காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்

காரையார்  சொரிமுத்து அய்யனார் கோவில்.

திருநெல்வேலி மாவட்டம்.,  மேற்கு தொடர்ச்சி மலையில்,  காரையார்  வனப்பகுதியில்  தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது சொரிமுத்து முத்து அய்யனார் கோவில். சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் கருதப்படும் இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

மூலவர்: 1. பூர்ணா மற்றும் புஷ்கலா உடனுறை ஸ்ரீ சொரிமுத்து அய்யனார்,

 1. ஸ்ரீ மகாலிங்க சுவாமி.

பரிவார மூர்த்திகள்: 1.  சங்கிலி பூதத்தார் – அகத்தியர்,

 1. பிலாவடி  இசக்கியம்மன்,
 2. மேலவாசல் பூதத்தார்,
 3. மணிமுழுங்கி மரத்தடி விநாயகர்,
 4. மணிமுழுங்கி மரத்தடி பூதத்தார்,
 5. மணிமுழுங்கி மரத்தடி பாதாளகண்டிகை,
 6. மணிமுழுங்கி மரத்தடி   கும்பாமணி,
 7. கரடி மாடசாமி,
 8. சுடலை மாடசாமி,
 9. பேச்சியம்மன்,
 10. பிரம்மராட்சி அம்மன்,
 11. தூசி மாடசாமி,
 12. தளவாய் மாடசாமி,
 13. கச மாடன் –  கச மாடத்தி,
 14. பொம்மக்கா –  திம்மக்கா   உடனுறை  பட்டவராயன் சுவாமி.
 15. பைரவர்.

 திருக்கோவில் விருட்சம்:  மணிமுழுங்கி மரம் எனப்படும் இலுப்பை மரம்.

திருக்கோவில்  தீர்த்தம்:  தாமிரபரணி.

திருக்கோவில் பற்றிய சுருக்கமான  வரலாறு:

 முற்காலத்தில்  கயிலையில் பார்வதி பரமேஸ்வரனுக்கு நடைபெறும் திருமணத்தைக் காண   முப்பத்து முக்கோடி தேவர்களும்,   முனிவர்களும் என அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால்  உலகின் வடபகுதி தாழ்ந்து,  தென் உயர்ந்தது.  உலகை சமன்படுத்த பரமேஸ்வரன் அகத்திய பெருமானே  தென் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.  இறைவனின் உத்தரவுப்படி தென்பகுதிக்கு வந்த அகத்தியர் தற்போது இந்தக் கோயில் அமைந்திருக்கக்கூடிய  இடத்தில் தாமிரபரணியில் நீராடி முடித்து,  தன் நித்ய  அனுஷ்டானங்களை  செய்தபின்னர் யோக நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்படி அவர் யோக நிஷ்டையில் ஆழ்ந்து இருந்தபோது அவருடைய மனக்கண்ணில் ஒரு ஜோதியானது  அவரை கடந்து செல்வது போல் தெரிகிறது.  உடனே கண் விழித்துப் பார்த்த அகத்தியர்,  தன் யோக நிஷ்டை அந்த ஜோதி சென்ற இடத்தை அறிந்து கொள்கிறார்.   அந்த இடத்திற்கு சென்று பார்க்கும்போது அங்குச் சாஸ்தா,  சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை  செய்துகொண்டிருந்தார்.  அவரை சுற்றி   சங்கிலி பூதத்தார்,  பிரம்ம ராட்சி, பேச்சி,  தளவாய் மாடன்,  போன்ற  காவல் தெய்வங்கள் நின்று கொண்டிருந்தன.  சாஸ்தா சிவபெருமானை பூஜித்த அந்த நேரத்தில் வானிலிருந்து தேவர்கள் அனைவரும் மலர் சொரிந்து மகிழ்ந்தனர்.  இந்தக் காட்சி கண்ட அகத்தியர்,  உடனே அங்குச் சென்று சாஸ்தாவை  வணங்கி,  அவருக்குச் சொரிமுத்து அய்யனார் என்னும் பெயர் சூட்டி  மகிழ்ந்து  அவர்  பிரதிஷ்டை செய்த  சிவலிங்கத்தை தான் பூஜித்து வணங்கினார்.பிற்காலத்தில் இந்தச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம்  மணல்மேடுகள் மூடப்பட்டு  பூமிக்கு அடியில் குறைந்து விட்டது. 

பின்னர் வந்த காலங்களில்  இந்த இடத்தில் சேர நாட்டிற்கும்,  பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிக சந்தை நடைபெற்றது.  இங்குப் பண்டமாற்று முறையில் இரு நாட்டு மக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.  அப்படி சந்தை ஒரு நாள் அன்று  வணிகர்கள் பொதி மூட்டையை சுமந்து வரப் பயன்படுத்திய காளை மாட்டின் காலடி   குழம்பு பட்டு ஒரு இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு  வந்தது.  உடனே அங்கு இருந்தவர்கள் எல்லாம் பயத்தில் அலறிக் கொண்டிருக்க, இந்த இடத்தில்  சொரிமுத்தையனார் பூஜை செய்த மகாலிங்க சுவாமி புதைந்து இருப்பதாகவும்,  அந்த இடத்தைச் சீர்படுத்தி மகாலிங்கசுவாமிக்கும், சொரிமுத்து அய்யனாருக்கும், காவல் தெய்வங்களான   சங்கிலி பூதத்தார்,  தளவாய் மாடன்,  சுடலை மாடன்,  பேச்சியம்மன்,  பிரம்ம ராட்சசி அம்மன்  மற்றும் அனைவருக்கும் கோவில் எழுப்பும்படி வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது.  அதன்படி  இங்கு  இந்தக் கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மணிமுழுங்கி மரத்தின் சிறப்பு:

இந்தக் கோவிலின் தல விருட்சமான இலுப்பை மரத்திற்கு தான் மணிமுழுங்கி மணி மரம் என்று பெயர். பக்தர்கள் இங்குச் சுவாமிக்கு வேண்டிக்கொண்டு இந்த மரத்தில் வெண்கல மணிகள் கட்டி செல்கிறார்கள்.  அப்படி அவர்கள் கட்டும் மணிகள் எல்லாம் மரத்திற்கு இந்த நிலையில் காணப்படுகிறது.  இது மரமானது மணியை முழுங்குவது போல இருக்கும்.  எனவே பக்தர்கள் இந்த இலுப்பை மரத்தை மணிமுழுங்கி மரம் என்று அழைக்கின்றனர்.

திருக்கோவில்  சிறப்புகள்:

 

 1. இந்தத் திருக்கோவில்  குல சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை  பீடமாகத் திகழ்கிறது.
 2. தங்கள் குல சாஸ்தா மற்றும் குல தெய்வம் அறியாத மக்கள் கூட இங்கு வந்து இந்தச் சொரிமுத்து அய்யனாரை தங்கள் குல சாஸ்தாவாக வழி படலாம்
 3. தேவர்கள்  பூ மழை பொழிந்து அய்யனாரை வழிபட்டதால்,  இவர்  சொரிமுத்து அய்யனார் என்ற திருநாமம் தாங்கி அருள் பாலிக்கிறார்
 4. இந்தத் திருக்கோவில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு சொந்தமானதாக இருந்து வந்தது.  அதனால் இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவின்போது  ஜமீன்தார் ராஜ உடையில் தோன்றி தர்பார் காட்சி அளிப்பார்
 5. தென்மாவட்டங்களில் உள்ள அனேக மக்களுக்கு இந்தக் கோவில் குலதெய்வ கோவிலாக விளங்குகிறது
 6. இங்குள்ள சங்கிலி பூதத்தார் சன்னதியில்  பூதத்தார் உடன் அகத்திய பெருமானும் காட்சி தருகிறார்.
 7. இங்குள்ள சங்கிலிபூதத்தார் சுவாமியின் சாமிகொண்டாடிகள் இரும்பு சங்கிலியால் தங்கள் மார்பில் அடித்துச் சாமியாடுவது சிறப்பம்சம் ஆகும்
 8. இங்குள்ள பட்டவராயர் சுவாமிக்குப் பக்தர்கள் நேர்த்தி கடனாகச் செருப்புகளை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். அப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட செருப்புகளை மறுமுறை சிலநாட்கள் கழித்து பார்க்கும்போது அந்தச் செருப்புகளை அணிந்து நடந்து சென்றதால் ஏற்பட்ட தேய்மானத்துடன் இருக்கும். பட்டவராய சுவாமியே இந்தச் செருப்புகளை அணிந்து வேட்டைக்கு சென்று வருகிறார் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. 

பங்குனி உத்திரம் அன்று இங்குப் பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இங்குக் கூடுகிறார்கள். சாஸ்தா கோவில்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக விளங்குவதாலும், பல குடும்பங்களுக்கு இங்குள்ள சொரிமுத்து அய்யனார் குல சாஸ்தாவாகவும், இங்குள்ள பரிவார மூர்த்திகள் குல தெய்வங்களாகவும் இருப்பதாலும், குல சாஸ்தா மற்றும் குல தெய்வங்கள் தெரியாதவர்கள் கூட இங்கு வழிபடலாம் என்பதாலும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் இங்குக் கூடுகிறார்கள்.

பங்குனி உத்திரத்தன்று இங்குக்கூடும் பக்தர்கள் சொரிமுத்து அய்யனாருக்கு சர்க்கரை பொங்கல் வைத்தும், சங்கிலிபூதத்தாருக்கு வெண்கல உருளி பானை பாயசம் வைத்தும், வடை மாலை சாத்தியும், பிரம்மராட்சி அம்மனுக்கு கொழுக்கட்டை அவித்து வைத்தும் வழிபாடு செய்கிறார்கள்.

இருப்பிடம் / செல்லும் வழி : 

திருநெல்வேலி மாவட்டம்., மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலைப்பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இந்த இடம் தற்போது முண்டந்துறை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார் 52 கி.மீத்தொலைவில் உள்ள இந்தக் கோவிலுக்கு, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் வழியாகக் காரையார் செல்லும் பேருந்தில்  ஏறிச் செல்லலாம். பங்குனி உத்திரம் அன்று திருநெல்வேலியில் இருந்தும், பாபநாசத்தில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.