Home / Nellai Samayal Kurippu / Uluntham Paruppu Sathamum Elluthuvayalum

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum 5

திருநெல்வேலி சிறப்பு உணவு வகைகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது., உளுந்தம்பருப்பு சாதம் மற்றும் எள்ளுத்துவையல்.

பொதுவாவே உளுந்து உடம்புக்கு ரொம்ப நல்லது. அதனால உளுந்தம்பருப்பு சாதம் சாப்பிடுறதும் உடம்புக்கு கூடுதல் ஆரோக்கியத்தை தரும்.

எங்க வீட்டில பொதுவா வாரத்துக்கு ஒருமுறை உளுந்தம்பருப்பு சாதம் இருக்கும். அதுலயும் புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இதுவே பிரதான உணவாக இருக்கும். இதுபோக பெண்கள் பூப்பெய்திய காலகட்டங்களில் சொந்தபந்தங்கள் ஆளுக்கு ஒருநாள் முறையென எடுத்துக்கொண்டு உளுந்தஞ் சாதம் பொங்கி போடுதல், உளுந்தங்களி, உளுந்தவடை செய்து போடுதல் என சில கட்டே உண்டு.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்ல சில நேரங்களில் பிரசாதமாக உளுந்தஞ் சாதமும் உண்டு. எங்க வீட்டில் உளுந்தம்பருப்பு சாதம் செஞ்சா அதுக்கு தொட்டுக்க எள்ளுத்துவையல், கொத்துக்கீரை, அவியல், வெண்டைக்காய்-தக்காளி பச்சடி, அப்பளம் ஆகியவை கண்டிப்பாக இடம்பெறும். நான் உளுந்தம் பருப்பு சாதத்துக்கு மிகப்பெரிய விசிறி.

இந்த சாதத்தை சூடாக வாழைஇலைல பரப்பி அதன் மீது செக்கு நல்லெண்ணெயை ஊத்தி பிசைஞ்சு சாப்பிட்டா., ஆகா….. வர்ணிக்க வார்த்தையே இல்லை. அடுத்து எள்ளுத்துவையல் போட்டு பிசைஞ்சு நல்லெண்ணெய் ஊத்தி ஒரு சுற்று, நல்லெண்ணெய் ஊத்தாம எள்ளுத்துவையலோடு ஒரு சுற்று, பச்சடி போட்டு பிசைஞ்சு ஒரு சுற்று, கொத்துக்கீரை போட்டு பிசைஞ்சு ஒரு சுற்று, கடைசியா கட்டித்தயிர் விட்டு பிசைஞ்சு ஒரு சுற்றுனு சாப்பிட்டுட்டே இருக்கலாம். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு வித சுவையில் இருக்கும். (என்னடா இந்த மூதி பெரிய திண்ணி பண்டாரமா இருப்பானோனு நீங்க அங்க திட்டுறது இங்க காதுல கேக்குது, கண்ணுபோடாதீக).

அப்புறம் சாப்பிட்டது போக மீதமான இதே சாதத்தை கொஞ்சம் தண்ணீர் மற்றும் மோர் விட்டு வைச்சு, மறுநாள் காலைல உப்பு போட்டு கரைச்சு குடிச்சா அதுவும் ருசியா இருக்கும்.

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum 1

இப்போ உளுந்தம்பருப்பு சாதம் செய்முறையை பார்ப்போமா?

உளுந்தம் பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்;
சாப்பாட்டு அரிசி – அரைப்படி,
கருப்பு தொலி உளுந்தம்பருப்பு – கால்படி,
சீரகம்-20 கிராம்,
வெந்தயம் – ஐந்தாறு,
துருவிய தேங்காய்ப்பூ – அரைமூரி,
வெள்ளைப்பூடு – முழுசா 1 பூண்டு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

தேவையான சாதத்திற்கேற்ப அரிசியின் பங்கிற்கு அரைப்பங்கு தொலி உளுந்து என கணக்கு வைச்சுக்கோங்க.

முதலில் உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். (நன்கு வறுக்க கூடாது) பின்
வெள்ளைப் பூடை பற்களாக உரித்து வைக்கவும். பின் அரிசியையும், பருப்பையும் ஒன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, சீரகம், வெந்தயம், தேங்காய்ப்பூ, உப்பு, உரித்த வெள்ளைப்பூடு எல்லாம் சேர்த்து ஒன்றாக போட்டு குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும், தீயை நன்கு குறைத்து வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.

பொங்கி இறக்கும் முறை என்றால் பானையில் உலை வைத்து முதலில் அரிசி-பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து போட்டு அரைவேக்காடு வெந்ததும் உரித்த பூண்டுகளை சேர்த்து முழுசாக வெந்து வரும்போது தேங்காய் பூக்களை தூவி மிதமான சூட்டில் சிறிது நேரம் வைத்து இறக்கிவிடலாம். இதில் தண்ணீரை சரியாக வைத்து வற்றச்செய்ய வேண்டும். வடிக்கும் அளவுக்கு வேண்டாம்.

இந்த உளுத்தம்பருப்பு சாதம் மிகவும் நல்லது..! பூப்படைந்த பருவத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்தால்
கருப்பை நல்ல வளர்ச்சி பெற்று வலுப்பெறும். பெண்களின் இடுப்பு எலும்பு வலுப்பெறும். ஆண்களுக்கும் வலிமை தரும் ஓர் உணவு. எண்ணிலடங்கா நற்பயன்களைத் தருவது. பொதுவாக உடலுக்கு வலிமையூட்டுவது உளுந்து. கபம் சேராமல் காப்பது.. ! நுரையீரலையும் வலுப்படுத்தக் கூடியது உளுந்து தானியம். எனவே இந்த அற்புதமான தானியத்தைக் கஞ்சி, களி, சாதம் என இயன்ற வகைகளில் அடிக்கடி உணவில் சேர்ப்பது தல்லது!

சாதம் உதுரி உதிரியாக இருந்தால் தான் ருசியும் நன்றாக இருக்கும். அதனால் குழைய விடாமல் பக்குவமாக பொங்க வேண்டும்

இனி எள்ளுத் துவையல் செய்யும் முறையை பார்ப்போம்.,

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum 3

தேவையான பொருட்கள்:

கறுப்பு எள் – 50 கிராம்,
மிளகாய் வத்தல்ல் -10,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
தேங்காய்ப்பூ – அரைமூடி,
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் படபடவெனப் பொரியும்படி வறுக்கவும். பின் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, புளியை வதக்கிக் கொண்டு, மிளகாய் வத்தலையும் சிவக்க வறுக்கவும்.

பின்பு எல்லாவற்றையும் உப்பு சேர்த்து, மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.
இதுவே எள்ளுத் துவையல்.

Uluntham Paruppu Sathamum Elluthuvayalum 6

இதனை உளுத்தம் பருப்பு சாதத்தோடு பிசைந்து, அவியலும், கொத்துக்கீரையும், அப்பளமும் தொட்டுச் சாப்பிட அமிர்தம் கூட ருசியில் தோற்றுப்போகும்.

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்

எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>

About சங்கர நயினார்

Check Also

Idi Sambar

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது இடிசாம்பார். இது சாதத்துக்கு ஊத்தி சாப்பிடும் ஒரு குழம்பு வகை. சாதாரண …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.