திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது வாழைக்காய் புட்டு. இது சாப்பாடுக்கு தொட்டுக்கொள்ளும் ஒரு வகை தொடுகறி. (தொடுகறி என்றால் பொரியல்)
இந்த வாழைக்காய் புட்டு தொடுகறியா மட்டும் இல்லாம அப்படியே கூட சாப்பிடலாம். அவ்வளவு ருசியா இருக்கும். வாழைக்காய் புட்டு வீட்டில செஞ்சா முதல் ஆளா உக்காந்து ஒரு புடி புடிச்சிருவேன்.
சரி இப்போ வாழைக்காய் புட்டு செய்முறையை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
நல்ல பெரிய நாட்டு வாழைக்காய் – 5,
சின்ன வெங்காயம் – 15,
மிளகாய் – 5,
தேங்காய் துருவல் – அரைமூரி,
கருவேப்பிலை – சிறிதளவு,
கடுக, குத்து பருப்பு, எண்ணெய்- தாளிக்க,
உப்பு, பெருங்காயம்-தேவைக்கு.
வாழைக்காயை அப்படியே காம்பை நறுக்கி மூழ்குற அளவு தண்ணீயில போட்டு வேக வைக்கனும். வாழைக்காய் பச்சை நிறம் போய் கரும்பச்சை நிறம் ஆகுற நேரத்துல வாழைக்காயை எடுத்து ஆற வைக்கணும்
ஆறிய பின்னாடி அதன் தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வேக வைத்த வாழைக்காயை புட்டு அரிப்பு (அ) புட்டு சல்லடையில் வைத்து சளித்துக்கொள்ள வேண்டும். (புட்டு சல்லடை (அ) புட்டு அரிப்பு என்பது திருநெல்வேலி வழக்கு பெயர்).
பின்னர் சலிக்கப்பட்ட வாழைக்காய் துருவலோடு, தேங்காய் துருவலை சேர்த்து உப்பு கலந்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் இருப்புச்சட்டி வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, குத்து பருப்பு போட்டு தாளித்து, கருவேப்பிலை, பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கிளறி வதக்கி, ஏற்கனவே கிளறி வைத்துள்ள வாழைக்காய்-தேங்காய்துருவலோடு சேர்த்து ஒருமுறை வதக்கி எடுத்து வைத்தால் வாழைக்காய் புட்டு தயார்.
இதோட சுவை பற்றி நம்ம பெரியப்பா நம்ம தம்பி அவர்கள் கருத்தையும் கூற கேட்போம். ?
குறிப்பு: நாட்டு வாழைக்காயில் செய்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்
எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>