வைகாசி விசாகமான இன்று நம்மாழ்வார் அவதரித்த தினம்.

Sri Nammazhwarவைகாசி விசாகமான இன்று வைணவ சமயம் போற்றும் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகவும், “நம் ஆழ்வார்” என்று உரிமையோடு அழைக்கப்படுபவருமான  நம்மாழ்வாரின் அவதார தினம். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆழ்வார்திருநகரி எனப்படும் குருகூரில் நம்மாழ்வார், வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். எனவே ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் சன்னதி தனி கொடிமரத்துடன் கூடிய சிறப்பு அந்தஸ்துடன் அமையப்பெற்றுள்ளது.  இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு நடைபெறும் வைகாசி விசாக பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். திருநெல்வேலி சுற்றுப்பகுதியில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழாவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, நம்மாழ்வார் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த திருவிழாவின் 5ம் நாள் உற்சவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அன்றைய தினம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவதிருப்பதிகளின் பெருமாள்களும், பல்லக்கில் ஆழ்வார்திருநகரி வந்தடைவார்கள். பின்னர்  ஆதிநாதர் கோவில் மண்டபத்தில் வைத்து நவதிருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை சிறப்பாக நடைபெறும். அன்று  இரவு 11 மணி அளவில் ஒன்பது பெருமாள்களும் தனித்தனி கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தர, நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி ஒன்பது பெருமாள்களையும் தனித்தனியாக மங்களாசாசனம் செய்தருளி வணங்குவார். இப்படி தனது பக்தனாகிய நம்மாழ்வாருக்காக ஒன்பது பெருமாள்களும் ஒரே இடத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதில் இருந்தே நம்மாழ்வாரின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த வைகாசி விசாக திருநாளில் நாமும் நம்மாழ்வாரை மனதார நினைத்து வணங்கி அருள்பெறுவோமாக.!

About Lakshmi Priyanka

Check Also

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!