Logo of Tirunelveli Today
English

செல்வ வளம் தரும் அட்சய திரிதியை

In the Akshaya Tritiya Wishes, gold coins are shown pouring and collecting in a pot.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசையை தொடர்ந்து மூன்றாவது நாளில் வரும் திரிதியை திதி நாள் அட்சய திரிதியையாக அனுஷ்டிக்கப்படுகிறது. சித்திரை மாதத்திற்கு வைகாசம் என்று பெயராகும். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பது இந்த மாதத்தில் தான் என்பதால் இறைவனை வணங்கும் சிறப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது.கந்தபுராணத்தில் வரும் வைகாசி மகாத்மியம் எனும் பகுதியில் அட்சய திருதியை குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவில்லாத செல்வம் பெறுவதற்கும் , எடுத்த காரியம் வெற்றி பெறுவதற்கும் இறைவனிடம் அருள் பெறக்கூடிய நாள்தான் அட்சய திருதியை ஆகும். ஐங்கனி தேனோடு கலந்தால் சுவை பெறும் என்பது போல நம்முடைய வாழ்க்கையில் மனம், அறம் ,மங்கலம் செல்வம், சிறப்பு அனைத்தும் இருந்தால்தான் வாழ்க்கை நிறைவு பெறும். அட்சய திருதியை அன்று லட்சுமி நரசிம்ம பெருமாளை வழிபட்டால் இவை அனைத்தும் கொண்ட நிறைவான வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என்பதுதான் அட்சய திருதியை சிறப்பாகும்.

அட்சய திருதியை தெய்வீக நாளாக அனுஷ்டிப்பது ஏன்!

அட்சய திருதியை அன்று குபேரனுக்கு அட்சய பாத்திரம் பெற்ற நாளாகவும் புகழப்படுகிறது. கங்கைநதியானவள் பூமியில் அவதரித்த தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரம் நிகழ்ந்த தினம் மற்றும் அன்னபூரணி அம்மையிடம் அன்னம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து ஈஸ்வரன் விடுபட்ட தினமாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை பற்றி கந்தபுராணத்தில் வரும் வைகாசி மகாத்மியம் கூறுவது என்ன!

அட்சய திருதியை அன்று லட்சுமி நாராயண பெருமாளை வழிபட்டால் மிகவும் சிறப்பு என்று கந்தபுராணத்தில் வரும் வைகாசி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசையை தொடர்ந்து மூன்றாவது நாளில் வரும் திருதியை தினம் மிகவும் சிறப்பானது. முன்பு இந்த நாளில் திரேதாயுகம் தொடங்கியது. ஒரு யுகம் எப்படி பல கோடி ஆண்டுகள் நீடித்து நிலைபெற்று விளங்கியதோ அது போலவே கலியுகத்தில் இந்நாளில் நாம் தொடங்கும் நல்ல காரியங்களும் தான தர்மங்களும் வழிபாடுகளும் பல மடங்காக பெருகும். மேலும்அட்சய திருதியை நாளில் எல்லா நதிகளிலும் உள்ள தீர்த்த கட்டங்களிலும் சகல தேவதைகளும் பிரசன்னமாகி இருப்பார்கள். எனவே மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட கிணறு , கேணி , கால்வாய் போன்றவைகளில் நீராடுவதை காட்டிலும் தெய்வ அம்சமான நதிகளில் நீராடி லக்ஷ்மி நாராயணனை வணங்கி தான தர்மம் செய்ய வேண்டும் என வைகாச புராணம் வலியுறுத்துகிறது.

அட்சய திரிதியையில் லட்சுமி நாராயண பெருமாள் வணங்கும் வழிமுறை

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையில் நதியில் நீராடி லக்ஷ்மி நாராயணரை முறைப்படி வழிப்பட வேண்டும்.தாமரை மலர் அல்லது மல்லிகை பூவால் லட்சுமி நாராயண பெருமாளை அலங்கரித்து தயிர் அன்னம், புளியோதரை போன்றவை நிவேதனம் செய்ய வேண்டும். பின்பு விரதம், தானம், யக்ஞம், யாகம், ஹோமம், பிதுர்கருமங்கள், ஜபம், தீர்த்த யாத்திரை இவை அனைத்தும் அட்சய திருதியை நன்னாளில் செய்யலாம் .இந்த நாளில் சீமான்கள் , ஏழைகள், விவசாயிகள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் போன்ற அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்றபடி தானம் செய்ய வேண்டும் .

அட்சய திருதியை நாளில் வெயிலில் அவதியுரும் வழிப்போக்கனுக்கு குடை, கால்மிதி (செருப்பு) , மோர் பானகம், ஜலம் போன்றவைகளையும் வறியவர்களுக்கு மெத்தை, தலையணை ,போர்வை ,பாய் போன்றவைகளையும் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு தானம் செய்த பொருட்கள் மீது வைகுண்ட வாசனாகிய லட்சுமி நாராயண பெருமாளே அந்நிய ரூபத்தில் வந்த ஆசீர்வதிப்பார் . விலை உயர்ந்த வஸ்திர தானம் செய்தால் தேக நோய்கள் விலகும்.

கற்பூரம் தானம் செய்தவர் சக்கரவர்த்தியாக பிறப்பார்கள். சந்தனமும் நீரில் கலந்த பன்னீரும் தானம் செய்தால் எல்லா தேவர்களும் கருணை கொள்வர். மனிதர் கூடும் இடத்தில் நீர் பந்தல், மோர் பந்தல் அமைப்பதும் மண்டபம் கட்டுவதும் புண்ணியமாகும். குழந்தை பேறு இல்லாதவர்கள் தர்ம சத்திரம், கிணறு போன்றவை நிறுவினால் நல்ல சந்தான பாக்கியம் கிட்டும்.

வசதி உள்ளவர்கள் தங்கத்தால் ஆன லட்சுமி நாராயணர், வராக லக்ஷ்மி, நரசிம்ம விக்கிரகங்களை தானம் செய்யலாம். இதை தானமாக பெறுபவர் ஆசார அனுஷ்டாங்கம் உடையவராக இருக்க வேண்டும் . கிரஹஸ்தனாகவும் தெய்வ பக்தி உள்ளவராகவும் . ஏழையாகவும் இருக்க வேண்டும் . இதை நான்கு வர்ணத்தார்களும் செய்யலாம் .மனதில் நொந்து கொண்டும், பொருள் செலவாகிறது என்ற கவலையோடும் நம்பிக்கை இல்லாமலும் தானங்கள் செய்யக்கூடாது . சக்தி உடையவர்கள் இதை செய்யலாம் இதை செய்ய முடியாதவர்கள் ஸ்ரீ யாகிய லட்சுமி தேவியை மடியில் அமர்த்தி காட்சி தரும் லட்சுமி நாராயண பெருமாளை மனம் உருக வணங்கி வழிபட்டாலே போதும் என்று வைகாச மகாத்மியம் கூறுகிறது.

Antique golden temple jewelry is showcased in a jewelry store on Akshaya Tritiya.

அட்சய திருதியை அன்று வழிபடும் முறை

அட்சய திருதியை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராட வேண்டும். மகாலட்சுமி படத்திற்கு மல்லிகை மலர் சாற்றி ஐந்து முக விளக்கை ஏற்றி வைத்து வீடு முழுவதும் வத்திநறுமணமும் தெய்வ பாடலும் ஒலிக்க வேண்டும் . வடக்கு நோக்கி அமர்ந்து 108 மகாலட்சுமி போற்றி , 108 குபேரர் போற்றி பாடுவதும் சிறப்பாகும்’ அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஏழு தலைமுறைக்கு தேவையான செல்வங்கள் குவியும். அந்தநாளில் குபேரனின் அம்சமான நாள் என்பதால் மக்கள் ஆர்வத்தோடு சென்று நகைகள் வாங்குகின்றனர்.

மனமுருக மகாலட்சுமியை நினைத்து வேண்டினால் மகா லட்சுமியின் அருள்கடாட்சம் நமக்கு கிடைத்து செல்வங்கள் தானாக வீடு தேடி வருவதற்கான அருமையான அற்புதமான தினமாக அட்சய திருதியை விளங்குகிறது.

அப்படி முடியாதவர்கள் தம்மால் முடிந்த வெண்ணிற நிறம் கொண்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

சர்க்கரை- கல்கண்டு -அரிசி மல்லிகைப்பூ- பால் -கல்லுப்பு என தெய்வத்திற்கு உகந்த இந்த பொருட்களை அன்றைய தினத்தில் கடையில் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ கடாட்சம் பெருகும் .

அன்றைய தினத்தில் இந்த பொருட்களை கோவிலில் அபிஷேகத்துக்கு அர்ச்சனைக்கும் அன்னதானத்திற்கும் கொடுக்கலாம். தயிரன்னம் செய்து அன்னதானமாகக் கொடுப்பது கற்கண்டு வழங்குவது சர்க்கரை பொங்கல் அன்னதானம் என அனைத்தும் வழங்கலாம் .

நெல்லையில் விசேஷமான அட்சய திருதியை விழா

தென் மாவட்டத்தில் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையில் அனந்த கிருஷ்ணாபுரம் ,முறப்பநாடு முன்னீர்பள்ளம் ஆகிய தலங்களிலும், நெல்லை டவுன் மேல மாட வீதிகளிலும் லக்ஷ்மி நாராயண பெருமாள் தம்முடைய தேவியை மடியில் ஏந்தியபடி கோவில் கொண்டு உள்ளார். இதில் முன்னீர் பள்ளம் என்ற தலத்தில் ஆற்று நீர், வேற்றுநீர், ஊற்று நீர் ஆகிய நீர் நிலைகள் மூவகை தீர்த்த கட்டங்களாக உள்ளது. முறப்பநாட்டில் சர்வ தீர்த்தம் அமைந்துள்ளது. அனந்த கிருஷ்ணாபுரத்தில் பத்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த கட்டங்களில் நீராடி ஸ்ரீஹரியை வழிபடுவது நல்லது.

திருநெல்வேலி யில் அமைந்திருக்கும் பஞ்சலிங்க தலங்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு,பத்தை, பதுமன் ஏரி, சிங்கிகுளம், தேவநல்லூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்சலிங்க தலங்கள் ஆகும் . சித்திரை மாதத்திற்கு அதிபதியான காமதேனும், மகோன்னத முனிவரும் அட்சய திருதியை அன்று இந்த பஞ்சலிங்க தலங்களில் வழிபட்டு பேறு பெற்றதை நவசமுத்ர மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது . இது தவிர முன்னீர்பள்ளம் கிராமத்தில் வாழ்ந்து வந்த சிற்பி ஒருவர் சாபத்தால் பல்லியாக மாறிவிடுகிறார் .அவர் இங்குள்ள லட்சுமி நாராயண பெருமாளையும் பரிபூரண கருபேஸ்வரதையும் வழிபட்டு இறுதியாக முக்தி அடைந்தார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே திருதியை தினத்தில் பஞ்சலிங்க வழிபாடு செய்வதும் பச்சையாற்றின் நீராடுவதும் உகந்ததாகும் என புராணங்கள் கூறுகின்றன.

தெய்வத்திற்கு பாகுபாடுகள் என்பது கிடையாது இறைவன் ஆனவன் தயாபரன். சர்வ ஜெகத்தையும் ஆள்பவன். இறைவனின் படைப்பில் ஜனித்த ஜீவன்கள் மூன்று வித குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். சத்துவ குணம் ,ரஜோ குணம்,தமோ குணம் எனக் கூறப்படும் குணம் படைத்தவர்களாக அமைந்திருப்பர், குண கருமத்தை அனுசரித்து ஜீவர்கள் மறுஜென்மம் அடைவர் . பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பாவ காரியங்கள் அடிப்படையில் இவர்களுக்கு பலன்கள் கிடைக்கும்.

இந்த மாயாஜகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் இறைவனின் கருணை இல்லாமல் மாயையை வெல்ல முடியாது. மீண்டும் ஒரு பிறவி எடுப்பதற்கும் , கர்ம பலன்களை அனுபவிப்பதற்கும் கூட மாயையை வெல்ல இயலாத அஞ்ஞானம் தான் காரணமாகும் . எனவே நம்முள் இருக்கும்அஞ்ஞானம் விலகிடவும், மாயையை வெல்லவும் அட்சய திருதியை அன்று தான தர்மங்கள் செய்து இறைவனை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் புண்ணியங்கள் பல மடங்காக பெருகும். இது முன்னோர் கண்ட பலனாகும் .

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram