திருச்செந்தூர் அருகில் உள்ள மேலப்புதுக்குடி ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்.
மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்.
பரிவார மூர்த்திகள்:
- பேச்சியம்மன்
- பரமேஸ்வரி அம்மன்
- கருப்பசாமி
- சுடலைமாடன்
- வன்னிச்சி அம்மன்
- வன்னியராஜன்
- இருளப்பன்
- இசக்கியம்மன்
- பட்டாணி சாமி
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் வரலாறு (History of Arunjunai Katha Ayyanar temple):
முற்காலத்தில் தேரிக்காடாக இருந்த இந்த பகுதியைச் சிங்கவர்மன் என்னும் மன்னன் திருவைகுண்டத்தில் இருந்து ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் ஒரு சுனை இருந்தது. அந்தச் சுனையில் தண்ணீர் மிகவும் தெளிந்த நிலையில் சுவை மிக்கதாக இருக்குமாம். எனவே அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த சுனையில் இருந்து தண்ணீரை எடுத்துச் செல்வார்களாம். அப்பகுதியில் வாழ்ந்த கனகமணி என்னும் பெண் ஒருநாள் இந்தச் சுனைக்கு வந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் போது வழியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கால் இடறி தான் கொண்டு வந்த தண்ணீரை கொட்டி விடுகிறாள். இதனால் தவம் கலைந்து எழுந்த முனிவர் கனகமணியை நோக்கிக் கவனக்குறைவால் கால் இடறி என் மீது தண்ணீரை கொட்டிய உன் கையால் யார் தண்ணீர் வாங்கி அருந்தினாலும் அவர்கள் மாண்டு போவார்கள், இந்த உண்மையை அவர்களிடம் கூறினால் நீ மாண்டு போவாய், உன் இறுதி காலத்தில் நீ செய்யாத ஒரு குற்றத்துக்காகத் தண்டனை பெற்று இறந்து போவாய் என அடுக்கடுக்காகச் சாப மழையை பொழிந்து விடுகிறார்.
தனது நிலைமையை உணர்ந்த கனகமணி முனிவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள். இதனால் சற்று மனம் இறங்கிய முனிவர் கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது என்பதால், நீ இறக்கும் தருவாயில் கூறும் அனைத்தும் பலிக்கும், நீ இறந்த பின்னர் சொர்க்கலோக பதவி அடைவாய் என நல்வார்த்தை கூறுகிறார். தனக்கு வாய்த்த விதி அவ்வளவு தான் என நினைத்த கனகமணி தனது மனதை தேற்றிக்கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். இப்படி இருக்கையில் ஒருநாள் கனகமணி சுனைக்கு சென்று தண்ணீர் எடுக்கும் போது சுனையின் கரையில் இருந்த மாமரத்தில் இருந்து நன்கு பழுத்த மாம்பழம் ஒன்று அவளை அறியாமலே அவளுடைய குடத்துக்குள் விழுந்து விடுகிறது. மாம்பழம் தனது குடத்துக்குள்ள விழுந்ததை அறியாத கனகமணி தண்ணீர் நிரம்பிய குடத்துடன் தனது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த மாமரத்தின் கனி அந்தப் பகுதியை ஆண்ட மன்னன் சிங்கவர்மன் விரும்பி உண்ணும் கனியாகும். அதன் சுவையில் கட்டுண்ட மன்னன் அந்த மரத்தில் இருந்து விழும் கனியைத் தன்னை தவிர யாரும் புசித்து விடக் கூடாது எனக் கருதி அந்த மரத்தைச் சுற்றி தனது அரண்மனை வீரர்களை காவலாளியாக நியமித்து இருந்தான். இந்நிலையில் காவலர்களுக்கும் தெரியாமல் அந்தக் கனி இந்தக் கனகமணியின் குடத்துக்குள் விழுந்து விடுகிறது.
அருகிலுள்ள கோவில்கள்
(Nearby Temples) by Car
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car
- Pathu Kan paalam - 12min(4.2km)
- Nazareth Lake - நாசரேத் ஏரி - 29min(10.8km)
- Red Desert in Thirunelveli - 23min(9.8km)
- Thalaivanvadali canal - 23min(12.3km);
மரத்தில் பழுந்திருந்த கனியை திடீரெனக் காணமால் காவலாளிகள் திகைத்தார்கள். ஒரு வேளை சற்று முன் வந்து தண்ணீர் எடுத்துச் சென்ற கனகமணி திருடிச் சென்றிருக்கலாம் என நினைத்த வீரர்கள், அவளை தேடிச் சென்றனர். கனகமணி தனது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த வழிப்போக்கர்கள் சிலர் அவளிடம் தாகமாக இருக்கிறது அதனால் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்கிறார்கள். அப்போது தான் கனகமணிக்கு முனிவர் அளித்த சாபம் நினைவுக்கு வருகிறது. தன கையால் தண்ணீர் பருகினால் அவர்கள் இறந்துவிடுவார்கள் எனப் பயந்து தண்ணீர் கொடுக்காமல் சென்றுவிடுகிறாள். இந்நிலையில் கனகமணி தனது வீட்டிற்கு செல்லவும், அங்கு அரண்மனை காவலர்கள் வரவும் சரியாக இருந்தது. காவலர்கள் கனகமணியின் குடத்தை வாங்கி சோதனையிட அதற்குள் மாம்பழம் கிடக்கிறது. ஆகா கனகமணி பழத்தைத் திருடி விட்டதாகக் கருதி அவளை அரண்மனைக்கு இழுத்து சென்று அரசன் முன்னர் நிறுத்துகின்றனர். அரச சபையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, குடிக்க தண்ணீர் கேட்டுத் தராத கோபத்தில் இருந்த வழிப்போக்கர்கள் அந்தக் கோபத்தில் அரச சபைக்கு வந்து கனகமணியே பழத்தைத் திருடினாள், அந்தப் பழம் தனது குடத்துக்குள்ள இருந்ததால் தான் தாங்கள் தாகத்துக்கு தண்ணீர் கேட்ட போது கூடத் தரவில்லை எனச் சாட்சி சொல்ல, அதனை நம்பிய மன்னனும் அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறான். தன மீது குற்றம் இல்லை எனக் கனகமணி கூறியும் மன்னனின் மனது மாறவில்லை. இந்நிலையில் பேச்சி என்ற பெண்ணொருத்தி வந்து பழம் அவளது குடத்திற்குள் விழுந்தது அவளுக்கே தெரியாது, அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு எனக் கூறுகிறாள். இருந்தும் மன்னர் விதித்த தண்டனை படி கனகமணிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.
முனிவர் அவளுக்கு அளித்த சாபத்தின் படி அனைத்தும் சரியாக நடப்பதை அவள் உணர்ந்தாள். தனது மரணத்திற்கு முந்தைய கடைசி தருவாயில், தான் வணங்கும் தனது இஷ்ட தெய்வமான சாஸ்தாவை வேண்டி, தான் செய்யாத தப்புக்காக இந்தத் தண்டனையை அனுபவிக்கிறேன். அதற்கு நீயே பொறுப்பு எனக் கூறி தனது உயிரை துறக்க, உயிர் பிரிந்த அடுத்த நொடி அங்குச் சாஸ்தா தோன்றி கனகமணி நீ விரும்பினால் உனக்கு மீண்டும் உயிர் தருகிறேன் எனக் கூற, கனகமணியோ எனக்கு மீண்டும் ஒரு பிறவி வேண்டாம் என கூற, சாஸ்தா அவளுக்கு வேண்டும் வரம் வழங்குவதாகக் கூறி அருள்கிறார். அதற்குக் கனகமணி உங்கள் எல்லையில் உள்ள தேரிக்காட்டில் நான் சுனையாக மாறி இருக்க வேண்டும், என் கையால் தண்ணீர் குடித்தவர்கள் மாண்டு போவார்கள் என்ற நிலை மாறி, சுனையில் இருக்கும் தண்ணீரை குடிப்பவர்கள் சகல நோய்களிலும் இருந்து விடுபட்டு நல் வாழ்க்கை வாழ வேண்டுமெனவும், அந்தச் சுனையை காத்து அதன் கரையில் சாஸ்தா குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமெனவும் வரம் கேட்கிறாள். அவள் விரும்பிய வரத்தைச் சாஸ்தாவும் வழங்கிட, கனகமணி அழகிய சுனையாக மாறிவிடுகிறாள். சாஸ்தாவும் அந்தச் சுனையின் கரையில் தன தேவியர்களோடும், பரிவார மூர்த்திகளுடனும் குடிகொள்கிறார். கனகமணி கேட்ட வரத்தின் படி சுனையை காத்து சாஸ்தா அருள்புரிவதால், இவர் அருஞ்சுனை காத்த அய்யனார் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.
அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car
அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car
மேலப்புதுக்குடி திருக்கோவில் சிறப்புகள் (Melaputhukudi Temple Specialities):
- பங்குனி உத்திரம் அன்று இங்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். பல குடும்பங்களுக்கும் குல சாஸ்தாவாக அருஞ்சுனை காத்த அய்யனார் விளங்குகிறார்.
- இங்குள்ள சுனையின் தண்ணீர் தெளிவாகவும் மிகுந்த சுவையுடையதாகவும் இருக்கும்.
- இவர் தேரிக் குடியிருப்பு கற்கு வேல் அய்யனாரின் சகோதரராக விளங்கி வருகிறார் என்றும் இப்பதி மக்கள் கூறுகிறார்கள்.
- கனகமணி அறியாமல் அவள் குடத்தில் மாம்பழம் விழுந்து விட்டது என அரச சபையில் தைரியமாகப் பேசிய பெண்ணே, இங்குப் பேச்சி அம்மனாக வீற்றிருக்கிறாள் என்றும் கூறப்படுகிறது.
- இங்குள்ள சாஸ்தா ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனாரை வணங்கி, வேண்டிக் கொண்டால் குழந்தை வரம், தொழிலில் மேன்மை, நல்ல வேலைவாய்ப்பு, திருமண யோகம் ஆகியவை கைகூடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.
இந்த கோவிலின் நுழைவு வாயிலில் அரசமரத்தின் அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாகர், குதிரை, யானை சிலைகள் உள்ளன.
மேலப்புதுக்குடி திருக்கோவில் செல்லும் வழி (Directions to Melaputhukudi Temple) :
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன்புரம் என்னும் ஊரில் இருந்து, தெற்கே பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது மேலப்புதுக்குடி ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில். நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஏறி அம்மன்புரத்தில் இறங்கி அங்கிருந்து தனியார் வாடகை வாகனங்கள் மூலம் இந்த கோவிலை எளிதில் சென்று அடையலாம்.