திருநெல்வேலி புளிக் குழம்பு.
திருநெல்வேலி புளிக்குழம்பு (nellai cooking / Tirunelveli Recipe / Tirunelveli Puli Kulambu) தனித்துவமான சுவையுடன் காரசாரமாக இருக்கும். இந்த குழம்பு செய்யும் முறையும் எளிமையானது தான். இந்த குழம்பில் முருங்கைக்காய் அல்லது கத்திரிக்காய் சேர்ப்பது கூடுதல் சுவை தரும். காய்கறிகள் இல்லையென்றால் கூட, வெங்காயம் மற்றும் பூண்டுகளுடன், சுண்டை வற்றல் சேர்த்து செய்யலாம். இந்த குழம்பு மீதமானாலும், கடைந்த கீரை மற்றும் கூட்டு ஆகியவற்றை குழம்புடன் சேர்த்து சுண்ட வைத்தால், மறுநாள் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். சூடான சாதத்தில், பருப்பு போட்டு அதன் மீது ஒரு தேக்கரண்டி நெய் விட்டு இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால், தேவாமிர்தமாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வறுத்த முருங்கை கீரை பொரியல், அவியல், பூசணிக்காய் கூட்டு, தடியங்காய் கூட்டு, கடைந்த கீரை சிறந்த தொடுகறிகளாக இருக்கும். இப்போது நாம் திருநெல்வேலி புளிக்குழம்பு செய்முறை பற்றி காணலாம்.
புளி – எலுமிச்சை அளவு.
பொடி உள்ளி ( சின்ன வெங்காயம்) – 10 உரித்தது.
பூண்டு பற்கள் – 10 உரித்தது.
கடுகு / குத்துப் பருப்பு – 2 ஸ்பூன்.
வெந்தயம் – கால் ஸ்பூன்.
கறிவேப்பிலை – இரண்டு கொத்து.
உப்பு – தேவைக்கு.
நல்லெண்ணெய் – 1 கரண்டி.
மொச்சை கொட்டை – 50 கிராம்.
வறுத்து திரிப்பதற்கு:
விதை கொத்தமல்லி – 1 ஸ்பூன்.
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்.
கடலை பருப்பு – 1 ஸ்பூன்.
மிளகு – 1 ஸ்பூன்.
சீரகம் – 1 ஸ்பூன்.
அரிசி – 1 ஸ்பூன்.
மிளகாய் வத்தல் – 8.
திருநெல்வேலி புளிக்குழம்பு (Tirunelveli Pulikulambu Recipe) செய்முறை பற்றி காணலாம்.
முதலில் புளியை வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து அதனை கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்துத் திரிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக, இளம் சூட்டில் வறுத்து ஒன்றாக்கி மிக்சியில் போட்டு திரித்து கொள்ளவும். மொச்சை கொட்டையை குக்கரில் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது இருப்பு சட்டியை அடுப்பில் வைத்து அதில் ஒரு கரண்டி நல்லெண்ணையை ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, குத்து பருப்பு போட்டு தாளித்து அதனுடன் வெந்தயம், உரித்து வைத்துள்ள பொடி உள்ளி, பூண்டு பற்கள், உருவிய கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விடவும். இந்த கலவை நன்று வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, வேக வைத்த மொச்சை கொட்டை, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் திரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்து அதில் ஊற்றி உள்ள நல்லெண்ணெய் பிரிந்து வரும் தருவாயில், அடுப்பில் இருந்து இறக்கினால் திருநெல்வேலி ஸ்டைல் புளிக் குழம்பு தயார்.
புளிக்குழம்பு ருசியாக வர சேர்மானங்களை கருகிவிடாமல் பக்குவமாக வறுத்து எடுத்து திரித்துக் கொள்ள வேண்டும்.