக்க பேறு" என்று சூதமா முனிவர் சொல்லி அடுத்து ஆசாரம் பற்றிச் சொன்னார்.
83. ஆசாரம் கூறிய சருக்கம்:
திருமணம் என்பது எட்டு வகைப்படும். அவை பிரம மணம், ஆரிட மணம், தெய்வ மணம், பிரசாபத்திய மணம், அசுர மணம், கந்தருவ மணம், ராட்சச மணம், பைசாச மணம் என்பனவாகும்.
பிரம மணம்:
சிறந்த ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுத்து சுற்றம் சூழ மங்கள வாத்தியம் முழங்க தீ முன் பெண்ணைக் கொடுப்பது.
ஆரிட மணம்:
ஒரு ஆடவனிடம் இரண்டு பசுவும், எருதும் வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.
தெய்வ மணம்:
வேள்வியில் தோன்றிய பெண்ணைத் தகுந்த ஆடவனுக்கு அக்கினி சாட்சியாகக் கொடுப்பது.
பிரசாபத்திய மணம்:
நல்ல ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுத்து, சுற்றமும் நட்பும் சூழ அவர்கள் முன்னிலையில் கன்னிகாதானம் செய்வது.
அசுர மணம்:
ஆடவன் ஒருவனிடம் அதிகமான பொருட்களை வாங்கி கொண்டு பெண்ணை கொடுப்பது.
கந்தருவ மணம்:
ஒரு ஆணும், பெண்ணும் தனியே சந்தித்துப் பேசி எவருக்கும் தெரியாமல் மணம் செய்து கொள்வது.
ராட்சச மணம்:
பெண்ணும், பெண் வீட்டாரும் உடன்படாத நிலையில் வன்முறையில் மணம் செய்து கொள்வது.
பைசாச மணம்:
பெண் உறங்கி கொண்டிருக்கும் போது, யாரையும் பொருட்படுத்தாமல் மணம் செய்து கொள்வது.
இவை யாவும் ஆரியருக்குரிய திருமண முறையாகும்.
புதிதாக மணம் செய்து கொண்டவர்களுக்கு "சாந்தி முகூர்த்தம்" என்னும் சடங்கு ஏன் நடத்தப்படுகிறது என்றால், இரண்டு மனங்களும், இரண்டு உடல்களும், சாந்தி பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அர்த்தமுள்ள சடங்கு. கணவனும், மனைவியும் சேரும் போது நல்ல நேரம் பார்த்துச் சேர வேண்டும். நல்ல நேரத்தில் உருவாகும் கரு, நல்ல பிள்ளையாகவும், தீய நேரத்தில் உருவாகும் கரு தீய பிள்ளையாகவும் பிறக்கிறது. இந்திரன் கொடுத்துள்ள வரத்தால், கருவுற்ற காலத்திலும் கணவன் மனைவி சேரலாம். ஆயுதம் தாங்கி காவல் வேலை செய்து பொருள் தேடுவதும், வியாபாரம் செய்வதும், ஆரியமுறை மணத்துக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்வதும், பொருளை விரும்பி வேதம் ஓதாமல் இருப்பதும், வேதம் வகுத்த விதி தவறி நடப்பதும் அந்தணருக்கு ஆகாது. வேதம் ஓதுவது, ஓதுவிப்பது, வேள்வி செய்வது, செய்விப்பது, ஈவது, ஏற்பது இவை ஆறும் அந்தணருக்கு உரிய ஆசாரம் ஆகும். விருந்தினரை உபசரிக்க வேண்டும். முன்னோரை வணங்க வேண்டும். அகதிகளுக்கு அன்னம் இட வேண்டும். ஆடையின்றி நீராடக் கூடாது. ஒரே ஒரு அடியிலும் நீராடக் கூடாது. நாம் வெளியில் செல்லும் போது, கோவில் மறையோர் மன்னர், துறவியர், புலவர், நீர்க்குடம் ஆகியாரைக் கண்டால் வலமாகச் செல்ல வேண்டும். உண்ணும் போது இலையை விட உயரத்தில் அமரக் கூடாது. நெருப்பை வாயால் ஊதக் கூடாது. நகத்தை பல்லால் கடிக்க கூடாது. நடந்து கொண்டே முடியை உலர்த்தக் கூடாது. உறங்கும் போது எவரையும் எழுப்பக் கூடாது. உண்ணும் போது பேசிக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் உண்பது கூடாது. படுத்துக் கொண்டு உண்பது கூடாது. முகம், கை, கால் கழுவாமல் உண்பது கூடாது. தன்னை விட மூத்த பெண்களை மணக்கக் கூடாது. இவை யாவும் அனைவருக்கும் ஆன ஆசாரங்கள். இவற்றைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லிச் சூதமா முனிவர் இல்லற தருமம் பற்றிச் சொன்னார்.
தொடர்ச்சி: திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 26