எனக்கு சமையல்ல அதிக ஈடுபாடு உண்டு. சமைக்க கத்துக்கிட்டு ஒரு ஏழு வருஷமாச்சு. இந்த ஏழு வருஷத்துல எங்க ஆச்சியோட, சின்னாச்சியோட, சித்தியோட, பெரியம்மாவோட கைப்பக்குவத்துல நிறைய சமையல் விஷயங்களை கத்து வைச்சிருக்கேன்.
எங்க வீட்டில வாழை இலை பயன்பாடு அதிகமா உண்டு. தினமும் வாழை இலைல சாப்பிடுறதே வழக்கம். இது போக வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ என வாழையின் அனைத்து பகுதிகளையும் உணவுல சேர்த்துக்குவோம்.
வாழை இலையை சாப்பிடுறதுக்கு பயன்படுத்தறதோட சரி. ஆனா முன்னாடி எங்க ஆச்சி ஒரு தடவை வாழை இலையை கூட துவையல் அரைச்சு அந்தக்காலத்துல சாப்பிடுவோம்னு சொன்னது ஞாபகம் வந்துட்டே இருந்துச்சு.
இதுல நேத்து நம்ம சுதா அக்கா வேற வாழை இலையில சட்னி பண்ணலாம்னு சொல்ல, ஏன் இத முயற்சி பண்ணி பார்க்க கூடாதுனு தோணுச்சு.
துவையல்னா மல்லி இலை, கருவேப்பிலை, பிரண்டை எல்லாம் வைச்சு அரைப்போம். அதே துவையல் சேர்மானங்களை வைச்சு இன்னைக்கு வாழை இலையில துவையல் அரைச்சு பார்ப்போம்னு ஒரு எண்ணம் உதிச்சது.
நம்ம சுதா அக்காக்கிட்டயும் இதபத்தி கேக்க வலைதளத்துல வாழை இலை சட்னினு ஒரு காணொலி பார்த்தத பகிர்ந்து கிட்டாங்க.
உடனே வீட்டுல நின்ன வாழை இலையை அறுத்துட்டு வந்து தண்டை நீக்கி, இலையை பொடி பொடியா நறுக்கி துவையல் செஞ்சு பார்த்தேன். நல்ல ருசியாத்தான் இருக்கு.
இப்போ அந்த துவையல் செஞ்ச முறையை சொல்லுறேன்.,நீங்களும் செஞ்சு பார்த்து கருத்துகளை சொல்லுங்க.
வாழை இலை துவையல் செய்முறை:
தேவையான பொருட்கள்:
ஒரு வாழை இலை – துண்டு துண்டுகளாக நறுக்கியது,
கடலைபருப்பு – 2 தேக்கரண்டி,
தொலிபருப்பு – 2 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் – 6 உரித்தது,
பூண்டு – 5 உரித்தது,
மொளகா வத்தல் – 5,
புளி – ஒரு சிறு உருண்டை,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
அடுப்பில் இருப்புச்சட்டி வைத்து சூடேறியதும் நல்லெண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடலைபருப்பு, தொலிபருப்பு, சுன்னவெங்காயம், பூண்டு, மொளகாவத்தல் ஆகியவற்றை ஒன்னு ஒன்னா போட்டு வதக்கி கடைசியா நறுக்கிய வாழை இலைத்துண்டுகளையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வாழை இலைகளை சேர்த்ததும் பொட்டு வெடி வெடிப்பது போல சத்தம் வரும். இந்த பக்குவத்தில் நன்றாக வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் புளியும், உப்பு சேர்த்து அரைத்து எடுத்தீல் வாழை இலை துவையல் தயார்.
நான் இன்னைக்கு முதல் தடவை முயற்சி பண்ணதால முரட்டு வாழை இலை பயன்படுத்திட்டேன். அதிகமா நார் தங்குது. நீங்க இளம் வாழை இலையா பயன்படுத்துங்க.
இது இட்லி, தோசை, சாதத்துக்கு தொட்டுக்க பேஷா இருக்கு போங்க…
இத என் முகநூல் நண்பர் ஸ்ரீராமிடம் சொன்னேன். அவரும் நல்லது அண்ணாச்சி, ஆனா வாழை இலை துவையல் மகத்துவம் தெரிஞ்சு இந்த உணவகங்களில் மிச்சம் வர இலைய எல்லாம் துவையல் அரைக்க போறாங்க பார்த்து அண்ணாச்சினு கிண்டல் பண்ணினார். ?
எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>