தமிழகத்தின் தென் மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காணப்படும் நாட்டுப்புற கலைகளுள் வில்லுப்பாட்டு தனி சிறப்பு பெற்றதாகும். இந்த மாவட்டங்களில் நடைபெறும் கிராமிய திருவிழாக்கள் மற்றும் கோவில் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி முக்கிய இடம்பெறும். இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் இசை கருவிகள் மிக வித்தியாசமாக இருக்கும். அதில் இருந்து எழுப்பப்படும் ஓசைகளும் வித்தியாசமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் கிராமிய இசைக்கருவிகளின் இசையுடன் முற்கால புராணங்கள், கோவில் வரலாற்று நிகழ்வுகள், கிராமிய தெய்வங்களின் வரலாற்று கதைகள் மற்றும் பிற கதைகள் வாய்மொழியாகப் பாடப்படும். இது தவிர இந்த வில்லுப்பாட்டு கலைக்கு வரலாற்றில் மிகப் பெரிய சிறப்பான இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினர் வரை ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் கிராமிய கலையான வில்லுப்பாட்டு, தற்கால நாகரிக வளர்ச்சி மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த தலைமுறையினர் இதனை நேரில் கண்டு ரசிப்பது என்பது அரிதாகத் தான் இருக்கும்.
இந்தக் கிராமியக் கலையான வில்லுப்பாட்டை நிகழ்த்தும் கலைஞர்கள் தற்போதும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வருகிறார்கள். பொதுவாக இந்தப் பகுதிகளில் உள்ள கோவில்களில் தை, ஆடி, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் கொடை விழாக்கள் அதிகளவில் நடைபெறும் என்பதால், அந்தக் காலக்கட்டத்தில் இவர்களுக்குக் கடும் கிராக்கி நிலவும். இதற்காகக் கோவில் கொடை விழா தொடங்கப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்து விடுவார்கள். கிராம தெய்வ வழிபாடுகளுக்குப் பெயர் பெற்ற திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணக்கற்ற பல கிராம தெய்வங்களின் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வைப்பது இன்று வரை ஒரு முக்கியமான சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தனை சிறப்புகள் பெற்ற நாட்டுப்புறக்கலையான இந்த வில்லுப்பாட்டின் வரலாற்றையும் அதுபற்றிய சுவாரசியமான தகவல்களையும் பற்றி இங்கு நாம் விரிவாகக் காணலாம்.
வில்லுப்பாட்டு தோன்றிய வரலாறு:
முற்காலத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் காடுகளுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதனை பின்பற்றிப் பிற்காலம் ஆட்சி செய்த சிற்றரசர்களும், அரசர்களும் காட்டிற்கு சென்று வேட்டையாடுவதை தங்களின் வீரத்தின் வெளிப்பாடாகக் கருதி செய்து வந்தார்கள். ஒருநாள் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் ஒருவன் தனது சகாக்களுடன் வேட்டைக்கு செல்கிறான். அப்போது காட்டில் நீண்ட தூரம் சென்று வேட்டையாடியதால் ஏற்பட்ட களைப்பு தீர அனைவரும் ஒரு இடத்தில் இளைப்பாறுகிறார்கள். அப்போது மன்னர் பொழுதுபோக்கிற்காகத் தனது சகாக்களை அழைத்துப் பாட்டு பாட சொல்கிறார். மன்னரை ரசிக்க வைக்க அவருடன் சென்ற வீரர்கள் தாங்கள் உடன் வைத்திருந்த வில், அம்பு, தண்ணீர் கொண்டு சென்ற குடங்கள் ஆகியவற்றை இசைக்கருவிகளாக மாற்றித் தங்களுக்கு தெரிந்த பயிற்சி இல்லாத குரலில் பாடல் பாடினார்கள். அந்தப் பாடலும் ரசிக்கும் படியாக இருந்து விட, அதில் மயங்கிய பின்னர் தனது அரண்மனைக்கு வந்த பின்பும், அந்த கருவிகளை பயன்படுத்தி, தனது வீரர்களை பாடல் பாட செய்து அரசசபையில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்தாராம். இதற்குப் பின் வந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வில், போர்க்களத்தில் முக்கியமான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது போர்க்களத்தில் போர் புரிந்து களைப்படைந்த வீரர்களை உற்சாகப் படுத்த, அவர்களே தங்கள் ஆயுதமான வில்லை தலைகீழாகக் கவிழ்த்தி அதில் ஒலியெழுப்பும் வண்ணம் மணிகளை கோர்த்து, அதன் மூலம் இசை எழுப்பிப் போர் வீரர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கமளிக்கும் வகையில், முற்காலத்தில் நடைபெற்ற போரில் பங்குபெற்ற தங்கள் முன்னோர்கள் மற்றும் இதிகாச கதைகளில் வரும் போர் கதைகளை தங்களுக்கு தெரிந்த பயிற்சி இல்லாத குரலில் உரத்த சத்தத்தோடு பாடினார்களாம். இந்த எழுச்சிமிக்க வரலாற்றை பாடலாகக் கேட்கும் வீரர்களுக்கு உள்ளுக்குள் தைரியம் மற்றும் வீரம் பெருக்கெடுக்க, போர்க்களத்தில் வீரமாகப் போராடினார்களாம். இப்படி நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த இந்த இசை நிகழ்ச்சி பின் அனைவருக்கும் பிடித்துப் போய்விட அதனை அடிக்கடி நடைபெற வழிவகை செய்ததன் மூலம் தான் இந்த நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னர் பாடப்பட்ட இந்த வில்லுப்பாட்டு எந்தவிதமான பாடல் இலக்கணத்திற்கும் உட்படாமல், பாடுபவரின் பயிற்சியில்லாத குரல் மற்றும் மனம் போன போக்கில் தான் பாடப்பட்டது. இதுவே வில்லுப்பாட்டின் முதற்படி எனக் கூறப்படுகிறது. இதற்குப் பின் வந்த காலமான பதினைந்தாம் நூற்றாண்டில் அருதக்குட்டி புலவர் என்னும் புலவர் ஒருவரால் வில்லுபாட்டுக்கென இலக்கணம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய வரலாற்று ஆய்வில் வில்லுப்பாட்டிற்கு பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வந்த காலத்தில் தான் தனி இலக்கணம் எழுதப்பட்டுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இலக்கணம் எழுதிய புலவரின் பெயர் குறித்த தகவல் உறுதியாகத் தெரியவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.எது எப்படி இருந்தாலும் இந்த வில்லுப்பாட்டு தனக்கென ஒரு தனி வடிவம் பெற்று வளர்ந்து வரத் தொடங்கியது கி.பி. 1550 ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய வருகிறது.
வில்லுப்பாட்டு அமைப்பு:
திருக்கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட உடன் சுவாமியின் கருவறைக்கு எதிராகத் தனி மேடை அமைக்கப்படும். அந்த மேடையில் தேவையான ஒளி மற்றும் ஒலி அமைப்பு செய்யப்படும். அந்த மேடையில் அமர்ந்து தான் வில்லிசை கலைஞர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மேடையில் குறைந்தது ஐந்து முதல் ஆறு கலைஞர்கள் இருப்பார்கள். இவற்றில் பாடல் பாடும் தலைமை புலவர், அண்ணாவி கலைஞர் ஆகியோருடன் பக்க வாத்திய கலைஞர்களும் உண்டு. தலைமை புலவர் பாடும் பாடல் வரிகளை அவர் கூறியது போலவே திருப்பிப் பாடும் கலைஞர் தான் அண்ணாவி என்று அழைக்கப்படுகிறார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர் பணியை சிறப்பாகச் செய்வதன் மூலம் தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி களைகட்டும்.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள்:
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முக்கிய இசைக்கருவி வில்லு தான். இதோடு வில்லுக்குடம், வீசுகோல், உடுக்கை, தாளம், கட்டை ஆகிய கருவிகள் முற்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் இவற்றோடு தபேலா, மண்டிலோ, பம்பை, ஹார்மோனியம் ஆகிய கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
வில்: வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியாக விளங்குவது வில் ஆகும். இது வைரம் பாய்ந்த பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.நன்கு வில் வடிவத்தில் வளைக்கப்பட்ட இது வில் கதிர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வில் கதிரின் இரு முனைகளிலும் சிறு குப்பிகள் தொங்கவிட பெற்றிருக்கும். இந்த வில் கதிரின் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று இழுத்து தகுந்த கயிறால் கட்டப்பட்டிருக்கும். இதில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒலியெழுப்பக்கூடிய சிறு சிறு சலங்கை மணிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த மணிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்பது மரபாகக் கருதப்படுகிறது. இதனால் பெரும்பாலும் 11 மணிகள் இதில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த வில் கதிரின் நடுப்பாகமானது வில்லுக்குடத்தின் நடுப்பாகத்தோடு இணைத்து,"நாண் - வடம்" என்று சொல்லக்கூடிய கயிற்று பகுதி மேல்புறமாகவும், வில் கதிர் என்று அழைக்கப்படும் பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும். இந்த மொத்த அமைப்பும் சேர்ந்து தான் வில் என்று அழைக்கப்படுகிறது.
வீசுகோல்: வீசுகோல் எனப்படும் கருவியானது சிறு கைப்பிடி கொண்ட குச்சி போலக் காணப்படும். இதனை வில்லுப்பாட்டு படிக்கும் தலைமை புலவர் தனது கைகளில் வைத்திருப்பார். பாட்டு பாடும் போது இந்த வீசுகோலினை கொண்டு தான் புலவர் வில்லில் உள்ள நாண் மீது தட்டி தாளத்திற்கு ஏற்றபடி இசை எழுப்புவார்.
உடுக்கு: வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெரும் கருவியாகத் திகழ்வது உடுக்கு. இந்த உடுக்கு என்னும் கருவி மூலம் தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் உச்சகட்ட இசை வெளிப்படுத்தப்படும். இந்த உடுக்கு என்னும் கருவி உடுக்கையின் சிறிய வடிவம் ஆகும். இதனால் இதை சித்துடுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வீக கதைகள் படிக்கும் போது இந்த உடுக்கின் ஒலி அதிகளவில் பயன்படுத்தப்படும்.
வில்லுக்குடம் & கட்டை : வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் மற்றோரு முக்கியமான கருவி வில்லுக்குடம். இது மண்ணால் செய்யப்பட்ட குடம் ஆகும். இந்த வில்லுக்குடம் விளிம்பு இல்லாத வாய் பகுதியைக் கொண்டிருக்கும் வகையில் தனி வடிவமைப்புடன் மண்ணினால் செய்யப்படும். இந்த மண்குடத்தை மேடையில் புரியணை மீது வைத்து நிறுத்தி வில்லுடன் கட்டியிருப்பார்கள். மண்குடத்தை நிலத்தில் பாதுகாப்பாக நிற்க வைக்கப் பயன்படுத்தப்படும் வைக்கோலால் செய்யப்பட்ட வளையத்திற்கு தான் புரியணை என்று பெயர். இந்த வில்லுக்குடம் மீது தட்ட கட்டை மற்றும் பத்தி ஆகிய மரத்தால் செய்யப்பட்ட கட்டைகள் பயன்படுத்தப்படும். இதில் கட்டை கொண்டு மண்குடத்திலும், பத்தி கொண்டு குடத்தின் வாய்ப்பகுதியிலும் தட்ட தகுந்த இசை பிறக்கும்.
தாளம்: தாளம் என்பது இரண்டு பித்தளை அல்லது வெண்கலத்தால் ஆன வட்ட வடிவ தட்டுகள் கயிற்றால் இணைக்கப்பட்ட இசைக்கருவி ஆகும். இந்த இரண்டு வட்டவடிவ தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்துத் தட்டும் போது இசை பிறக்கும். இந்தத் தாளத்தின் இசையும் வில்லுப்பாட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த அனைத்து இசைக்கருவிகளும் கூட்டாக இசைக்கப்பட்டு தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். பொதுவாக இந்த நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னர் வில்லிசை கலைஞர்கள் அனைவரும் மேடையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபாடு செய்வார்கள். இதற்குப் பின்னர் அவரவர் இடங்களில் அமர்ந்து இசைக்கருவிகளை மேடையில் நிறுத்தி, தங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள். இந்த வில்லிசை கலைக்கென்று ஏதும் தனிப்பட்ட பயிற்சி எல்லாம் கிடையாது. பாடல் படும் முறையோ, சங்கீத சுவரங்களின் வரிசையோ இல்லாமல் பயிற்சியில்லாத சொந்த குரலில் தான் புலவர்கள் பாடுவார்கள். இது கேட்பதற்கு ரசிக்கும் வகையில் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமிய தெய்வங்களின் வரலாற்றோடு, அரிச்சந்திரன் கதை, கண்ணகி கதை, சத்யவான் - சாவித்ரி கதை போன்ற கதைகளும் பொருளாக வைத்துப் பாடப்படும். பாட்டுடன் கூடிய வாய்ப்பேச்சு முறையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமையும் என்பதால் கிராமத்து மக்கள் மிகவும் சுவாரசியமாக இந்த நிகழ்ச்சியை ரசித்துக் கேட்கிறார்கள். பொதுவாகக் கிராமங்களில் அமையப்பெற்றுள்ள கிராமிய தெய்வங்களின் கோவில்கள் மற்றும் சாஸ்தா கோவில்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாகக் காட்டு பகுதியில் தான் அமைந்திருக்கும். மேலும் இங்கு நடைபெறும் கொடை விழாவில், நள்ளிரவு வேளையில் தான் சாமக்கொடை என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் காட்டு விலங்குகள் கோவில் பகுதிக்கு வராமல் இருக்கும், நள்ளிரவு நடைபெறும் சாமக்கொடை வரை பக்தர்கள் விழித்திருக்கவும் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி கோவிலில் வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவாகக் கோவிலில் இந்த நிகழ்ச்சி விழா நாளன்று மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரை விடிய விடிய நடைபெறும். தற்போது கால மாற்றத்தால் சுருங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை நடைபெறுகிறது.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகளை பொதுவாக ஏழு பருவங்களாகப் பிரித்து கொள்ளலாம். அந்த ஏழு பருவங்கள் பற்றியும் பின் வருமாறு காணலாம்.
1. காப்பு பருவம்: இந்தக் காப்பு பருவத்தில் தாங்கள் வணங்கும் தெய்வங்களை தங்கள் நிகழ்ச்சிக்கு வந்து துணையாக நிற்கும்படி வேண்டிக்கொள்ளும் வகையில் பாடல் பாடப்பெறும். பொதுவாக முழுமுதற்கடவுள் விநாயகர் தொடங்கி, கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவி வரை இந்தக் காப்பு பருவத்தில் போற்றி பாடல்கள் பாடப்படும்.
காப்பு பாடல் உதாரண வரிகள்: " தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட வந்திடுவாய் கணபதியே " என்று தொடங்கும்.
2. வருபொருள் உரைத்தல் பருவம்: இந்தப் பருவத்தில் அன்றைய நிகழ்ச்சியில் பாடப்போகும் தெய்வத்தைப் பற்றியோ அல்லது பாடப்பெறும் கதைகளை பற்றியோ அவற்றின் சிறப்பம்சங்களுடன் முன்னுரையாகக் கூறி பாடப்படுவதாகும்.
3. குருவடி தொழுதல் பருவம்: இந்தப் பருவத்தில் வில்லிசை கலைஞர்கள் தங்களுக்கு கலையைக் கற்றுத்தந்த தங்களின் குருவைப் போற்றி பாடல்கள் பாடி மரியாதையை செய்வார்கள்.
4. அவையடக்கம் பருவம்: இந்தப் பருவத்தில் கதை கூறும் தங்களை ஒரு எளிய மனிதனாகப் பாவித்து, கதை கேட்கும் ரசிகர்களை பெரிய சான்றோராக பாவித்துத் தன்னடக்கத்துடன் பாடல்கள் பாடப்படும். இதில் தாங்கள் நிகழ்த்தப் போகும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ஏதேனும் குற்றங்கள் அல்லது பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளும்படியும் வேண்டுதல் செய்யப்படும்.
5. நாட்டு வளம் கூறும் பருவம்: இந்தப் பருவத்தில் அந்தந்த பகுதியின் நாடு வளங்கள் மையமாக வைத்துப் பாடல்கள் பாடப்படும். குறிப்பாக இந்த வில்லுப்பாட்டு பிரபலமான தென் மாவட்டங்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குள் வரும் என்பதால் பாண்டிய நாட்டின் பெருமைகள் பற்றிப் பாடப்படும்.
6. கதைக்கூறு பருவம்: இந்தப் பருவத்தில் தான் முக்கியமான கிராம தெய்வத்தின் கதை அல்லது அன்று படுக்கப்போகும் இதிகாச கதைகள் பாடல்களுடன் கூடிய வாய்ப்பேச்சாக நிகழ்த்தப்படும். இது தான் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.
7. வாழ்த்து பாடுதல் பருவம்: இந்தப் பருவத்தில் இறுதியாகச் சபையில் கூடியிருந்து தங்கள் நிகழ்ச்சியை ரசித்துக் கேட்ட மக்கள் அனைவரையும் பல்லாண்டு வாழ வாழ்த்தும் வகையில் பாடல்கள் பாடப்படும்.
வில்லுப்பாட்டு பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
திருநெல்வேலிச் சீமையில் உள்ள கிராமங்களில் வில்லடிச்சான் கோவிலிலே விளக்கேத்த நேரமில்லையாம், குடமாடிச்சான் கோவிலிலே குத்துவிளக்கேத்த நாதியில்லையாம் என்ற பழமொழி பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான நிகழ்வு கூறப்படுகிறது. முன்னர் ஒரு கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வில்லிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இரவில் ஆரம்பித்த வில்லிசை கலை நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக நள்ளிரவு தாண்டிச் சென்று கொண்டிருக்க, கூடியிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் தங்களை மறந்து நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு தாண்டியும் மிகவும் உற்சாகமாகச் சென்று கொண்டிருந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் மூழ்கியிருந்த அனைவரும், கோவில் சன்னதியில் ஏற்றப்பட்டிருந்த தீப விளக்குகள் எண்ணை இல்லாமல் அணைந்து, திரி கருகி விட்டதை கூடக் கவனிக்காமல் இருந்தார்கள். இதனை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் புலவர் பார்த்து விட, அவர் உடனே நகைச்சுவை கலந்த தொனியில் தான் பாடிய வில்லுப்பாட்டின் மூலம் “வில்லடிச்சான் கோயிலிலே கோயிலிலே, விளக்கேத்த நேரமில்லை ஆமா நேரமில்லை, குடமடிச்சான் கோயிலிலே, குத்துவிளக்கேத்த நாதியில்லை அம்மா நாதியில்லை என்று உருக்கமாகப் பாடுகிறார். இதன் ரசனையில் மயங்கியிருந்த பக்தர்கள் அப்போது தான் நிலைமையை உணர்ந்து உடனே கோவிலுக்குள் சென்று தீப விளக்கில் எண்ணையை ஊற்றி, தீபத்தைத் தூண்டி விடுகிறார்கள். அன்று நடந்த இந்த நிகழ்வின் தாக்கத்தால் பாடப்பட்ட பாடலின் வரிகளே இன்று வரை இந்த வட்டாரத்தில் பழமொழியாகப் பேசப்பட்டு வருகிறது.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கிராமிய தெய்வங்களான சங்கிலி பூதத்தார் கதை, சுடலைமாட சாமி கதை, கருப்பசாமி கதை, மாடத்தி அம்மன் கதை, முப்பிடாதி அம்மன் கதை, இசக்கியம்மன் கதை, பெரியசுவாமி கதை, பேச்சியம்மன் கதை, சாஸ்தா பிறப்பு கதை, பட்டவராயர் கதை, பொம்மக்கா - திம்மக்கா கதை, தளவாய் மாட சாமி கதை போன்ற எண்ணற்ற தெய்வங்களின் கதையோடு அரிச்சந்திரன் கதை, சத்யவான் - சாவித்திரி கதை, இராமாயண கதை, மஹாபாரத கதை போன்ற இதிகாசங்களின் கதையும் நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்று கதை வரை அனைத்தும் கதையின் கூறாகக் கொண்டு பாடப்படும்.
இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த வில்லுப்பாட்டு கலையில் திருநெல்வேலி புலிக்குட்டி புலவர், தோவாளை சுந்தரம் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன், யாழ்ப்பாணம் சின்னமணி, சொக்கல்லோ சண்முகநாதன், நாச்சிமார் கோவிலடி ராஜன், கலைமாமணி கோவில்பட்டி முத்துசாமி தேவர், கலைமாமணி விளாத்திகுளம் ராஜலக்ஷ்மி, பூங்குடி ஆறுமுகம், கலைமாமணி சுப்பு ஆறுமுகம் ஆகிய கலைஞர்கள் புகழ் பெற்று திகழ்ந்தார்கள்.
மக்களின் உணர்ச்சியோடு ஒன்றி வளர்ந்த கலையாகத் திகழும் வில்லுப்பாட்டு, மரபு வழிக் கதைகள் தொடங்கி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரைகதையின் கூறாகக் கொண்டு பாடப்படுகிறது. எந்தக் கால அளவுக்கும் ஏற்றபடி ஒரு கதையினை நாடக வடிவில் படித்துக்காட்டக்கூடிய இந்த வில்லுப்பாட்டு கேட்போர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைகிறது.