திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில்.

மூலவர்: ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ மயிலேறும் பெருமாள் சாஸ்தா.

 1. பரிவார மூர்த்திகள்:
 2. விநாயகர்
 3. பாதாள கன்னியம்மன்
 4. சுடலை மாடசாமி
 5. நாகராஜர்
 6. வீரபத்திரர்
 7. பிண மாலை சூடும் பெருமான்
 8. நல்ல மாடசாமி
 9. லாட சந்நியாசி

திருக்கோவில் வரலாறு:

இந்தக் கோவிலின் சாஸ்தா, தனது வாகனமாக யானைக்குப் பதிலாக மயிலைக் கொண்டுள்ளார். அதனால் மயிலேறும் பெருமாள் சாஸ்தா என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இது தவிர இந்தச் சாஸ்தா கோவிலைப் பற்றிய வேறு எந்தச் சரியான வரலாறும் கிடைக்கவில்லை. முருகப்பெருமானும், சாஸ்தாவும் அண்ணன் தம்பிகள் என்பதால், தங்கள் பால பருவத்தில், ஒருவர் வாகனத்தை இன்னொருவர் மாற்றி ஏறி விளையாடிய கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மயிலேறும் பெருமாள் சாஸ்தா பல ஆண்டு காலமாக இந்தப் பகுதியில் பூர்ணா மற்றும் புஷ்கலா தேவியர்களுடன் அமர்ந்து அரசாட்சி செய்து வருகிறார்.

பாதாள கன்னியம்மன் வரலாறு:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தச் சாஸ்தா கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியில் ஏழு சகோதரர்களும், அவர்களுக்கு ஒரே தங்கையும் என குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்தத் தங்கையின் பெயர் கன்னியம்மாள் ஆகும். கன்னியம்மாள் திருமண பருவத்தை எட்டிட அவளுக்கு வரன் பார்க்கத் துவங்கினார்கள். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேட்டையாட வந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், கன்னியம்மாளை கண்டு அவளின் அழகில் மயங்கி விடுகிறார். அந்தப் பெண்ணை அடைவதற்காகப் பல சூழ்ச்சிகளை செய்தும், மிரட்டியும் ஆங்கிலேய அதிகாரி அவளுடைய குடும்பத்திற்கு நெருக்கடி கொடுக்கிறான். ஆங்கிலேய அரசாட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அதிகாரியை எதிர்த்து நம்மால் போரிட முடியாது என்றும் அதே நேரத்தில் நம் தங்கையைப் பயந்து ஆங்கிலேய அதிகாரிக்குக் கட்டிக்கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்து, தாங்கள் வணங்கும் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவிலுக்குத் தங்கள் தங்கையைக் கூட்டிச் சென்று சாமி கும்பிட்டு விட்டு, அந்தக் கோவிலின் அருகிலேயே மிகப்பெரிய குழிவெட்டி அதனுள் தங்கள் தங்கையை உயிரோடு இறக்கி, மண்ணை போட்டு மூடிச் சமாதியாக்கி விடுகிறார்கள். உயிரோடு தங்கள் தங்கையைக் கொன்று விட்டோமே என கருதி, கன்னியம்மாளை குழி தோண்டி புதைத்த இடத்தில் அவள் நினைவாக ஒரு சிலையைச் செய்து வைத்து வணங்கி வந்தார்கள். பாதாளத்துக்குள் புதைக்கப்பட்ட கன்னியம்மாளே இங்குப் பாதாள கன்னியம்மன் என்ற பெயரில் அமர்ந்து இப்பகுதி மக்களை காத்து அருள்புரிவதாக வரலாறு கூறப்படுகிறது.

திருக்கோவில் சிறப்புகள்:

 1. இங்குக் கருவறையில் உள்ள மயிலேறும் பெருமாள் சாஸ்தா தனது வாகனமாக மயிலைக் கொண்டுள்ளார்.
 2. திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து பாதாள கன்னியம்மனை வேண்டிக்கொண்டு பால் அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
 3. இங்குப் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்று இந்தச் சாஸ்தாவை தங்கள் குல சாஸ்தாவாக வழிபடும் குடும்பத்தினரும், பாதாள கன்னியம்மனை தங்கள் குல தெய்வமாக வழிபடும் குடும்பத்தினரும் இங்கு வந்து பொங்கலிட்டும், படையல் இட்டும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
 4. பங்குனி உத்திரத்தன்று இங்குள்ள பாதாள கன்னியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு விசேஷ தீபாராதனைகளும் நடைபெறும்.
 5. இங்குச் சாஸ்தாவின் எல்லைக்குள் வீற்றிருக்கும் சுடலைமாட சுவாமிக்கும் சைவ படையல் பூஜையே நடைபெறும்.
 6. பங்குனி உத்திரம், தமிழ் மாத கடைசி வெள்ளி மற்றும் தமிழ் மாத கடைசி சனி ஆகிய தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இருப்பிடம் / செல்லும் வழி:

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊரின் அருகே அமையப்பெற்றுள்ளது நளங்குடி ஸ்ரீ மயிலேறும் பெருமாள் சாஸ்தா திருக்கோவில். இங்கு செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, ஏரல் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளில் ஏறி ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையத்தில் இறங்கி, தனியார் வாடகை வாகனங்கள் மூலம் கோவிலைச் சென்று அடையலாம்.

About Lakshmi Priyanka

Check Also

பாப்பாங்குளம் சடையுடையார் சாஸ்தா கோவில்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில் மூலவர்: ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.