Logo of Tirunelveli Today
English

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-5)

திருக்கோவில் அமைப்பு - அம்மை சன்னதி:

அம்மை சன்னதி ராஜ கோபுரம் வாயில் இருபுறமும் முறையே விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அவர்களை வணங்கி உள்ளே சென்றால் அழகிய சிம்ம தூண்களை கொண்ட ஊஞ்சல் மண்டபம் நடுநயமாக இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் வடக்கு பக்கம் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது. ஊஞ்சல் மண்டபத்துக்கு தெற்கே பொற்றாமைரை தீர்த்தக் குளமும், அத் தீர்த்தத்தின் மேற்கு கரையில் விநாயகர் சன்னதி, மீனாட்சி - சுந்தரேசுவரர் சன்னதி, பொற்றாமரை விநாயகர் சன்னதி, சரஸ்வதி சன்னதி, காசி விசுவநாதர் சன்னதி, ஞானானந்த தட்சிணா மூர்த்தி சன்னதி ஆகியவை இருக்கிறது.

ஊஞ்சல் மண்டபத்துக்கு மேற்கே அம்மை கோவிலின் முன் மண்டபத்தில் கொடி மரம், பலி பீடம், நந்தி சன்னதி இருக்கிறது. அங்கிருந்து தெற்கே திரும்பினால் வெளி திருச்சுற்றில் விநாயகர் சன்னதி மற்றும் காந்திமதி ஓவியம் சன்னதி இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பிரகாரத்தில் திரும்பினால் ஆயிரங்கால் மண்டபத்தின் மறு பாதி உள்ளே வரை நீள்கிறது. அடுத்து மேல பிரகாரத்தில் கரி உருமாற்றிய தீர்த்தக் குளமும், வடக்கு பிரகாரத்தில் கரி உரு மாற்றிய சுப்பிரமணியர் சன்னதியும் இருக்கிறது. அடுத்து கீழ பிரகாரத்தில் ஐயப்பன் சன்னதி, யாகசாலை, அம்மன் சன்னதி நுழைவாயிலின் மறு பக்கம் சுப்பிரமணியர் சன்னதி ஆகியவை இருக்கிறது. இங்கிருந்து வடக்கே நீண்ட சங்கிலி தொடர் போன்ற மண்டபம் ஒன்று சுவாமி கோவில் தெற்கு கோபுர வாயிலை இணைக்கிறது. இதற்கு சங்கிலி மண்டபம் என்று பெயர். இந்த சங்கிலி மண்டபத்தின் இருபுறமும் அழகிய வேலைப்பாடுகளுடைய கவின்மிகு சிற்பங்கள் இருக்கிறது. இந்த மண்டபத்தின் மேற்கே வசந்த மண்டபமும், கிழக்கே கோசாலையும் மாசி மக கயிலை காட்சி மண்டபமும் இருக்கிறது.

இப்போது மீண்டும் அம்மை சன்னதி முன் மண்டபத்துக்கு வந்து விநாயகர், சுப்பிரமணியரை வணங்கி உள்ளே நுழைந்தால் விஸ்தாரமான மண்டபத்துடன் கூடிய உள் திருச்சுற்று பிரகாரம் இருக்கிறது. அங்கிருந்து திரும்பினால் தெற்கு திருச்சுற்றில் மடப்பள்ளியும், பள்ளியறை சொக்கர் எழுந்தருளும் நாற்காலியும் இருக்கிறது. அடுத்து மேல பிரகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர் சன்னதியும், வட மேற்கு மூலையில் சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளது. அடுத்து வடக்கு திருச்சுற்றில் சண்டிகேசுவரி சன்னதி, பிரதோஷ நந்தி வாகன சன்னதி, சண்முகர் சன்னதி ஆகியவையும் இருக்கிறது.

தற்போது மீண்டும் கீழ பிரகாரத்தில் இருந்து படிகள் வழியாக மேலே ஏறிச் சென்றால் உள்ளே காந்திமதி அம்மை சன்னதியும் அதற்கு முன்பாக விஸ்தாரமான மண்டபமும் இருக்கிறது. இந்த மண்டபத்தில் விநாயகர் சன்னதியும், சுப்பிரமணியர் சன்னதியும், அழகிய பாவை விளக்குகள் காட்சியளிக்க பள்ளியறை சன்னதியும் இருக்கிறது.

அடுத்து கங்கையும், யமுனையும் துவாரபாலகிகளாக காவல்புரியும் வாயில் தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபம், அதற்கு அடுத்து காந்திமதி அம்மை கருவறை. இந்தக் கோவிலை பொறுமையாக சுற்றிப் பார்க்க குறைந்தது அரை நாளாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர இக் கோயிலின் வெளியே மதில் சுவரின் தென் கிழக்கு முனையில் மதில் மேல் சங்கிலி பூதத்தார் சன்னதி இருக்கிறது. இவரே இக் கோயிலின் காவல் தெய்வமாக விளங்குகிறார். கீழ தேர் வீதியில் சுவாமி தேர் அருகே வலம்புரி விநாயகர் சன்னதி, சுவாமி தேருக்கு எதிரே தேரடி கருப்பர் சன்னதி, அம்மை கோவிலுக்கு எதிரே வடக்கில் சரஸ்வதி சன்னதி, கீழ தேர் வீதி - தெற்கு தேர் வீதி சந்திப்பில் வாகையடி அம்மன் கோவில், தெற்கு தேர் வீதி - மேல தேர் வீதி சந்திப்பில் சந்தி விநாயகர் சன்னதி, அடுத்து மேல தேர் வீதி - வடக்கு தேர் வீதி சந்திப்பில் மேற்கே சற்று தள்ளி தொண்டர்கள் நயினார் சன்னதி மற்றும் அதற்கு வடகிழக்கே பிட்டாபுரத்தி அம்மன் சன்னதியும், ஈசான முனையில் ஈசான விநாயகர் சன்னதியும் இருக்கிறது. சுவாமி கோவிலுக்கு எதிரே ஒரு அனுப்பு மண்டபமும், அம்மை கோவிலுக்கு எதிரே ஒரு அனுப்பு மண்டபமும் சன்னதி தெருவில் இருக்கிறது.

Majestic chariot of Nelliappar moving through the crowded Sannathi street

திருக்கோவில் சிறப்புக்கள்:

இங்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் காமீக ஆகம முறைப்படியும், அம்மை காந்திமதி கோவிலில் காரண ஆகம முறைப் படியும் திருவனந்தல், விளா பூஜை, சிறு கால சந்தி, கால சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தசாமம், பள்ளியறை மற்றும் பைரவர் பூஜை ஆகிய வழிபாடுகள் நித்ய பூஜைகளாக நடைபெற்று வருகிறது.

இங்கு விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்மை தேர் மற்றும் சண்டிகேசுவரர் தேர் என ஐந்து தேர்கள் இருக்கிறது. இதில் சுவாமி தேர் மிகவும் பழமையானது. சுமார் 450 டன் எடை கொண்ட பெரிய தேரின் அச்சானது லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராக இக் கோவில் பெரிய தேர் விளங்குகிறது.

இங்கு சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள சன்னதி தெருவானது சுமார் 3 கி . மீ வரை நீண்டு தாமிரபரணி ஆறு வரை செல்கிறது. இது மிக நீண்ட சன்னதி தெரு என்ற சிறப்பை பெறுகிறது. இந்த சன்னதி தெரு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் தான் ஆசியாவின் புகழ் பெற்ற திருவள்ளுவர் இரட்டை அடுக்கு மேம்பாலம் உள்ளது குறிப்படத்தக்கது.

திருநெல்வேலி உச்சிக்கால பூஜை சிறப்பு:

சுவாமி: ஏண்டி வடிவு., இன்னைக்கு மதியம் நீ சமைச்சு பரிமாறுன சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு.. அதுலயும் அந்த மிளகு ரசம் ரொம்ப நல்லாயிருந்துச்சுடி அம்மா...

அம்பாள்: அப்படியா சுவாமி, ரொம்ப மகிழ்ச்சி. சாம்பார்ல தான் சற்று உப்பு கூடிட்டுட்டுனு நினைக்குறேன். நம்ம புள்ளையாண்டான் கணபதி உப்பு அதிகமா இருக்குனு சொல்லிண்டே சாப்பிட்டான் சுவாமி..

சுவாமி: அப்படியெல்லாம் எனக்கு ஏதும் தெரிலையடி வடிவு. நீ சமைச்ச சாப்பாடாச்சே ரொம்ப தேவாமிர்தமாகத்தான் இருந்துச்சுடி. நானும் நம்ம சுப்பிரமணியனும் ருசிச்சு சாப்பிட்டோமடி...

அம்பாள்: சரிண்ணா... நீங்க திருப்தியா சாப்பிட்டேளோ இல்லியோ... அதுவே போதும். நாளைக்கி என்னன்னா சமையல் பண்ணட்டும்?

சுவாமி: நீ பார்த்து எது சமைச்சு பரிமாறுனாலும் எனக்கு அது தான் தேவாமிர்தமடி வடிவு. உன் விருப்பப்படியே சமைச்சு போடு...

அம்பாள்: புன்னகை பூத்த படி சரியென்று தலை அசைக்கிறாள்.

(சுவாமி - அம்பாள் பேசிக் கொள்வது போல ஒரு கற்பனை)

திருநெல்வேலியில் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவில்., சுவாமி-அம்பாளுக்கென இரு பெருந் திருக்கோவில்களாக தனித் தனியே அமையப் பெற்றுள்ளது.

இங்கு சுவாமி கோவிலில் தனி மடப்பள்ளியும், அம்பாள் கோவிலில் தனி மடப்பள்ளியும் என இரண்டு மடப்பள்ளிகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு கால பூஜைகளுக்கும் அந்தந்த மடப்பள்ளிகளில் பிரசாதங்கள் தயாராகி சுவாமிகளுக்கு நிவேதனம் செய்யப்படும். ஆனால் உச்சிக்கால பூஜை வேளையில் மட்டும் அம்மையின் கோவில் மடப்பள்ளியிலிருந்தே பிரசாதங்கள் செய்யப்பட்டு சுவாமி கோவிலுக்கு சென்று நிவேதனம் செய்யப்படும்.

A low-angle shot of a temple gopuram of Nelliappar temple in which upper three stories of the gopuram and 'kumbhas' are visible

ஒரு மனைவி தன் கணவனுக்கு எப்படி உணவு சமைத்து பரிமாறுவாளோ அதுபோலவே இங்கு தன் கணவருக்கு அம்மை காந்திமதி உணவு சமைத்து பரிமாறுவதாக ஐதீகம்.

எனவே உச்சிக் கால பூஜையின் போது அம்மை கோவில் மடப்பள்ளியில் இருந்து பிரசாதங்கள் தயார் செய்து பல்லயத்தில் வைத்து மேள, தாளங்கள் முழங்க அம்மை கோவில் அர்ச்சகர்கள் சுமந்து சுவாமி கோவில் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர் அதே பிரசாதத்தை அம்மைக்கு நிவேதனம் செய்யப்பட்டு உச்சிக் கால பூஜை நடைபெறும்.

இது கணவன்-மனைவி இல்வாழ்க்கை பண்புகளை உணர்த்தும் பொருட்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இங்கு பிரதோஷத்தின் போது நெல்லையப்பர் சன்னதி எதிரே இருக்கும் நந்திக்கு பூஜை நடப்பதை போல, அம்மை காந்திமதி சன்னதி எதிரே இருக்கும் நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. சுவாமி சன்னதியில் பிரதோஷ நாயகர் சிறிய இடப வாகனத்தில் பிரகார உலா வருவதைப் போல, இங்கு அம்மை காந்திமதி சிறிய உற்சவர் ரிஷப வாகனத்தில் தனியாக எழுந்தருளி பிரகார உலா வருவார். சிவனும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு நடைபெறும் என்பது சிறப்பு.

இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி அன்று இரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

இங்கு மார்கழி மாத அதிகாலை பூஜைகளுக்கு பதிலாக கார்த்திகை மாதம் அதி காலையிலேயே திருக்கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெறும் என்பது சிறப்பம்சம்.

இங்கு நவக்கிரக சன்னதியில் வடக்கு திசை நோக்கி புதன் பகவான் அருள்பாலிக்கிறார். பொதுவாக புதன் நவக்கிரக சன்னதியில் கிழக்கு திசை நோக்கியே காட்சியளிப்பார். இங்கு குபேர திசையான வடக்கு நோக்கி காட்சியளிப்பது தனி சிறப்பு ஆகும்.

இங்கு மூலவர் நெல்லையப்பர் லிங்கத் திருமேனியின் பாணத்தில் அம்மையின் உருவம் காட்சியளிக்கிறது. இதனை அபிஷேகம் நடைபெறும் போது நாம் உற்று நோக்கினால் தரிசிக்கலாம்.

சுவாமி சன்னதியில் அபிஷேக தீர்த்தம் விழக் கூடிய கோமுகியானது மற்ற கோவில்களில் சண்டிகேசுவரர் அருகே வடக்கு திசை நோக்கி அமையப் பெற்றிருக்கும். ஆனால் இங்கு சற்றே வித்தியாசமாக மேற்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது சிறப்பு.

அம்மை காந்திமதியின் கருவறைக்கு வெளியே கங்கையும், யமுனையும் துவார பாலகிகளாக காட்சித் தருகிறார்கள் என்பதும் விசேஷம்.

கி. பி 1505 ல் வெள்ளோட்டம் விடப்பட்ட இக் கோவிலின் தேரானது தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்பை பெறுகிறது. இந்த தேர் 1505 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை எந்த தடையும் இன்றி வருடா வருடம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பது சிறப்பு.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் அதனை போற்றும் விதமாக அடுத்து நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேரின் உச்சியில் நந்தி கொடியோடு, நம் பாரத மூவர்ண தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டது வரலாற்று சிறப்பாகும்.

இக் கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், பொற்றாமரை குளம், கயிலை காட்சி மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், தாமிர சபை மண்டபம், முன் மண்டபம் ஆகிய அனைத்தும் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது.

இக் கோவிலில் சுவாமி நடம் புரிந்த பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபை, அம்மைக்கு நடன காட்சியளித்த செளந்திர சபை, சுவாமி சன்னதியில் ராஜ சபை, ஆயிரங்கால் மண்டபத்தில் கல்யாண சபை, சிந்துபூந்துறையில் தீர்த்த சபை, மானூரில் ஆச்சாரிய சபை என ஆறு சபைகள் அமையப் பெற்றுள்ளன.

A high-angle shot of Nelliappar temple in which two colourfully painted towers of Nelliappar temple is visible with trees in the background.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களுள் இத்தலம் திருஞானசம்பந்தரால் திருநெல்வேலி பதிகம் பாடப் பெற்றதாக விளங்குகிறது.

இந்த திருக்கோயில் இறைவன், இறைவியைப் போற்றி சமயப் பெரியோர்களும், புலவர் பெருமக்களும் பதிகங்கள் பாடியுள்ளனர். அவற்றுள் நெல்லையப்ப பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசல கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்பி, மும்மணிக் கோவை போன்ற நூல்கள் இத் தல இறைவன், அம்மையின் பெருமைகளை சிறப்பித்துக் கூறுகின்றன.

இங்கு காந்திமதி அம்மை திருக் கோவிலிலுள்ள ஊஞ்சல் மண்டபம் 96 தத்துவங்களை குறிக்கும் வகையில் 96 தூண்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள யாளி சிற்பங்கள் கலை அழகுடன் காட்சித் தருகின்றன.

இங்கு காந்திமதி அம்மை திருக் கோவிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ஆயிரம் தூண்களால் அமையப் பெற்றுள்ளது. இந்த மண்டபம் 520 அடி நீளம் மற்றும் 63 அடி அகலமும் கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் நடுவே உள்ள மண்டபத்தை ஆமை ஒன்று கீழ் பகுதியில் தாங்குவது போல கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள சங்கிலி மண்டபத்தில் காணப்படும் வாலி, சுக்ரீவன், பீமன், புருஷாமிருகம், அர்ச்சுனன் மற்றும் பாவை விளக்கு சிற்பங்கள் மிகவும் நுட்பமாக காட்சித் தருகின்றன.

இங்குள்ள திருப்பணி ஆறுமுக நயினார் சன்னதியில் தாளச் சக்கரம் மற்றும் வித்யா சக்கரம் ஆகியவை உள்ளது சிறப்பம்சம்.

இங்கு சுவாமி நெல்லையப்பர் கோவில் மணி மண்டபத்தின் வடக்கு சுவற்றில் இராவணன் கயிலாய மலையை பெயர்த்தெடுக்க, அம்பிகை சுவாமியைத் தழுவும் சிற்பம் ஒன்று மிக அழகாக காட்சித் தருகிறது.

மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திருக்கோவிலை விட பெரிய கோவிலாக விளங்கும் இக் கோவிலை சிற்பக் கலையின் சிகரம் என்றே கூறலாம்.

சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் மாநகரின் மத்தியில் 850 அடி நீளமும், 756 அடி அகலமும் கொண்டு மிக பிரம்மாண்டமாக விளங்குகிறது இத் திருக்கோவில்.

இந்த திருநெல்வேலி தலத்திற்கு பேர் அண்டம், அனவரதம், பிரளயச் சிட்டம், தென் காஞ்சி, சிவபுரம், திரிமூர்த்தி புரம், இபபுரி, கச்சபாலயம், பிரம்ம விருத்த புரம், தரணி சாரம், விண்டு தலம், காம கோட்டம், வேணு வனம், சாலிவாடி ஆகிய வேறு பெயர்களும் இருப்பதாக தலப் புராணம் கூறகிறது.

(தொடர்ச்சி பகுதி-6ல் காண்க)

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram