வரலட்சுமி நோன்பு

Varalakshmi Nonbuஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி மாத செவ்வாய்க்கிழமை வழிபாடு, ஆடி முளைப்பாரி விழா, கோவில் கொடை விழா, ஆடி அமாவாசை என வரிசையாக விசேஷங்கள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுள் ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுவது வரலட்சுமி நோன்பு ஆகும். இந்த நோன்பை திருமணம் ஆகி சுமங்கலியாக வாழும் பெண்கள் தங்கள் கணவன் நலமுடனும், வளமுடனும் இருக்க வேண்டியும், கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் கூட வேண்டியும், நல்ல குணமான கணவன் அமைய வேண்டியும்  பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான மஹாலக்ஷ்மியின் அருள் வேண்டி மேற்கொள்வார்கள். பொதுவாக தங்கள் குடும்பத்தில் உள்ள ஏழ்மை நீங்கி, செல்வம் செழிக்க வேண்டி இந்த நோன்பு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுவது உண்டு.

நோன்பு கடைபிடிப்பதற்கு முதல் தினமே வீட்டை மெழுகி சுத்தம் செய்து, பூஜையறையில் பச்சரிசி, மஞ்சள், பொற்காசுகள், எலுமிச்சை, வளையல், கருகமணி, குங்குமசிமிழ், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய மங்கல பொருட்களை நிரப்பிய கலசம் ஒன்றை நிறுவி, அதில் தேங்காய், மாவிலைகள் சொருகி, மஹாலக்ஷ்மியின் திருமுகத்தை பதித்து, அதற்கு பட்டு வஸ்திரங்கள் கட்டி, மஞ்சள் சரடு, தங்க நகைகள் அணிவித்து அலங்காரம் செய்து கிழக்கு திசை பார்த்த வண்ணம் தயார் நிலையில்  வைத்துக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு அன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து, சர்க்கரை பொங்கல், மிளகு வடை, இனிப்பு கொழுக்கட்டை ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் பூஜையறையில் தயாராக உள்ள மஹாலக்ஷ்மி கலசத்தின் முன்னர் விளக்கேற்றி வைத்து, நறுமண தூபங்களை இட்டு, நெய்வேத்திய பிரசாதங்களை படைத்து தூபம் மற்றும் தீபம் காட்டி வழிபட வேண்டும். பின்னர் மஹாலக்ஷ்மி முன்னர் அமர்ந்து அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், மஹாலக்ஷ்மி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்னர் இறுதியாக மீண்டும் கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்து, வந்திருக்கும் அனைவருக்கும் அவரவர் வசதிக்கு ஏற்றபடி வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், ரவிக்கை துணி அல்லது புடவை, மஞ்சள், காசு, குங்குமம் இவற்றோடு நோன்பு சரடு ஆகிவற்றை சேர்த்து பிரசாதமாக சுமங்கலி பெண்களுக்கு வழங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும். பின்னர் மாலையில் மீண்டும் திருவிளக்கேற்றியும், இனிப்பான நெய்வேத்தியங்களை படைத்தும் மஹாலக்ஷ்மிக்கு பூஜை செய்ய வேண்டும். பின்னர் பூஜை முடிந்த மறுநாள் குளித்து முடித்து, ஸ்தாபனம் செய்த கலசத்திற்கு தூபம், தீபம் காட்டி பூஜை செய்து கலசத்தை பிரித்தெடுக்க வேண்டும்.

இந்த விரதத்தை கடைபிடிக்கும் பெண்கள் அன்று முழுவதும் உண்ணா நோன்பு அனுசரிக்கும் வழக்கமும் உள்ளது. சில வீடுகளில் விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்ததும், பிரசாதத்தை உண்டு தங்கள் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். வரலக்ஷ்மி நோன்பு இந்த வருடம் வரும் 20/08/2021, ஆவணி- வெள்ளிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

About Lakshmi Priyanka

Check Also

ஆடி அவ்வையார் நோன்பு:

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆடி மாதம் அவ்வையார் நோன்பு கடைபிடிக்கும் வழக்கம் உண்டு. பொதுவாக …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!