திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில்
மூலவர்: ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா
பரிவார மூர்த்திகள்:
- பொற்சடைச்சி அம்மன்
- பத்ரகாளி அம்மன்
- துர்கா பரமேஸ்வரி அம்மன்
- பெரிய மாடசாமி
- நல்ல மாடசாமி
- சின்ன மாடசாமி
அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் (பொற்சடைச்சி அம்பாள்) திருக்கோவில் வரலாறு:(Sadaiudayar Porchadaichi Ambaal Temple History)
முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர பக்தி செலுத்தி வந்தார். அந்த அந்தணருக்கு ஒரு மகள் இருந்தால், அவளை களக்காடு என்னும் ஊரில் அந்தணர் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த அந்தணரின் மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது, களக்காடு சென்று தனது மக்களுக்கு வளைகாப்பு விழா நடத்திய அந்தணர், தனது மகளை பிரசவத்திற்காகத் தாய் வீடான ஆம்பூருக்கு அழைத்துவரும் பொருட்டு, மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்கிறார். இவர்களின் பயணம் தொடங்கி, தற்போது இந்தக் கோவில் அமைந்திருக்கும் பகுதியை நெருங்கிய போது மிகவும் இருட்டி விட்டது. பாதையும் கரடு முரடாக இருந்ததால் மேற்கொண்டு பயணம் செய்ய முடியவில்லை. எனவே இரவுப் பொழுதை அங்கேயே கழித்து விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, காட்டில் இருந்து கொடூர மிருகங்களின் சப்தம் கேட்கிறது, அதே நேரம் வானில் இடியும், மின்னலும் உருவாகி கனமழை பெய்ய துவங்குகிறது. இந்த நேரத்தில் அந்தணரின் மகளுக்கும் பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. நடுக்காட்டுக்குள் சிக்கிக்கொண்ட தந்தையும், மகளும் செய்வதறியாது திகைத்து நிற்க, அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் மிகுந்த வலியால் துடிக்கிறாள், அவளால் மேற்கொண்டு ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாத நிலையில், தனது மகளுக்கு பிரசவம் பார்க்க ஏதாவது உதவி கிடைக்குமா எனத் தந்தை பரிதவிக்கிறார். அப்போது தூரத்தில் ஒரு இடத்தில் விளக்கின் வெளிச்சம் தெரிய அங்குச் சென்று யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்கும் பொருட்டு அந்த அந்தணர் தனது மகளை அங்கேயே உட்கார செய்துவிட்டு விளக்கு வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி ஓடுகிறார். தனது பெண்ணைக் காப்பாற்றும் படி தான் வணங்கும் சாஸ்தாவை வேண்டிக்கொண்டே செல்கிறார். அப்போது அவரின் இஷ்ட தெய்வமாகிய சாஸ்தா, மருத்துவச்சியாகப் பெண் வேடத்தில் நீண்ட சடைமுடியோடு அங்குத் தோன்றி அந்தணரின் மகளுக்குப் பிரசவம் பார்க்கிறார். கர்ப்பிணி பெண் தாயாகி ஒரு அழகிய ஆண்குழந்தையை பெற்றெடுக்க, தாயையும் குழந்தையையும் சாஸ்தா காப்பாற்றி, ஆசிர்வாதம் செய்து அங்கிருந்து மறைந்து விடுகிறார். இதற்குள் உதவி தேடி சென்ற அந்தணர் தனது மகளைத் தேடி வர அங்குத் தாயும், குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர். இதனைக்கண்ட அந்த அந்தணர் கண்களில் நீர் பெறுக தன மக்களிடம் உனக்குப் பிரசவம் பார்த்தது யாரெனக் கேட்க, அவளோ நீண்ட சடைமுடி கொண்ட ஒரு பெண் வந்து தனக்கு பிரசவம் பார்த்ததாக நடந்த சம்பவங்களை கூறுகிறாள். அப்போது அங்கு மரத்தடியில் சடைமுடியுடன் கூடிய ஒரு சிலை காணப்படுகிறது. அதனை கண்ட அந்த அந்தணருக்கு நடந்த விஷயங்கள் விளங்கிட, தான் வணங்கும் சாஸ்தாவே பெண் வேடத்தில் வந்து தனது குழந்தைக்குப் பிரசவம் பார்த்ததை உணர்ந்து கொள்கிறார். உடனே சென்று அந்தச் சாஸ்தா விக்ரகம் முன்னர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கண்களில் கண்ணீர் பெறுக துதித்து நிற்கிறார். தனது கர்ப்பிணி மகளுடன் வளைகாப்பு சீராகக் கொண்டு வந்த காப்பரிசியை அந்தச் சாஸ்தாவுக்கு படைத்து அவரை பூஜித்தார். அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி தோன்றி, அந்தணரே உமது பெண்ணிற்கு மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்தது பாலசாஸ்தாவாகிய நான் தான் என ஒலிக்கிறது. சடையுடன் தோன்றிய சாஸ்தா என்பதால் இவர் சடைமுடி சாஸ்தா என்றே அழைக்கப்பட்டார். பின்னர் வந்த காலத்தில் இந்தச் சாஸ்தாவுக்கு கோவில் எழுப்பப்பட்டு நித்ய பூஜைகள் நடைபெற்று வருவதாக இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Lake, Malayankulam - 8min(2.5km)
- Alwarkurichi river - 14min(4.1km)
- Palaya Kutraalam - 44min (25.7km)
- Courtallam Five falls - 58min (32.8km)
சடையுடையார் சாஸ்தா கோவில் சிறப்புகள்:(Sadaiudaiyar Sastha Temple Highlights)
- இங்குக் காட்சிதரும் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா பொற்சடைச்சி, பத்ரகாளி, துர்கா பரமேஸ்வரி ஆகிய மூன்று அம்மன்களுடன் பாலசாஸ்தாவாய் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
- இந்தச் சடையுடையார் சாஸ்தாவுக்கு அந்தணர் மூலம் முதல் முதலாகக் காப்பரிசி மற்றும் முழுத்தேங்காய் நிவேதனம் செய்யப்பட்ட காரணத்தால், இன்று கூட இங்குக் காட்சிதரும் சாஸ்தாவுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் காப்பரிசி மட்டுமே நிவேதனமாகப் படைக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த விதமான அன்னப்பிரசாதங்களும் நிவேதனமாகப் படைக்கப்படுவது கிடையாது.
- இந்தச் சாஸ்தாவை குலதெய்வமாக ஏற்றக் குடும்பத்தின் பெண்கள், இன்றும் வளைகாப்பு விழா முடிந்து பிரசவத்திற்காகத் தாய்வீடு செல்லும் போது அவர்களின் புகுந்த வீட்டில் இருந்து ஒரு முழுத்தேங்காய், பச்சரிசி, பழம் இவைகளை எடுத்துத் தங்கள் புடவை தலைப்பில் சடையுடையார் சாஸ்தா கோவில் விபூதியுடன் முடிந்து கொண்டு செல்வது வழக்கம்.
- இந்தக் கோவிலில் அனைத்து குல மக்களும் ஒன்றாக இணைந்து தை மாத வெள்ளிக்கிழமை அன்று பொது பூஜை என்ற பெயரில் வழிபாடு செய்து வருகிறார்கள்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
- The Agrahara - Concept Stay
- Dvarakapuri Farms - 3-star
- Sri Venkatesha Cottage - 3-star
- Hotel Ambai Grand
இருப்பிடம் / செல்லும்வழி: (Location / Directions:)
திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் சுமார் 38 கி.மீ தொலைவில் உள்ள ஊரான கல்லிடைக்குறிச்சி அருகே அமையப்பெற்றுள்ளது தெற்கு பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோவில். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் மார்க்கமாகப் பாபநாசம் செல்லும் புறநகர் பேருந்துகள் மூலம் கல்லிடைக்குறிச்சி சென்று இறங்கி, சுமார் 3 கி. மீ தொலைவில் உள்ள இந்தத் தெற்கு பாப்பாங்குளம் கோவிலை எளிதாக அடையலாம்.