Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi – 2)

உற்சவர் ஜெயந்தி நாதர்:

இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் பிரதான பிரதி பிம்ப உற்சவராக விளங்குகிறார் ஜெயந்தி நாதர். கந்த சஷ்டி திருவிழாவில் இவரே கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்காரம் செய்து வெற்றி பெறுவார் என்பதால் இவருக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். இவரே நித்திய உபயதாரர் கட்டளையான தங்கத் தேர் உலாவில் எழுந்தருளுவார் என்பதும் சிறப்பம்சம்.

உற்சவர் குமர விடங்கப் பெருமான்:

இங்கு சண்முகப் பெருமானின் பிரதான உற்சவராக குமர விடங்கப் பெருமான் விளங்குவதாக கூறப்படுகிறது. இவருடன் வள்ளி மற்றும் தெய்வானை அம்மைகளும் காட்சித் தருகின்றனர். இவருக்கு மாப்பிள்ளை சாமி என்ற பெயரும் வழங்கப் பெறுகிறது. இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவங்களில் இவரே மாப்பிள்ளையாக எழுந்தருள்வதால் இவருக்கு இந்த பெயர் வழங்கப்படுகிறது. ஆவணி மற்றும் மாசி திருவிழாவில் இவரே பிரதான நாயகராக தினமும் வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

சூரசம்கார மூர்த்தி:

இத் திருக்கோவில் வெளிப் பிரகாரத்தின் மேற்கு திருச் சுற்றில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்த கோலத்தில், பன்னிரு கரங்களோடு, கையில் கூர் வேல் தாங்கி சூரனை சம்காரம் செய்யும் கோலத்தில் சூரசம்கார மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சுதை வடிவில் மாமரமாக நின்று இரண்டாக பிளக்கப்படும் சூரபத்மனும் காட்சியளிக்கிறார்.

108 மகா தேவர்:

இங்கு பெரிய பிரகாரத்தின் மேற்கு திருச்சுற்றில் 108 மகா தேவர் லிங்க வடிவில் காட்சித் தருகிறார். ஒரே லிங்கத்தின் பாணத்தில் 108 சிறு லிங்கங்களை கொண்டு அற்புதமாக இவர் காட்சியளிப்பது சிறப்பம்சம்.

குமரகுருபரரை பேச வைத்த திருவிளையாடல்:

முற்காலத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுண்டத்தில் வாழ்ந்த சண்முக சிகாமணி கவிராயர் மற்றும் சிவகாமி சுந்தரி தம்பதியினருக்கு திருமணம் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை செல்வம் இல்லை. இந்த தம்பதியினர் கந்த சஷ்டியில் கடும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட, திருச்செந்தூர் முருகன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு குமரகுருபரன் என்று பெயர் சூட்டி பாராட்டி, சீராட்டி, பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.

குமரகுருபரர் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும், அவருக்கு பேச்சு வரவில்லை. அவர் தனது ஐந்து வயது வரை பிறவி ஊமையாகவே இருந்தார். அது கண்டு கவலையடைந்த அவரது பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர். தங்கள் குழந்தைக்கு பேசும் ஆற்றலை முருகப் பெருமானே தர முடியும் என்று நம்பிய குமரகுருபரரின் பெற்றோர், திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனிடம் முறையிட்டு, அங்கு தங்கியிருந்த படியே 45 நாட்களுக்கு கடும் விரதம் இருந்தனர். ஆனாலும் குமரகுருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வேதனை அடைந்த பெற்றோர், தங்கள் குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர்.45 வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்து முருகா இது என்ன சோதனை நீ கொடுத்த குழந்தையை நீ இன்று பேச வைக்காவிட்டால் நாங்கள் எங்கள் உயிரை கடலில் விழுந்து மாய்த்துக் கொள்வோம் என கூறி கதறி அழுகின்றனர். குழந்தை குருபரனோ ஏக்கத்துடன் தன் பெற்றோரை பார்த்ததுக் கொண்டிருக்க., அவனை அங்கேயே இருத்தி விட்டு, கடலை நோக்கி பெற்றோர்கள் செல்ல தயாராகிய அந்த பொழுது, அந்தக் குழந்தை முருகன் அருளால் பேசத் தொடங்கியது. பேச தொடங்கியது என்று கூறுவதை விட பாடத் தொடங்கியது எனக் கூறுவதே பொருந்தும், ஆம் குமரகுருபரனாகிய அந்த குழந்தை முருகப் பெருமான் மீது கவி மழை பாடியது. தங்கள் குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த அவனது பெற்றோர் வாயடைத்து நின்றனர். இந்த அதிசயத்தை கண்டு பக்தர்களும் திகைத்து நின்றனர். குமரகுருபரர் முதன் முதலாக வாய் திறந்து பாடிய பாடல்களின் தொகுப்பே கந்தர் கலி வெண்பா என சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறாக முருகப் பெருமான் அருளால் பேச்சு வரப் பெற்ற குமரகுருபரர் பல அற்புத நூல்களை இயற்றி, காசி மடத்தையும் தோற்றுவித்து சைவ சமயத்திற்கு புகழ் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் அமைப்பு:

வானளாவிய ஒன்பது நிலை ராஜ கோபுரத்தை மேற்கு திசையில் கொண்டு கிழக்கு திசை நோக்கி கம்பீரமாக அமையப் பெற்றுள்ளது திருச்செந்தூர் செந்திலதிபன் திருக்கோவில்.

இந்த திருக்கோவில் கடற்கரையில் இருப்பதால் ராஜ கோபுரம் மேற்கு பக்கம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ராஜ கோபுர வாயிலானது வருடத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே திறக்கப்படும். மற்ற நாட்களில் திருக்கோவிலுக்குள் செல்ல தெற்கு திசையில் உள்ள வாசலே பயன்படுத்தப்படுகிறது. தெற்கு திசை வாசலில் சண்முக விலாச மண்டபம் கம்பீரமாக அமையப் பெற்றுள்ளது. இங்கு தான் உற்சவ காலங்களில் சுவாமி எழுந்தருளி சேவை சாதிப்பார்.

சண்முக விலாச மண்டபத்தை தாண்டி குடவருவாயில் வழியாக உள்ளே நுழைந்தால் பெரிய பிரகாரம், உள் பிரகாரம் தாண்டி நேராக சண்முகர் சன்னதி.

சண்முகர் சன்னதிக்கு மேற்கே கிழக்கு திசை நோக்கிய கருவறையில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. சுப்பிரமணியர் சன்னதி வாயிலின் இருபுறமும் வீரபாகு மற்றும் வீரமார்த்தாண்டர் துவாரபாலகர்களாக காவல்புரிகின்றனர். சுப்பிரமணியர் சன்னதிக்கு தெற்கே பார்வதி அம்மை மற்றும் கரிய மாணிக்க விநாயகர் சன்னதி அமையப் பெற்றுள்ளது. சுப்பிரமணியர் சன்னதிக்கு பின்புறம் பாம்பறையில் பஞ்ச லிங்கம் சன்னதியும், சண்முகர் சன்னதிக்கு மேற்கு புறம் உற்சவர் ஜெயந்தி நாதர் சன்னதி மற்றும் கிழக்கு புறம் உற்சவர்களான நடராஜர், அலைவாயுகந்தப் பெருமான் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்த உள் பிரகாரத்தின் கிழக்கு திருச் சுற்றில் சுப்பிரமணியர் சன்னதிக்கு நேர் எதிரே, தங்க கொடிமரம் இருக்கிறது. தெற்கு திருச் சுற்றில் குமரவிடங்கப் பெருமான் சன்னதி, அறுபத்து மூவர் சன்னதி, மேதா தட்சிணா மூர்த்தி சன்னதி, வள்ளி அம்மை சன்னதி மற்றும் மேற்கு திருச் சுற்றில் ஏகாம்பர நாதர், விசுவநாதர், சொக்கநாதர் சன்னதி, கந்த சஷ்டி யாகசாலை, பால சுப்பிரமணியர் சன்னதி, தெய்வானை சன்னதி ஆகியவையும் இருக்கிறது.

வடக்கு திருச்சுற்றில் மயூர நாதர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, வீரபாண்டிய கட்டபொம்மன் பூஜித்த ஜக்கம்மா மற்றும் உற்சவர்கள் சன்னதி, சிவகாமி அம்மை உடனுறை நடராஜர் சன்னதி, சனீஸ்வரர் மற்றும் பைரவர் சன்னதி ஆகியவைகளும் இருக்கிறது.

இதற்கு அடுத்த பெரிய பிரகாரத்தில் சுப்பிரமணியருக்கு நேர் எதிரே செப்புக் கொடி மரமும், கல்யாண விநாயகர் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இரணுடாம் பிரகாரத்தின் மேற்கு திருச்சுற்றில் சித்தி விநாயகர், நூற்றியெட்டு மகா தேவர் சன்னதி, சூரசம்கார மூர்த்தி சன்னதி, அருணகிரி நாதர் சன்னதி மற்றும் மேற்கு ராஜ கோபுர வாயிலுக்கு நேர் எதிரே வல்லப கணபதி சன்னதி ஆகியவைகளும் இருக்கிறது. இந்த பிரகாரத்தின் வடக்கு திருச்சுற்றில் சந்தனா மலையும், வெங்கடாசலபதி, மகாலட்சுமி, பள்ளி கொண்ட ரங்கநாதர் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

திருக்கோவிலுக்கு வெளியே பிரகாரத்தில் அன்னதான மண்டபம், யானை வளர்ப்பு மண்டபம், வசந்த மண்டபம், ராஜ கோபுர வாயில், சங்கிலி பூதத்தார் சன்னதி, வள்ளி குகை ஆகியனவும் கடற்கரையும் அமையப் பெற்றுள்ளன. இத் திருக்கோவிலின் தென் திசையில் நாழிக் கிணறு தீர்த்தமும், வட மேற்கு திசையில் சரவணப் பொய்கை தீர்த்தமும் அமையப் பெற்றுள்ளது.

-தொடர்ச்சி பகுதி-3ல் காண்க.

-திருநெல்வேலிக்காரன்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!