இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா கோவில்
திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா திருக்கோவில்.
மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ பெரும்படை சாஸ்தா.
பரிவார மூர்த்திகள்:
சங்கிலிபூதத்தார்
பேச்சி அம்மன்
பிரம்மராட்சி அம்மன்
பட்டாணி சாமி
ஆழ்வார் சாஸ்தா
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- சிவகளை குளம் - 2min(500m)
- பெருங்குளம் குளம் - 10min(4.4km)
- CHINNA VAAIKAL - 16min(6.8km)
- Mangala kuruchi Check Dam - 13min(5.1km)
இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருக்கோவில் வரலாறு (Iruvappapuram Perumpadai Sastha Temple History):
முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதி முழுவதும் வனாந்திரமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டு காலத்தில் ராஜ ராஜ சோழ மன்னன் ஆட்சிக்காலத்தில், இந்தப் பகுதியில் “வலங்கை மகா சேனை” என்று அழைக்கப்பட்ட சோழர்களின் பெரும் படை இங்கு முகாமிட்டு தங்கியிருந்தது. இந்தப் படை வீரர்கள் சாஸ்தா வழிபாட்டை மேற்கொள்வதை தங்கள் முதல் பணியாகச் செய்து வந்தார்கள். போருக்குப் புறப்படும் முன்னர் உக்கிர தெய்வங்களை வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்த இந்தப் பெரும் படையினர், சாஸ்தாவையும் தங்கள் இஷ்ட தெய்வமாக வழிபாட்டு வந்தனர். இதற்காகத் தங்களுடன் ஒரு சாஸ்தா விக்ரஹத்தை எடுத்து வந்து தாங்கள் தங்கியிருந்த பகுதியில் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். பெரும்படையினர் வணங்கிய சாஸ்தா என்பதால் பெரும்படை சாஸ்தா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இந்தக் கோவில் இருந்த பகுதி மணல் பரப்பினால் மூடப்பட்டு, சாஸ்தா விக்கிரகமும் பூமிக்கு அடியில் புதைந்து விட்டது. பின்னர் வந்த காலத்தில் காடாக இருந்த இந்தப் பகுதி, குடியிருப்புகளில் சூழப்பட்டு மக்கள் நடமாட்டம் செய்யும் பகுதியாக மாறி வந்த வேளையில், சாஸ்தா தனது இருப்பிடத்தை வெளியுலகுக்கு காட்டிட திருஉள்ளம் பூண்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்துகிறார். இந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி தினமும், தனது வீட்டு பசுக்களில் இருந்து பாலை கறந்து, பக்கத்து ஊருக்குச் சென்று விற்று வருவதை
வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். ஒரு நாள் வழக்கம் போல பாலை சுமந்து கொண்டு இவ்வழியாக அந்தப் பெண் செல்லும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி, அவள் தலையில் இருந்த பால் குடம் கீழே விழுந்து பால் முழுவதும் கொட்டி விடுகிறது. இதனால் பானைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தப் பெண் சோகமாக வீடு வந்து சேர்கிறாள். பின்னர் மறுநாள் மீண்டும் பாலை கறந்து, பானையில் எடுத்துக்கொண்டு பக்கத்து ஊருக்குச் செல்ல அந்தக் குறிப்பிட்ட இடம் வரும் போது மீண்டும் கால் இடறி விட, அதே இடத்தில் பால் முழுவதும் கொட்டி விடுகிறது. இந்தச் சம்பவம் அடுத்து வந்த நாட்களிலும் நடைபெறுவது வாடிக்கையாகி விட, மறுநாள் பால் குடத்தை சுமந்து செல்லும் போது உடன் தனது கணவனையும் அழைத்துச் செல்கிறாள். அன்றும் முன்னர் நடந்தது போல அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் கால் இடறி பால் முழுவதும் கொட்டிவிட, உடன் வந்த கணவன் அங்குப் பூமிக்கு அடியில் புதைந்த கல் ஒன்று, வெளியில் தெண்ணிக் கொண்டிருக்க, அது தடுக்கி தான் தனது மனைவி பாலை கொட்டி விடுகிறாள் எனக்கருதிய கணவன், அந்த கல்லைப் பெயர்த்து எடுக்கும் பொருட்டு அந்த பகுதியைத் தோண்டிட, அங்கிருந்து முன்னர் பெரும்படையினர் பூஜித்த சாஸ்தா விக்கிரகம் கிடைக்கிறது. சாஸ்தா விக்கிரகம் வெளியே தெரிந்த அந்த நொடி வானம் கருத்து, இடி, மின்னலுடன் பேய் மழை பெய்கிறது. இதனால் பயந்த தம்பதியினர் அந்தச் சாஸ்தா விக்கிரகத்தை அங்கிருந்த மரத்தடியில் வைத்து விட்டு, தங்கள் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். அன்று இரவு அந்தத் தம்பதிகளின் கனவில் தோன்றிய சாஸ்தா தனது இருப்பை உணர்த்தத்தான், பாலை கொட்ட செய்து திருவிளையாடல் புரிந்ததாகக் கூறி, தனக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி வழிபட்டு வந்தால் அந்த ஊரையும், மக்களையும் காத்து நிற்பதாகக் கூறி அருள்பலிக்கிறார். இதே போல அந்த ஊரின் முக்கியஸ்தர்கள் கனவிலும் சென்று சாஸ்தா கனவில் தெரிவிக்க, மறுநாள் விடிந்ததும், அனைவரும் ஊர்மக்கள் முன்னிலையில் கூடிப் பேசி, ஒன்றாகத் திரண்டு சென்று அந்தச் சாஸ்தாவை வழிபாட்டு வந்தனர். அன்று முதல் இந்தப் பகுதியில் வீற்றிருந்து பெரும்படையினர் வணங்கிய சாஸ்தா, இந்த ஊர் மக்களையும் காத்து அருள்புரிகிறார். பின்னர் வந்த காலத்தில் இந்த ஊர் மக்களின் முயற்சியால் தற்போது இருக்கும் கோவில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்டு இன்று வளர்ந்து நிக்கிறது. இன்று பல குடும்பங்களுக்குக் குல சாஸ்தாவாக விளங்குகிறார் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருக்கோவில் சிறப்புகள் (Iruvappapuram Perumpadai Sastha kovil sirappugal)
இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா கோவிலில் இந்து – முஸ்லீம் ஆகிய இருமதத்தினரும் ஒற்றுமையாக வழிபடும் கோவிலாகத் திகழ்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்தச் சாஸ்தா கோவில் அருகிலேயே இஸ்லாமிய தர்காவும் உள்ளது.
இருவப்பபுரம் பெரும்படையார் சாஸ்தா கோவிலின் வரலாற்றை இரண்டு முஸ்லீம் சகோதரர்கள் தொகுக்க ஆசைகொண்டு இங்குள்ள மரத்தடியில் அமர்ந்து இயற்றிக் கொண்டிருந்த வேளையில், மஹான்களாகத் திகழ்ந்த அந்த இரண்டு சகோதரர்களும் அந்த மரத்தின் அடியிலேயே முக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே இந்தச் சாஸ்தா கோவிலின் அருகே அந்த இருவருக்கும் தர்கா அமைக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திரம் அன்று இருவப்பபுரம் சாஸ்தா கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எண்ணற்ற இந்து குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அருகில் உள்ள தர்காவுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். தர்காவுக்கு வரும் இந்து மக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு வருவது சிறப்பம்சம் ஆகும்.
இஸ்லாம் சமய மக்களும் பாகுபாடின்றி இந்தச் சாஸ்தா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை இன்றும் காணலாம்.
இருவப்பபுரம் சாஸ்தா கோவிலின் முன்னர் குதிரை மேல் அமர்ந்த நிலையில் சுதை சிற்பமாகப் பட்டாணி சாமி காட்சி தருகிறார். பட்டின சாமி என்ற பெயரே பின்னல் பட்டாணி சாமியென மருவி அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இருவப்பபுரம் சாஸ்தா கோவிலின் மணி மண்டபத்தைச் சென்னையை சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி கட்டிக்கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முற்காலத்தில் இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கொற்கை என்னும் ஊர் தான் பெரிய துறைமுகமாக விளங்கியுள்ளது. அந்தச் சமயத்தில் வணிகம் செய்யச் செல்லும் வியாபாரிகள் இங்கு வந்து இந்தச் சாஸ்தாவை வணங்கி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூல் சம்மந்தமாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டு இந்த இருவப்பபுரம் ஊரில் வரி வசூல் செய்யப்படும் பொது ஏற்பட்ட பிரச்சனையே எனக் கூறப்படுகிறது. எனவே வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் பகை உருவாகக் காரணமாக இருந்த ஊர் என்ற வரலாற்று சம்பவங்களை தாங்கி நிற்கிறது.
பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ பேரரசன் ராஜ ராஜா சோழனின் ஆட்சிக் காலத்தில் அவனுடைய பெரும்படையான வலங்கை மகா சேனை இந்தப் பகுதியில் தங்கியிருந்து இந்தச் சாஸ்தாவை வணங்கியதற்கு ஆதாரமாகப் பெருங்குளம் திருவழுதீஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
இருவப்பபுரம் சாஸ்தா பெரும்படை சாஸ்தா திருக்கோவில் இந்தச் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்கு எல்லாம் தலைமை கோவிலாக விளங்குகிறது.
இருவப்பபுரம் பெரும்படை சாஸ்தா திருக்கோவில் இருப்பிடம் / செல்லும்வழி (Iruvappapuram Perumpadai Sastha Temple Location)