Logo of Tirunelveli Today
English

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-4)

A view to the inner premises of the Nellaiappar temple with intricately crafted Yali pillars on either sides

தாமிர சபை:

சிவபெருமான் நடனம் புரிந்த பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபை இங்கு அமையப் பெற்றுள்ளது. சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் மேல பிரகாரத்தில் உள்ள இந்த சபை, மரத்தால் நிர்மாணிக்கப் பட்டு, செப்பு கூறை வேயப்பட்டு காட்சியளிக்கிறது. இங்கு தான் சுவாமி பிரம்ம தாண்டவம் ஆடியருளியதாக கூறப்படுகிறது.

சகஸ்ர லிங்கம்:

சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் வடக்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் சகஸ்ர லிங்க சுவாமி. சகஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். ஒரே லிங்கத் திருமேனியில் சிறிது சிறிதாக ஆயிரம் லிங்கங்கள் இருப்பதால் இந்த லிங்கத்திற்கு சகஸ்ர லிங்கம் என்று பெயர்.

பெரிய சபாபதி:

சுவாமி நெல்லையப்பர் கோவில் இரண்டாம் பிரகாரத்தின் வட கிழக்கு முனையில் தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சித் தருகிறார் பெரிய சபாபதி. இவர் சற்றே பிரம்மாண்டமான பெரிய பஞ்ச லோக திருமேனி. இவருடன் சிவகாமி அம்மையும் பிரம்மாண்ட திருமேனியாக காட்சித் தருகிறாள். இவர்களுக்கு முன்புறம் காரைக்கால் அம்மையார் அழகுற தாளமிசைத்தபடி காட்சித் தருகிறாள். மார்கழி மாத திருவாதிரை திருவிழாவை ஒட்டி பத்து நாட்களும் இந்த பெரிய சபாபதி சன்னதியில் தான் அதிகாலை திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.

திருப்பணி ஆறுமுக நயினார்:

சுவாமி நெல்லையப்பர் கோவில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் அமையப் பெற்றுள்ளது திருப்பணி ஆறுமுக நயினார் சன்னதி. இங்கு மயிலின் மீது ஆறுமுக நயினார் வேல் தாங்கிய வீரனாக ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளார். இவருக்கு அருகே வள்ளி மற்றும் தெய்வானை அம்மையர்களும் காட்சித் தருகிறார்கள். இங்குள்ள ஆறுமுக நயினாரின் ஆறு முகங்களும் ஆறு வேறு உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் சிறப்புடன், கருணை பொழியும் முன் திரு முகத்துடன் விளங்குகிறது. இந்த ஆறுமுகப் பெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க எத்தனை கண்கள் இருந்தாலும் போதாது என்று தான் கூற வேண்டும். இங்கு இவரின் ஆறு முகங்களையும் நாம் தரிசிக்கும்படி சன்னதி அமையப் பெற்றுள்ளது சிறப்பு.

கால பைரவர்:

சுவாமி நெல்லையப்பர் கோவிலின் பெரிய பிரகாரத்தின் வட கிழக்கு முனையில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித் தருகிறார் கால பைரவர். இவர் ஆளுயர திருமேனியாக கோரை பற்களுடன் காட்சித் தருகிறார். இவருக்கு அஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவருக்கு வடை மாலை சாத்தி, தயிர் சாதம் நிவேதனம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

Two Nellaiappar temple carts placed on the outer road surrounding the temple, ready to be pulled by the devotees

திருவிழாக் கால பீமன்:

இங்கு மரத்தால் ஆன மிக பிரம்மாண்டமான பீமன் திருமேனி நான்கு சக்கரத்துடன் உள்ளது. இவரின் தோற்றமே பார்க்க மிகவும் கம்பீரமாக இருக்கும். இவர் இத் திருக்கோவிலின் ஆனிப் பெருந் திருவிழாவின் போது எட்டு நாட்களும் காலை வேளையில் சுவாமி வீதி உலா வருவதற்கு முன்பாக இவர் வீதி உலா வருவார். ஆனிப் பெருந் திருவிழாக் காலங்களில் மட்டுமே இவர் எழுந்தருள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனவரத லிங்கம்:

சுவாமி நெல்லையப்பர் கோவில் வெளி பிரகாரத்தின் தென் கிழக்கில் அமையப் பெற்றுள்ளது அனவரத லிங்கம் சன்னதி. அனவரதகான் என்னும் முகலாய மன்னர் தனக்கு ஏற்பட்ட கடும் வயிற்று வலி நீங்கியதன் பொருட்டு இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் பெயராலேயே அனவரத லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

மஞ்சனை வடிவுடை அம்மன்:

அம்மை காந்திமதி கோவில் பொற்றாமரை குளத்தின் மேற்கு கரையில் வடக்கு திசை நோக்கிய தனி சன்னதியில் காட்சித் தருகிறாள் அம்மை மஞ்சனை வடிவுடைய அம்மன். இவள் பண்டாசூரன் என்னும் அரக்கனை சம்காரம் செய்யும் கோலத்தில் உக்ர சொரூபினியாக காட்சித் தருகிறாள். இவளுக்கு பண்டாசூரமர்த்தினி என்ற பெயரும் விளங்கி வருகிறது.

ஞானானந்த தட்சிணாமூர்த்தி:

அம்மை காந்திமதி கோவில் பொற்றாமரை குளத்தின் மேற்கு கரையில் தென் திசை நோக்கிய தனி சன்னதியில் காட்சித் தருகிறார் ஞானானந்த தட்சிணா மூர்த்தி. இவர் சற்றே வித்தியாசமாக குத்துக் காலிட்டு அதன் மீது தன் இடக்கரத்தை வைத்து அமர்ந்த நிலையில் சனகாதி முனிவர்கள், அகத்தியர் மற்றும் கபிலர் முன்புறம் இருக்க ஞானமே வடிவாக காட்சித் தருவது சிறப்பம்சம்.

கால் மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி:

சுவாமி நெல்லையப்பர் கோவிலின் வட பக்கம் கீழ தேர் வீதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார் கால் மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி. இவர் இங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு ஞானம் வழங்கும் கோலத்தில் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

மதில் மேல் சங்கிலி பூதத்தார்:

அம்மை காந்திமதி கோவிலின் தென் கிழக்கு முனையில் தனி சன்னதியில் காட்சித் தருகிறார் சுவாமி சங்கிலி பூதத்தார். இவரே இக் கோவிலின் காவல் தெய்வமாக விளங்குகிறார். மதில் சுவரின் மீது தனியாக சுதை வடிவிலான ஒரு சங்கிலி பூதத்தார் பிரம்மாண்டமாக காட்சித் தருகிறார். இவருக்கு ஆடி மாதம் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்வார்கள்.

Two images of sivalinga;The sivalinga on the left is adorned with gold plates and a golden snake; on the right, the sivalinga is seen in front of a group of bamboo plants.

திருக்கோவில் அமைப்பு-சுவாமி சன்னதி:

இந்த காந்திமதி அம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோவில், திருநெல்வேலி மாநகரின் மையப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி கம்பீரமாக அமையப் பெற்றுள்ளது.

இதில் சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் தனிப் பெருங் கோவிலாகவும், அம்மை காந்திமதி திருக்கோவில் தனிப் பெருங் கோவிலாகவும் அமையப் பெற்றுள்ளது. இந்த இரண்டு கோவில்களையும் சங்கிலி மண்டபமானது சுவாமி நெல்லையப்பர் கோவில் தெற்கு கோபுர வாசல் வழியாக இணைக்கிறது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலுக்கு நான்கு திசைகளிலும் ஒரு கோபுரமும், அம்மை காந்திமதிக்கு கிழக்கு திசையில் ஒரு கோபுரம் என இக் கோவில் ஐந்து கோபுரங்களை கொண்டுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் கோவில் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் மேலே மரச் சிற்பங்கள் நிறைந்த மேற்கூரை கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ராஐ கோபுர வாயிலின் ஒரு பக்கம் விநாயகரும், மற்றொரு பக்கம் சுப்பிரமணியரும் காட்சியளிக்கிறார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி மண்டபம் மற்றும் கொடிமரம் அமையப் பெற்றுள்ளது. இதை ஒட்டிய பிரகாரமே வெளிப் பிரகாரம் ஆகும்.

இந்த வெளிப் பிரகாரத்தில் கொடிமரத்தில் இருந்து தெற்காக முறையே நால்வர் சன்னதி, விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி, சிவசைலநாதர் சன்னதி, அனவரத லிங்கம் சன்னதி ஆகியவையும், தெற்கு பிரகாரத்தில் தெற்கு கோபுர வாயிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியும், சுவாமி - அம்பாளுக்குரிய வாகன அறைகளும் இருக்கிறது.

அடுத்து மேலப் பிரகாரத்தில் சங்கரநயினார் - கோமதி சன்னதி, திருப்பணி ஆறுமுக நயினார் சன்னதி, மேலக் கோபுர வாசலில் மேற்கு நோக்கிய கணபதி, காசி விசுவநாதர் - விசாலாட்சி சன்னதி, வாயு லிங்கம் சன்னதி இருக்கிறது.

அடுத்து வடக்கு பிரகாரத்தில் வடக்கு கோபுர வாசலும், நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கமும், யாகசாலையும், சோமவார மண்டபமும் இருக்கிறது.

அடுத்து கீழ பிரகாரத்தில் பைரவர் சன்னதி, நவக்கிரக சன்னதி, சொக்கர் - மீனாட்சி சன்னதி, நவக்கிரகங்கள் சன்னதி, தங்கத் தேர் மண்டபம் இருக்கிறது.

The entrance to the Nelliappar temple with the temple gopuram besides the road where people and vehicles are seen moving

இந்த வெளிப் பிரகாரத்தின் கொடி மரத்தை தாண்டி உள்ளே செல்லும் வாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. இந்த நுழைவாயிலின் முன் மண்டபத்தில் தான் இத் திருக்கோவிலின் பெருமை மிகு சிற்பங்களான வீரபத்திரர், அர்ஜீனன், பகடை ராஜா உட்பட நான்கு சிற்பங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

அடுத்த நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தால் குடைவரையில் வேதபட்டர், அதிகார நந்தி, லிங்கம், விநாயகர் சன்னதி இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே சிறிய கொடிமரமும், பலிபீடமும் இருக்கிறது. அவற்றை வணங்கி தெற்கே இரண்டாம் பிரகாரத்தில் திரும்பினால் முறையே சூரியன் சன்னதி, மடப்பள்ளி இருக்கிறது.

அடுத்து தெற்கு பிரகாரத்தில் திரும்பினால் லிங்கம் சன்னதி, அனவரத தான நாத மண்டபத்தில் உற்சவர் சன்னதி, நால்வர் சன்னதி, அடுத்ததாக அறுபத்து மூவர் உற்சவர்கள், தாமிரபரணி அம்மன், சுரதேவர், அகத்தியர் மற்றும் ரிஷிகள், விநாயகர், வீரபத்திரர், சப்த மாதர்கள் சன்னதி, பொல்லாப் பிள்ளையார் சன்னதி, லிங்க சன்னதி, அறுபத்து மூவர் மூலவர் சன்னதி ஆகியவைகள் இருக்கிறது.

அடுத்து மேல பிரகாரத்தில் கைலாச பர்வத கட்டு மலை மேல் சோமாஸ்கந்தர் சன்னதி, லிங்கநாதர் சன்னதி, முழுதுங் கண்ட ராமக் கோன் சன்னதி, தல விருட்சம் மூங்கில் சன்னதி, நெல்லை சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றுடன் தாமிர சபையும், திருவாதிரை நடன மண்டபமும் இருக்கிறது.

அடுத்து வடக்கு பிரகாரத்தில் சந்தன சபாபதி சன்னதி, அஷ்ட லெட்சுமி சன்னதி, சனீஸ்வரர் சன்னதி, சகஸ்ர லிங்கம் சன்னதி, தீர்த்தக் கிணறு மற்றும் பெரிய சபாபதி சன்னதி ஆகியவை இருக்கிறது.

அடுத்து கீழ பிரகாரத்தில் குபேர லிங்கம் சன்னதியும், சந்திரன் சன்னதியும் இருக்கிறது. சிறிய கொடிமரம் தாண்டி மேடை போன்ற அமைப்பு உடைய மணி மண்டபத்திற்கு ஏறிச் செல்ல படிக்கட்டுக்கள் இருக்கின்றன. மணி மண்டபத்தை சுற்றிலும் உள்ள தூண்களை சுற்றி சிறு சிறு கல் தூண்கள் இருக்கிறது. இவற்றை முறையே தட்டினால் ஒவ்வொரு தூணில் இருந்தும் ஒவ்வொரு சப்தஸ்வர ஒலி எழும்பும் என்பது தனிச் சிறப்பு. இந்த மண்டபத்தின் சுவற்றில் சில அழகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த மண்டபத்தின் நடுவே மிகப் பெரிய மணி ஒன்றும் தொங்கி கொண்டிருக்கிறது.

இந்த மணி மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்து பரந்த மகா மண்டபத்தினை அடையலாம். இந்த மண்டபத்தின் நடுவில் கருவறைக்கு நேரெதிராக நந்தி இருக்கிறது. அடுத்து சுவாமி சன்னதிக்கு தென் புறம் பெரிய முக்குறுணி விநாயகர் சன்னதி, சந்திரசேகரர் - பவானி அம்மை சன்னதி இருக்கிறது.

அடுத்து தெற்கு சுற்று பிரகாரத்தில் திரும்பினால் சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி சன்னதியும், மேல சுற்று பிரகாரத்தில் கன்னி விநாயகர், உற்சவர்களான திருஞானசம்பந்தர், விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர் சன்னதி, தீர்த்த கோமுகி, பரிவாரங்களுடன் கூடிய இத்தல சிறப்பு மூர்த்தியான கங்காள நாதர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி ஆகியவையும், வடக்கு திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி, திரு மூல மகா லிங்கர் சன்னதி, தாமிர சபை நடராஜர் சன்னதி, செளந்தர சபை நடராஜர் சன்னதி, மகிஷாசூரமர்த்தினி சன்னதி, பைரவர் சன்னதி ஆகியவையும் இருக்கிறது.

அடுத்து கீழ பிரகாரத்தில் மகா மண்டபத்தில் சுவாமி சன்னதியின் வடக்கே சுப்பிரமணியர் சன்னதியும் இருக்கிறது. இவர்களை வணங்கி துவார பாலகர்கள் காவல் புரியும் வாயில் வழியாக படி ஏறி உள்ளே நுழைந்தால் இரண்டு கருவறைகள் இருக்கிறது. மத்தி கருவறையில் சுவாமி நெல்லையப்பர் சன்னதியும், வடக்கு கருவறையில் நெல்லை கோவிந்தர் சன்னதியும் அமையப் பெற்றுள்ளது.

சுவாமி நெல்லையப்பர் கோவிலுக்கு தெற்கே அம்மை காந்திமதி கோவில் அமையப் பெற்றுள்ளது. அம்மை கோவிலின் ராஜ கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் அங்கும் அழகிய மரச் சிற்பங்களுடன் கூடிய மேற்கூரை இருக்கிறது. அம்மை கோவிலின் வடக்கு புறம் கீழ தேர் வீதியில் செளந்திர சபையும், திருக்கோவில் நூல் நிலையமும் உள்ளது.

(தொடர்ச்சி பகுதி-5ல் காண்க)

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram