திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்றன. அந்த ஆறுகளின் குறுக்கே பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைப்பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த அணைகள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு நாம் திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய அணைகளின் விவரங்கள் பற்றி காணலாம்.
1. அடவிநயினார் அணை:
திருநெல்வேலி அருகே உள்ள செங்கோட்டை வட்டாரத்தில் மேக்கரை கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அடவிநயினார் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கும், கேரளாவில் உள்ள ஆன்மீக தலமான அச்சன்கோவிலுக்கும் ஈடிபட்ட பகுதியில் அமையப்பெற்றுள்ளது. குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த அடவிநயினார் அணைக்கட்டு பகுதியையும் சென்று பார்வை இடலாம். இந்த அணைக்கட்டும் செல்லும் வழியில் தான் திருமலை குமாரசாமி கோயில் என்னும் ஆன்மீக ஸ்தலம் உள்ளது. மலை மீது அமையப்பெற்றுள்ள திருமலைக்கோவில் மீது இருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மழையும் அதன் அடிவாரத்தில் உள்ள அடவிநயினார் அணையும் அழகாக தெரியும். இங்கிருந்து அணையின் ஒட்டு மொத்த அழகையும் ரசிக்க முடியும். அணை நிரம்பி வழியும் காலத்தில், இங்கிருந்து பார்க்கும் பொது வெள்ளியை உருக்கி விட்டார் போல ரம்மியமாக காட்சியளிக்கும். சுமார் 175 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த அடவிநயினார் அணைக்கட்டு அனுமான் நதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 68 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த அணைக்கட்டிற்கு திருநெல்வேலி - தென்காசி - செங்கோட்டை - பண்பொழி வழியாக சென்றடையலாம்.
2. ராமநதி அணை:
திருநெல்வேலி அருகே உள்ள கடையம் என்னும் ஊரில் இருந்து மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ளது ராமநதி அணைக்கட்டு. இந்த அணை அமையப்பெற்றுள்ள இடம் அதன் வளிமண்டல காலநிலை காரணமாக மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த அணை மக்கள் மத்தியில் தற்போது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக பிரபலமடைந்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து 5150 அடி உயரத்தில் இருந்து உற்பத்தியாகி, வனப்பகுதிகளில் 7 கி.மீ நீளத்திற்கு ஓடி வரும் ராமநதியின் குறுக்கே, ராமநதி அணையானது 1974 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கம் 839 மீ நீளத்திற்கு மண் மற்றும் கல் கொத்து கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டது ஆகும். இந்த அணைக்கட்டு மூலம் பதிவுசெய்யப்பட்ட ஆயக்கட்டுகளின் நன்மை 4953.51 ஏக்கர் ஆகும். .இந்த நீர்த்தேக்கத்தின் கீழ் கால்வாய் வழியாக 33 குளங்கள் பெருகி, அந்த தண்ணீர் பாசனத்திற்கு பயனளிக்கின்றன.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது ராமநதி அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் - பாப்பான்குளம் - பொட்டல்புதூர் - கடையம் மார்க்கமாக சென்றடையலாம்.
3. கடனாநதி அணை:
தாமிரபரணியின் துணை நதியான கடனா நதியின் குறுக்கே கடனா நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் மண் மற்றும் கொத்து கட்டமைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் வழியாக தான் அத்திரி மலைக்கு செல்ல முடியும் என்பதால் அத்திரி மலை பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வருகை தருகிறார்கள். இந்த அணையில் இருந்து வெளியேறும் கடனா நதி சுமார் 11 கிலோமீட்டர் தூரம் பயணித்து கீழ ஆம்பூர் என்னும் ஊரின் அருகே தன்னுடன் சங்கமிக்கும் ராமநதியை இணைத்து கொண்டு, அங்கிருந்து தென்கிழக்கு நோக்கி 13 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணி ஆற்றில் சங்கமம் ஆகிறது. கடனா நதியின் தண்ணீர் மூலம் ஆழ்வார்குறிச்சி மற்றும் கீழ ஆம்பூர் பகுதிகளில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 52 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த கடனா நதி அணைக்கு திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் - ஆழ்வார்குறிச்சி - சிவசைலம் வழியாக சென்றடையலாம்.
4. குண்டாறு அணை:
குண்டாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குற்றாலம் மற்றும் செங்கோட்டை நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் இது ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. குற்றாலம் செல்லும் வழியில் ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த அணை மற்றும் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். இந்த பகுதியின் நீர்ப்பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணையின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகள் கால இடைவெளியில் 1983 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணையின் நீர்ப்பாசன திறன் மூலம் 454.50 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. குண்டாறு அணையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் 1 கி.மீ தூரத்தில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட நீர்வீழ்ச்சியை அடைய, நான்கு சக்கர வாகனம் மட்டுமே பொருத்தமானது. இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா மற்றும் குடும்ப பயணத்திற்கு சிறந்த இடத்தை வழங்குகிறது. அணையின் அருகே ஏராளமான பூச்செடிகள் மற்றும் பச்சை மரங்களைக் கொண்ட ஒரு பூங்கா குழந்தைகள் ரசித்து மகிழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை மண் மற்றும் கொத்து கட்டமைப்புகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் குண்டாறு நதி சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொட்டாகுளம் கிராமத்தை நோக்கி பாய்ந்து, ஹரிஹர நதியில் இணைந்து, பின்னர் ஹரிஹரநதி 3 கிலோமீட்டர் பாய்ந்து இறுதியாக சிற்றாறில் சங்கமிக்கிறது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது குண்டாறு அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி - செங்கோட்டை - கண்ணுபுளிமெட்டு மார்க்கமாக சென்றடையலாம்.
5. கருப்பாநதி அணை:
தாமிரபரணி ஆறு மற்றும் சிற்றாறு ஆகியவற்றின் கிளை நதியான கருப்பநாதி நதி மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 5870 அடி உயரத்தில் உருவாகிறது. இது திருநெல்வேலி அருகே உள்ள கடையநல்லூர் ஊரின் அருகிலுள்ள கிருஷ்ணபுரம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்த கருப்பநதி நீர்த்தேக்கம் 1974 ஆம் ஆண்டில் கருப்பநாதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து பாயும் தண்ணீர் தெற்கே 20 கிலோமீட்டர் தூரம் பயணித்து, சாம்பவர்வடகரை என்னும் ஊரில் உள்ள ஊர்மேலழகியான் அணைக்கட்டின் கீழ் நீரோடை பக்கத்தில் உள்ள அனுமன் நதியோடு சங்கமிக்கிறது. நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் தண்ணீர் மூலமாக 72 குளங்கள் நிரம்பி பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலியில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ள இந்த கருப்பாநதி அணைக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி - கடையநல்லூர் - கிருஷ்ணாபுரம் வழியாக சென்றடையலாம்.
6. நம்பியாறு அணை:
நம்பியார் நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தாலுகாவின் கோட்டைக்கருங்குளம் கிராமத்தில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, இது 2004 ஆம் ஆண்டில் தமிழக அரசாங்கத்தால் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதில் உள்ள இடது பக்க பிரதான கால்வாய் மற்றும் வலது பக்க பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் 40 குளங்களின் கீழ் 1744 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது. இந்த அணை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டு காலங்களிலும் தண்ணீர் வசதி பெறுகிறது. இது தவிர ராதாபுரம் தாலுகாவில் உள்ள இரண்டு கால்வாய்கள் மற்றும் 44 குளங்கள் வழியாக 368.64 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டைக்கருங்குளம் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது நம்பியாறு அணை. இதற்கு திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி - வள்ளியூர் - சமூகரெங்கபுரம் - கோட்டைக்கருங்குளம் மார்க்கமாக சென்று வரலாம்.
7. கொடுமுடியாறு அணை:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் திருக்குறுங்குடி என்ற ஊரின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு நீர்த்தேக்கம் அமையப்பெற்றுள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கொடுமுடியாறு, கொம்பையாறு மற்றும் சிறு நீரோடைகளின், சங்கமப் புள்ளியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் மூலம் 44 குளங்களின் கீழ் 5781 ஏக்கர் பரப்பளவில் உள்ள 16 கிராமங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நீர்த்தேக்கம் இரண்டு சதுப்பு நிலங்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த நீர்த்தேக்கம் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டு காலங்களிலும் மழை பொழிவின் மூலம் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கம் 3.58 மிமீ3 (126.53Mcft) திறன் கொண்டது. இதில் தாமரையாறு என்னும் அமைப்பின் கீழ் 2340 ஹெக்டர் பரப்பளவில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் வள்ளியூரான் கால்வாய், படலையார் கால்வாய் மற்றும் வடமலையன் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்கள் வழியாக 791 ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதியை பெறுகிறது.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது கொடுமுடியாறு அணைக்கட்டு. இதற்கு திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி - ஏர்வாடி - திருக்குறுங்குடி மார்க்கமாகவும், திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி - களக்காடு மார்க்கமாகவும் சென்று வரலாம்.
8. வடக்கு பச்சையாறு அணை:
வடக்கு பச்சையாறு அணை திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தாலுகாவில் உள்ள களக்காடு அருகே பத்தை என்னும் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை 3110 மீட்டர் நீளம், 20.2 மீட்டர் உயரம், 442 எம்.சி.டி திறன் உடன் கொத்து மண் வகை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 115 குளங்களின் கீழ் 9593 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கட்டு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் அதன் சொந்த நீர்ப்பிடிப்பு பகுதி மூலம் தண்ணீரைப் பெறுகிறது. கூடுதலாக, மழைக்காலத்தில் பச்சை ஆற்றில் இருந்து திசைதிருப்பல் கால்வாய் வழியாகவும் தண்ணீர் பெறப்படும். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இந்த அணை இயற்கை காட்சியமைப்பு நிறைந்த சூழ்நிலைகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.
அணையின் முக்கிய விவரங்கள்:
அமைவிடம் / செல்லும்வழி:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் களக்காடு அருகில் உள்ள பத்தை என்னும் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது வடக்கு பச்சையாறு அணை. இதற்கு திருநெல்வேலி மாநகரில் இருந்து நாங்குநேரி - களக்காடு - கருவேலங்குளம் வழியாகவும், திருநெல்வேலி மாநகரில் இருந்து பத்தமடை - சேரன்மகாதேவி - கருவேலங்குளம் வழியாகவும் சென்று வரலாம்.