திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 7:

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-7ல்.,

20. அகத்தியர் வேணுவனம் வந்த சருக்கம்.

21. தாமிரபரணித் தீர்த்தச் சருக்கம்.

22. பாவநாசச் சருக்கம்.

23. திருமூலநாதர் சருக்கம்.

ஆகியவற்றை பற்றி காணலாம்.

20. அகத்தியர் வேணுவனம் வந்த சருக்கம்:

திருக்குற்றாலத்திலிருந்து புறப்பட்ட அகத்திய முனிவர் நேராக வேணுவனத்துக்கு வந்தார். அகத்திய முனிவர் வந்திருப்பதை அறிந்த, கண்ணுவ முனிவரும், வசிஷ்ட முனிவரும் வந்து அகத்தியரைக் கண்டு வணங்கி, வரவேற்றார்கள். அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அகத்திய முனிவர், திருக்கோவில் சென்று, பொற்றாமரைக் குளத்தில் நீராடி வேணுவனநாதரையும், அனவரததானநாதரையும், திருமூலமகாலிங்கத்தையும், அம்மை வடிவுடைநாயகியையும் வணங்கி தாமிரசபையையும் தரிசனம் செய்து வாசலுக்கு வந்தார். அங்கே ஏராளமான முனிவர்கள் வந்து அகத்தியரைக் கண்டு புகழ்ந்து, வாழ்த்தி வணங்கினார்கள். “சமநிலை இன்றி ஆடிய பூமியைச் சமப்படுத்திய முனிவர் பெருமான் வாழ்க” என்று போற்றி பணிந்தார்கள். அதற்கு அகத்தியர், முனிவர்களே அது என் செயல் அல்ல, இறைவனின் செயல் என்று அடக்கத்துடன் கூறிவிட்டு பொதிகை மலைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

அகத்திய முனிவர் தன் மனைவி லோபாமுத்திரை தேவியுடனும், இறைவன் அருளிய தாமிரபரணி நதியுடனும் பொதிகை மலைக்குச் சென்றார். அங்குள்ள முனிவர்கள் அனைவரும் வந்து அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி, தரணி எல்லாம் போற்றும் தமிழ் முனியே.! தங்கள் கமண்டலத்தில் இருக்கும் புனித நதியாகிய தாமிரபரணித் தாயைப் பூமியில் நடக்க விட வேண்டும் என்று வேண்டினார். சரி அப்படியே செய்வோம், இறைவனின் சித்தமும் அதுவே ஆகும் என்று சொல்லி, அகத்திய முனிவர், பொதிகை மலையின் உச்சியில், பூங்குளம் என்னும் இடத்தில் இருந்து, பொருநை என்னும் தாமிரபரணி நதியை பூமியில் பாயவிட்டார். அங்கிருந்து மெல்ல நடைபோட்ட தாமிரபரணி தாய் பூமியைக் கண்ட பூரிப்பில், உள்ளப் பெருக்கோடு, வெள்ளப் பெருக்கெடுத்து துள்ளிப் பாய்ந்து சென்றாள் என்று சூதமா முனிவர் தொடர்ந்து தாமிரபரணியின் பெருமைகளை பற்றி முழுமையாகச் சொன்னார். தமிழ் வளர்த்த பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி, தமிழ் தெய்வமான குமரன் கோவில் கொண்டிருக்கும் வங்கக்கடலில் சென்று கலந்தது என்று சூதமா முனிவர் சொல்ல, முனிவர் பெருமானே.! பொருனையின் இரு கரைகளிலும் இருக்கும் சிவன் கோவில்கள் பற்றியும், ஆங்காங்கே அமைந்திருக்கும் தீர்த்தங்கள் பற்றியும் சொல்ல வேண்டும் என்று நைமிசாரணிய முனிவர்கள் வேண்டிக் கேட்க, சூதமா முனிவர் மேற்கொண்டு தொடர்கிறார்.

21. தாமிரபரணித் தீர்த்தச் சருக்கம்:

இந்தத் தாமிரபரணித் தாய், ஆதியில் அன்னை உமாதேவியின் திருக்கரத்தில் தோன்றிக் கயிலையை வளப்படுத்திக் கொண்டிருந்தாள். பின் சிவபெருமானின் கருணையினால் அகத்திய முனிவருடன் பொதிகை மலைக்கு வந்து அங்கிருந்து பொருணையாய் பொங்கிப் புறப்பட்டு தான் போகும் வழியெல்லாம் வளம் பெருகச் செய்து, நிறைவாக குமரன் கோவில் கொண்டிருக்கும் வங்கக்கடலில் கலந்து ஓய்வெடுக்கிறாள். மலையில் தோன்றி கடலில் கலக்கின்ற வரை, இடையில் எண்ணற்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. இவற்றில் எந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும், தீராத வினைகள் யாவும் தீர்ந்து முக்தியடைவர்.

சீதர தீர்த்தம்:
இது மலையின் மேல் உள்ள தீர்த்தம். இதில் திருமால், திருமகளுடன் வந்து சிவபெருமானை வழிபட்டார். அதனால் இந்தத் தீர்த்தம் இந்த பெயரில் அழைக்கப்பட்டது. இங்குள்ள இறைவனின் திருப்பெயர் சீதரேஸ்வரர்.

அகத்தியர் தீர்த்தம்:
இதில் அகத்தியர் நீராடிச் சிவபெருமானை வழிபட்டார். அதனால் அகத்திய தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அங்கே இறைவனின் திருப்பெயர் அகத்தீஸ்வரர்.

வாமன தீர்த்தம், சக்கர தீர்த்தம், பாவன தீர்த்தம்:
திருமால் வாமன அவதாரம் எடுத்த காலத்தில் அங்கு சென்று அந்த தீர்த்தத்தில் நீராடிச் சிவபெருமானை வழிபட்டார். அதனால் அந்த தீர்த்தம் அந்த பெயரில் அழைக்கப்பட்டது. அங்கே உறையும் இறைவனின் திருப்பெயர் வாமனேஸ்வரர். இந்த வாமன தீர்த்தத்திற்கு அடுத்த படியாக சக்கரத் தீர்த்தமும், பாவன தீர்த்தமும் உள்ளது.

விக்னேஸ்வர தீர்த்தம்:
விக்னேஸ்வரன் சென்று நீராடி வழிபட்டதால் இந்த பெயரில் அழைக்கப்படும் இந்த தீர்த்த கட்டத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனின் திருநாமம் விக்னேஸ்வரர் ஆகும்.

நரசிம்ம தீர்த்தம்:
திருமால் நரசிம்ம கோலத்தில் சென்று நீராடி வழிபட்டதால் இப்பெயர் பெற்ற இந்த தீர்த்தத்தில் உறையும் இறைவனின் திருநாமம் நரசிம்மேஸ்வரர்.

ஆனந்த தீர்த்தம்:
நாக நாட்டுத் தலைவன் அனந்தன் சென்று நீராடி இறைவனை வழிபட்டதால் இந்த பெயர் பெற்ற இந்த தீர்த்தத்தில் உறையும் இறைவனின் திருநாமம் அனந்தேஸ்வரர்.

வாண தீர்த்தம்:
வாணன் சென்று நீராடி வழிபட்டதால் இந்தப் பெயர் பெற்ற இந்த தீர்த்தத்தில் உறையும் இறைவனின் திருநாமம் வாண லிங்கேஸ்வரர் ஆகும்.

பாஞ்சால தீர்த்தம்:
பாஞ்சால மன்னன் சென்று நீராடி வழிபட்டிருக்கலாம் என்றும் அதனால் இந்த பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுதர்சன தீர்த்தம்:
திருமாலின் சக்கரமான சுதர்சனம் நீராடி வழிபட்டிருக்கலாம் என்றும் அதனால் இந்த பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வராக தீர்த்தம்:
திருமால் வராக அவதாரம் எடுத்த காலத்தில், வராக மூர்த்தியாக சென்று நீராடி சிவபெருமானை வழிபாடு செய்ததால் இந்தப் பெயர் பெற்ற இந்த தீர்த்தத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வராக ஈஸ்வரர்.

பஞ்ச தீர்த்தங்கள்:
முனி தீர்த்தம், வருண தீர்த்தம், துர்கா தீர்த்தம், கன்னியா தீர்த்தம், பாவநாசத் தீர்த்தம் ஆகிய இவை ஐந்தும் பஞ்ச தீர்த்தங்கள் என்று பெயர் பெற்றன. இவ்வாறு தீர்த்தங்கள் பதினெட்டும், சிவன் கோவில்கள் ஒன்பதும் இருக்கின்றன. இவை நவ கைலாயம் என்று அழைக்கப்படும் என்று சூதமா முனிவர் மேலும் கூறத் தொடங்குகிறார்.

22. பாவநாசச் சருக்கம்:

முனிவர்களே.! பொதிகை மலைச் சாரலில், வடதிசையில் அமைந்திருப்பது தான் பாபநாசம் என்னும் ஸ்தலம் ஆகும். அங்கே சிவபெருமான் பாபநாச தலைவராகக் கோவில் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னாள் பொருநை வடக்கு நோக்கிப் பாய்கிறாள். பூரிப்புடன் பொங்கிப் பாயும் பொருநை., பாவநாச நாதரை முறையாக வணங்கி வழிபாடு செய்தாள். தாமிரபரணியின் வழிபாட்டில் உளம் மகிழ்ந்த பாவநாச நாதர், அவள் முன்னர் தோன்றி, உனது வழிபாட்டில் யாம் உள்ளம் குளிர்ந்தோம், நீ வேண்டும் வரம் தந்தருளுகிறோம் என கூற, தாமிரபரணி இறைவனிடம், சுவாமி.! மாந்தரின் பாதி பேர் தாங்கள் செய்த பாவத்தின் காரணமாக பல்வேறு வினைப் பயன்களை அனுபவிக்கிறார்கள். எனவே அவர்களின் இன்னல் நீங்கும் பொருட்டு இங்கு வந்து நீராடித் தங்களை வழிபடும் மாந்தர்களின் பாவங்கள் விலகி அவர்கள் இறந்த பின்னர் சொர்க்கலோகம் சேர வேண்டும் என்ற வரத்தை கேட்க, இறைவனும் அவளை பாராட்டி அவள் கேட்ட வரத்தை அளிக்கிறார். அன்று முதல் அங்கு சென்று நீராடிப் பாவநாச நாதரை வணங்கி வழிபாடு செய்த அன்பர்கள் அனைவரும், தங்கள் பாவம் நீங்கப் பெற்றுச் சொர்கத்தை சேர்ந்தனர் என்று சொல்லிச் சூதமா முனிவர் அடுத்து திருமூலநாதரைப் பற்றி கூறுகிறார்.

23. திருமூலநாதர் சருக்கம்:

தேன் சொரியும் கனி மரங்கள்.! வானுயர்ந்த சோலைகள்.! நறுமணம் மிகுந்த மலர் வனங்கள்.! மன அமைதி தரும் ஆலயங்கள்.! மாதவர் உறையும் திருமடங்கள்.! ஆகியவை நிறைந்த நகரம் தான், திருமூலநாதர் கோவில் கொண்டிருக்கின்ற திருநெல்வேலி நகரம் ஆகும்.அங்கே வேத முழக்கமும் வேள்வி மந்திரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கும். முன்பு ஒரு காலத்தில் அகத்தியர், அந்திப் பொழுதில் சிவ வழிபாடு செய்யத் தொடங்கினார். வழிபாட்டில் மனம் ஒன்றி விட்டதால், இறைவனுடைய சிந்தனையிலேயே இரவெல்லாம் உறங்காது இருந்து விட்டார். மறுநாள் காலையில் தாமிரபரணியில் நீராடி இறைவனை வணங்கினார். அப்போது இறைவன் திருமூலமகாலிங்கமாக காட்சி தந்தார். அந்த காட்சியைக் கண்ட அகத்திய முனிவர் அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, அங்கே ஒரு வேள்வி செய்து, திருமூலநாதருக்கு அவிர்பாகம் கொடுத்தார். அவிர்பாகம் பெற்ற இறைவன் திருவுளம் இறங்கி, அகத்தியா.! என்ன வரம் வேண்டும்? கேள்.! என்று கூறுகிறார். அதற்கு அகத்தியர்., இறைவா.! இங்கே நீராடித் தங்களை வணங்கும் அன்பர்களுக்கெல்லாம் பிறவா வரம் கொடுக்க வேண்டும் பெருமானே என்று வேண்டுகிறார். இறைவனும், “அப்படியே அருளிச் சென்றார் இறைவன்.! அகத்தியரும் பொதிகைக்கு புறப்பட்டார்.! என்று சொன்ன சூதமா முனிவர் அடுத்துக் காசிபநாதரை பற்றிச் சொல்லத் தொடங்குகிறார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 33.

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-33ல்., 113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் காட்டிய சருக்கம். 114. தேவர்களுக்கு அகோர தாண்டவம் ஆடிக் காட்டிய …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.