திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி - குதிரைமொழித்தேரி ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில்.
மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா உடனுறை ஸ்ரீ கற்குவேல் அய்யனார் சாஸ்தா.
பரிவார மூர்த்திகள்:
பேச்சி அம்மன், வன்னியராஜா, தளவாய் நல்ல மாடசாமி, பெரியாண்டவர், ஐவராஜா, கருப்பசாமி உள்ளிட்ட மாட தேவதைகள்.
கற்குவேல் அய்யனார் திருக்கோவில் வரலாறு (History of the Karkuvel Ayyanar Temple):
பல ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெரிய கொடிமரம் சேதமடைந்தது. அதனை நீக்கிவிட்டு புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்ய கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலைக்கு ஒரு குழுவினர் புறப்பட்டு செல்கின்றனர். கொடிமரம் நிறுவுவதற்கு தேவையான சந்தன மரத்தை கண்டுபிடித்து அதனை வெட்டும் பணி தொடர்கிறது. அப்போது மரத்தின் கோடாரி தெறித்து சென், மரம் வெட்டும் குழுவினரின் மேல் விழுகிறது. பலருக்கு வெட்டுக்காயம் ஏற்படுகின்றது. அதனைக் கண்டு ஆறுமுகம் குழுவினர் பயந்துகொண்டு அலறி அடித்து ஓடுகின்றனர். அந்த சந்தன மரத்தில் குடியிருந்த 21 தேவதைகளும் பயங்கர சத்தத்துடன் அவர்களை துரத்திச் செல்ல, அந்த குழுவினர் காரையார் மலைப் பகுதியில் இருக்கும் அருள்மிகு சொரிமுத்து ஐயனார் சாஸ்தா திருக்கோவில் சென்று தஞ்சம் அடைகின்றனர்.
தங்களை எப்படியாவது காப்பாற்றுமாறு சாஸ்தாவை வேண்டுகின்றனர் அப்போது சொரிமுத்து அய்யனார் தோன்றி அருள்புரிந்து. என்னுடைய சகோதரனாகிய முருகப்பெருமானின் கோட்டைக்குக் கொடிமரம் கட்டுவதற்கு நீங்கள் எடுத்த முயற்சி என்றும் வீண் போகாது என்று சொல்லியவாறு, பயமுறுத்தித் துரத்தி வந்த 21 தேவதைகளையும் அழைக்கிறார்.
‘உங்களுடைய இருப்பிடம் ஆகிய மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக இவர்களை துரத்தி வந்திருக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ‘நீங்கள் குடியிருப்பதற்கு என்னுடைய கோவிலில் இடம் தருகிறேன். அதற்கு பதிலாக உங்கள் இருப்பிடமான சந்தன மரம் ,என் தம்பி குடியிருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கு செல்வதற்கு நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்’ என சாஸ்தா சொன்னதும் தேவதைகள் ஒத்துக் கொள்கின்றனஅன்று முதல் தேவதைகள் அனைத்தும் சாஸ்தாவின் கோவிலில் தங்கிவிடுகின்றன.
சாஸ்தாவின் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் 21 தேவதைகளுக்கும் பூஜை செய்து படையல் போடுகின்றனர்.
கொடிமரம் திருச்செந்தூருக்கு செல்வதற்கு தயாரானது. சுடலைமாட சுவாமி தலைமையில் திருச்செந்தூருக்கு கொடிமரத்தை கொண்டு செல்ல, வெள்ளைக் குதிரையில் அவர்களை பின் தொடர்ந்து சாஸ்தாவும்வந்து கொண்டிருந்தார். அப்படி வரும் வழியிலே , செம்மண் சூழ்ந்த தேரி பகுதிக்கு வரும்போது மிகவும் அந்த இடம் பிடித்துப் போய் போக அங்கிருக்கும் கற்குவா மரத்தடியில் சில காலம் சாஸ்தா தங்கி விடுகிறார்.அதன்பின்னர் அந்த ஊரில் வாழ்ந்து வந்த மிராசுதார் கனவில் தோன்றிய சாஸ்தா, தனக்கு விருப்பமான கற்குவா மரத்தடியில் ஒரு கோவில் எழுப்புமாறு உணர்த்துகிறார்.மேலும்’ அவ்வாறு கட்டப்படும் ஸ்தலத்திலே நித்திய வாசம் புரிந்து இந்த ஊர் மக்களை காத்து அருள் புரிவேன்’ என்றும் கூற அதனைக் கேட்டு மகிழ்ந்து ஜமீன்தார் அந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசர் உதவியுடன் சாஸ்தாவிற்கு ஒரு கோவிலை எழுப்புகின்றார்.
அய்யனார் கற்குவா மரத்தின் மீது விரும்பி அமர்ந்த காரணத்தால் கற்குவாமேல் அய்யனார் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவிக் கற்குவேல் அய்யனார் என்ற பெயர் நிலைத்து விட்டதாக வரலாறு கூறுகிறது.
கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன், கற்கு வேலப்பன் என்று அழைக்கப்படும் அய்யனார், தற்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார்.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Red Desert in Thirunelveli - 2min(900km)
- Greenish Canal - 13min(5.7km)
- Nazareth Lake - நாசரேத் ஏரி - 33min(18.9km)
- South beach - 49min(28.4km)
பேச்சி அம்மன் வரலாறு (History of Pechi Amman):
முன்பொரு காலத்தில் அதிவீர பாண்டியன் என்ற அரசன் தேரிக்குடியிருப்பு பகுதியை ஆட்சி செய்து வருகிறான். மன்னன் ஆளுகின்ற கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அழகான சுனையும், அந்தச் சுனையின் அருகில் ஒரு மாமரமும் இருக்கிறது.. ஒரு நாள் அந்த வழியாக முனிவர் ஒருவர் வருகிறார். தாகம் அதிகமாக ஏற்பட சுனையில் இறங்கி தண்ணீர் அருந்தும்போது அருகிலிருந்த மாமரத்தில் இருந்து மாம்பழம் ஒன்று சுனைக்குள் விழுகிறது.
அந்த மாங்கனியை எடுத்துச் சென்று மன்னருக்கு பரிசாக வழங்குகிறார். மாம்பழத்தை உண்ட மன்னன் மாங்கனியின் ருசியை கண்டு ஆச்சரியத்தோடு மீண்டும் இவ்வளவு ருசியான பழம் கிடைக்குமா! என்று கேட்க சுனையின் அருகில் இருக்கும் மாமரத்திலிருந்து விழுந்ததுதான் அந்த மாங்கனி என்று சொல்லி இடத்தை முனிவர் காட்டுகின்றார்.
மன்னனும் மகிழ்ச்சியுடன் முனிவரை வழியனுப்பி வைத்து விட்டு, தனது கோட்டை எல்லைக்குள் அவளோடு சென்று அங்கு இருந்த அந்த மாமரத்தை காண்கின்றான் . அந்த மாங்கனியின் சுவையை தான் மட்டுமே உண்ண வேண்டும் என்று மன்னன் நினைக்கின்றார் அதனால் அந்த மரத்தை யாரும் நெருங்காதவாறு இருக்க அங்கு காவலர்களை காவல் காப்பதற்கு நிறுத்துகிறார்.காவலர்களும் மன்னனின் ஆணையை ஏற்று மாம்பழம் விழும் பொழுதெல்லாம் அதை எடுத்து மன்னனிடம் கொடுத்து வந்தனர்.
அவ்வாறு இருக்கையில் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுனையில் குடிநீர் எடுத்து செல்ல வருவது வழக்கமாக இருந்து வந்தது. பேச்சு தாய் எனும் பெண்ணொருத்தி வழக்கம்போல சுனைக்கு சென்று குடத்தில் தண்ணீர் நிரப்புகிறார். எதிர்பாராது அருகில் இருந்த மரத்தில் இருந்த மாங்கனி குடத்திற்குள் விழுந்து விட, அது தெரியாமல் அந்தப் பெண் குடத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றாள்.
பழம்பழுத்ததும் மன்னனிடம் கொடுப்போம் என்று எதிர்பார்த்திருந்த காவலர்கள் பழத்தை காணாது திகைத்தனர். மன்னரின் காதுக்கு இந்த விஷயம் போகின்றது கடும் கோபம் கொண்ட மன்னன் மாம்பழத்தை கண்டிப்பாக கண்டுபிடித்து கொண்டுவர வேண்டும் என்று ஆணையிட, காவலாளிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்யும்போது பேச்சியம்மாள் இடத்திற்குள் மாம்பழத்தை மாங்கனியை கண்டுபிடிக்கின்றனர்.
பேச்சிதாய்தான் மாங்கனி திருடு இருக்கின்றாள் என்று நினைத்து மன்னரின் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்துகின்றனர். மன்னனும் ஆத்திரத்தில் புத்தி இழந்து விசாரணை எதுவும் நடத்தாமல் அந்தப் பெண்ணிற்கு மரண தண்டனை வழங்குகிறான். பேச்சிதாய் எவ்வளவோ மன்றாடி பார்க்கின்றாள்.
மன்னனின் மனம் சிறிதும் இறங்கவில்லை. மரண தண்டனை நிறைவேற்றும் தருவாயில் அந்தப்பெண் கதறி அழுதவாறு அங்கு குடிகொண்டிருக்கும் அய்யனாரை சாட்சியாக வைத்து மன்னனை நோக்கி, நான் செய்யாத தவறுக்கு தண்டனை அளிக்கும் உன்னுடைய அரசாட்சி அழிந்து போகட்டும் . இந்த இடம் எல்லாம் செம்மண் மழை பொழியட்டும் என்று சாபமிட்டுவிட்டு தன் உயிரைத் விடுகிறாள்.
பேச்சித்தாய் விடுத்த சாபத்தை குறிக்கும் பாடல் வரிகள்:
நன்று நடுக் கேளாதவன் சீமையில்
தீக் காற்றும் தீ மழையும் பெய்யக் கடவது
கண்டு நீதிநெறி சொல்லும்
கற்குவேல் ஐயனாரே நீரே சாட்சி
மன்னவன் பூமியெங்கும்
மண்மாரி பொழியட்டும்
நீதிநெறி சொல்லும்
கற்குவேல் ஐயனாருக்கு
சுளவு வடிவம் பூங்காவாகட்டும்.
அந்தப் பெண்ணின் சாபத்தால் இந்தப் பகுதி முழுவதும் செம்மண் மழை பொழிந்து தேரிக்காடு ஆனதாகக் கூறப்படுகிறது. இன்றும் இந்த பகுதியைச் சுற்றி செம்மண் தேறி காடுகளே காணப்படுகின்றன. தனது எல்லைக்குள் வாழ்ந்து உயிர் நீத்த அந்தப் பேச்சித்தாயை தனது கோவிலில் பரிவார தேவதை ஆக்கி, கற்குவேல் அய்யனார் அருள்புரிந்ததாகவும், அந்தப் பெண் தான் தற்போது இங்கு அமர்ந்து அருள்பாலிக்கும் பேச்சி அம்மன் என்றும் செவி வழியாக வரலாற்று கதை கூறப்படுகிறது.
கள்ளர் வெட்டு திருவிழா வரலாறு (History of Kallar Vettu Festival):
முற்காலத்தில் இந்தக் கற்குவேல் அய்யனாரை குல தெய்வமாக வணங்கிய பக்தர்கள், அய்யனாருக்கு நிறைய பொன், பொருள் மற்றும் ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள். இதனால் கோவிலின் நிதி நிலை செல்வ செழிப்பாக இருந்துள்ளது. இதனை அறிந்த வாலிபன் ஒருவன் திருக்கோவில் பூஜைகள் முடிந்து நடை அடைத்த பின்னர், கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்து மூட்டைக் கட்டி எடுத்துக் கொண்டு புறப்படுகையில், இந்தத் திருக்கோவிலின் காவல் தெய்வமான வன்னியராஜா சுவாமியால் தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு இறந்து விடுகிறான். மறுநாள் கோவிலைத் திறந்த உடன் பூசாரி இதனை கண்டு ஊர் மக்களுக்குத் தகவல் தெரிவிக்க, அணைத்து சனங்களும் கோவிலில் கூடி நிற்கிறார்கள். அப்போது ஒரு பெண் அங்கு இறந்து கிடந்த வாலிபனை வாரியெடுத்து தன மடியில் கிடத்தி ஓலமிட்டு அழுகிறாள். அந்த வாலிபனின் தாயான இந்தப் பெண் அய்யனார் எம்பிள்ளை செஞ்சது தப்பு தான் அவனை மன்னிச்சிருக்க கூடாதா? அவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலை என்று கூறிய படி தனது உயிரையும் மாய்த்து கொள்ள முயற்சி செய்ய, அப்போது அய்யனார் அசரீரி வாக்கு மூலம், பெண்ணே நில்...! உன் மகன் உயிர் பெறுவான் என கூறி அருள்பாலிக்கிறார். அப்போது அங்கிருந்த பூசாரிக்கு அருள் வர அவர் அய்யன் சந்நிதிக்குள் சென்று புனித நீர் எடுத்து வந்து இறந்து கிடந்த வாலிபன் மீது தெளிகிறார். அந்த நொடியே அந்த வாலிபன் உயிரோடு எழுந்து வருகிறான். தனது தவறை உணர்ந்த அந்த வாலிபன் அய்யனார் சந்நிதி சென்றும், வன்னியராஜா சந்நிதி சென்றும் மன்றாடி மன்னிப்பு கேட்கிறான். இந்த வரலாற்றை மையப்படுத்தியே இங்குக் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக நடைபெற்று வருகிறது.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
கள்ளர் வெட்டு திருவிழா (Kallar Vettu Festival):
கற்குவேல் அய்யனார் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்திபெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.ஏராளமான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் பாதுகாப்புகள் அதிகமாக போடப்பட்டிருக்கும் நாளாக கள்ளர் வெட்டு திருவிழா புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு கார்த்திகை மாதம் முதல் நாள் கொடியேற்றம் விசேஷ பூஜைகளுடன் தொடங்கி இந்த விழா, கார்த்திகை மாதம் கடைசி மூன்று நாட்களுக்கு வெகுசிறப்பாக கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த விழா வருடா வருடம் கொண்டாடும்போது சில சமயம் கார்த்திகை மாதம் 30 நாட்களுக்குப் பதிலாக 29 நாட்கள் மட்டுமே அமைந்துவிடும். அப்போது அடுத்த நாளான மார்கழி முதல் நாள் கள்ளர் வெட்டு திருவிழா நடந்தேறும்.கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி 30 நாட்களுக்கும் வில்லுப்பாட்டு கச்சேரி என விழா களைகட்டி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.கள்ளர் வெட்டு திருவிழாவின்போது இளநீரின் மேல்பாகம் சீவப்பட்டு அதன் மீது குங்குமம் பூசி வெள்ளைக்கயிற்றினை சுற்றி கட்டி கற்குவேல் அய்யனார் உடைய பாதத்தில் வைத்துப் பூஜைகள் நடத்தப்படுகிறது.கள்ளரின் வீட்டில் உபயோகப்படுத்தும் வன்னியராஜா சுவாமியின் அரிவாள் அதனை கொண்டு வந்து பூசாரிகள் கொடுப்பார்கள். அந்த அரிவாலும் சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இரண்டு குழுக்கள் பிரிவினராக சாமி ஆடிக் கொண்டு வருவார்கள். ஒருவர் காவல் தெய்வம் வன்னியராஜா குழுவினர் .மற்றவர்கள் கள்ளர் சாமி குழுவினர் என திருக்கோவில் வளாகம் முழுவதும் சாமி ஆடிக்கொண்டே சுற்றி வர, மேல தாளம் முழங்க கோயிலின் எதிரே உள்ள கடைகளில் இருந்து சில பொருட்கள் களவாடப்படும்.‘ இந்த எடுப்பு எடுத்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு கோயிலில் இருந்து சுவாமியின் பாதத்தில் வைக்கப் பட்ட இளநீரை பூசாரிகள் தம்முடைய கைகளில் எடுத்து வருவார்கள். அதுபோலவே வன்னியராஜா சுவாமியின் அரிவாளையும் சாமி கொண்டாடிகொண்டு எடுத்து வருவார்கள். தேரிக்காட்டில் குறிப்பிடும் ஒரு இடத்தில் அந்த இளநீரை பூசாரி வைப்பார். அந்த சமயத்தில் வன்னியராஜா பெயரிலே அரிவாளை எடுத்து கொண்டு சாமி ஆடி வருபவர் அருளாவேசத்தோடு இளநீரை இரண்டாக வெட்டிச் சாய்ப்பார்
அந்த சமயத்தில் இளநீரில் மேலே தடவப்பட்ட குங்குமம் ரத்தம் போல மண்ணில் சிதறும். இதுவே கள்ளர் வெட்டு திருவிழா என கொண்டாடப்படுகிறது.இந்த கள்ளர் வெட்டு திருவிழா சிகர நிகழ்ச்சியில் இளநீர்தண்ணீரானது சிதறிய மண்ணை எடுத்துக் கொண்டுவந்து தங்களுடைய வயலில் தெளித்தால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இந்த விழாவினை கொண்டாடுகின்றனர்.ஸ்ரீ கற்குவேல் ஐயனார் கோவிலில் இந்தக் கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
தேரிக்குடியிருப்பு கோவில் திருக்கோவில் சிறப்புகள் (Therikudiyiruppu Temple Special Features):
சாஸ்தா தன்னுடைய மனைவிகளான பூர்ணா பொற்கமலம் எனும் 2 மனைவியரோடு கோவிலில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்தத் திருத்தலத்தில் ஐவர்ராஜா, உத்திரமாடன், வன்னிச்சி, பேச்சியம்மன், வன்னியராஜா எனும் தெய்வ சந்ததிகளும் இருக்கின்றது.
இங்கு வருடம் தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்று இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஒரு வாரகாலத்திற்கு குடில் அமைத்துத் தங்கி சாமியைத் தரிசனம் செய்வார்கள். இதனால் தேரிக்காடு பகுதி முழுவதும் திருவிழா கடைகள், தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டு களைகட்டும்.
இங்கு நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவின் போது இளநீர் வெட்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் சிந்திய செம்மண்ணை எடுத்துச் சென்று தங்கள் வயலில் சேர்த்தால் விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பங்குனி உத்திரம் அன்று இவரை தங்கள் குல சாஸ்தாவாக வழிபாடும் மக்கள் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து பொங்கலிட்டு, கற்குவேல் அய்யனாரை வணங்கிச் செல்கிறார்கள்.
விசேஷ தினங்கள் வரும் பொழுது கண்டிப்பாக அய்யனார் துதியைப் பற்றிய வில்லுப்பாட்டு இடம் பெறும். அந்த இசையானது திருவிழாவின்போது அனைவரையும் ஈர்க்கக்கூடிய சக்தியாகவும் அமைந்திருக்கிறது.
வருடம் தோறும் பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கு ஏற்றவாறு பெரிய சிவப்பு மணல் மைதானமும் அங்கு இருக்கிறது.
கற்குவேல் அய்யனார் கோவில் நேரம் (Karkuvel Ayyanar Temple Timings):
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலின் நடை எப்போதும் திறந்திருக்கும்.
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் இருப்பிடம் (Location of Therikudiyiruppu Tarkuvel Ayyanar Temple):
நெல்லையில் இருந்து சுமார் 57 கி. மீ தொலைவில் உள்ள திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் காயாமொழி என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது இந்தக் குதிரைமொழித்தேரி ஸ்ரீ கற்கு வேல் அய்யனார் திருக்கோவில். இங்கு செல்லத் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலானது திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதுபோலவே திருச்செந்தூர் மற்றும் குரும்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. மேலும் தூத்துக்குடி வாகைக்குளத்திலிருந்து 50 கிமீ தொலைவில் விமான நிலையம் அமைந்துள்ளது.