வெந்தய களி என்பது தமிழகத்தின் உணவு வகைகளில் பிரபலமான ஒன்று ஆகும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கிறது. வெந்தயம், உளுந்து, அரிசி ஆகியவற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தயார் செய்யப்படும் இது நம் உடலை குளிர்ச்சியாகவும், தெம்பாகவும் வைத்திருக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும். இப்போது இந்த வெந்தயக் களியின் செய்முறை பற்றி இங்கு நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 100 கிராம்.
உளுந்தம் பருப்பு - 250 கிராம்.
பச்சரிசி - 100 கிராம்.
கருப்பட்டி - 750 கிராம்.
நல்லெண்ணெய் - 100 மிலி.
செய்முறை:
வெந்தயம், உளுந்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் தண்ணீரில் நன்றாக களைந்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின்னர் இதனை கிரைண்டரில் போட்டு பொங்கி வரும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடி கனமான பாத்திரத்தில் கருப்பட்டியை தட்டி போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்து தண்ணீர் கொதித்தவுடன், அதனை இருந்து அடி தங்கிய கழிவுகளை நீக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இப்போது அரைத்து வைத்துள்ள வெந்தய கலவை மாவில் தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து, கொதித்து கொண்டிருக்கும் கருப்பட்டி பாகில் ஊற்றி நன்றாக கிளறி விடவும். இதனை ஒரு இருபது நிமிடம் வரை வேக விட வேண்டும். இடையிடையே நல்லெண்ணையை சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் நன்றாக வெந்தவுடன் களியை இறக்கி வைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
இது நன்றாக வெந்துவிட்டதா என தெரிந்து கொள்ள சிறிதளவு தண்ணீரை கைகளில் தொட்டு களியை தொட்டு பார்க்க வேண்டும். கைகளில் களி ஒட்டாமல் இருந்தால் வெந்து விட்டது என அர்த்தம்.