மூலவர்: ஸ்ரீ நரசிம்ம சாஸ்தா - ஸ்ரீ அன்னபூரணி அம்மன்.
பரிவார மூர்த்திகள்:
- ஆனந்த கணபதி
- ஆதி பூதத்தார்
- பாலசுப்ரமண்யர்
- மங்கள ஆஞ்சநேயர்
- பேச்சியம்மன்
- பிரம்மசக்தி
- அகத்திய முனிவர்
- வீரமணி சுவாமி
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் இரணியன் என்னும் அரக்கன் பிரம்ம தேவரைக் குறித்து தவம் இருந்து, அந்தத் தவத்தின் பயனாகத் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, விஷ ஜந்துக்களாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ, எந்தவிதமான ஆயுதங்களாலோ மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தினை பெற்று விடுகிறான். வரம் பெற்ற அரக்கன் சும்மா இருப்பானா? உடனை தனது வலிமையை நிரூபிக்க இந்திரலோகம், தேவலோகம் ஆகிய அனைத்து லோகங்களுக்கும் சென்று போரிட்டு அங்குள்ளவர்களை அடிமைப்படுத்தி ஈரேழு லோகங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறான். தானே ஈரேழு உலக ஜீவராசிகளுக்கும் கடவுள் என அறிவித்துத் தன்னை மட்டுமே மக்கள் பூஜித்து வணங்க வேண்டும் என உத்தரவிடுகிறான். தவசீலர்கள், முனிவர்கள், யோகிகள் ஆகிய அனைவரும் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் எனக் கூறி அட்டகாசங்கள் செய்து வந்தான். இந்நிலையில் இரணியனுக்கு பிரகலாதன் என்னும் ஆண் குழந்தை பிறந்து வளர்ந்து பால பருவத்தை அடைகிறது. உலகமே இரணியனின் மிரட்டலுக்கு பயந்து அவனை வணங்கி வந்த நிலையில், அவனுடைய குழந்தையான பிரகலாதனோ நாராயணனே கடவுள் எனக் கூறி அவரை வணங்கி வந்தான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என இரணியன் கூறியதை கேட்காத பிரகலாதனை பல்வேறு வகையான சூழ்ச்சிகள் செய்து கொலை செய்ய முயற்சிக்கிறான் இரணியன். அனால் பிரகலாதனோ ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடித்துத் தப்பித்து வந்து தனது தந்தையான இரணியன் முன் நாராயண மந்திரத்தை உச்சரித்து நிற்கிறான். இதனால் வெகுண்ட இரணியன் பிரகலாதனை பிடித்து எங்கிருக்கிறான் உனது நாராயணன், எனக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் அவனை என் முன்னாள் வரச்சொல் எனக் கர்ஜனை செய்ய, பிரகலாதனோ எனது நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என மழலை குரலில் கூறுகிறான். இதனை கேட்டு மீண்டும் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இரணியன் அங்கிருந்த தூண் ஒன்றை தனது கதாயுதத்தால் உடைத்து எங்கே உன் நாராயணன் எங்க கேட்க, அப்பொடுகு அதனுள் இருந்து நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்து வெளிப்படுகிறார். அவரின் பயங்கர தோற்றத்தைக் கண்டும் மனம் மாறாத இரணியன் அவருடன் போர் செய்ய, இறுதியில் அவன் பெற்ற வாரத்தின் படி அவனை தனது கூறிய நகங்களால் கிழித்து, அந்தி சாயும் வேளையில், அரண்மனையின் படியில் வைத்துச் சம்ஹாரம் செய்கிறார். இப்படி இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் அதன் பின்னரும் கோபம் தணியாமல் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தங்கையான அன்னபூரணி அம்மை அவர் முன் தோன்றி அவருக்கு அன்னம் பரிமாறி, தனது அண்ணனின் பசியை போக்கி கோபத்தை தனித்து சமாதானம் அடைய செய்கிறாள். சமாதானம் அடைந்த நரசிம்மர் தான் இரணியனை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்கிறார். அப்படி அவர் சிவ பூஜை செய்த இடமே இந்த அங்கமங்கலம் தலம் ஆகும். இதனை உணர்த்தும் வகையில் இந்த ஊரில் உள்ள சிவாலயத்தில் நரசிங்கநாதர் என்னும் பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். தனக்கு அன்னம் அளித்துத் தனது கோபத்தை நீக்கிய தனது தங்கை அன்னபூரணியுடன் அமர்ந்து இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ நரசிம்மர் சாந்த ஸ்வரூபியாகக் காட்சித் தருகிறார் என இந்த கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Thalaivanvadali canal - 19min(7.9km)
- Nazareth Lake - நாசரேத் ஏரி - 25min(9.9km)
- Karaiyadiur lake - 27min(12.8km)
- Valasai Bird Sanctuary - 27min(13.3km)
திருக்கோவில் சிறப்புகள்:
இங்கு ஸ்ரீ நரசிம்ம சாஸ்தா சாந்த சுவரூபமாக, தனது தங்கை அன்னபூரணி அம்மனுடன் காட்சித் தருகிறார். இவ்வாறு அண்ணன் தங்கை கோலத்தில் பெருமாளையும், அம்பாளையும் கருவறையில் ஒன்றாகத் தரிசிப்பது அபூர்வமாகும். நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை கோவிலிலும், அண்ணன் தங்கை இருவரும் ஒரே கருவறையில் காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும்.
இங்கு வருடந்தோறும் நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் நரசிம்மருக்கு பானகத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், பிரிந்த அண்ணன் தங்கை ஒன்று சேர வேண்டுபவர்கள் அனைவரும் இந்த நரசிம்ம சாஸ்தாவையும், அன்னபூரணி அம்மையையும் வேண்டிக்கொண்டு நீராஞ்சனம் சமர்ப்பித்து வழிபட்டு வருகிறார்கள்.
இங்குத் தீபாவளி அன்று காசி அன்னபூரணிக்கு நடைபெறுவதை போன்று லட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இந்தக் கோவிலில் தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்திலேயே நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கி விடும்.
இங்குள்ள நரசிம்மர், இரணியனை சம்ஹாரம் செய்த பாவத்தைப் போக்கிட, இங்குள்ள சரப தீர்த்தத்தில் நீராடிச் சிவபூஜை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நரசிம்மர் வணங்கிய சிவபெருமான், நரசிங்கநாதர் என்ற பெயரில் இவ்வூரில் கோவில் கொண்டுள்ளார்.
இந்தக் கோவிலின் முகப்பில் பிரம்மாண்ட தோற்றத்தில் ஆதி பூதத்தார் காட்சித் தருகிறார். இவருக்கு வடை மாலை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது விசேஷமாக நடைபெறுகிறது.
நரசிம்ம ஜெயந்தி, ஆவணி மூலம், ஆடிப்பூரம், தீபாவளி ஆகிய நாட்களில் ஸ்ரீ நரசிம்ம சாஸ்தாவுக்கும், ஸ்ரீ அன்னபூரணி அம்மைக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும்.
நரசிம்மரை வேண்டி இலுப்பை எண்ணெயால் 1008 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எதிரி தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
இருப்பிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 46 கி.மீ தொலைவில் உள்ள ஊரான குரும்பூர் அருகே அமையப்பெற்றுள்ளது அங்கமங்கலம் ஸ்ரீ நரசிங்க சாஸ்தா திருக்கோவில். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் புறநகர் பேருந்துகள் மூலம் குரும்பூர் சென்று இறங்கி, சுமார் 1 கி. மீ தொலைவில் உள்ள இந்த அங்கமங்கலம் கோவிலை எளிதாக அடையலாம்.