திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 8:

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-8ல்.,

24. காசிப ஈஸ்வரர் சருக்கம்.

பற்றி காணலாம்.

24. காசிப ஈஸ்வரர் சருக்கம்:

அரிய பெரிய தவங்களைச் செய்து பல வரங்களைப் பெற்ற காசிப முனிவர் தாமிரபரணிக்கு வந்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, வெள்ளை மணலால் லிங்கத்தை உருப்பிடித்து, ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து, வணங்கி வழிபட்டார். அதனால் அந்த தீர்த்தம் காசிப தீர்த்தம் என்றும், இறைவன் திருப்பெயர் காசிப ஈஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டது. அதன் அருகில் தீப தீர்த்தம் என்று ஒரு தீர்த்தமும், எரிச்சாளுடைய மூர்த்தி என்ற மூர்த்தியும் காட்சித் தருகிறார்கள். அவரைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிச் சூதமா முனிவர் மேலும் கூறத் தொடங்கினார்.

முற்காலத்தில் சிவசர்மா என்று ஒரு முதிய வேதியன் சிறந்த சிவபக்தனாக வாழ்ந்து வந்தான். அவன் தாமிரபரணியில் நீராடி, ஆதிலிங்கத்தை வணங்கி, அகத்தியரைக் காண வேண்டும் என எண்ணி ஒரு பையில் பொருளோடும், ஒரு கையில் தண்டத்தோடும் வடதிசையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம், திருக்காளத்தி, சிதம்பரம், சீர்காழி, திருச்சிராப்பள்ளி, திருநாவலூர், திருக்கடவூர், திருவாலவாய் ஆகிய தலங்களில் கோவில் கொண்டிருக்கின்ற இறைவனை எல்லாம் வணங்கிக் கொண்டு திருநெல்வேலி வந்தான். தாமிரபரணியில் நீராடி வேய்முத்தநாதரை வணங்கிக் கொண்டு காசிஈஸ்வரபுரம் சென்று, காசிப தீர்த்தத்தில் நீராடி, காசிப ஈஸ்வரரை வணங்கிக் கொண்டு வந்தான். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த சாந்த வேந்தன் என்பவனைக் கண்டான் சிவசர்மா. அவனுடைய தோற்றத்தைக் கண்டு சிவசர்மா அவனிடம் பேச்சுக் கொடுத்தான். இருவரும் பேசிக் கொண்டே வந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.சாந்தவேந்தன் சிவசர்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னான். சிவசர்மாவும் அமர்ந்து சாப்பிட்டான். பின்பு தான் வைத்திருந்த பொருள் பையைச் சாந்தவேந்தனிடம் கொடுத்து, சாந்தா.! இந்தப் பையில் பொருள் இருக்கிறது. இதனைப் பத்திரமாக வைத்திரு, நான் சென்று அகத்திய முனிவரைப் பார்த்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு சிவசர்மா பாவநாசத்துக்கு புறப்பட்டான்.

பாவநாசம் சென்று முக்கூடல் தீர்த்தத்தில் நீராடி, பாவநாச நாதரை வணங்கி கொண்டு குறுமுனியை காண்பதற்காக பொதிகை மலையின் மீது ஏறினான். மலையின் மீது பல ஆசிரமங்கள், வேள்விச் சாலைகள், குகைகள் இருந்தன. அவற்றில் எல்லாம் தேடிப் பார்த்தான். அகத்தியர் தென்படவில்லை. அந்த மலை முழுவதும் சுற்றிப் பார்த்தான். அகத்தியரை காண முடியவில்லை. முதுமையாலும், அவரை தேடி அலைந்த களைப்பாலும், மயக்கமுற்று கீழே சாய்ந்து விட்டான். சிறிது நேரம் சென்ற பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்தான். மீண்டும் அகத்தியரைத் தேடி அலைந்தான். அவரைக் காண முடியவில்லை. அகத்திய முனிவரைத் தேடுகின்ற முயற்சியில், தன் கால்கள் தேய்ந்து போனாலும், கைகளை ஊன்றி நடந்து கொண்டே தேடுவேன்.! கைகள் தேய்ந்து போனாலும் உடலால் உருண்டு கொண்டே தேடுவேன்.! எவ்வாறாயினும் அவரைக் காண்பேன்.! காணமுடியவில்லை என்றால் என் உயிரை விட்டு விடுவேன் என்று சொல்லி ஒரு வைராக்கியத்தோடு தேடத் தொடங்கினான். காலம் சென்றது, கால்களும் தேய்ந்தன, பின் கைகளை ஊன்றிக் கொண்டே நடந்ததால் கைகளும் தேய்ந்து போயின. அப்பொழுதும் அகத்தியர் அகப்படவில்லை. பின்னர் உருண்டு கொண்டே தேடினான். சதைகள் தேய்ந்து எலும்புகள் எல்லாம் தெரிந்தன. அகத்தியர் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்து அவன் செயல்களை அவனுக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த அகத்திய முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு இறுதியாக அவன் முன்னே தோன்றினார். சிவசர்மா.! உன் மன உறுதியை பாராட்டுகிறேன். நீ தேடிய அகத்தியன் நான் தான். இறைவன் அருளால் உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் எழுந்து வா என்று கூறி அழைக்க, அதனை கேட்டு மகிழ்ந்த சிவசர்மா, எழுந்து வரக்கூடிய சக்தியை பெற்றுவிட்டான். கால்களும் வந்தன, கைகளும் வந்தன. தேய்ந்த உடலும் தேறி வந்தது. சிவசர்மா எழுந்து வந்து அகத்தியரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அகத்தியர் அவனை வாழ்த்தி, சிவசர்மா.! இதோ இந்தத் தீர்த்தம் எமது பெயரால் விளங்கும் முனி தீர்த்தம். இந்த தீபத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, இந்தத் தீர்த்தத்தில் மூழ்கு என்று சொல்லிச் சிவசர்மா கையில் ஒரு தீபத்தைக் கொடுத்தார்.

இங்கு முனித் தீர்த்தத்தில் முதியவனாக மூழ்கியவன், அங்கு சாலா தீர்த்தத்தில் போய் இளைஞனாக எழுந்து வந்தான். தீர்த்தத்தின் மகிமை கிழவன் குமாரனானான். அந்தர துந்துபி முழங்க, வானவர் பூ மழை பொழிந்தனர். அப்போது அகத்தியர் அங்கே வந்தார். சிவசர்மா மீண்டும் அவரது பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவரை பணிந்து நின்றான். அகத்திய பெருமானும் அவனுக்கும் ஆசிகள் பல வழங்கி அவனை வழியனுப்பி வைத்தார். அகத்தியரை கண்டு வணங்கி, வாழ்த்துப் பெற்ற மகிழ்ச்சியோடு சிவசர்மா, சாந்தவேந்தன் வீட்டிற்கு திரும்பி வந்தான். சாந்த வேந்தனைக் கண்டு தான் கொடுத்துச் சென்ற பொருளைக் கேட்டான்.அதற்கு சாந்தவேந்தன் யார் நீ? இந்தப் பொருளை கேட்கிறாய்? என்று திருப்பி கேட்கிறான். உடனே சிவசர்மா அவனிடம் பொருளை கொடுத்துவிட்டு போனதில் இருந்து நடந்த எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறினான். இருந்தும் சிவசர்மாவை ஏமாற்றும் எண்ணம் கொண்ட சாந்தவேந்தன், நான் உன்னிடத்தில் எந்த பொருளும் வாங்கவில்லை என்று உறுதியாக கூறிவிடுகிறான். இளமைத் தோற்றத்தில் இருக்கும் என்னிடம் நீ எந்த பொருளையும் வாங்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் முதியவனாக இருந்த போது கொடுத்து விட்டு போனேன் அல்லவா, அந்த பொருளை கொடு என்று கேட்டான் சிவசர்மா.

தன்னிடம் பொருளை கொடுத்துவிட்டுச் சென்ற முதியவன் தான் இந்த சிவசர்மா என்பதை புரிந்து கொண்ட சாந்தவேந்தன், அந்தப் பொருளை இவனிடம் கொடுக்கக் கூடாது., நாமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் கொண்டு, நான் யாரிடத்திலும் எந்த வகை பொருளையும் வாங்கவில்லை என வாய் கூசாமல் பொய் சொன்னான்,இதனால் சினம் கொண்ட சிவசர்மா, சாந்தா.! பொய் சொல்லாதே, பொய் சொன்ன வாய் புழுக்கூடு ஆகும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, என்னிடம் வாங்கிய பொருளைத் திரும்ப தந்துவிடு என்று எச்சரிக்கை செய்கிறான். “ஆசை அறிவுக்குச் சத்துரு” என்று கூறுவது போல சாந்ததேவன் கொண்ட ஆசை அவன் அறிவை மழுங்கச் செய்து விட்டது. நான் உன்னிடத்தில் எந்த பொருளும் வாங்கவில்லை. இன்னும் அழுத்தமாக சொல்ல வேண்டும் என்றால் நான் இதற்கு முன் உன்னை பார்த்தது கூட இல்லை என்று கூறிவிடுகிறான் சாந்ததேவன். சரி அப்படியானால் நீ வந்து காசிபநாதர் கோவிலில் வந்து சத்தியம் செய்து சொல் நான் நம்புகிறேன் என சிவசர்மா கூறுகிறான். சரி அப்படியே நான் வந்து சத்தியம் செய்கிறேன் என சாந்தனும் கூறிவிடுகிறான். அதனை கேட்ட சிவசர்மா நாளை வந்து நீ சத்தியம் செய்ய வேண்டும் என கூறிவிட்டு சென்றுவிடுகிறான்.

இப்போது சாந்தன் நேராக காசிபநாதர் கோவிலுக்கு சென்றான். இறைவன் திருமுன்னர் வீழ்ந்து வணங்கி, இறைவா..! நாளை உன் சன்னதியில் சிவசர்மா என்பவனுக்கு சத்தியம் செய்துதர சம்மதித்திருக்கிறேன். அப்போது நீ இங்கு இருந்தால் என்னால் பொய் சத்தியம் செய்ய இயலாது. அதனால் நான் அவனுக்குச் சத்தியம் செய்து தருகின்ற வரையில், நீ இந்தக் கும்பத்தில் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டு, அதற்குரிய மந்திரங்களை உச்சரித்து சுவாமியை கும்பத்தில் ஆவாஹனம் செய்துவிடுகிறான். பின்னர் அந்த கும்பத்தை எடுத்துச் சென்று திருக்கோவிலில் வளாகத்துக்குள் இருந்த புளியமரத்தின் அடியில் வைத்து விட்டு சென்றுவிட்டான். அன்று இரவில் இறைவன் சிவசர்மாவின் கனவில் தோன்றி, நாளை உனக்குச் சத்தியம் செய்து தருவதற்காக சாந்தவேந்தன் என் கோவிலுக்கு வருவான். அப்போது நீ, இங்கு வைத்துச் செய்ய வேண்டாம், அதோ அந்த புளியமரத்தின் அடியில் இருந்து சத்தியம் செய் என சொல் என்று கூறிவிட்டு மறைந்துவிடுகிறார்.மறுநாள் விடிந்த உடன், சாந்த வேந்தன் பொய் சத்தியம் செய்வதற்காக தயாராகிறான்.

சிவசர்மாவும் தனது காலை கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு காசிபநாதர் கோவிலுக்கு வந்து சேர்கிறான். அங்கு குடிமக்கள் அனைவரும் கூடியிருக்க சாந்தவேந்தன் சத்தியம் செய்ய தயாராகிறான். அப்போது சிவசர்மா குறுக்கிட்டு, சாந்ததேவா.! கொஞ்சம் பொறு. நீ இங்கே சத்தியம் செய்ய வேண்டாம். அதோ அந்தப் புளிய மரத்தின் அடியில் நின்று சத்தியம் செய்து கொடு போதும் என கூறுகிறான். இதனை கேட்ட சாந்தவேதன் கதிகலங்கி போனான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, இதுதானே கோவில், இங்கு வைத்தே சத்தியம் செய்து தருகிறேன் என்று கூறுகிறான். அதற்கு சிவசர்மா, வேண்டாம் இந்த புளிய மரத்தின் அடியில் வைத்து நீ சத்தியம் செய்து கொடு அதுவே எனக்கு போதும் என உறுதியாக கூற, இதற்கு மேல் தயங்கினால் கூடியிருக்கும் மக்கள் நம்மை சந்தேகமாக பார்ப்பார்கள் என்று நினைத்து, வருவது வரட்டும் என்று துணிந்து சிவசர்மா கூறியபடியே புளியமரத்தின் அடியில் நின்று பயமில்லாமல் பொய் சத்தியம் செய்து விடுகிறான். அப்போது அந்த மரத்தில் இருந்து அக்கினி தோன்றி சாந்தவேந்தனை எரித்து பொசுக்கி சாம்பலாக்கியது. அவனுடன் சேர்ந்து அந்த புளிய மரமும் எரிந்து சாம்பலாகி போனது. பின்னர் அந்த புளிய மரம் இருந்த இடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. அப்போது வானுலக வாத்தியங்கள் எல்லாம் முழங்கின. வானவர்கள் பூ மழை பொழிந்தனர். இந்தக் காட்சியை கண்ட சிவசர்மாவும், ஊர்மக்களும் இறைவனை போற்றித் துதித்தார்கள். சாந்தவேதனிடம் இருந்த சிவசர்மாவின் பொருள் சிவசர்மாவுக்கே திருப்பி கிடைத்து விட, அந்த பொருளைக் கொண்டு, சிவலிங்கம் தோன்றிய இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கே அவனுக்காக தோன்றிய மூர்த்திக்கும் “எரிச்சாளுடையர்” என்னும் திருநாமம் சூட்டி, ஆகம விதிகளின் படி அபிஷேகம், ஆராதனை எல்லாம் செய்து தனது வாழ்நாளை அங்கேயே கழித்தான் சிவசர்மா என்று சூதமா முனிவர் கூறி முடித்து அடுத்ததாக திருக்கோட்டிநாதரின் சிறப்பை பற்றி கூறுகிறார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!