திருநெல்வேலி அல்வா

அல்வா என்றால் திருநெல்வேலியும், திருநெல்வேலி என்றாலே அல்வாவும் தான் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வரும். அந்த அளவிற்கு திருநெல்வேலியில் உள்ள அல்வா மிகவும் பிரபலம் ஆகும். திருநெல்வேலியில் பாரம்பரிய முறைப்படி அல்வா தயார் செய்து விற்கும் கடைகள் பல இருந்தாலும், அவற்றுள் இருட்டுக்கடை அல்வாவும், சாந்தி சுவீட்ஸ் அல்வாவும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் அல்வாவின் தனி சுவைக்கு இங்கு பாயும் தாமிரபரணி தண்ணீரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த திருநெல்வேலி அல்வாவை நாமும் வீட்டில் தயார் செய்து பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • சம்பா கோதுமை – அரை கிலோ.
  • சீனி – ஒன்றரை கிலோ.
  • நெய் – அரை லிட்டர்.

கூடுதலாக தேவைப்பட்டால்:

  • முந்திரி பருப்பு – 100 கிராம்.

செய்முறை:

முதலில் சம்பா கோதுமையை தண்ணீர் விட்டு அலசி குறைந்தது 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கோதுமை மாவை ஒரு வெள்ளை துணியால் வடிகட்டி பிழிந்து கோதுமை பால் எடுக்கவும். பின்னர் மீண்டும் அதே கோதுமை மாவை அரைத்து பிழிந்து இரண்டாம் முறையாக பால் எடுத்துக் கொள்ளவும். இந்த பாலை ஒரு உயரமான பாத்திரத்தில் ஊற்றி இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மேலே தண்ணீர் பிரிந்து நிற்கும். அந்த பிரிந்து நிற்கும் தண்ணீரை தனியாக வடித்து எடுத்து விட்டு, அடி தங்கியுள்ள கோதுமை பாலை எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

அல்வா நிறம் தயார் செய்ய:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் கால் கிலோ அளவுக்கு சீனியை சேர்த்து விடாமல் கிளறவும். இந்த கரைசலை விடாமல் கிளறி கொண்டே இருந்தால் சிறிது நேரத்தில் நிறம் மாறி, கரும்சிவப்பு நிறத்தில் வரும். இந்த கரைசலை நாம் சீனி பாகில் சேர்க்கும் போது அல்வாவின் நிறம் கிடைத்து விடும். இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது வேறு ஒரு அடிகனமான பாத்திரத்தை எடுத்து அதில் மீதம் உள்ள சீனியுடன், இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கிளறி பாகு காய்ச்சவும். சீனி நன்றாக கரைந்து பாகு ஒற்றை கம்பி பதத்திற்கு வந்தவுடன், ஏற்கனவே நிறத்திற்காக தயார் செய்துள்ள சீனி கரைசலை இதனுடன் சேர்த்து கிளறி விடவும். இப்போது தயாராக வைத்துள்ள கோதுமை பாலை இதில் சேர்த்து, கட்டி விழாமல் இருக்க, விடாமல் கிளறிக் கொண்டே கொதிக்க விடவும். சுமார் 45 நிமிடங்கள் வரை விடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் கோதுமை பால் கலவை, சீனி பாகுடன் சேர்ந்து வெந்து திரண்டு வரும். இப்போது இதனுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து, மீண்டும் ஒரு சில நிமிடத்திற்கு அடுப்பில் வைத்தபடியே கிளறி விட வேண்டும். இறுதியாக அல்வா பதம் திரண்டு வரும்போது, அதில் மீதமுள்ள நெய்யையும் ஊற்றிக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைத்தால் சூடான திருநெல்வேலி அல்வா தயார். இதனுடன் தேவைப்பட்டால் முந்திரி பருப்பை சிறிது சிறிதாக உடைத்து நெய்யில் வறுத்து போட்டுக் கொள்ளலாம். பாரம்பரிய திருநெல்வேலி அல்வாவில் முந்திரி பருப்பு சேர்க்கப்படுவதில்லை.

குறிப்பு:

1. அல்வா நிறத்தை இயற்கையாக பெற நாம் சர்க்கரையை சூடு படுத்தும் போது அது அதிகம் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. அல்லவா பக்குவமாக திரண்டு வர இறுதி வரை அதை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!