திருநெல்வேலி திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் வரலாறு

திருநெல்வேலி மாநகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம். இந்தப் பாலமானது திருநெல்வேலி நகரத்தையும், திருநெல்வேலி சந்திப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து தென் திசை நோக்கிச் செல்லும் இருப்புப்பாதைக்கு மேலாகக் கட்டப்பட்டுள்ளது. ஆசியாவின் முதல் மிகப்பெரிய இரண்டு அடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்ற இந்தப் பாலம் கட்டப்படுவதற்கு முன்னர் முக்கிய சாலையாகத் திகழ்ந்த இந்தச் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள இருப்புப்பாதையை கடக்க மிகவும் சிரமமாக இருக்கும். தென்னகத்தின் முக்கிய ரயில்கள் இந்தப் பாதையில் சென்று வரும் என்பதால் அடிக்கடி இந்த ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும். இதனால் முக்கிய சாலையாகத் திகழ்ந்த இந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த ரயில்வே கேட்டைத் தாண்டித் தான் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள் தென்காசி, செங்கோட்டை வழியாகக் கேரளா மாநிலத்திற்கும், கேரளாவிலிருந்து மரத்தடிகளை ஏற்றிவரும் வாகனங்கள் தூத்துக்குடிக்கும் சென்று வர வேண்டும் என்பதாலும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி மற்றும் கேரளாவிற்கு பயணிகள் சென்று வர வேண்டும் என்பதாலும்ஒருமுறை கேட்டை மூடித் திறந்தாலே கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இதனால் சாலை போக்குவரத்தை மேம்படுத்த அப்போதைய தமிழக அரசாங்கம் இந்த ரயில்வே கேட்டைச் சிரமமின்றி கடந்து சென்று வர இந்த ஈரடுக்கு மேம்பாலத்தைக் கட்ட முடிவு செய்தது.

தகுந்த வல்லுநர்கள்மூலம் இந்தப் பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 1969 ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 47 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நான்கு ஆண்டுக் காலம் பணிகள் நடைபெற்று இறுதியாக 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – 12 ஆம் நாள் இந்தப் பாலம் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. இரண்டு அடுக்குகள் கொண்ட இந்தப் பாலத்தின் மேல் அடுக்கில் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் பெரிய வகை வாகனங்களும், கீழ் அதுக்குள் மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வாகனம், மிதிவண்டி போன்ற இலகு ரக வாகனங்கள் செல்லும் வகையிலும் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 700 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தை 26 ராட்சத தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம் ஆசிய கண்டத்திலேயே இருப்புப்பாதைக்கு மேலாகக் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் பெறுகிறது. இந்தப் பாலத்தைத் திறந்து வைத்த அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி, திருக்குறளில் உள்ள இரண்டு அடியைப் போல, இந்தப் பாலமும் இரண்டு அடுக்குகளைக் கொண்டிருப்பதால், இதற்குத் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெயரைச் சூட்டினார். அனால் இங்கு வாழும் திருநெல்வேலி மக்கள், தங்கள் பேச்சு வழக்கில் இந்தப் பாலத்தைச் செல்லமாக ரெட்டை பாலம் என்றே இன்றுவரை அழைத்து வருகிறார்கள். சுமார் 48 வருடங்களைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சித் தரும் இந்த ரெட்டை பாலம் திருநெல்வேலிக்கு பெருமை சேர்க்கும் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

About Lakshmi Priyanka

Avatar

Check Also

தாமிரபரணி ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.