Logo of Tirunelveli Today
English

Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi - 3)

View of the majestic main gopuram and devotees gathered outside the smaller gopuram entrance of the Tiruchendur temple.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புக்கள்: (Tiruchendur Subramaniya Swamy Temple Specialties)

இங்கு தரப்படும் பன்னீர் இலை விபூதி, தீராத நோய்கள் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது. இந்த பன்னீர் இலை விபூதியை பெற்று விசுவாமித்திரர் தன்னுடைய குன்ம நோய் மற்றும் ஆதி சங்கரர் தன்னுடைய காச நோய் நீங்கப்பெற்றதாக வரலாறு கூறுகிறது.

ஆதி சங்கரர் இங்கு பாடியுள்ள சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாடலில் இந்த பன்னீர் இலை விபூதியின் மகத்துவத்தை பாடியுள்ளார்.

இந்த பன்னீர் இலையில் பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும், இது முருகப் பெருமானின் பன்னிரு கரங்களை குறிப்பதாக ஜதீகம்.

சாயாபிஷேகம்:

இங்கு கந்த சஷ்டி விழாவில் கடற்கரையில் சூரனை சம்காரம் செய்த பின்னர், திருக்கோவிலுக்குள் உள்ள 108 - மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளும் ஜெயந்தி நாதப் பெருமானுக்கு சாயாபிஷேகம் நடைபெறும். சூரனை சம்காரம் செய்த கோபத்தை தணிக்கும் பொருட்டு ஜெயந்தி நாதருக்கு முன்னால் பெரிய கண்ணாடி நிறுத்தப்பட்டு, அதில் தெரியும் அவரது பிம்பத்துக்கு ( நிழல்) சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதனை கண்ணாடியில் பார்த்து முருகப் பெருமான் மனம் குளிர்வதாக ஜதீகம்.

இங்கு காட்சித் தரும் சண்முகப் பெருமான், வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி திருவிழா மற்றும் மாசி திருவிழா காலங்களில் மட்டுமே திருக்கோவிலை விட்டு வெளியே வந்து வீதிகளில் உலா வருவார் என்பது சிறப்பு.

இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு குமார தந்திர விதிப்படி போத்திமார்களாலும், சண்முகப் பெருமானுக்கு சிவாகம முறைப்படி சிவாச்சாரியார்களாலும் பூஜைகள் நடைபெறுகிறது.

இங்கு ஒரே கோவிலில் நான்கு உற்சவர்கள் இருப்பது சிறப்பம்சம். இதில் மூலவரின் பிரதி பிம்பமாக ஜெயந்தி நாதரும், சண்முகப் பெருமானின் பிரதி பிம்பமாக குமர விடங்கப் பொருமானும் விளங்குகிறார்கள்.

இங்குள்ள சண்முகப் பெருமான் தனிக் கருவறையில் மூலவர் அந்தஸ்திலேயே அருள்பாலிக்கிறார்.

Photo of the main deity Sri Subramanya Swamy with the temple premises in the background. The deity is wearing lemon and flower garlands, and standing with his consorts Valli and Devanai, and his celestial vehicle, the peacock.

இங்குள்ள குமரவிடங்க பெருமான் " மாப்பிள்ளை சாமி " என்று அழைக்கப்படுகிறார். இங்கு திருக்கல்யாண உற்சவத்தில் இவரே மாப்பிள்ளையாக எழுந்தருளுவார்.

இங்கு மூவலர் சுப்பிரமணிய சுவாமி சிவ பூஜை செய்யும் கோலத்தில் காட்சித் தருவதால் அவருக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்களில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை.

இங்கு நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் ஏழாம் நாள் சண்முகப் பெருமான், கருவறையில் இருந்து எழுந்தருளி திருவீதிகளில் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்திலும், பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளிச் சப்பரத்திலும், விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பார்.

இதில் ஏழாம் திருவிழா அன்று தங்கச் சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளும் சண்முகப் பெருமானின் பின் பக்கம், நடராஜர் அலங்காரம் செய்யப்படுவது சிறப்பம்சம் ஆகும்.

இங்கு ஆவணி மற்றும் மாசி ஆகிய இரண்டு மாதங்களும் பெருந் திருவிழாவும், வருடத்திற்கு இரண்டு முறை தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும்.

இங்கு நடைபெறும் ஆவணி மற்றும் மாசி திருவிழாவில் குமரவிடங்கப் பெருமானே வாகன சேவை கொண்டருள்வார். ஆவணி திருவிழாவின் போது வள்ளியம்மை தனி அம்மையாகவும், மாசி திருவிழாவின் போது தெய்வானை அம்மை தனி அம்மையாகவும் வாகன சேவை கொண்டருள்வார்கள்.

வீரபாண்டிய கட்டப்பொம்மன் இத்தல முருகப் பெருமான் மீது தீவிர பக்தி செலுத்தியுள்ளார். இங்கு முருகப் பெருமானுக்கு தினமும் உச்சி கால பூஜை முடிந்த பிறகே தான் உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் கோட்டை இருந்த பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் திருக்கோவில் வரை குறிப்பிட்ட இடைவெளியில் மணி மண்டபங்களை அமைத்து, திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுரத்தில் உள்ள மணி, உச்சி கால பூஜையின் போது ஒலிக்க, அதை பின் பற்றி பாஞ்சாலங்குறிச்சி வரை அமைக்கப்பட்ட மற்ற மணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்க, அதன் மூலம் உச்சி கால பூஜை நிறைவடைந்ததை கட்டப்பொம்மன் அறிந்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இவர் வைத்து வணங்கிய ஜக்கம்மா தேவி மற்றும் பிற விக்ரகங்கள் இன்றும் இந்த திருச்செந்தூர் கோவிலில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி மீது கந்தர் கலி வெண்பா, சுப்பிரமணிய புஜங்கம், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், திருப்புகழ், நீரோட்ட யமக அந்தாதி மற்றும் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது. இவற்றுள் நீரோட்ட யமக அந்தாதியானது உதடுகள் ஒட்டாத வண்ணம் படிக்கும் படி தகுந்த வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

இங்கு கடற்கரையை ஒட்டி திருக்கோவில் இருந்தாலும், இதுவரை கடலின் சீற்றத்தால் எவ்வித பாதிப்பும் இங்கு ஏற்பட்டதில்லை. 2006 ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின் ( சுனாமி) போது கூட இங்கு மட்டும் கடல் நீர் உள் வாங்கியதே இதற்கு சாட்சியாக விளங்குகிறது.

இந்த திருக்கோவில் பெரிய பிரகாரத்தின் செப்பு கொடி மரம் அருகே சுவற்றில் ஒரு சதுர வடிவ துளை இருக்கும். இது சுப்பிரமணிய சுவாமிக்கு நேர் எதிராக இருக்கும். இதன் வழியே பார்த்தால் கடல் தெரியும். இந்த துளையில் நம் காதுகளை வைத்துக் கேட்டால் எழும்பி ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஒசையானது ஓம் என்று ஒலிப்பதை நாம் உணர முடியும்.

Devotees pulling the Tiruchendur temple chariot with an inset picture of the main deity and his consorts.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முக்கிய திருவிழாக்கள்: (Important Festivals of Tiruchendur Temple)

  • இங்கு சித்திரை விசு அன்று சண்முகப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும்.

 

  • சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும்.

 

  • வைகாசி மாதம் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

 

  • ஆனி மாதம் நடராஜ பெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

 

  • ஆடி மாதம் இத் தல பார்வதி அம்மைக்கு முளைகொட்டு உற்சவம் மற்றும் சேரமான் பெருமான் கைலாயம் போகும் விழாவும் சிறப்பாக நடைபெறும்.

 

  • ஆவணி மாதத்தில் ஆவணி திருவிழா கொடியேற்றமாகி பன்னிரெண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஆவணி திருவிழாவின் பத்தாம் நாள் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெறும்.

 

  • புரட்டாசி மாதம் விஜய தசமி அன்று பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.

 

  • ஐப்பசி மாதம் இத் திரிக்கோவிலின் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

 

  • கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை ஏற்றும் விழா விமரிசையாக நடைபெறும்.

 

  • மார்கழி மாதம் அதிகாலை வழிபாடும், திருவாதிரை விழாவும் சிறப்பாக நடைபெறும்.

 

  • தை மாதம் தைப் பூச திருவிழா சிறப்பாக நடைபெறும்.

 

  • மாசி மாதம் மாசிப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பன்னிரெண்டு நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் பத்தாம் நாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

 

  • பங்குனி மாதம் உத்திரத்தன்று முருகன் - வள்ளி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.

 

  • இது தவிர அன்றாட உற்சவங்களாக தங்கத் தேர் உலா உபயதாரர்களை கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

அமைவிடம்:

திருநெல்வேலி மாநகரில் இருந்து கிரக்கே சுமார் 54 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு செல்ல தமிழகத்தின் முக்கிய நகர்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கிறது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram