உளுந்தங்களி

முன்னர் வாழ்ந்த நம் முன்னோர் இயற்கையுடன் ஒன்றி இருந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இயற்கை முறையில் விளைந்த பொருட்களை கொண்டு, உணவினை சமைத்து தங்கள் உடல் நலனை பேணி வந்தார்கள். அந்த வகையில் அவர்களின் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தது. அவர்களின் வாழ்க்கை முறையில் வாரத்திற்கு ஒரு நாள் உளுந்தங்களி உணவாக இடம்பெறும். பொதுவாக கருப்பு உளுந்தில் மிகுதியான சத்துக்கள் இருக்கின்றன. உளுந்தில் உள்ள சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுபெறச் செய்கிறது. அதனால் தான் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இன்றும் கூட நாட்டு வைத்திய சாலையில் உளுந்தம் மாவை கொண்டு கட்டு போடப்படுகிறது. தற்போது உளுந்தங்களி என்பது வெறும் படத்தில் பார்க்கும் காட்சிப்பொருளாக மட்டுமே பலருக்கும் தெரிகிறது. இன்று நாம் நம் உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தங்களி செய்முறையை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • உடன்குடி கருப்பட்டி – 1.5 கிலோ
  • கருப்பு உளுந்து – 750 கிராம்
  • பச்சை அரிசி – 250 கிராம்

செய்முறை:

கருப்பு உளுந்து மற்றும் பச்சை அரிசி இரண்டையும் தனித்தனியாக இருப்புச்சட்டியில் போட்டு இளம் சிவப்பாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதனை மிக்சியில் சேர்த்து போட்டு மாவாக திரித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இங்கு நாம் கிலோ கருப்பட்டி பயன்படுத்துவதால் சுமார் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அதில் கருப்பட்டியை போட்டு மேலும் கொதிக்க விடவும். கருப்பட்டி முழுவதும் கரைந்து பாகானவுடன், அந்த கரைசலை வடிகட்டி வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும். அடியில் கருப்பட்டியில் உள்ள கழிவுகள் தங்கி இருக்கும். அதனை நீக்கிவிட்டு மீண்டும் கருப்பட்டி கரைசலை அந்த பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும், நன்றாக கொதிக்கும் போது நாம் திரித்து வைத்துள்ள மாவை அதில் சிறிது சிறிதாக சேர்த்து வேக விடவும். இடையிடையே அடிபிடிக்காமல் இருக்கவும், கட்டி விழாமல் இருக்கவும் கனத்த கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும். களி வெந்துவிட்டதா என பார்க்க, கைகளில் சிறிது தண்ணீரை தொட்டு, களியை எடுக்கும் போது ஒட்டாமல் இருக்க வேண்டும். களி நன்றாக வெந்து வந்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி, நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சூடாக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதோ உளுந்தங்களி தயார்.! இப்போது களி உருண்டையின் நடுவில் சிறிய குழி பறித்து அதில் நல்லெண்ணெய் விட்டு பரிமாறவும்.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.