இந்தியாவில் கொண்டாடப்படும் விசேஷமான பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை என்று சொல்லக்கூடிய கல்வி, செல்வம் ,வீரம் இவை அனைத்தும் கொடுக்கக்கூடிய முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி லக்ஷ்மி, துர்க்கை தேவியரை வழிபடக்கூடிய 9 நாட்களே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.ஒன்பது இரவுகள் என்று சொல்லக்கூடிய இந்த விழாவில் பத்தாவது நாள் வெற்றிக்கு அடையாளமாக விஜயதசமியாக கொண்டாடப்படுகின்றது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ்க்கையில் வளம் சேர்க்கக்கூடிய நவராத்திரி விழாவை மக்கள் மிகுந்த பக்தியோடும் கோலாகலத்துடன் கொண்டாடுகின்றனர்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை விழா நடைபெறுகின்றது அன்றைய தினத்தில் அறுசுவை உணவுகள், நவதானிய சுண்டல் வகைகள், பழங்கள் வைத்து அம்பிகையை வழிபடுகின்றனர். விரதம் கடைபிடிக்கும் போது அம்மனுக்குரிய பாடல்களை பாடுதல், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் , 108 அம்மன் போற்றி படித்தல் இவை அனைத்தும் முறைப்படி வணங்கி வழிபடக்கூடிய முறையாகும்.குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள், வீட்டில் பயன்படுத்தக்கூடிய கருவிகளை வைத்து படைப்பது என்பது ஆயுத பூஜையின் சிறப்பாகும்.
நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளில் அம்மனை வழிபாடு செய்யப்படும் உன்னதமான திருவிழா என்பதுதான் இதன் பொருளாகும் மகிஷாசுரனை அழிப்பதற்காக எடுத்துக்கொண்ட ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.நவராத்திரியின் பொழுது அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியாகவும் வழிபாடு செய்கின்றனர். மகேஸ்வரி, வராகி, கௌமாரி, மகாலட்சுமி, இந்திராணி, வைஷ்ணவி, சரஸ்வதி, சாமுண்டி, நரசிம்ஹி என ஒன்பது ரூபங்களில் அம்பிகை காட்சி தருகின்றாள். காட்சி தரும் அதே
அம்பிகையை நூற்றியெட்டு திருநாமங்களாலும் இந்த நவராத்திரி பூஜையில் அனைவரும் போற்றுகின்றனர்.
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அடுத்த பிரதமை தொடங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான நவதானிய சுண்டல் வகைகளை வைத்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து படைத்து வணங்குதல் சிறப்பு வாய்ந்ததாகும் .நவராத்திரி திருவிழா புரட்டாசி மாதத்தில் வருவதற்கான முக்கியமான காரணம் வெயில், மழை, குளிர் மூன்றும் ஒருசேர அமைந்த புரட்டாசி மாதத்தில் பொழிகின்ற மழையால் ஏற்படுகின்ற குளிர்ச்சியை பூமி உள்வாங்கிக் கொண்டு வெப்பத்தை வெளியிடும் காலமாக இந்த புரட்டாசி மாதம் அமைகின்றது.. இதனால் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்கு சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்கின்றனர்.
முன்னொரு காலத்தில், நிசும்பன், சும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிகின்றனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் துன்புற்றனர். தவசீலர்கள் வேள்விகள் செய்யும்போது அந்த அசுரர்களால் வேள்வி தடைப்பட்டது
தேவலோகம் முதல் பூலோகம் வரை அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று நினைத்த தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். பிரம்மனும் சேர்ந்து கொள்ள மூவருமாக ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது அவர்கள் பெற்ற வரம் என்பதால் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்திக்கின்றனர்.
ஆதி சக்தியும் மக்களின் துன்பத்தினை போக்குவதற்கு அழகிய மங்கையாக வடிவம் கொண்டு பூமிக்கு வருகின்றாள்.பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து தன் சக்திகளை ஆதி சக்தியான அன்னைக்கு கொடுத்துவிட்டு சிலையாகினர். அதே போலவே திக்குப் பாலர்களும், இந்திரனும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் நவராத்திரியில் பொம்மை கொலு வைக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
பிரம்மா விஷ்ணு சிவன் அனைவரின் சக்தியையும் பெற்ற அன்னை இந்திரனும் திக்கு பாலர்களும் கொடுத்த அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், ஒன்பது நாட்கள் போரிட்டு அழிக்கின்றாள். அந்த நாளே நவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது என்ற வரலாறும் கூறப்படுகின்றது..
போரை உற்சாகமாக நடத்துவதற்கும் ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒன்பது இரவுகள் நடைபெற்றது. அந்த இரவுகள்அம்பிகையை குறித்த பாடல்கள் ஆடல்கள் என கொண்டாட்டமாக இருந்ததால் நவராத்திரி விழா இன்றும் மக்கள் மகிழ்ச்சியோடு நவராத்திரி விழாவை கடைப்பிடித்து வருகின்றனர்.
10வது நாளாக அசுரர்களை அழித்து ஆதிசக்தி வெற்றி பெற்ற தினமே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது
ஓரறிவு முதல் அனைத்து ஜீவராசிகளையும் காத்து அருள்பவள் அம்பிகை என்பதை உணர்த்தும் வகையில் நவராத்திரியின் போது கொலு அமைத்து வழிபடுகின்றனர்.
மனித பிறவியிலிருந்து படிப்படியாக உயர்ந்து தெய்வீக நிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்துகின்ற ஒரு அற்புதமான வழிபாடு நவராத்திரி வழிபாடாகும்
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அன்று அம்பிகை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு அனைவராலும் வணங்கப்பெறுகிறாள். அன்று சரஸ்வதி கடாட்சம் நிறைந்திருக்கும் நாள் என்பதால்அறிவாற்றல் கொடுக்கக்கூடிய சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.. புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. என்று சொல்கின்றனர். மூன்று சக்திகளும், தீய சக்தி யை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுப நாள் என்பதால் இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி பெறும் என்பதால் மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.நைவேத்தியமாக பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள் வைத்து படைக்க வேண்டும். வாசனைப் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தது. நவராத்திரி விழாவில் இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் பதினாறு செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்வர் என்பது ஐதீகமாகும்.
குழந்தையின் அறிவாற்றலை பெறுவதற்கு தொடங்கும் நாளாக வித்யாரம்பம் என்று அழைக்கப்படுகின்றது சிறு குழந்தைகள் முதன்முதலில் கல்வியைத் தொடங்குவதற்கு எந்த நாளை தேர்வு செய்து ஆரம்பித்தால் நல்ல அறிவாற்றல் வளமாக குழந்தைகள் வளர்வார்கள் என்பதால் அன்றைய தினத்தில் முதன்முதலில் பள்ளியில் சேர்ப்பார்கள் விஜயதசமி அன்று கோவில்களில் நெல் மணியை வைத்து, பலகையில் குழந்தைகளை எழுத வைப்பார்கள். அப்படி எழுதுவதால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும் செய்து அதற்கான பலன் பெற்றுள்ளனர். ராமபிரான் நாரதரின் அறிவுரைப்படி நவராத்திரி முறையாக வழிபட்டு ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார் என்று இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் நவராத்திரி பூஜை வழிபட்டு வழிபட்டதால்தான் போரில் வெற்றி பெற்றார்கள்.
நவராத்திரி திருவிழா மைசூரில் தசரா பண்டிகை மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகின்றது. அதுபோலவே தமிழகத்தில் தூத்துக்குடியில் உள்ள குலசேகரபட்டி முத்தாரம்மன் கோவிலிலும், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை சிறப்பாக நடைபெறுகின்றது.