English

திருநெல்வேலித் தல புராணம் பகுதி - 24

வாசிப்பு நேரம்: 5 Minutes
No Comments

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-24ல்.,

75. மலர் அருச்சனைச் சருக்கம்.
76. உருத்திராட்ச அபிஷேகச் சருக்கம்.
77. சிவபுண்ணியப் பெருமைச் சருக்கம்.
78. விளக்குப் பெருமைச் சருக்கம்.
79. தொண்டர் தம் பெருமைச் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

75. மலர் அருச்சனைச் சருக்கம்:

நெல்லை நாதருக்குப் பலவித மலர்களால் நித்தமும் அர்ச்சனை செய்வோர், இம்மையில் எல்லா இன்பங்களையும் துய்த்து, மறுமையிலும் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவர். கொன்றை, ஆத்தி, வில்வம், எருக்கு, பாதிரி, சூரியகாந்தி, பஞ்சவில்வம், சூதம், சுரபுன்னை, ஊமத்தம், சண்பகம், சந்தனம், சாதிப்பூ, தும்பை, மந்தாரை, நெய்தல், வாகை, வன்னி, நாயுருவி, நெல்லி, கோங்கம், இலந்தை, எலுமிச்சை, அறுகு, காரகில், தேவதாரம், நந்தியாவர்த்தம், மகிழம், முல்லை, கடம்பு, வாழை, தாழை (உத்தரகோசமங்கையில் மட்டும்), நவ்வல், காந்தள், தர்ப்பை, தாமரை, சாலியிலை, வெட்டிவேர், மல்லிகை, மரிக்கொழுந்து, குங்குமப்பூ, துளசி ஆகிய மலர்கள் சிவ பூஜைக்கு உகந்த மலர்களாக போற்றப்படுகின்றன.

நெல்லையம்பதியில் நந்தவனம் வைப்போரும், அதற்கு உதவி செய்தோரும், நீர் எடுத்து விடுவோரும், மலர் பறிப்போரும், அதைத் தொடுப்போரும், வேணுவன நாதருக்கு அதைச் சாத்துவோரும் சகல நலன்களும் பெறுவர். பொன்னாலும், வெள்ளியாலும், வில்வம், கொன்றை செய்து சாத்துவோரும், நவமணி மாலை அணிவிப்போரும், பாமாலை சூட்டுவோரும், இம்மையிலும் மறுமையிலும் இன்ப வாழ்வு பெறுவர் என்று சூதமா முனிவர் சொன்னார். தொடர்ந்து ருத்திராட்ச அபிஷேகம் பற்றிச் சொன்னார்.

76. உருத்திராட்ச அபிஷேகச் சருக்கம்.

இறைவனுக்கு மிகவும் விருப்பமான , உருத்திராட்ச அபிஷேகத்தை மாதம் ஒரு முறை செய்தால், மாதம் மூன்று முறை மழை பொழியும். உலகம் எல்லாம் செல்வம் கொழிக்கும். வளம் கொழிக்கும். நீதி தழைக்கும். அபிஷேகத்தைச் செய்தோர் அமர வாழ்வு பெறுவர். அபிஷேகம் செய்வதற்குத் தேவையான பால், தயிர், வெண்ணெய், நெய், இளநீர், தேன் ஆகியவற்றைக் கொடுத்தவரும், அபிஷேகம் செய்தவரும் எல்லா நலமும் பெறுவர். தாமிரபரணி நீர் கொண்டு நீராட்டி, புத்தாடை சாத்தி, மாலைகள் அணிவித்து, உருத்திராட்ச ஜெபம் செய்து, அமுது படைத்து, தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். இது போலவே அம்மைக்கும் செய்து வணங்க வேண்டும். ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். திருமாலும், திசைமுகனும் இந்த உருத்திராட்ச அபிஷேகம் செய்து வரம் பெற்றுள்ளனர்.

முன் ஒரு காலத்தில் காமதேனு என்ற தெய்வப்பசு திருநெல்வேலியைத் தேடி வந்தது. வேண்டும் வரம் கொடுக்கும் வேணுவன நாதரை வணங்கி, அவருக்கு உருத்திராட்ச அபிஷேகம் செய்தது. வேணுவன நாதர் அப்பசுவுக்கு காட்சி கொடுத்து, என்ன வரம் வேண்டும்? கேள் என்றார். இறைவா.! தரும தேவதை எனக்கு மகவாகப் பிறக்க வேண்டும். அது தங்களுக்கு வாகனமாக இருக்க வேண்டும். கோடி யாகங்கள் செய்த பலன் என்னைச் சேர வேண்டும். எவர் இதைக் கேட்டாலும், அதை உடனே கொடுக்கின்ற சக்தி வேண்டும். மும்மூர்த்திகளும், தேவர்களும் என் உடம்பில் வசிக்க வேண்டும். அம்மை வடிவுடையாளுக்கு நான் தோழிப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று பல வரங்களைக் கேட்டது காமதேனு. வேணுவன நாதரும், காமதேனு வேண்டிய வரங்களை எல்லாம் கொடுத்தனர். ஆகவே முனிவர்களே.! உருத்திராட்ச அபிஷேகம் செய்வோர் அனைவரும் அருளும், பொருளும் பெற்று, அரச வாழ்வு வாழ்வர் என்று கூறிச் சூதமா முனிவர் சிவபுண்ணியம் பற்றிச் சொன்னார்.

77. சிவபுண்ணியப் பெருமைச் சருக்கம்:

நைமிசாராணிய முனிவர்களே.! சிவபுண்ணியம் என்பது எவை என்று, ஆதிகாலத்தில் சிவபெருமான் அம்மை உமாதேவிக்குச் சொன்னார் என்று பல செய்திகளைச் சூதமா முனிவர் எனக்குச் சொன்னார் என்று பல செய்திகளை சுகமுனிவர் எனக்குச் சொன்னார். அதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சூதமா முனிவர் சிவபுண்ணியம் பற்றிச் சொல்லத் தொடங்கினார். இலையால், சருகால், புல்லால், மண்ணால் இறைவனுக்கு கோவில் செய்வோர் அரச வாழ்வு பெறுவர். பட்டால், படங்களால் கோவில் அமைப்போர் குபேர வாழ்வு வாழ்வர். செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டுவோர் செகமெல்லாம் போற்றச் செல்வ வாழ்வு வாழ்வர். நான்கு, எட்டு, பதினாறு, நூறு, ஆயிரம் என்று கால்கள் அமைத்து கோவிலும், மண்டபமும் கட்டி வாழ்வோர் பேரரசு ஆகும் வாழ்வு பெறுவர். கொடி மரம், மடைப்பள்ளி, திருவீதிகள் அமைத்தோரும் அமர வாழ்வு பெறுவர். கோவிலுக்கு அணிகலன்கள் செய்து வைப்போரும், திருப்பணி செய்வோரும், பழையவற்றைப் புதுப்பிப்போரும், அலங்காரம் செய்வோரும், மெழுகுவோரும், கோலமிடுவோரும், உழவாரப் பணி செய்வோரும் இம்மையிலும், மறுமையிலும் எல்லா இன்பங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.

கோவிலை இடிப்போர், இடிக்கத் தூண்டியவர், கட்டுவோரைத் தடுப்பார், கோவிலை அசுத்தப்படுத்தியோர் அனைவரும் அழல் நரகில் அல்லற்படுவர். வேறு தலங்களில் செய்கின்ற சிவத்தொண்டை விட, நெல்லையம்பதியில் செய்யும் சிவத்தொண்டு பலநூறு மடங்கு அதிக பலனைத் தரும். யானை, குதிரை, காளை, பசு முதலியவை நெல்லையப்பருக்கு நேர்ந்து விடுவார் இந்திரா பதவி பெறுவர். கோயில் பொருளைத் திருடுவோர், திருட்டுக்குத் துணை இருப்போர், திருட நினைப்போர் அனைவரும் தீ நரகில் விழுவர். மண்ணாலும், மரத்தாலும் லிங்கம் செய்து வழிபடுவோருக்கு சிவ புண்ணியம் கிட்டும். சிறுவர்கள் விளையாட்டுக்காக லிங்கம் செய்தாலும் அவர்களுக்குச் சிவபுண்ணியம் கிட்டும் என்று சூதமா முனிவர் சொன்னார். இவை கேட்டு மகிழ்ந்த நைமிசாரணிய முனிவர்கள், முனிவர் பெருமானே.! யார் யார் எந்தெந்த லிங்கங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும் என்று கேட்க சூதமா முனிவர் சொல்கிறார்.

திருமால் - இந்திரநீல லிங்கத்தையும், பிரம்மன் - மகாலிங்கத்தையும், இந்திரன் - மரகத லிங்கத்தையும், குபேரன் - பொன் லிங்கத்தையும், சூரியன் - செம்பு லிங்கத்தையும், சந்திரன் - முத்து லிங்கத்தையும், வாயு - பித்தளை லிங்கத்தையும், வருணன் - படிக லிங்கத்தையும், அக்கினி - அக்கினி லிங்கத்தையும், அட்ட வசுக்கள் - வெண்கல லிங்கத்தையும், விசுவ தேவதைகள் - வெள்ளி லிங்கத்தையும், வித்தியாதரர் - திரிலோக லிங்கத்தையும், நாகராஜன் - பவள லிங்கத்தையும், அசுவினி தேவர்கள் - பார்த்திப லிங்கத்தையும், சப்தமாதர்கள் - பஞ்சலோக லிங்கத்தையும், அசுரர்கள் - உருக்கு லிங்கத்தையும், பூதங்கள் - ஈய லிங்கத்தையும், பிசாசுகள் - துத்தநாக லிங்கத்தையும் வணங்கி வழிபட வேண்டும் என்று சூதமா முனிவர் சொல்லி தீபச் சருக்கம் பற்றிச் சொல்கிறார்.

78. விளக்குப் பெருமைச் சருக்கம்:

நைமிசாரணிய முனிவர்களே.! திருவிளக்குப் போடும் முறையைச் சொல்கிறேன் கேளுங்கள். பொன்னாலும், வெள்ளியாலும், நவமணிகளாலும், வெண்கலத்தாலும், திருவிளக்குச் செய்து, தூய நெய் விட்டு, வெள்ளிய திரிகள் இட்டு, திருமூலலிங்கர், அனவரததானர், அம்மை வடிவுடையாள் ஆகியோர் திருமுன் ஏற்றி வழிபட்டால் தீராத வினையெல்லாம் தீரும். இப்பதியில் கல்விளக்கு ஏற்றுவோரும், மண் விளக்கு ஏற்றுவோரும் நல்ல கதியைப் பெறுவர். எந்திர சக்கர விளக்கு, தேர் விளக்கு, தோரண விளக்கு, தூக்கு விளக்கு, பிரபை விளக்கு முதலிய விளக்குகள் ஏற்றுவோர் ஒளிமயமான உன்னத வாழ்வைப் பெறுவர். நெய் விளக்கு இட்டாலும் அல்லது எள் நெய் விளக்கு இட்டாலும் நல்ல பலனைப் பெறுவர். பசு நெய் இல்லாமலும், எள் நெய் இல்லாமலும் வேறு எந்தத் தைலத்தைக் கொண்டு விட்டாலும் நல்ல பலனைப் பெறுவர். விளக்கு இட்டோரும், விளக்கு இடத்தகழி தந்தோறும், திரி இட்டோரும், தூண்டி விட்டோரும், விளக்கு இடுவோருக்கு அன்னபானம் தந்தோரும் நல்ல பலனைப் பெறுவர்.

திருவிழாக்களில் தீவட்டி ஏந்துவோரும் சிவனருளைப் பெறுவர். கார்த்திகையில் கோவில்களிலும் மாதங்களிலும், கோபுரங்களில் விளக்கு ஏற்றிக் கார்த்திகைத் தீபத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடச் செய்யும் மன்னன், எதிரி பயமின்றி ஆள்வான். கோவில் திருவிளக்கைத் தூண்டி விட்ட புண்ணியத்தால் ஒரு எலி, மறுபிறவியில் மாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. முனிவர்களே.! திருவிளக்கு ஏற்றுவதால் இத்துணைச் சிறப்பும் பெருமையும் கிடைக்கும் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து தொண்டர்கள் பெருமை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

79. தொண்டர் தம் பெருமைச் சருக்கம்:

உங்களுக்கு விருப்பமான செயல் எது? என்று சனகாதி முனிவர்கள் இறைவனிடம் கேட்ட போது, இறைவன் சொன்னார். சனகாதி முனிவர்களே.! எம் தொண்டர்களை எல்லோரும் போற்றினால் அதுவே எமக்கு விருப்பமான செயல். அடியார்க்குச் செய்யும் தொண்டு எமக்குச் செய்யும் தொண்டு. எம் அடியாருக்கு அன்னம், ஆடை முதலியன வழங்கினால் அது எமக்கு வழங்கியதற்குச் சமம். கல்வி ஞானம் இல்லாதவராய் இருந்தாலும், எம் அடியாரைப் போற்றுவாராயின் எம் அருளைப் பெறுவர். அடியார் உண்டால் நாம் உண்டது போலாகும். அடியார் செயல் எம் செயல் போல் ஆகும். முனிவர்களே.! உண்மையான அடியார்களுக்கு இருபத்து மூன்று லட்சணங்கள் உண்டு. அவை எவை என்று சொல்கிறேன் கேளுங்கள்.

1. திருநீறு அணிதல்.
2. ருத்திராட்சம் தரித்தல்.
3. பெரியோரை வணங்குதல்.
4. இறைவன் நாமம் இயம்புதல்.
5. அரன் பூஜை செய்தல்.
6. தினமும் தருமம் செய்தல்.
7. தெய்வீகக் கதைகளை கேட்டல்.
8. திருக்கோவில் பேணுதல்.
9. நாத்திகரை ஒதுக்குதல்.
10.அரனைப் புகழ்தல்.

ஆகிய இப்பத்தும் புற அங்கம் எனப்படும்.

சிவபெருமான் திருவிளையாடல்களைச் சொல்லும் போதெல்லாம்.,

11. நாத்துடித்தல்.
12. அதரத்துடன் அதரம் அசைதல்.
13. அங்கம் குலுங்குதல்.
14. மயிர்க் கூச்செரிதல்.
15. வேர்வை உண்டாதல்.
16. கண்ணீர் சொரிதல்.
17. அழுதல்.
18. தன்னுணர்வு இன்றி நாவு எழாதிருத்தல்.
19. வாய்விட்டு அழுதல்.
20. தன்னை மறத்தல்.

ஆகிய இப்பத்தும் உள்ளங்கம் எனப்படும்.

21. ஐந்தெழுத்தை நினைத்தல்.
22. மனதிற்குள் பூஜை செய்தல்.
23. சிவனும் தானும் ஒன்றெனக் காணல்.

ஆகிய இம்மூன்றும் மனத்தின் இலட்சணம் எனப்படும்.

ஆலயம் கட்டுதல், லிங்கப் பிரதிஷ்டை செய்தல், நந்தவனம் உருவாக்குதல், மலர் கொண்டு சாத்துதல், வீதிகள் தோறும் மடங்கள் அமைத்தல், அந்தணர், வறியவர், முதியவர், அடியவர் ஆகியோர்க்கு அன்னம் அளித்தல், சிவபுராணம் கேட்டல், சிவபுராணம் சொல்லல், அடியார் துன்பம் துடைத்தல், சிவன் சொத்துக்களைக் காத்தல், தொண்டரைத் தொழுதல் இவையாவும் சிறந்த சிவத்தொண்டு. இத்தொண்டைச் செய்வோர் எல்லோரும் சிறந்த சிவத்தொண்டர். ஆகையால் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று கூறிச் சூதமா முனிவர் வருணாசிரம தருமம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram